முத்து மணி பணிகள் ஆரத்தாலும் மொய்த்த மலை முலை கொ(ண்)டே
வித்தாரம் முற்றும் இளைஞர் உயிர் மோகித்து ஏகப் பொரு(ம்) மாதர்
முற்று மதி முகமும் வானில் காரும் ஒத்த குழல் விழியும் வேய் நல் தோளும்
முத்தி தகும் எனும் வினாவில் பாயற்கு இடை மூழ்கிப் புத்தி கரவடம் உலாவி
சால மெத்த மிக அறிவிலாரைத் தேறி பொன் கை புகழ் பெரியராகப் பாடி புவி ஊடேபொய்க்குள் ஒழுகி அயராமல்
போது மொய்த்த கமல இரு தாளைப் பூண பொற்பும் இயல் புதுமை ஆகப் பாடப் புகல்வாயே
பத்து முடியும் அதனோடு அத்தோள் இர் பத்தும் இறைய ஒரு வாளிக்கே செய் பச்சை முகில்
சதுர வேதத்தோடு உற்ற அயனாரும் பற்ற அரிய நடமாடு அத்தாளில்
பத்தி மிக இனிய ஞானப் பாடல் பற்றும் மரபு நிலையாகப் பாடித் திரிவோனே
மெத்த அலை கடலும் வாய் விட்டு ஓடவெற்றி மயில் மிசை கொ(ண்)டு ஏகி
சூரர் மெய்க்குள் உற இலகு வேலைப் போகைக்கு எறிவோனே
வெற்றி மிகு சிலையினால் மிக்கோர் தம் வித்து விளை புனமும்
வேய் முத்து ஈனும் வெற்பும் உறையும் மயில் வேளைக்காரப் பெருமாளே.
முத்து, ரத்தினம் இவைகளாலான ஆபரணங்களும் மாலைகளும் நெருங்கி உள்ளதும், மலை போன்றதுமான மார்பைக் கொண்டு, கல்வி நிரம்பிய இளைஞர்களின் உயிரைக் காம இச்சையில் செல்லும்படி தாக்கவல்ல விலைமாதர்களின் பூரண சந்திரன் போன்ற முகமும், ஆகாயத்தில் உள்ள கருமேகம் போன்ற கூந்தலும், கண்களும், மூங்கில் போன்ற அழகிய தோள்களும் முக்தி எனத் தகும் என்கின்ற ஆய்ந்த உணர்ச்சியுடன் படுக்கையில் முழுகி, புத்தியில் வஞ்சக எண்ணம் உலவி, மிக மிக அறிவு இல்லாதவர்களைத் தேர்ந்து எடுத்து, அவர்களுடைய கை, பொன் வீசும் கை என்றும், அவர்கள் புகழில் பெரியோர் என்றும் வரும்படி பாடல்களை அமைத்துப் பாடி, இப்பூமியில் இவ்வாறு பொய்யிலேயே பழகி நடந்து சோர்ந்து போகாமல், மலர்கள் நிறைந்த உனது தாமரைத் திருவடி இணைகளை நான் அடைய, பொலிவு பொருந்திய புதிய வகையில் (உன் புகழைப்) பாடும்படி நல்வார்த்தைகளைக் கூறி அருளுக. (ராவணனுடைய) பத்துத் தலைகளும், அவைகளுடன் அந்தத் தோள்கள் இருபதும் பாழ்படும்படி ஒப்பற்ற ஒரு பாணத்தினாலேயே வீழ்த்திய பச்சை நிறத்தன் திருமாலும், நான்கு வேதங்களுடன் திகழும் பிரம தேவனும் பற்றுதற்கு (கண்டு களிக்க) அரிதான, ஊர்த்துவ நடனமாடின அந்தச் சிவபிரானின் திருவடியில் பக்தி ரசம் இனிதாக விளங்கும் ஞானப் பாடல்களை, இப்பூமியில் உள்ளவர்களின் இயல்பான வழக்க முறையில் (தலங்கள் தோறும் சென்று) பாடித் திரிந்த திருஞான சம்பந்தனே, மிகவும் அலைகளை வீசும் கடலும் வாய்விட்டு ஓலமிட்டுப் புரள, வெற்றி மயிலின் மேல் ஏறி (போர்க்களத்துக்குச்) சென்று, சூரனின் உடலுக்குள் பாய, ஒளி வீசும் வேலாயுதத்தைப் புகும்படி செலுத்தியவனே, வெற்றி தரக் கூடிய சிறப்பினைக் கொண்ட விற்போரில் வல்லவர்களாகிய வேடர்களுடைய (தினை) விதைத்து விளையும் வயலிலும் மூங்கில்கள் முத்துக்களைத் தரும் வள்ளிமலையிலும் வாசம் செய்யும் மயிலைப் போன்ற வள்ளியிடம் காவல் காத்த பெருமாளே.
