கொலையிலே மெத்த விரகிலே கற்ற குவளை ஏர் மைக் கண் விழி மானார்
குழையிலே எய்த்த நடையிலே நெய்த்த குழலிலே பற்கள் தனிலே மா முலையிலே
அற்ப இடையிலே பத்ம முக நிலா வட்டம் அதின் மீதே முதுகிலே பொட்டு நுதலிலே தத்தை மொழியிலே சித்தம் விடலாமோ
கலையனே உக்ர முருகனே துட்டர் கலகனே மெத்த இளையோனே
கனகனே பித்தர் புதல்வனே மெச்சு கடவுளே பச்சை மயிலோனே
உலகனே முத்தி முதல்வனே உடையனே விஷ்ணு மருகோனே
ஒருவனே செச்சை மருவு நேர் சித்ர உருவனே மிக்க பெருமாளே.
கொலைத் தொழிலையும், நிரம்பத் தந்திரங்களைக் கற்றுள்ளனவும், குவளை மலர் போன்றனவும், அழகு கொண்டனவும், மை பூசியும் உள்ள விழிகளை உடைய விலைமாதர்களின் காதில் உள்ள குண்டலங்களிலும், இளைப்புற்ற நடையிலும், வாசனைத் தைலம் பூசியுள்ள கூந்தலிலும், பற்களிலும், பெரிய மார்பகங்களிலும், குறுகிய இடையிலும், தாமரை போன்ற முகமாகிய சந்திர பிம்ப வட்ட வடிவிலும், முதுகிலும், பொட்டு இட்டுள்ள நெற்றியிலும், கிளி போன்ற பேச்சிலும் நான் என் மனத்தைச் சிதற விடலாமோ? எல்லா கலைகளிலும் வல்லவனே, (அசுரர்களிடத்தில்) சினம் கொண்ட முருகனே, துஷ்டர்களைக் கலங்கச் செய்து அடக்குபவனே, மிகவும் இளையவனே, பொன் உருவத்தினனே, பித்தராகிய சிவபெருமானுடைய மகனே, யாவராலும் மெச்சப்படும் கடவுளே, பச்சை மயில் வாகனனே, உலகெல்லாம் நிறைந்தவனே, முக்தி தரும் முதல்வனே, சித்திகளில் வல்லவனே, திருமாலின் மருகனே, ஒப்பற்றவனே, செந்நிறம் கொண்ட நேர்த்தியான அழகிய உருவத்தனே, யாவரிலும் மேம்பட்ட பெருமாளே.
கொலையிலே மெத்த விரகிலே கற்ற குவளை ஏர் மைக் கண் விழி மானார் ... கொலைத் தொழிலையும், நிரம்பத் தந்திரங்களைக் கற்றுள்ளனவும், குவளை மலர் போன்றனவும், அழகு கொண்டனவும், மை பூசியும் உள்ள விழிகளை உடைய விலைமாதர்களின் குழையிலே எய்த்த நடையிலே நெய்த்த குழலிலே பற்கள் தனிலே மா முலையிலே ... காதில் உள்ள குண்டலங்களிலும், இளைப்புற்ற நடையிலும், வாசனைத் தைலம் பூசியுள்ள கூந்தலிலும், பற்களிலும், பெரிய மார்பகங்களிலும், அற்ப இடையிலே பத்ம முக நிலா வட்டம் அதின் மீதே முதுகிலே பொட்டு நுதலிலே தத்தை மொழியிலே சித்தம் விடலாமோ ... குறுகிய இடையிலும், தாமரை போன்ற முகமாகிய சந்திர பிம்ப வட்ட வடிவிலும், முதுகிலும், பொட்டு இட்டுள்ள நெற்றியிலும், கிளி போன்ற பேச்சிலும் நான் என் மனத்தைச் சிதற விடலாமோ? கலையனே உக்ர முருகனே துட்டர் கலகனே மெத்த இளையோனே ... எல்லா கலைகளிலும் வல்லவனே, (அசுரர்களிடத்தில்) சினம் கொண்ட முருகனே, துஷ்டர்களைக் கலங்கச் செய்து அடக்குபவனே, மிகவும் இளையவனே, கனகனே பித்தர் புதல்வனே மெச்சு கடவுளே பச்சை மயிலோனே ... பொன் உருவத்தினனே, பித்தராகிய சிவபெருமானுடைய மகனே, யாவராலும் மெச்சப்படும் கடவுளே, பச்சை மயில் வாகனனே, உலகனே முத்தி முதல்வனே உடையனே விஷ்ணு மருகோனே ... உலகெல்லாம் நிறைந்தவனே, முக்தி தரும் முதல்வனே, சித்திகளில் வல்லவனே, திருமாலின் மருகனே, ஒருவனே செச்சை மருவு நேர் சித்ர உருவனே மிக்க பெருமாளே. ... ஒப்பற்றவனே, செந்நிறம் கொண்ட நேர்த்தியான அழகிய உருவத்தனே, யாவரிலும் மேம்பட்ட பெருமாளே.