சுடர் ஒளி கதிரவன் உற்றுப் பற்றிச் சூழ்ந்து ஓங்கிடு பாரில்
துயர் இரு வினை பல சுற்றப்பட்டு சோர்ந்து ஓய்ந்திட
நாறும் கடுகென எடும் எனும் உடல் பற்று அற்று
கான் போந்து உறவோரும் கனல் இடை விதி இடு தத் துக்கத்தைக் காய்ந்து ஆண்டு அருளாயோ
தடம் உடை வயிரவர் தற்கித்து ஒக்க
தாம் தோய்ந்து இரு பாலும் தமருக ஒலி சவுதத்தில் தத்த
தாழ்ந்து ஊர்ந்திட நாகம் படி நெடியவர் கரம் ஒத்த
கெத்துப் பாய்ந்து ஆய்ந்து உயர் கானம் பயில்பவர் புதல்வ
குறத் தத்தைக்குப் பாங்காம் பெருமாளே.
ஜோதி ஒளி வீசும் சூரியன் உதித்துப் புறப்பட்டு, வலம் வந்து விளங்குகின்ற இந்தப் பூமியில் துன்பம், நல் வினை, தீ வினை என்னும் இருவினைகள் பலவற்றாலும் இவ்வாழ்க்கை சுற்றப்பட்டு, (அதனால்) சோர்வடைந்து அலுத்து மாய்ந்திட (பிணம்) நாற்றம் எடுக்கும், விரைவில் எடுத்துக் கொண்டு போகவும் என்று சொல்லப்படும் உடல் மீதுள்ள பற்று ஒழிந்து, சுடு காட்டுக்குப் போய் உறவினரும் நெருப்பிடையே விதிப்படி இடுகின்ற அந்தத் துக்க நிகழ்ச்சிக்கு இடம் தருகின்ற பிறப்பைக் கோபித்து ஒழித்து, என்னை ஆண்டருள மாட்டாயோ? பெருமை உடைய (துர்க்கையின் படைகளான) கணங்கள் செருக்குற்று ஒன்று சேர்ந்து, தாங்கள் கூடிப் பொருந்தி (நடனம் ஆடுபவரின்) இரண்டு பக்கங்களிலும் உடுக்கையின் ஓசையை நடன ஜதிக்கு ஏற்ப சவுக்க காலத்தில் ஒலிக்க, (ஜடையில்) அணிந்துள்ள பாம்பு தொங்கி நகர்ந்து செல்ல, அக்கூத்தின் போக்கைக் கவனித்தும் படிக்கும் திருமால் கைகளால் (மத்தளம்) அடிக்க, கிட்டிப் புள் பாய்வது போலப் பாய்ந்து, கூத்திலக்கணத்தை ஆராய்ந்து, பெரிய சுடுகாட்டினிடையே நடனம் செய்பவரான சிவபெருமானின் மகனே, கிளி போன்ற குறப்பெண் ஆகிய வள்ளிக்கு மணாளனாகும் பெருமாளே.
சுடர் ஒளி கதிரவன் உற்றுப் பற்றிச் சூழ்ந்து ஓங்கிடு பாரில் ... ஜோதி ஒளி வீசும் சூரியன் உதித்துப் புறப்பட்டு, வலம் வந்து விளங்குகின்ற இந்தப் பூமியில் துயர் இரு வினை பல சுற்றப்பட்டு சோர்ந்து ஓய்ந்திட ... துன்பம், நல் வினை, தீ வினை என்னும் இருவினைகள் பலவற்றாலும் இவ்வாழ்க்கை சுற்றப்பட்டு, (அதனால்) சோர்வடைந்து அலுத்து மாய்ந்திட நாறும் கடுகென எடும் எனும் உடல் பற்று அற்று ... (பிணம்) நாற்றம் எடுக்கும், விரைவில் எடுத்துக் கொண்டு போகவும் என்று சொல்லப்படும் உடல் மீதுள்ள பற்று ஒழிந்து, கான் போந்து உறவோரும் கனல் இடை விதி இடு தத் துக்கத்தைக் காய்ந்து ஆண்டு அருளாயோ ... சுடு காட்டுக்குப் போய் உறவினரும் நெருப்பிடையே விதிப்படி இடுகின்ற அந்தத் துக்க நிகழ்ச்சிக்கு இடம் தருகின்ற பிறப்பைக் கோபித்து ஒழித்து, என்னை ஆண்டருள மாட்டாயோ? தடம் உடை வயிரவர் தற்கித்து ஒக்க ... பெருமை உடைய (துர்க்கையின் படைகளான) கணங்கள் செருக்குற்று ஒன்று சேர்ந்து, தாம் தோய்ந்து இரு பாலும் தமருக ஒலி சவுதத்தில் தத்த ... தாங்கள் கூடிப் பொருந்தி (நடனம் ஆடுபவரின்) இரண்டு பக்கங்களிலும் உடுக்கையின் ஓசையை நடன ஜதிக்கு ஏற்ப சவுக்க காலத்தில் ஒலிக்க, தாழ்ந்து ஊர்ந்திட நாகம் படி நெடியவர் கரம் ஒத்த ... (ஜடையில்) அணிந்துள்ள பாம்பு தொங்கி நகர்ந்து செல்ல, அக்கூத்தின் போக்கைக் கவனித்தும் படிக்கும் திருமால் கைகளால் (மத்தளம்) அடிக்க, கெத்துப் பாய்ந்து ஆய்ந்து உயர் கானம் பயில்பவர் புதல்வ ... கிட்டிப் புள் பாய்வது போலப் பாய்ந்து, கூத்திலக்கணத்தை ஆராய்ந்து, பெரிய சுடுகாட்டினிடையே நடனம் செய்பவரான சிவபெருமானின் மகனே, குறத் தத்தைக்குப் பாங்காம் பெருமாளே. ... கிளி போன்ற குறப்பெண் ஆகிய வள்ளிக்கு மணாளனாகும் பெருமாளே.