இரு வினைகள் ஈட்டும் இழிவு படு கூட்டை
எடும் எடும் என வீட்டில் அனைவோரும் இறுதி இடு காட்டில் அழுது
தலை மாட்டில் எரிய எரி மூட்டி இடுமாறு
கரிய இரு கோட்டு முரண் எருமை மோட்டர் கயிறு இறுக மாட்டி அழையா முன்
கனக மணி வாட்டு மருவு கழல் பூட்டு கழல் இணைகள் காட்டி அருள்வாயே
பருவ மலை நாட்டு மருவு கிளி ஓட்டு பழைய குறவாட்டி மணவாளா
பகைஞர் படை வீட்டில் முதிய கனல் ஊட்டு பகரும் நுதல் நாட்ட குமரேசா
அரு மறைகள் கூட்டி உரை செய் தமிழ் பாட்டை அடைவு அடைவு கேட்ட முருகோனே
அலை கடலில் ஈட்ட அவுணர் தமை ஓட்டி அமரர் சிறை மீட்ட பெருமாளே.
நல்வினை, தீவினை எனப்படும் இரு வினைகளால் உண்டாகும் கேடு உற்ற, இறந்து போன கூடான இவ்வுடலை, சீக்கிரம் எடுங்கள் என்று கூறி வீட்டில் உள்ளவர்கள் எல்லாரும் கடைசியாகச் சுடு காட்டில் அழுது, தலைப்பக்கம் எரியும்படி நெருப்பை மூட்டி வைக்கும்படியாக, கரு நிறம் கொண்டதும், இரு கொம்புகளை உடையதும், வலிமை மிக்கதுமான எருமையுடன் வந்த மூர்க்கராகிய யமன் பாசக் கயிற்றை அழுத்தமாக மாட்டி என்னை அழைப்பதற்கு முன்பாக, பொன்னையும், ரத்தினத்தையும் கூட மங்கச் செய்வதாய், பொருந்தின கழல் சேர்ந்துள்ள திருவடிகள் இரண்டையும் காட்டி அருள் செய்வாயாக. உயர்ந்த வள்ளி மலை நாட்டில் (தினைப் புனத்தில்) இருந்த கிளிகளை ஓட்டிக் கொண்டிருந்த, (சுந்தரவல்லியாய் முன்னரே உன்னைக் குறித்துத் தவம் செய்தமையால்) பழைய உறவைப் பூண்டிருந்த குற மகள் வள்ளியின் கணவனே, பகைவர்களாகிய அசுரர்களின் பாசறையில் முற்றிய நெருப்பை ஊட்டுவித்த, ஒளி விடுவதான நெற்றிக் கண்ணைக் கொண்ட குமரேசனே, அருமையான வேத மொழிகளைச் சேர்த்து உரைக்கப்பட்ட (சங்கத்) தமிழ்ப் பாடலை (திருமுருகாற்றுப்படையை) முற்ற முழுவதும் கேட்ட முருகனே, அலை வீசும் கடலில் கூட்டமாய் இருந்த அசுரர்களை விரட்டி ஓடும்படிச் செய்து, தேவர்களைச் சிறையினின்றும் மீள்வித்த பெருமாளே.
இரு வினைகள் ஈட்டும் இழிவு படு கூட்டை ... நல்வினை, தீவினை எனப்படும் இரு வினைகளால் உண்டாகும் கேடு உற்ற, இறந்து போன கூடான இவ்வுடலை, எடும் எடும் என வீட்டில் அனைவோரும் இறுதி இடு காட்டில் அழுது ... சீக்கிரம் எடுங்கள் என்று கூறி வீட்டில் உள்ளவர்கள் எல்லாரும் கடைசியாகச் சுடு காட்டில் அழுது, தலை மாட்டில் எரிய எரி மூட்டி இடுமாறு ... தலைப்பக்கம் எரியும்படி நெருப்பை மூட்டி வைக்கும்படியாக, கரிய இரு கோட்டு முரண் எருமை மோட்டர் கயிறு இறுக மாட்டி அழையா முன் ... கரு நிறம் கொண்டதும், இரு கொம்புகளை உடையதும், வலிமை மிக்கதுமான எருமையுடன் வந்த மூர்க்கராகிய யமன் பாசக் கயிற்றை அழுத்தமாக மாட்டி என்னை அழைப்பதற்கு முன்பாக, கனக மணி வாட்டு மருவு கழல் பூட்டு கழல் இணைகள் காட்டி அருள்வாயே ... பொன்னையும், ரத்தினத்தையும் கூட மங்கச் செய்வதாய், பொருந்தின கழல் சேர்ந்துள்ள திருவடிகள் இரண்டையும் காட்டி அருள் செய்வாயாக. பருவ மலை நாட்டு மருவு கிளி ஓட்டு பழைய குறவாட்டி மணவாளா ... உயர்ந்த வள்ளி மலை நாட்டில் (தினைப் புனத்தில்) இருந்த கிளிகளை ஓட்டிக் கொண்டிருந்த, (சுந்தரவல்லியாய் முன்னரே உன்னைக் குறித்துத் தவம் செய்தமையால்) பழைய உறவைப் பூண்டிருந்த குற மகள் வள்ளியின் கணவனே, பகைஞர் படை வீட்டில் முதிய கனல் ஊட்டு பகரும் நுதல் நாட்ட குமரேசா ... பகைவர்களாகிய அசுரர்களின் பாசறையில் முற்றிய நெருப்பை ஊட்டுவித்த, ஒளி விடுவதான நெற்றிக் கண்ணைக் கொண்ட குமரேசனே, அரு மறைகள் கூட்டி உரை செய் தமிழ் பாட்டை அடைவு அடைவு கேட்ட முருகோனே ... அருமையான வேத மொழிகளைச் சேர்த்து உரைக்கப்பட்ட (சங்கத்) தமிழ்ப் பாடலை (திருமுருகாற்றுப்படையை) முற்ற முழுவதும் கேட்ட முருகனே, அலை கடலில் ஈட்ட அவுணர் தமை ஓட்டி அமரர் சிறை மீட்ட பெருமாளே. ... அலை வீசும் கடலில் கூட்டமாய் இருந்த அசுரர்களை விரட்டி ஓடும்படிச் செய்து, தேவர்களைச் சிறையினின்றும் மீள்வித்த பெருமாளே.