இருள் குழலைக் குலைத்து முடித்து எழில் கலையைத் திருத்தி உடுத்து
இணைக் கயலைப் புரட்டி விழித்து அதிபார இழைக் களபப் பொருப்பு அணி கச்சு எடுத்து மறைத்து அழைத்து
வளைத் திருத்தி அகப்படுத்தி நகைத்து உறவாடிப் பொருட்கு மிகத் துதித்து இளகி
புலப்படு சித்திரக் கரணப் புணர்ச்சி விளைத்து உருக்கு பரத்தையர் மோகப் புழுத் தொளையில் திளைத்தது அதனை
பொறுத்து அருளிச் சடக்கென அப் புறத்தில் அழைத்து இருத்தி அளித்திடுவாயே
உருத்திரரைப் பழித்து உலகுக்கு உகக்கடை அப்பு எனக் ககனத்து உடுத் தகரப் படுத்து கிரித் தலம் ஏழும் உடுத்த பொலப் பொருப்பு வெடித்து ஒலிப்ப
மருத்து இளைப்ப நெருப்பு ஒளிக்க இருப்பிடத்தை விடச் சுரர் ஓடி திரைக் கடல் உட்படச் சுழலச் செகத்ரையம் இப்படிக் கலையச் சிரித்து எதிர் கொக்கரித்து மலைத்திடு பாவி
செருக்கு அழியத் தெழித்து உதிரத் திரைக் கடலில் சுழித் தலையில் திளைத்த அயில் கரக் குமரப் பெருமாளே.
இருண்ட கூந்தலை கலைத்தும் முடித்தும், அழகிய ஆடையை திருத்தமாக அணிந்தும், இரண்டு கண்களையும் புரட்டி விழித்தும், அதிக கனமான ஆபரணங்களையும் கலவைச் சாந்தையும் கொண்ட மலை போன்ற மார்பின் மேல் அணிந்துள்ள கச்சை எடுத்தும் மறைத்தும், அழைப்பு விடுத்தும், வளையல்களைத் திருத்தமாக சரிப்படுத்தியும், சிரித்து உறவு முறைகளைச் சொல்லி உறவாடியும், பொருள் பெறுவதற்கு நிரம்பத் துதித்தும், (பொருளைக் கண்ட பின்) மனம் நெகிழ்ந்தும், தெரிந்த விசித்திரமான புணர்ச்சி வகைகளைக் காட்டி மனதை உருக்கும் பொது மகளிரின் காமத்துக்கு இடமான, புழுவுக்கு இருப்பிடமாகிய, பெண்குறி என்னும் குழியில் இடைவிடாது விளையாடின என் செயலை மன்னித்து வேகமாக அப்புறமான நன்னெறியில் அழைத்து பொருந்த வைத்துக் காப்பாற்றி அருள்வாயாக. ருத்திரர்களைப் பழித்தும், உலகத்தை அழிக்க வந்த யுக முடிவில் தோன்றும் பிரளய நீர் என்று பொங்கி எழுந்து, ஆகாயத்தில் உள்ள நட்சத்திரங்கள் சிதறும்படிச் செய்து, மலைகள் ஏழும் சூழ்ந்துள்ள பொன் மலையாகிய மேரு வெடிபட்டு ஒலி எழுப்பவும், காற்று சோர்வு அடையவும், நெருப்பு ஒளித்துக் கொள்ளவும், தத்தம் இருப்பிடத்தை விட்ட தேவர்கள் ஓடிப் போய் அலை வீசும் கடலுள் பட்டு அலைச்சல் உற, மூன்று உலகங்களும் இவ்வாறு வேதனைப்பட, (அதைக் கண்டு) சிரித்தும் எதிரே நின்று ஆரவாரித்தும் போர் புரிந்த பாவியாகிய (சூரனுடைய) ஆணவம் அழிபட அவனை அடக்கி அலை வீசும் ரத்தக் கடலின் சுழியிடத்தில் (முழுக்கி) மகிழ்ந்து விளையாடிய வேலாயுதத்தை ஏந்திய குமரப் பெருமாளே.