முத்து மணி பணிகள் ஆரத்தாலும் மொய்த்த மலை முலை கொ(ண்)டே ... முத்து, ரத்தினம் இவைகளாலான ஆபரணங்களும் மாலைகளும் நெருங்கி உள்ளதும், மலை போன்றதுமான மார்பைக் கொண்டு, வித்தாரம் முற்றும் இளைஞர் உயிர் மோகித்து ஏகப் பொரு(ம்) மாதர் ... கல்வி நிரம்பிய இளைஞர்களின் உயிரைக் காம இச்சையில் செல்லும்படி தாக்கவல்ல விலைமாதர்களின் முற்று மதி முகமும் வானில் காரும் ஒத்த குழல் விழியும் வேய் நல் தோளும் ... பூரண சந்திரன் போன்ற முகமும், ஆகாயத்தில் உள்ள கருமேகம் போன்ற கூந்தலும், கண்களும், மூங்கில் போன்ற அழகிய தோள்களும் முத்தி தகும் எனும் வினாவில் பாயற்கு இடை மூழ்கிப் புத்தி கரவடம் உலாவி ... முக்தி எனத் தகும் என்கின்ற ஆய்ந்த உணர்ச்சியுடன் படுக்கையில் முழுகி, புத்தியில் வஞ்சக எண்ணம் உலவி, சால மெத்த மிக அறிவிலாரைத் தேறி பொன் கை புகழ் பெரியராகப் பாடி புவி ஊடேபொய்க்குள் ஒழுகி அயராமல் ... மிக மிக அறிவு இல்லாதவர்களைத் தேர்ந்து எடுத்து, அவர்களுடைய கை, பொன் வீசும் கை என்றும், அவர்கள் புகழில் பெரியோர் என்றும் வரும்படி பாடல்களை அமைத்துப் பாடி, இப்பூமியில் இவ்வாறு பொய்யிலேயே பழகி நடந்து சோர்ந்து போகாமல், போது மொய்த்த கமல இரு தாளைப் பூண பொற்பும் இயல் புதுமை ஆகப் பாடப் புகல்வாயே ... மலர்கள் நிறைந்த உனது தாமரைத் திருவடி இணைகளை நான் அடைய, பொலிவு பொருந்திய புதிய வகையில் (உன் புகழைப்) பாடும்படி நல்வார்த்தைகளைக் கூறி அருளுக. பத்து முடியும் அதனோடு அத்தோள் இர் பத்தும் இறைய ஒரு வாளிக்கே செய் பச்சை முகில் ... (ராவணனுடைய) பத்துத் தலைகளும், அவைகளுடன் அந்தத் தோள்கள் இருபதும் பாழ்படும்படி ஒப்பற்ற ஒரு பாணத்தினாலேயே வீழ்த்திய பச்சை நிறத்தன் திருமாலும், சதுர வேதத்தோடு உற்ற அயனாரும் பற்ற அரிய நடமாடு அத்தாளில் ... நான்கு வேதங்களுடன் திகழும் பிரம தேவனும் பற்றுதற்கு (கண்டு களிக்க) அரிதான, ஊர்த்துவ நடனமாடின அந்தச் சிவபிரானின் திருவடியில் பத்தி மிக இனிய ஞானப் பாடல் பற்றும் மரபு நிலையாகப் பாடித் திரிவோனே ... பக்தி ரசம் இனிதாக விளங்கும் ஞானப் பாடல்களை, இப்பூமியில் உள்ளவர்களின் இயல்பான வழக்க முறையில் (தலங்கள் தோறும் சென்று) பாடித் திரிந்த திருஞான சம்பந்தனே, மெத்த அலை கடலும் வாய் விட்டு ஓடவெற்றி மயில் மிசை கொ(ண்)டு ஏகி ... மிகவும் அலைகளை வீசும் கடலும் வாய்விட்டு ஓலமிட்டுப் புரள, வெற்றி மயிலின் மேல் ஏறி (போர்க்களத்துக்குச்) சென்று, சூரர் மெய்க்குள் உற இலகு வேலைப் போகைக்கு எறிவோனே ... சூரனின் உடலுக்குள் பாய, ஒளி வீசும் வேலாயுதத்தைப் புகும்படி செலுத்தியவனே, வெற்றி மிகு சிலையினால் மிக்கோர் தம் வித்து விளை புனமும் ... வெற்றி தரக் கூடிய சிறப்பினைக் கொண்ட விற்போரில் வல்லவர்களாகிய வேடர்களுடைய (தினை) விதைத்து விளையும் வயலிலும் வேய் முத்து ஈனும் வெற்பும் உறையும் மயில் வேளைக்காரப் பெருமாளே. ... மூங்கில்கள் முத்துக்களைத் தரும் வள்ளிமலையிலும் வாசம் செய்யும் மயிலைப் போன்ற வள்ளியிடம் காவல் காத்த பெருமாளே.