மரக்கிளைகளை மிகுதியாய்க் கொண்டு எழுந்து நின்றதும், கடலின் நடுவிலே தோன்றியதுமான மாமரத்தின் (உருவில் இருந்த சூரனின்) வலிமையை காய்த்து அழித்த உன் வேலாயுதத்தை நான் பாடவில்லை, அவ்வெற்றியைப் பாராட்டி நான் ஆடுவதும் இல்லை. மோக்ஷ இன்பத்தை அடைய விரும்பி, கருணை மிக்கதும், கழல்கள் ஒலிப்பதுமான உன் திருவடிகளின் மீது நான் விழுந்து வணங்குவதில்லை, அப்படி விழுந்து பணிவோரின் கால்களிலும் வீழ்ந்து வணங்குவதும் இல்லை. தவிட்டளவு சோறுகூட தயக்கமின்றி ஏற்பவர்களுக்கு நான் கொடுப்பதும் இல்லை. இவ்வாறு வாழ்வதை விட சாவதே எனக்கு மேலானது. பிறப்பு, இறப்புத் தொடரிலிருந்து எனது இந்த உடலுக்கு இனியேனும் விடுதலை கிடைத்து எப்போதும் நிலைபெறுமாறு, நாதனே, நீதான் அருள் புரிவாயாக. யானையின் அடிச்சுவட்டைப் பார்த்து, அதைப் பற்றி இழுத்துக் கொல்வதற்காக குளத்திற்கு வந்த முதலையின் தலை பொடியாகுமாறு ஹா, நாராயண மூர்த்தியே, நல்ல துணைவனே, பாற்கடலில் உதித்த மங்கை லக்ஷ்மியின் கணவனே, திருத் துழாய் மாலையை அணிந்த மார்பனே, கோபாலனே, என்னைக் காவாய் என்று தன் துதிக்கையைத் தூக்கி, மலை போன்ற யானையான கஜேந்திரன் முறையிட, கருடன் மேல் ஏறி, பொன் சங்கான பாஞ்சஜன்யத்தை ஊதி, ஆகாயமார்க்கமாகப் பறந்து வந்து, யானையைக் காத்தருளிய திருமாலின் மருகனே, வஜ்ராயுதத்தைக் கையில் ஏந்திய அரசன் இந்திரனின் தேவ உலகத்தை காத்தருளிய தலைவனே, தேவனே, செவ்வேளே, தேவர்தம் பெருமாளே.
கவடு கோத்தெழும் ... மரக்கிளைகளை மிகுதியாய்க் கொண்டு எழுந்து நின்றதும், உவரி மாத்திறல் ... கடலின் நடுவிலே தோன்றியதுமான மாமரத்தின் (உருவில் இருந்த சூரனின்) வலிமையை காய்வேல் பாடேன் ஆடேன் ... காய்த்து அழித்த உன் வேலாயுதத்தை நான் பாடவில்லை, அவ்வெற்றியைப் பாராட்டி நான் ஆடுவதும் இல்லை. வீடானதுகூட கருணை கூர்ப்பன கழல்கள் ஆர்ப்பன கால்மேல் ... மோக்ஷ இன்பத்தை அடைய விரும்பி, கருணை மிக்கதும், கழல்கள் ஒலிப்பதுமான உன் திருவடிகளின் மீது வீழேன் வீழ்வார் கால்மீதினும் வீழேன் ... நான் விழுந்து வணங்குவதில்லை, அப்படி விழுந்து பணிவோரின் கால்களிலும் வீழ்ந்து வணங்குவதும் இல்லை. தவிடின் ஆர்ப்பதம் எனினு மேற்பவர் தாழாது ஈயேன் ... தவிட்டளவு சோறுகூட தயக்கமின்றி ஏற்பவர்களுக்கு நான் கொடுப்பதும் இல்லை. வாழாதே சாவது சாலத் தரமு ... இவ்வாறு வாழ்வதை விட சாவதே எனக்கு மேலானது. மோக்ஷமும் இனியென் ஆக்கை சதா ஆமாறே ... பிறப்பு, இறப்புத் தொடரிலிருந்து எனது இந்த உடலுக்கு இனியேனும் விடுதலை கிடைத்து எப்போதும் நிலைபெறுமாறு, நீதான் நாதா புரிவாயே ... நாதனே, நீதான் அருள் புரிவாயாக. சுவடு பார்த்(து) அட வரு கராத்தலை ... யானையின் அடிச்சுவட்டைப் பார்த்து, அதைப் பற்றி இழுத்துக் கொல்வதற்காக குளத்திற்கு வந்த முதலையின் தலை தூளாமாறே தான் ஆ நாராயணனே நற்றுணைவ ... பொடியாகுமாறு 'ஹா, நாராயண மூர்த்தியே, நல்ல துணைவனே, பாற்கடல் வனிதை சேர்ப்ப துழாய்மார்பா கோபாலா காவாய் எனவே ... பாற்கடலில் உதித்த மங்கை லக்ஷ்மியின் கணவனே, திருத் துழாய் மாலையை அணிந்த மார்பனே, கோபாலனே, என்னைக் காவாய்' என்று கைக்குவடு கூப்பிட உவண மேல் கனகோடு ஊதா ... தன் துதிக்கையைத் தூக்கி, மலை போன்ற யானையான கஜேந்திரன் முறையிட, கருடன் மேல் ஏறி, பொன் சங்கான பாஞ்சஜன்யத்தை ஊதி, வானே போது ஆள்வான் மருகோனே ... ஆகாயமார்க்கமாகப் பறந்து வந்து, யானையைக் காத்தருளிய திருமாலின் மருகனே, குலிச பார்த்திபன் உலகு காத்தருள் கோவே ... வஜ்ராயுதத்தைக் கையில் ஏந்திய அரசன் இந்திரனின் தேவ உலகத்தை காத்தருளிய தலைவனே, தேவே வேளே வானோர் பெருமாளே. ... தேவனே, செவ்வேளே, தேவர்தம் பெருமாளே.