ஏடுமலர் உற்ற ஆடல் மதன் உய்க்கும் ஏ(ய் அ)து பழிக்கும் விழியாலே
ஏதையும் அழிக்கு(ம்) மாதர் தம் மயக்கிலே மருவி மெத்த மருளாகி
நாடு நகர் மிக்க வீடு தன மக்கள் நாரியர்கள் சுற்றம் இவை பேணா
ஞானஉணர்வு அற்று நான் எழு பிறப்பும் நாடி நரகத்தில் விழலாமோ
ஆடும் அரவத்தை ஓடி உடல் கொத்தி ஆடும் ஒரு பச்சை மயில்வீரா
ஆரணம் உரைக்கு(ம்) மோன அக இடத்தில் ஆரும் உ(ய்)ய நிற்கு(ம்) முருகோனே
வேடுவர் புனத்தில் நீடும் இதணத்தில் மேவிய குறத்தி மணவாளா
மேலசுரர் இட்ட தேவர் சிறை வெட்டி மீள விடுவித்த பெருமாளே.
இதழ்களை உடைய மலர்ப் பாணங்களைக் கொண்டு போர் புரியும் மன்மதன் செலுத்தும் அம்பையும் தமது கொடுமைத்திறத்தால் வென்று பழிக்கவல்ல கண்களாலே, எல்லாப் பொருள்களையும் அழிக்கவல்ல மாதர்களின் மயக்கு என்பதிலே நான் சிக்கி, மிகவும் காம மயக்கம் பூண்டு, என் நாட்டையும், நகரையும், நிறைந்த வீடுகளையும், செல்வத்தையும், பெண்களையும், குழந்தைகளையும், சுற்றத்தாரையும் பேணி நின்று விரும்பி, ஞான உணர்ச்சியே இல்லாமல், ஏழுவகையான பிறப்புக்களையே தேடி நின்று நரகத்தில் விழலாமோ? படம் எடுத்து ஆடும் பாம்பைக் கண்டதும் ஓடி, அதன் உடலைக் கொத்தி நடனம் புரிகின்ற ஒப்பற்ற பச்சை மயில் வீரனே, வேதங்கள் கூறும் மெளனத்தை உட்கொண்ட நிலையில் சகல உயிர்களும் வாழ நிற்கின்ற முருகனே, வேடர்களின் தினைப்புனத்தில் நீண்ட பரண்மீது வீற்றிருந்த குறத்தி வள்ளியின் மணவாளனே, முன்பு அசுரர்கள் காவலில் இட்ட தேவர்களின் சிறையை நீக்கி, அத்தேவர்களை மீள்வித்த பெருமாளே.
ஏடுமலர் உற்ற ஆடல் மதன் உய்க்கும் ஏ(ய் அ)து பழிக்கும் விழியாலே ... இதழ்களை உடைய மலர்ப் பாணங்களைக் கொண்டு போர் புரியும் மன்மதன் செலுத்தும் அம்பையும் தமது கொடுமைத்திறத்தால் வென்று பழிக்கவல்ல கண்களாலே, ஏதையும் அழிக்கு(ம்) மாதர் தம் மயக்கிலே மருவி மெத்த மருளாகி ... எல்லாப் பொருள்களையும் அழிக்கவல்ல மாதர்களின் மயக்கு என்பதிலே நான் சிக்கி, மிகவும் காம மயக்கம் பூண்டு, நாடு நகர் மிக்க வீடு தன மக்கள் நாரியர்கள் சுற்றம் இவை பேணா ... என் நாட்டையும், நகரையும், நிறைந்த வீடுகளையும், செல்வத்தையும், பெண்களையும், குழந்தைகளையும், சுற்றத்தாரையும் பேணி நின்று விரும்பி, ஞானஉணர்வு அற்று நான் எழு பிறப்பும் நாடி நரகத்தில் விழலாமோ ... ஞான உணர்ச்சியே இல்லாமல், ஏழுவகையான பிறப்புக்களையே தேடி நின்று நரகத்தில் விழலாமோ? ஆடும் அரவத்தை ஓடி உடல் கொத்தி ஆடும் ஒரு பச்சை மயில்வீரா ... படம் எடுத்து ஆடும் பாம்பைக் கண்டதும் ஓடி, அதன் உடலைக் கொத்தி நடனம் புரிகின்ற ஒப்பற்ற பச்சை மயில் வீரனே, ஆரணம் உரைக்கு(ம்) மோன அக இடத்தில் ஆரும் உ(ய்)ய நிற்கு(ம்) முருகோனே ... வேதங்கள் கூறும் மெளனத்தை உட்கொண்ட நிலையில் சகல உயிர்களும் வாழ நிற்கின்ற முருகனே, வேடுவர் புனத்தில் நீடும் இதணத்தில் மேவிய குறத்தி மணவாளா ... வேடர்களின் தினைப்புனத்தில் நீண்ட பரண்மீது வீற்றிருந்த குறத்தி வள்ளியின் மணவாளனே, மேலசுரர் இட்ட தேவர் சிறை வெட்டி மீள விடுவித்த பெருமாளே. ... முன்பு அசுரர்கள் காவலில் இட்ட தேவர்களின் சிறையை நீக்கி, அத்தேவர்களை மீள்வித்த பெருமாளே.