முதலி யாக்கையும் இளமை நீத்து அற மூவா தாராகா ஆதாரா என ஞாலம் முறை இடா
படு பறைகள் ஆர்த்து எழ மூடா வீடு ஊடே கேள் கோ கோ என நோவ
மதலை கூப்பிட மனைவி கூப்பிட மாதா மோதா வீழா வாழ்வே என
மாய மறலி ஊரப் புகு மரண யாத்திரை வாரா வான் ஆள் போ(ம்) நாம் நீ மீள் என வேணும்
புதல் அறாப் புன எயினர் கூக்குரல் போகா நாடார் பாரா வார ஆர் அசு(ர)ர் ஓடப் பொருது தாக்கிய வய(ம்) பராக்ரம
பூபாலா நீபா பாலா தாதையும் ஓதும் குதலை வாய்க் குரு பர
சடாக்ஷர கோடு ஆர் ரூபா அரூபா பார் ஈ
சத வேள்விக் குலிச பார்த்திபன் உலகு காத்து அருள் கோவே
தேவே வேளே வானோர் பெருமாளே.
(வாழ்க்கைக்கு) முதன்மையை உடைய ஆதாரமாய் இருக்கும் உடலும், அதன் இளமையையும் ஒழித்து, மிகவும் முதுமை அடைந்து, (எங்களைக்) காத்துப் பற்றுக் கோடாக இருந்தவனே என்று பூமியில் உள்ளோர் முறையிட்டு ஏங்க, ஒலிக்கின்ற பறை வாத்தியங்கள் மிக உரக்கச் சப்தம் செய்ய, (பிணத்தைத் துணியால்) மூடி, வீட்டுக்குள் சுற்றத்தினர் கோகோவென்று கூச்சலிட்டு மனம் வருந்த, பிள்ளைகள் அழ, மனைவி அழ, தாய் (தலையில்) மோதியும் விழுந்தும், என் செல்வமே என்று அலற, மாயமாக வந்த யமனுடைய பட்டணத்துக்குப் புகும் சாவு என்னும் பயணம் உனக்கு வராது, வானுலகை ஆள நாம் போவோம், நீ என்னுடன் வா, என்று கூறி என்னை அழைத்துச் செல்ல நீ வர வேண்டும். நாணல் புதர்கள் நீங்காத மலைச் சாரலில் உள்ள கொல்லைகளில் இருக்கும் மறவர்கள் கூச்சலிடும் குரல் நீங்காத பகுதியில் உள்ளவர்களாகிய வேடர்களும், கடல் போலப் பெருகி நிரம்ப வந்த அசுரர்களும் பயந்து ஓட, அவர்களுடன் சண்டை செய்து தாக்கி எதிர்த்த வெற்றி வீரனே, பூமியைக் காப்போனே, கடப்ப மாலையை அணிந்த குழந்தையே, தந்தை சிவபெருமானும் கற்கும்படி மழலைச் சொற்கள் நிறைந்த திருவாயை உடைய குருபரனே, (சரவணபவ என்னும்) ஆறெழுத்துக்கு உரியவனே, நேர்மை கொண்ட நெறி தவறாத வடிவத்தனே, வடிவு இல்லாதவனே, உலகை ஈந்தவனே, நூறு அசுவமேத யாகங்களை முடித்தவனும், வஜ்ராயுதம் ஏந்தியவனுமாகிய அரசன் இந்திரனுடைய பொன்னுலகைக் காத்தருளிய தலைவனே, தேவனே, முருக வேளே, தேவர்களின் பெருமாளே.
முதலி யாக்கையும் இளமை நீத்து அற மூவா தாராகா ஆதாரா என ஞாலம் முறை இடா ... (வாழ்க்கைக்கு) முதன்மையை உடைய ஆதாரமாய் இருக்கும் உடலும், அதன் இளமையையும் ஒழித்து, மிகவும் முதுமை அடைந்து, (எங்களைக்) காத்துப் பற்றுக் கோடாக இருந்தவனே என்று பூமியில் உள்ளோர் முறையிட்டு ஏங்க, படு பறைகள் ஆர்த்து எழ மூடா வீடு ஊடே கேள் கோ கோ என நோவ ... ஒலிக்கின்ற பறை வாத்தியங்கள் மிக உரக்கச் சப்தம் செய்ய, (பிணத்தைத் துணியால்) மூடி, வீட்டுக்குள் சுற்றத்தினர் கோகோவென்று கூச்சலிட்டு மனம் வருந்த, மதலை கூப்பிட மனைவி கூப்பிட மாதா மோதா வீழா வாழ்வே என ... பிள்ளைகள் அழ, மனைவி அழ, தாய் (தலையில்) மோதியும் விழுந்தும், என் செல்வமே என்று அலற, மாய மறலி ஊரப் புகு மரண யாத்திரை வாரா வான் ஆள் போ(ம்) நாம் நீ மீள் என வேணும் ... மாயமாக வந்த யமனுடைய பட்டணத்துக்குப் புகும் சாவு என்னும் பயணம் உனக்கு வராது, வானுலகை ஆள நாம் போவோம், நீ என்னுடன் வா, என்று கூறி என்னை அழைத்துச் செல்ல நீ வர வேண்டும். புதல் அறாப் புன எயினர் கூக்குரல் போகா நாடார் பாரா வார ஆர் அசு(ர)ர் ஓடப் பொருது தாக்கிய வய(ம்) பராக்ரம ... நாணல் புதர்கள் நீங்காத மலைச் சாரலில் உள்ள கொல்லைகளில் இருக்கும் மறவர்கள் கூச்சலிடும் குரல் நீங்காத பகுதியில் உள்ளவர்களாகிய வேடர்களும், கடல் போலப் பெருகி நிரம்ப வந்த அசுரர்களும் பயந்து ஓட, அவர்களுடன் சண்டை செய்து தாக்கி எதிர்த்த வெற்றி வீரனே, பூபாலா நீபா பாலா தாதையும் ஓதும் குதலை வாய்க் குரு பர ... பூமியைக் காப்போனே, கடப்ப மாலையை அணிந்த குழந்தையே, தந்தை சிவபெருமானும் கற்கும்படி மழலைச் சொற்கள் நிறைந்த திருவாயை உடைய குருபரனே, சடாக்ஷர கோடு ஆர் ரூபா அரூபா பார் ஈ ... (சரவணபவ என்னும்) ஆறெழுத்துக்கு உரியவனே, நேர்மை கொண்ட நெறி தவறாத வடிவத்தனே, வடிவு இல்லாதவனே, உலகை ஈந்தவனே, சத வேள்விக் குலிச பார்த்திபன் உலகு காத்து அருள் கோவே ... நூறு அசுவமேத யாகங்களை முடித்தவனும், வஜ்ராயுதம் ஏந்தியவனுமாகிய அரசன் இந்திரனுடைய பொன்னுலகைக் காத்தருளிய தலைவனே, தேவே வேளே வானோர் பெருமாளே. ... தேவனே, முருக வேளே, தேவர்களின் பெருமாளே.