கார் உலாவு(ம்) குழற்கும் கூரிதான விழிக்கும் காதல் பேணு(ம்) நுதற்கும்
கதிர்போலும் காவி சேர் பவளத்தின் கோவை வாய் இதழுக்கும்
காசு பூணு(ம்) முலைக்கும் கதி சேரா நேரிதான இடைக்கும் சீத வார(ம்) நகைக்கும்
நேர் இலாத தொடைக்கும் சதி பாடும் நீதமான அடிக்கும் மால் உறாத படிக்கு
உன் நேயமோடு துதிக்கும்படி பாராய்
பார மேரு வளைக்கும் பாணியார் சடையில் செம் பாதி சோமன் எருக்கும் புனைவார் தம் பாலகா என
நித்தம் பாடு நாவலர் துக்கம் பாவ நாசம் அறுத்து இன் பதம் ஈவாய்
சோரி வாரியிடச் சென்று ஏறி ஓடி அழல் கண் சூல காளி நடிக்கும்படி
வேலால் சூரர் சேனைதனைக் கொன்று ஆரவாரம் மிகுத்து
எண் தோகை வாசி நடத்தும் பெருமாளே.
(வேசையர்களின்) மேகம் போன்ற கூந்தலுக்கும், கூர்மை வாய்ந்த கண்களுக்கும், ஆசை விருப்பத்தை எழச் செய்யும் நெற்றிக்கும், ஒளிக் கிரணம் போல் பிரகாசம் கொண்டதாய், செந்நிறம் கொண்ட பவளத்தை ஒப்பதாய், கொவ்வைப் பழம் போல் சிவப்பான வாயிதழுக்கும், தங்கக் காசுமாலை அணிந்துள்ள மார்புக்கும், உறுதித் தன்மை இல்லாது (ஒடிவது போல) நுண்ணியதான இடுப்புக்கும், குளிர்ச்சியையும் அன்பையும் காட்ட வல்ல புன்சிரிப்புக்கும், நிகரில்லாத தொடைக்கும், தாளக் கட்டுடன் ஜதிகளைக் காட்டும் தகுதியைக் கொண்டதான பாதத்துக்கும், நான் மோக மயக்கம் கொள்ளாதபடிக்கு, உன் மேல் அன்போடு துதிக்கும்படி என்னைக் கண் பார்த்து அருள்வாய். கனத்த மேரு மலையை வில்லாய் வளைத்த திருக்கைகளை உடையவரும், சடையிலே செம்மை வாய்ந்த பிறைச் சந்திரனையும், எருக்க மலரையும் அணிந்துள்ளவரும் ஆகிய சிவபெருமானுடைய மகனே என்று நாள் தோறும் துதித்துப் பாடும் புலவர்களின் துக்கத்தையும் பாபத்தையும் தொலைத்து, இனிமை தரும் திருவடிகளைத் தருவாயாக. ரத்தம் கடல் போல் பெருக, (போர்க்களத்தில்) போய்ச் சேர்ந்து ஓடி, நெருப்புப் போன்ற கண்களை உடைய, சூலம் ஏந்திய காளி தேவி நர்த்தனம் ஆடும்படியாக, வேலாயுதத்தால் அசுரர்களின் படைகளைக் கொன்று, போரொலி மிகவும் பெருக, மதிக்கத் தக்க மயிலாகிய குதிரையை நடத்தும் பெருமாளே.
கார் உலாவு(ம்) குழற்கும் கூரிதான விழிக்கும் காதல் பேணு(ம்) நுதற்கும் ... (வேசையர்களின்) மேகம் போன்ற கூந்தலுக்கும், கூர்மை வாய்ந்த கண்களுக்கும், ஆசை விருப்பத்தை எழச் செய்யும் நெற்றிக்கும், கதிர்போலும் காவி சேர் பவளத்தின் கோவை வாய் இதழுக்கும் ... ஒளிக் கிரணம் போல் பிரகாசம் கொண்டதாய், செந்நிறம் கொண்ட பவளத்தை ஒப்பதாய், கொவ்வைப் பழம் போல் சிவப்பான வாயிதழுக்கும், காசு பூணு(ம்) முலைக்கும் கதி சேரா நேரிதான இடைக்கும் சீத வார(ம்) நகைக்கும் ... தங்கக் காசுமாலை அணிந்துள்ள மார்புக்கும், உறுதித் தன்மை இல்லாது (ஒடிவது போல) நுண்ணியதான இடுப்புக்கும், குளிர்ச்சியையும் அன்பையும் காட்ட வல்ல புன்சிரிப்புக்கும், நேர் இலாத தொடைக்கும் சதி பாடும் நீதமான அடிக்கும் மால் உறாத படிக்கு ... நிகரில்லாத தொடைக்கும், தாளக் கட்டுடன் ஜதிகளைக் காட்டும் தகுதியைக் கொண்டதான பாதத்துக்கும், நான் மோக மயக்கம் கொள்ளாதபடிக்கு, உன் நேயமோடு துதிக்கும்படி பாராய் ... உன் மேல் அன்போடு துதிக்கும்படி என்னைக் கண் பார்த்து அருள்வாய். பார மேரு வளைக்கும் பாணியார் சடையில் செம் பாதி சோமன் எருக்கும் புனைவார் தம் பாலகா என ... கனத்த மேரு மலையை வில்லாய் வளைத்த திருக்கைகளை உடையவரும், சடையிலே செம்மை வாய்ந்த பிறைச் சந்திரனையும், எருக்க மலரையும் அணிந்துள்ளவரும் ஆகிய சிவபெருமானுடைய மகனே என்று நித்தம் பாடு நாவலர் துக்கம் பாவ நாசம் அறுத்து இன் பதம் ஈவாய் ... நாள் தோறும் துதித்துப் பாடும் புலவர்களின் துக்கத்தையும் பாபத்தையும் தொலைத்து, இனிமை தரும் திருவடிகளைத் தருவாயாக. சோரி வாரியிடச் சென்று ஏறி ஓடி அழல் கண் சூல காளி நடிக்கும்படி ... ரத்தம் கடல் போல் பெருக, (போர்க்களத்தில்) போய்ச் சேர்ந்து ஓடி, நெருப்புப் போன்ற கண்களை உடைய, சூலம் ஏந்திய காளி தேவி நர்த்தனம் ஆடும்படியாக, வேலால் சூரர் சேனைதனைக் கொன்று ஆரவாரம் மிகுத்து ... வேலாயுதத்தால் அசுரர்களின் படைகளைக் கொன்று, போரொலி மிகவும் பெருக, எண் தோகை வாசி நடத்தும் பெருமாளே. ... மதிக்கத் தக்க மயிலாகிய குதிரையை நடத்தும் பெருமாளே.