காதில் ஓலை கிழிக்கும் காம பாண விழிக்கும்
கான யாழின் மொழிக்கும் பொதுமாதர் காண ஒணாத இடைக்கும் பூண் உலாவு முலைக்கும்
காதில் நீடு குழைக்கும் புதிது ஆய கோது இலாத கருப்பஞ் சாறு போல ருசிக்கும் கோவை வாய் அமுதுக்கும் தணியாமல்
கூருவேன் ஒருவர்க்கும் தேட ஒணாதது ஒர் அர்த்தம் கூடுமாறு ஒரு சற்றும் கருதாயோ
பூதி பூஷணர் கற்பின் பேதை பாகர் துதிக்கும் போத தேசிக
சக்ரம் தவறாதே போக பூமி புரக்கும் த்யாக
மோக குறப் பெண் போத ஆதர(ம்) வைக்கும் புய வீரா
சோதி வேலை எடுத்து அன்று ஓத வேலையில் நிற்கும் சூத தாருவும் வெற்பும் பொரு கோவே
சூரர் சேனை அனைத்தும் தூளியாக நடிக்கும் தோகை வாசி நடத்தும் பெருமாளே.
விலை மகளிர் காதில் அணிந்துள்ள ஓலை வரைக்கும் பாய்ந்து கிழிக்கின்றனவும், மன்மதனின் அம்பை ஒத்தவையுமான கண்களுக்கும், இசையை எழுப்பும் யாழ் போன்ற பேச்சுக்கும், வேசிகளின் பார்க்க அரிதான நுண்ணிய இடுப்புக்கும், ஆபரணங்கள் அசைந்தாடும் மார்பகத்துக்கும், காதில் நீண்டு தொங்கும் குண்டலங்களுக்கும், அதிசயம் விளைவிக்கத் தக்க, (சக்கை, தோல் முதலிய) குற்றம் இல்லாத கரும்பின் சாறு போல இனிக்கும் கொவ்வைப் பழம் போன்ற சிவந்த வாயிடத்து ஊறும் ஊறலுக்கும் அடங்காமல், (காமம்) மிக்கெழுதலைக் கொண்டவனாகிய நான் யாராலும் தேடிக் காண முடியாததான ஒப்பற்ற (பேரின்பப்) பொருளைக் கண்டு அடையும்படி, ஒரு சிறிதளவாவது நீ மனதில் நினைக்க மாட்டாயோ? விபூதியை அலங்காரமாகக் கொள்ளுபவர், கற்பொழுக்கம் நிறைந்த பேதையாகிய பார்வதி தேவியைப் பாகத்தில் கொண்டவர் ஆகிய சிவபெருமான் போற்றும் ஞான தேசிகனே, விதித்த நீதியில் தவறாத வண்ணம் சுவர்க்க லோகத்தைக் காத்தருளும் தியாக சீலனே, உன் ஆசைக்கு உரிய குறப் பெண்ணாகிய வள்ளி நின்பால் வந்து அடைய அன்பு வைத்த புய வீரனே, பேரொளி வீசும் வேலாயுதத்தை எடுத்து, அன்று அலை வீசும் கடலில் (மறைந்து) நிற்கும் மாமரமாகிய சூரனுடனும், (அவனுக்கு அரணாயிருந்த) எழு கிரியுடனும் சண்டை செய்த தலைவனே, சூரர்களுடைய படை யாவும் பொடியாகும்படி நடனம் செய்யும் மயிலாகிய குதிரையை நடத்திச் சென்ற பெருமாளே.
காதில் ஓலை கிழிக்கும் காம பாண விழிக்கும் ... விலை மகளிர் காதில் அணிந்துள்ள ஓலை வரைக்கும் பாய்ந்து கிழிக்கின்றனவும், மன்மதனின் அம்பை ஒத்தவையுமான கண்களுக்கும், கான யாழின் மொழிக்கும் பொதுமாதர் காண ஒணாத இடைக்கும் பூண் உலாவு முலைக்கும் ... இசையை எழுப்பும் யாழ் போன்ற பேச்சுக்கும், வேசிகளின் பார்க்க அரிதான நுண்ணிய இடுப்புக்கும், ஆபரணங்கள் அசைந்தாடும் மார்பகத்துக்கும், காதில் நீடு குழைக்கும் புதிது ஆய கோது இலாத கருப்பஞ் சாறு போல ருசிக்கும் கோவை வாய் அமுதுக்கும் தணியாமல் ... காதில் நீண்டு தொங்கும் குண்டலங்களுக்கும், அதிசயம் விளைவிக்கத் தக்க, (சக்கை, தோல் முதலிய) குற்றம் இல்லாத கரும்பின் சாறு போல இனிக்கும் கொவ்வைப் பழம் போன்ற சிவந்த வாயிடத்து ஊறும் ஊறலுக்கும் அடங்காமல், கூருவேன் ஒருவர்க்கும் தேட ஒணாதது ஒர் அர்த்தம் கூடுமாறு ஒரு சற்றும் கருதாயோ ... (காமம்) மிக்கெழுதலைக் கொண்டவனாகிய நான் யாராலும் தேடிக் காண முடியாததான ஒப்பற்ற (பேரின்பப்) பொருளைக் கண்டு அடையும்படி, ஒரு சிறிதளவாவது நீ மனதில் நினைக்க மாட்டாயோ? பூதி பூஷணர் கற்பின் பேதை பாகர் துதிக்கும் போத தேசிக ... விபூதியை அலங்காரமாகக் கொள்ளுபவர், கற்பொழுக்கம் நிறைந்த பேதையாகிய பார்வதி தேவியைப் பாகத்தில் கொண்டவர் ஆகிய சிவபெருமான் போற்றும் ஞான தேசிகனே, சக்ரம் தவறாதே போக பூமி புரக்கும் த்யாக ... விதித்த நீதியில் தவறாத வண்ணம் சுவர்க்க லோகத்தைக் காத்தருளும் தியாக சீலனே, மோக குறப் பெண் போத ஆதர(ம்) வைக்கும் புய வீரா ... உன் ஆசைக்கு உரிய குறப் பெண்ணாகிய வள்ளி நின்பால் வந்து அடைய அன்பு வைத்த புய வீரனே, சோதி வேலை எடுத்து அன்று ஓத வேலையில் நிற்கும் சூத தாருவும் வெற்பும் பொரு கோவே ... பேரொளி வீசும் வேலாயுதத்தை எடுத்து, அன்று அலை வீசும் கடலில் (மறைந்து) நிற்கும் மாமரமாகிய சூரனுடனும், (அவனுக்கு அரணாயிருந்த) எழு கிரியுடனும் சண்டை செய்த தலைவனே, சூரர் சேனை அனைத்தும் தூளியாக நடிக்கும் தோகை வாசி நடத்தும் பெருமாளே. ... சூரர்களுடைய படை யாவும் பொடியாகும்படி நடனம் செய்யும் மயிலாகிய குதிரையை நடத்திச் சென்ற பெருமாளே.