குருதி சலம் தோலும் குடலுடன் என்பு ஆலும் குலவி எழும் கோலம் தனில்
மாயக் கொடுமையுடன் கோபம் கடு விரகம் சேரும் குண உயிர் கொண்டு ஏகும்படி
காலன் கருதிடு நெடும் பாசம் கொடு வர
நின்று ஆயும் கதற மறந்தேன் என்று அகலா முன்
கமலம் மலர்ந்து ஏறும் குகன் எனவும் போது உன் கருணை மகிழ்ந்து ஓதும் கலை தாராய்
நிருதர் தளம் சூழும் பெரிய நெடும் சூரன் நினைவும் அழிந்து ஓடும்படி
வேலால் நிகர் இல் அதம் பார் ஒன்று இமையவர் நெஞ்சால் நின் நிலை தொழ நின்றே முன் பொரு வீரா
பருதியுடன் சோமன் படியை இடந்தானும் பரவி
விடம் தான் உண்டு எழு பாரும் பயம் அற நின்று ஆடும் பரமர் உளம் கூரும்
பழ மறை அன்று ஓதும் பெருமாளே.
ரத்தம், நீர், தோல், குடலுடன், எலும்பும் கொண்டு விளங்கி எழுகின்ற உருவமாகிய இந்த உடலில் மாயமாக அமைந்துள்ள கொடுமை அதனுடன் சினம், கடுமையான காம இச்சை இவை கூடிய குணத்தைக் கொண்ட உயிரை பிடித்துக் கொண்டு போகும்படி யமன் கருத்தோடு நீண்ட பாசக் கயிற்றைக் கொண்டு வர, அருகில் நின்று தாயாரும் கதறிப் புலம்ப, யாவையும் மறந்து விட்டேன் என்று சொல்லுவது போல் எல்லாவற்றையும் கை விட்டு நீங்குவதற்கு முன், இதயத் தாமரை மலர் பக்தி ரசத்தால் மலர, அதில் இருந்து விளங்கும் குக மூர்த்தி என்னும்படி நீ போந்து அருளி, உனது கருணைத் திறத்தை களிப்புடன் நான் போற்றும்படியான கலை ஞானத்தை எனக்குக் கொடுப்பாயாக. அசுரர்களுடைய சேனைகள் சூழ்ந்துள்ள பெரிய நெடிய சூரன் தனது நினைவையும் இழந்து போர்க்களத்தில் இருந்து ஓட்டம் பிடிக்கும்படியாக வேலாயுதத்தால் ஒப்பில்லாத சூரனை சம்ஹாரம் செய்ததைப் பார்த்திருந்த தேவர்கள் தமது மனத்திலேயே உன்னுடைய வீர நிலையைத் தொழும்படி போர்க்களத்தில் நின்று, முன்பு சண்டை செய்த வீரனே, சூரியனும், சந்திரனும், பூமியை (வராக உருவத்தில்) தோண்டிச் சென்ற திருமாலும் போற்றிப் பணிய (ஆலகால) விஷத்தைத் தானே உண்டு, ஏழு உலகங்களும் அச்சம் நீங்கி விளங்க, நின்று நடமாடுகின்ற மேலான சிவபெருமான் உள்ளம் மகிழும் பழைய வேதங்களை முன்பொருநாள் ஓதிநின்ற பெருமாளே.
குருதி சலம் தோலும் குடலுடன் என்பு ஆலும் குலவி எழும் கோலம் தனில் ... ரத்தம், நீர், தோல், குடலுடன், எலும்பும் கொண்டு விளங்கி எழுகின்ற உருவமாகிய இந்த உடலில் மாயக் கொடுமையுடன் கோபம் கடு விரகம் சேரும் குண உயிர் கொண்டு ஏகும்படி ... மாயமாக அமைந்துள்ள கொடுமை அதனுடன் சினம், கடுமையான காம இச்சை இவை கூடிய குணத்தைக் கொண்ட உயிரை பிடித்துக் கொண்டு போகும்படி காலன் கருதிடு நெடும் பாசம் கொடு வர ... யமன் கருத்தோடு நீண்ட பாசக் கயிற்றைக் கொண்டு வர, நின்று ஆயும் கதற மறந்தேன் என்று அகலா முன் ... அருகில் நின்று தாயாரும் கதறிப் புலம்ப, யாவையும் மறந்து விட்டேன் என்று சொல்லுவது போல் எல்லாவற்றையும் கை விட்டு நீங்குவதற்கு முன், கமலம் மலர்ந்து ஏறும் குகன் எனவும் போது உன் கருணை மகிழ்ந்து ஓதும் கலை தாராய் ... இதயத் தாமரை மலர் பக்தி ரசத்தால் மலர, அதில் இருந்து விளங்கும் குக மூர்த்தி என்னும்படி நீ போந்து அருளி, உனது கருணைத் திறத்தை களிப்புடன் நான் போற்றும்படியான கலை ஞானத்தை எனக்குக் கொடுப்பாயாக. நிருதர் தளம் சூழும் பெரிய நெடும் சூரன் நினைவும் அழிந்து ஓடும்படி ... அசுரர்களுடைய சேனைகள் சூழ்ந்துள்ள பெரிய நெடிய சூரன் தனது நினைவையும் இழந்து போர்க்களத்தில் இருந்து ஓட்டம் பிடிக்கும்படியாக வேலால் நிகர் இல் அதம் பார் ஒன்று இமையவர் நெஞ்சால் நின் நிலை தொழ நின்றே முன் பொரு வீரா ... வேலாயுதத்தால் ஒப்பில்லாத சூரனை சம்ஹாரம் செய்ததைப் பார்த்திருந்த தேவர்கள் தமது மனத்திலேயே உன்னுடைய வீர நிலையைத் தொழும்படி போர்க்களத்தில் நின்று, முன்பு சண்டை செய்த வீரனே, பருதியுடன் சோமன் படியை இடந்தானும் பரவி ... சூரியனும், சந்திரனும், பூமியை (வராக உருவத்தில்) தோண்டிச் சென்ற திருமாலும் போற்றிப் பணிய விடம் தான் உண்டு எழு பாரும் பயம் அற நின்று ஆடும் பரமர் உளம் கூரும் ... (ஆலகால) விஷத்தைத் தானே உண்டு, ஏழு உலகங்களும் அச்சம் நீங்கி விளங்க, நின்று நடமாடுகின்ற மேலான சிவபெருமான் உள்ளம் மகிழும் பழ மறை அன்று ஓதும் பெருமாளே. ... பழைய வேதங்களை முன்பொருநாள் ஓதிநின்ற பெருமாளே.