ஊன் பொருந்திய இவ்வுடலே நான்தான் என்று நினைத்து, என்றும் முடிவில்லாத நோயாளனாய், அழிவுள்ளதும், ஊஞ்சலைப்போல் மாறி மாறி வருகின்றதுமான இத்தேகத்தை விரும்பி, நூல்களை ஓதியும், தாக்கிப் பேசியும், செய்கின்ற சமய வாதங்களில் ஈடுபடாமலும், உலக ஆசாரங்களில் கட்டுப்படாமல் உள்ளம் வேறுபட்டு, எனது ஜீவாத்மா பரமாத்மாவாகிய உன்னிடம் ஒன்றுபட்டுப் பொருந்தி, பலவகையான வேதப்பொருள் கொண்டு உன்னை நாடி விரும்பி வீடு பேற்றை அடைந்தவனாய், என் ஜன்மம் சாபல்யம் அடையாமல் நாயனைய அடியேன் இறந்துபோகக் கடவேனோ? விண், காற்று, தீ, நீர், பார் ஆகிய ஐந்து பூதங்களாக விளங்கி, இவ்வுலகிலுள்ள பெரியோருக்கு உரியவனாகத் திகழ்பவனே, என்றும் அழிவில்லாத பெரியோனே, அரசனே, மான்போன்ற அழகியர் வள்ளி, தேவயானைக்கு செல்வக் கணவனே, கோழிக் கொடியை உயர்த்தியவனே, தேன் போன்று இனிப்பவனே, தேனாறு என்னும் நீண்ட காட்டாறு பாய்கின்ற ஒளி பொருந்திய மலைப்பகுதியான (குன்றக்குடி என்ற) தலத்தில் அமர்ந்தவனே, ஈசன் மகனே, செவ்வேள் முருகனே, அழகனே, தலைவனே, தேவனே, தேவர்களின் பெருமாளே.