குகையில் தவம் புரியும் நவநாதராகிய பெருஞ்சித்தர்களும், திருமாலின் தொப்புளாம் தாமரை மொட்டில் தோன்றிய பிரமனும், விளங்கும் (
த்வம், ரஜோ, தாமசம் ஆகிய) முக்குணங்களும், அசுரரின் தலைவர்களும், அலைகடல் போல் ஒலிக்கும் வேதங்களை நான்கு குதிரைகளாகப் பூட்டி திரிபுரத்தை அழித்த சிவபிரானும், வீரம் மிகுந்த, மரகதப்பச்சை வண்ணனானவனும், முரன் என்ற அசுரனைக் கொன்ற முராரியாம் திருமாலும், வெற்றி பெற்ற வஜ்ராயுதத்தைக் கையில் ஏந்தி வலன் என்ற அசுரனைக் கொன்ற இந்திரனும், கடுமையான விதிகளை வகுக்கும் சாஸ்திர நூல்களும், விரிவான புராணங்களும், உலகிலுள்ள எல்லாக் கலை நூல்களும், விரிந்துள்ள வேதநூல்கள் பலவும், இவை யாவும் ஒன்று கூடிச் சேர்ந்து முயன்று தேடியும் அறிய முடியாத, அறிவு, அறியாமை ஆகிய இரண்டுக்கும் அப்பால் உள்ள அறிவொளி எதுவோ அதுவே உன் திருமேனி என நான் உணர்ந்து, உன் சிவந்த தாமரை மலரன்ன திருவடியை என்று சேர்வேனோ? பகைமையே உருவான துரியோதனன் தோன்றி படைகளோடு போர் செய்த மகாபாரத வரலாற்றை அறிந்து, பருத்த தனது ஒற்றைத் தந்தத்தால் பெருமலையாம் மேருமலை மீது, குற்றமற்ற வகையில் வியாச முநிவர் முன்பொருநாள் சொல்லிவர, அந்தப் பாரதத்தை எழுதிய விநாயக மூர்த்தி, சிவந்த பவள நிறத்தைக் கொண்ட மதயானை முகத்துக் கணபதியின் பின்பு, தம்பியாக வந்த முருகனே, மிகுந்த ஒலிசெய்யும் கடல் கலங்குமாறும், ஏழு சிகரங்களை உடைய மலைகள் யாவும் குலுங்குமாறும், மாறுபட்ட புத்தியைக் கொண்ட சூரன் திகைக்கும்படியாகவும் போர் செய்து, தேவர் குலத்தவளும், யானை (ஐராவதம்) வளர்த்தவளுமான தேவயானையின் பரிசுத்தமான சந்தன மணம் வீசும், கும்பம் போன்று ஒளிவிடும், கஸ்தூரி வாசம் மிக்க திருமார்பைத் தழுவிய பெருமாளே.