இருள் குழலைக் குலைத்து முடித்து எழில் கலையைத் திருத்தி உடுத்து ... இருண்ட கூந்தலை கலைத்தும் முடித்தும், அழகிய ஆடையை திருத்தமாக அணிந்தும், இணைக் கயலைப் புரட்டி விழித்து அதிபார இழைக் களபப் பொருப்பு அணி கச்சு எடுத்து மறைத்து அழைத்து ... இரண்டு கண்களையும் புரட்டி விழித்தும், அதிக கனமான ஆபரணங்களையும் கலவைச் சாந்தையும் கொண்ட மலை போன்ற மார்பின் மேல் அணிந்துள்ள கச்சை எடுத்தும் மறைத்தும், அழைப்பு விடுத்தும், வளைத் திருத்தி அகப்படுத்தி நகைத்து உறவாடிப் பொருட்கு மிகத் துதித்து இளகி ... வளையல்களைத் திருத்தமாக சரிப்படுத்தியும், சிரித்து உறவு முறைகளைச் சொல்லி உறவாடியும், பொருள் பெறுவதற்கு நிரம்பத் துதித்தும், (பொருளைக் கண்ட பின்) மனம் நெகிழ்ந்தும், புலப்படு சித்திரக் கரணப் புணர்ச்சி விளைத்து உருக்கு பரத்தையர் மோகப் புழுத் தொளையில் திளைத்தது அதனை ... தெரிந்த விசித்திரமான புணர்ச்சி வகைகளைக் காட்டி மனதை உருக்கும் பொது மகளிரின் காமத்துக்கு இடமான, புழுவுக்கு இருப்பிடமாகிய, பெண்குறி என்னும் குழியில் இடைவிடாது விளையாடின என் செயலை பொறுத்து அருளிச் சடக்கென அப் புறத்தில் அழைத்து இருத்தி அளித்திடுவாயே ... மன்னித்து வேகமாக அப்புறமான நன்னெறியில் அழைத்து பொருந்த வைத்துக் காப்பாற்றி அருள்வாயாக. உருத்திரரைப் பழித்து உலகுக்கு உகக்கடை அப்பு எனக் ககனத்து உடுத் தகரப் படுத்து கிரித் தலம் ஏழும் உடுத்த பொலப் பொருப்பு வெடித்து ஒலிப்ப ... ருத்திரர்களைப் பழித்தும், உலகத்தை அழிக்க வந்த யுக முடிவில் தோன்றும் பிரளய நீர் என்று பொங்கி எழுந்து, ஆகாயத்தில் உள்ள நட்சத்திரங்கள் சிதறும்படிச் செய்து, மலைகள் ஏழும் சூழ்ந்துள்ள பொன் மலையாகிய மேரு வெடிபட்டு ஒலி எழுப்பவும், மருத்து இளைப்ப நெருப்பு ஒளிக்க இருப்பிடத்தை விடச் சுரர் ஓடி திரைக் கடல் உட்படச் சுழலச் செகத்ரையம் இப்படிக் கலையச் சிரித்து எதிர் கொக்கரித்து மலைத்திடு பாவி ... காற்று சோர்வு அடையவும், நெருப்பு ஒளித்துக் கொள்ளவும், தத்தம் இருப்பிடத்தை விட்ட தேவர்கள் ஓடிப் போய் அலை வீசும் கடலுள் பட்டு அலைச்சல் உற, மூன்று உலகங்களும் இவ்வாறு வேதனைப்பட, (அதைக் கண்டு) சிரித்தும் எதிரே நின்று ஆரவாரித்தும் போர் புரிந்த பாவியாகிய (சூரனுடைய) செருக்கு அழியத் தெழித்து உதிரத் திரைக் கடலில் சுழித் தலையில் திளைத்த அயில் கரக் குமரப் பெருமாளே. ... ஆணவம் அழிபட அவனை அடக்கி அலை வீசும் ரத்தக் கடலின் சுழியிடத்தில் (முழுக்கி) மகிழ்ந்து விளையாடிய வேலாயுதத்தை ஏந்திய குமரப் பெருமாளே.