சிற்று ஆயக் கூட்டத் தெரிவையர் வித்தாரச் சூழ்ச்சிக் கயல் விழி சற்று ஏறப் பார்த்து
சில பணிவிடை ஏவிச் சில் தாபத்து ஆக்கைப் பொருள் கொடு பித்து ஏறிக் கூப்பிட்டவர் பரிசு எட்டாமல்
தூர்த்தத்து அலைபடு சிறு காலை
உற்றார் பெற்றார்க்குப் பெரிது ஒரு பற்றாயப் பூட்டுக் கயிறு கொடு
உச்சாயத்து ஆக்கைத் தொழிலொடு தடுமாறி உக்காரித்து ஏக்கற்று
உயிர் நழுவிக் காய் அத் தீப் பட்டு எரி உடல் உக்கேன் மெய்க்கு ஆட்டைத் தவிர்வதும் ஒரு நாளே
வற்றா முற்றாப் பச்சிள முலையில் பால் கைப் பார்த்துத் தரும் ஒரு மைக் காமக் கோட்டக் குல மயில் தரு பாலா
மத்து ஓசைப் போக்கில் தயிர் உறி நெய்ப் பாலுக்கு ஆய்ச்சிக்கு இரு பதம் வைத்து ஆடிக் காட்டிப் பருகு அரி மருகோனே
கல் தா வில் காட்டிக் கரை துறை நற்றாயில் காட்டிப் புகழ் கலை கற்றார் சொல் கேட்கத் தனி வழி வருவோனே
கைச் சூலக் கூற்றைக் கணை மதனைத் தூள் பட்டு ஆர்ப்ப
கனல் பொழி கர்த்தாவுக்கு ஏற்கப் பொருள் அருள் பெருமாளே.
சிறிய கூட்டமாக தமது தோழியர் சூழ்ந்த (விலை) மாதர்கள் விரிவான தந்திரங்களைக் கொண்ட கயல் மீன் போன்ற கண்களைக் கொஞ்சம் தூக்கிப் பார்த்து, சில வேலைகளைக் கட்டளை இட்டு, அற்பமான காம தாகம் கொண்ட உடலை விற்றுப் பொருளைச் சம்பாதித்து, காமப் பித்தை வருவோருக்கு ஏற்றிக் கூப்பிடும் விலைமாதர்களுக்குக் கொடுக்க வேண்டிய கொடைப் பொருள் கிட்டாமையால், கெட்ட நெறியில் அலைச்சல் உறும் இளம் பருவத்தில், நெருங்கிய சுற்றத்தார், நண்பர்கள் ஆகியோருக்கும், தாய் தந்தையர்களுக்கும் மிகவும் அன்புக்கு இடமான பாசம் என்ற கயிற்றினால் கட்டுண்டும், உயர்ந்த நிலையில் இந்த உடல் கொண்டு செய்ய வேண்டிய தொழில்களில் ஈடுபட்டு அலைந்தும், சத்தமிட்டும், இளைத்து அவதிப்பட்டும், முடிவில் உயிர் நழுவிப் போய், காய்கின்ற அந்த (சுடு காட்டு) நெருப்பில் பட்டு எரிந்து போகின்ற இந்த உடலைத் தொலையும் வழியைத் தேடவில்லை. இந்த உடலுக்கு உள்ள ஆட்டங்களை ஒழிப்பதான ஒருநாள் எனக்குக் கிடைக்குமா? வற்றாததும், முதிராததும் ஆன, பசுமையும் இளமையும் வாய்ந்த மார்பில் பாலை இடம் பார்த்துத் தந்த ஒப்பற்றவளும், மை பூசிய கண்ணை உடையவளும், காம கோட்டம் என்னும் திருக் கோயிலில் வீற்றிருக்கும் சிறந்த மயிலை ஒத்தவளுமான காமாட்சி தந்த குழந்தையே, மத்தின் ஓசை செல்லும் போக்கை அறிந்து, உறியில் உள்ள தயிர், நெய், பால் ஆகியவற்றை அடைய வேண்டி, தாயாகிய யசோதைக்குத் தன் இரண்டு திருவடிகளைக் கொண்டு கூத்தாடி, தனது ஆடல்களைக் காட்டி, அந்தத் தயிர் முதலியவற்றை உண்ட கண்ணனாம் திருமாலின் மருகனே, மலையைப் போன்ற வலிமை கொண்ட வில்லைக் காட்டி, சிறந்த நற்றாயிரங்கல் என்னும் துறையில் பாடிக் காட்டிப் புகழ்ந்த கலைகள் கற்றறிந்த பொய்யாமொழிப் புலவரின் பாடலைக் கேட்க தனியாக (அவர் வந்து கொண்டிருந்த) காட்டு வழியில் வந்தவனே, கையில் சூலாயுதம் ஏந்திய நமனும், மலர்ப் பாணங்களைக் கொண்டிருந்த மன்மதனும் முற்றும் அழிந்து ஓலம் இடும்படி, கோப நெருப்பைச் சொரிந்த தலைவரான சிவபெருமான் மகிழ்ந்து ஏற்கும்படி பிரணவப் பொருளை உபதேசித்து அருளிய பெருமாளே.
