தோதகம் மிகுத்த பூதம் மருள்
பக்க சூலை வலி வெப்பு மதநீர் தோய்
சூழ் பெரு வயிற்று நோய் இருமல் குற்று சோகை பல குட்டம் அவை
தீரா வாதமொடு பித்தம் மூலமுடன் மற்று(ம்) ஆய பிணி சற்றும் அணுகாதே
வாடும் எனை முத்தி நீடிய பதத்தில் வாழ மிக வைத்து அருள்வாயே
காதல் மிக உற்று மா தினை விளைத்த கானக குறத்தி மணவாளா
காசினி அனைத்தும் ஓடி அளவிட்ட கால் நெடிய பச்சை மயில் வீரா
வேத மொழி மெத்த ஓதி வரு(ம்) பத்தர் வேதனை தவிர்க்கும் முருகோனே
மேல் அசுரர் இட்ட தேவர் சிறை வெட்டி மீள விடுவித்த பெருமாளே.
வஞ்சகம் மிக்குள்ள (மண், நீர், தீ, காற்று, விண் என்னும்) ஐந்து பூதங்களின் மயக்கத்தால் ஏற்படும் விலாப் பக்கத்தில் உண்டாகும் சூலை நோய், வலிப்பு முதலிய நோய்கள், சுரம், நீர் சம்பந்தமான நோய் சேர்ந்து, எங்கும் பரவும் பெரு வயிற்று நோய், இருமல், தலைக் குத்தல், இரத்தக் குறைவு, குஷ்ட நோய்கள், தீர்க்க முடியாத வாயு சம்பந்தமான நோய்கள், பித்த நோய், மூல நோய் பின்னும் பல வகையான நோய்கள் கொஞ்சமேனும் என்னை அணுகாமல், வருந்தி நிற்கும் என்னை முக்தி நீடித்து விளங்கும் உனது திருவடியில் நான் வாழும்படியாக நன்கு வைத்து அருள்புரிவாயாக. காதல் மிகக் கொண்டு நல்ல தினை விளைவித்த காட்டுக் குறத்தியாகிய வள்ளியின் மணவாளனே, உலகம் முழுமையும் ஓடி (அதன் சுற்றளவை) அளவிட்டு வந்த, நீண்ட கால்களை உடைய பச்சை மயில் வீரனே, வேத மொழிகளை எப்போதும் ஓதும் அடியார்களின் துயரங்களைத் தீர்க்கும் முருகனே, முன்னாள் அசுரர்கள் அடைத்துவைத்த தேவர்களின் சிறைகளை உடைத்தெறிந்து தேவர்கள் மீண்டும் அமரநாட்டுக்குச் செல்லும்படி விடுதலை செய்வித்த பெருமாளே.
தோதகம் மிகுத்த பூதம் மருள் ... வஞ்சகம் மிக்குள்ள (மண், நீர், தீ, காற்று, விண் என்னும்) ஐந்து பூதங்களின் மயக்கத்தால் ஏற்படும் பக்க சூலை வலி வெப்பு மதநீர் தோய் ... விலாப் பக்கத்தில் உண்டாகும் சூலை நோய், வலிப்பு முதலிய நோய்கள், சுரம், நீர் சம்பந்தமான நோய் சேர்ந்து, சூழ் பெரு வயிற்று நோய் இருமல் குற்று சோகை பல குட்டம் அவை ... எங்கும் பரவும் பெரு வயிற்று நோய், இருமல், தலைக் குத்தல், இரத்தக் குறைவு, குஷ்ட நோய்கள், தீரா வாதமொடு பித்தம் மூலமுடன் மற்று(ம்) ஆய பிணி சற்றும் அணுகாதே ... தீர்க்க முடியாத வாயு சம்பந்தமான நோய்கள், பித்த நோய், மூல நோய் பின்னும் பல வகையான நோய்கள் கொஞ்சமேனும் என்னை அணுகாமல், வாடும் எனை முத்தி நீடிய பதத்தில் வாழ மிக வைத்து அருள்வாயே ... வருந்தி நிற்கும் என்னை முக்தி நீடித்து விளங்கும் உனது திருவடியில் நான் வாழும்படியாக நன்கு வைத்து அருள்புரிவாயாக. காதல் மிக உற்று மா தினை விளைத்த கானக குறத்தி மணவாளா ... காதல் மிகக் கொண்டு நல்ல தினை விளைவித்த காட்டுக் குறத்தியாகிய வள்ளியின் மணவாளனே, காசினி அனைத்தும் ஓடி அளவிட்ட கால் நெடிய பச்சை மயில் வீரா ... உலகம் முழுமையும் ஓடி (அதன் சுற்றளவை) அளவிட்டு வந்த, நீண்ட கால்களை உடைய பச்சை மயில் வீரனே, வேத மொழி மெத்த ஓதி வரு(ம்) பத்தர் வேதனை தவிர்க்கும் முருகோனே ... வேத மொழிகளை எப்போதும் ஓதும் அடியார்களின் துயரங்களைத் தீர்க்கும் முருகனே, மேல் அசுரர் இட்ட தேவர் சிறை வெட்டி மீள விடுவித்த பெருமாளே. ... முன்னாள் அசுரர்கள் அடைத்துவைத்த தேவர்களின் சிறைகளை உடைத்தெறிந்து தேவர்கள் மீண்டும் அமரநாட்டுக்குச் செல்லும்படி விடுதலை செய்வித்த பெருமாளே.