முழு மதி அனைய முகம் இரு குழையில் முனி விழி முனைகள் கொண்டு
மூவாமுதல் அறிவு அதனை வளைபவர் கலவி முழுகிய வினையை மொண்டு நாயேன்
வழி வழி அடிமை எனும் அறிவு அகல மனம் உறு துயர்கள் வெந்து வாட
மதி தரும் அதிக கதி பெறும் அடிகள் மகிழ்வோடு புகழும் அன்பு தாராய்
எழுதிட அரிய எழில் மற மகளின் இரு தன கிரிகள் தங்கும் மார்பா
எதிர் பொரும் அசுரர் பொடிபட முடுகி இமையவர் சிறையை அன்று மீள்வாய்
அழகிய குமர எழு தலம் மகிழ அறுவர்கள் முலையை உண்ட வாழ்வே
அமர் உலகு இறைவ உமை தரு புதல்வ அரி அர பிரமர் தம்பிரானே.
பூரண சந்திரன் போன்ற முகம் கொண்டும், இரண்டு குண்டலங்களையும் கோபிப்பது போல் தாக்கும் கண்களின் முனைகளைக் கொண்டும், முதிர்ச்சி அடையாத ஆரம்ப அறிவையே கொண்டவர்களை தம்வசப் படுத்தும் வேசையர்களுடன் புணர்ச்சி இன்பத்தில் முழுகும் வினையை அனுபவிக்கும் நாயை ஒத்த எனக்கு, வழி வழியாக (அம் மகளிருக்கு) அடிமை நான் என்னும் அறிவு நீங்கவும், மனத்தில் உள்ள துயரங்கள் யாவும் வெந்து ஒடுங்கவும், நல்லறிவைத் தருவதும், நிரம்பப் புகலிடமான தன்மையைப் பெற்றுள்ளதுமான அன்பைத் தந்தருளுக. எழுதுவதற்கு அருமையான அழகைக் கொண்ட வேடர் பெண்ணாகிய வள்ளியின் இரண்டு மலை போன்ற மார்பும் தழுவுகின்ற திருமார்பனே, எதிரே நின்று சண்டை செய்த அசுரர்கள் பொடியாகும்படி, முன் சென்று எதிர்த்து, தேவர்களின் சிறையை அன்று நீக்கி அருளினாய். அழகு வாய்ந்த குமரனே, ஏழு உலகங்களும் மகிழ்ச்சி கொள்ள ஆறு கார்த்திகைப் பெண்களின் முலைப் பாலைப் பருகிய செல்வமே, தேவலோகத்துக்குத் தலைவனே, உமாதேவி பெற்ற மகனே, திருமால், சிவன், பிரமன் ஆகிய மூவர்க்கும் தம்பிரானே.
முழு மதி அனைய முகம் இரு குழையில் முனி விழி முனைகள் கொண்டு ... பூரண சந்திரன் போன்ற முகம் கொண்டும், இரண்டு குண்டலங்களையும் கோபிப்பது போல் தாக்கும் கண்களின் முனைகளைக் கொண்டும், மூவாமுதல் அறிவு அதனை வளைபவர் கலவி முழுகிய வினையை மொண்டு நாயேன் ... முதிர்ச்சி அடையாத ஆரம்ப அறிவையே கொண்டவர்களை தம்வசப் படுத்தும் வேசையர்களுடன் புணர்ச்சி இன்பத்தில் முழுகும் வினையை அனுபவிக்கும் நாயை ஒத்த எனக்கு, வழி வழி அடிமை எனும் அறிவு அகல மனம் உறு துயர்கள் வெந்து வாட ... வழி வழியாக (அம் மகளிருக்கு) அடிமை நான் என்னும் அறிவு நீங்கவும், மனத்தில் உள்ள துயரங்கள் யாவும் வெந்து ஒடுங்கவும், மதி தரும் அதிக கதி பெறும் அடிகள் மகிழ்வோடு புகழும் அன்பு தாராய் ... நல்லறிவைத் தருவதும், நிரம்பப் புகலிடமான தன்மையைப் பெற்றுள்ளதுமான அன்பைத் தந்தருளுக. எழுதிட அரிய எழில் மற மகளின் இரு தன கிரிகள் தங்கும் மார்பா ... எழுதுவதற்கு அருமையான அழகைக் கொண்ட வேடர் பெண்ணாகிய வள்ளியின் இரண்டு மலை போன்ற மார்பும் தழுவுகின்ற திருமார்பனே, எதிர் பொரும் அசுரர் பொடிபட முடுகி இமையவர் சிறையை அன்று மீள்வாய் ... எதிரே நின்று சண்டை செய்த அசுரர்கள் பொடியாகும்படி, முன் சென்று எதிர்த்து, தேவர்களின் சிறையை அன்று நீக்கி அருளினாய். அழகிய குமர எழு தலம் மகிழ அறுவர்கள் முலையை உண்ட வாழ்வே ... அழகு வாய்ந்த குமரனே, ஏழு உலகங்களும் மகிழ்ச்சி கொள்ள ஆறு கார்த்திகைப் பெண்களின் முலைப் பாலைப் பருகிய செல்வமே, அமர் உலகு இறைவ உமை தரு புதல்வ அரி அர பிரமர் தம்பிரானே. ... தேவலோகத்துக்குத் தலைவனே, உமாதேவி பெற்ற மகனே, திருமால், சிவன், பிரமன் ஆகிய மூவர்க்கும் தம்பிரானே.