சிற்று ஆயக் கூட்டத் தெரிவையர் வித்தாரச் சூழ்ச்சிக் கயல் விழி சற்று ஏறப் பார்த்து ... சிறிய கூட்டமாக தமது தோழியர் சூழ்ந்த (விலை) மாதர்கள் விரிவான தந்திரங்களைக் கொண்ட கயல் மீன் போன்ற கண்களைக் கொஞ்சம் தூக்கிப் பார்த்து, சில பணிவிடை ஏவிச் சில் தாபத்து ஆக்கைப் பொருள் கொடு பித்து ஏறிக் கூப்பிட்டவர் பரிசு எட்டாமல் ... சில வேலைகளைக் கட்டளை இட்டு, அற்பமான காம தாகம் கொண்ட உடலை விற்றுப் பொருளைச் சம்பாதித்து, காமப் பித்தை வருவோருக்கு ஏற்றிக் கூப்பிடும் விலைமாதர்களுக்குக் கொடுக்க வேண்டிய கொடைப் பொருள் கிட்டாமையால், தூர்த்தத்து அலைபடு சிறு காலை ... கெட்ட நெறியில் அலைச்சல் உறும் இளம் பருவத்தில், உற்றார் பெற்றார்க்குப் பெரிது ஒரு பற்றாயப் பூட்டுக் கயிறு கொடு ... நெருங்கிய சுற்றத்தார், நண்பர்கள் ஆகியோருக்கும், தாய் தந்தையர்களுக்கும் மிகவும் அன்புக்கு இடமான பாசம் என்ற கயிற்றினால் கட்டுண்டும், உச்சாயத்து ஆக்கைத் தொழிலொடு தடுமாறி உக்காரித்து ஏக்கற்று ... உயர்ந்த நிலையில் இந்த உடல் கொண்டு செய்ய வேண்டிய தொழில்களில் ஈடுபட்டு அலைந்தும், சத்தமிட்டும், இளைத்து அவதிப்பட்டும், உயிர் நழுவிக் காய் அத் தீப் பட்டு எரி உடல் உக்கேன் மெய்க்கு ஆட்டைத் தவிர்வதும் ஒரு நாளே ... முடிவில் உயிர் நழுவிப் போய், காய்கின்ற அந்த (சுடு காட்டு) நெருப்பில் பட்டு எரிந்து போகின்ற இந்த உடலைத் தொலையும் வழியைத் தேடவில்லை. இந்த உடலுக்கு உள்ள ஆட்டங்களை ஒழிப்பதான ஒருநாள் எனக்குக் கிடைக்குமா? வற்றா முற்றாப் பச்சிள முலையில் பால் கைப் பார்த்துத் தரும் ஒரு மைக் காமக் கோட்டக் குல மயில் தரு பாலா ... வற்றாததும், முதிராததும் ஆன, பசுமையும் இளமையும் வாய்ந்த மார்பில் பாலை இடம் பார்த்துத் தந்த ஒப்பற்றவளும், மை பூசிய கண்ணை உடையவளும், காம கோட்டம் என்னும் திருக் கோயிலில் வீற்றிருக்கும் சிறந்த மயிலை ஒத்தவளுமான காமாட்சி தந்த குழந்தையே, மத்து ஓசைப் போக்கில் தயிர் உறி நெய்ப் பாலுக்கு ஆய்ச்சிக்கு இரு பதம் வைத்து ஆடிக் காட்டிப் பருகு அரி மருகோனே ... மத்தின் ஓசை செல்லும் போக்கை அறிந்து, உறியில் உள்ள தயிர், நெய், பால் ஆகியவற்றை அடைய வேண்டி, தாயாகிய யசோதைக்குத் தன் இரண்டு திருவடிகளைக் கொண்டு கூத்தாடி, தனது ஆடல்களைக் காட்டி, அந்தத் தயிர் முதலியவற்றை உண்ட கண்ணனாம் திருமாலின் மருகனே, கல் தா வில் காட்டிக் கரை துறை நற்றாயில் காட்டிப் புகழ் கலை கற்றார் சொல் கேட்கத் தனி வழி வருவோனே ... மலையைப் போன்ற வலிமை கொண்ட வில்லைக் காட்டி, சிறந்த நற்றாயிரங்கல் என்னும் துறையில் பாடிக் காட்டிப் புகழ்ந்த கலைகள் கற்றறிந்த பொய்யாமொழிப் புலவரின் பாடலைக் கேட்க தனியாக (அவர் வந்து கொண்டிருந்த) காட்டு வழியில் வந்தவனே, கைச் சூலக் கூற்றைக் கணை மதனைத் தூள் பட்டு ஆர்ப்ப ... கையில் சூலாயுதம் ஏந்திய நமனும், மலர்ப் பாணங்களைக் கொண்டிருந்த மன்மதனும் முற்றும் அழிந்து ஓலம் இடும்படி, கனல் பொழி கர்த்தாவுக்கு ஏற்கப் பொருள் அருள் பெருமாளே. ... கோப நெருப்பைச் சொரிந்த தலைவரான சிவபெருமான் மகிழ்ந்து ஏற்கும்படி பிரணவப் பொருளை உபதேசித்து அருளிய பெருமாளே.