கரதலத்தில் நிறைந்துள்ள பழம், அப்பம், அவல், பொரி (இவைகளை) வாரி உண்ணும் யானை முகக் கடவுளின் திருவடிகளை விரும்பி, அறிவு நூல்களைக் கற்கும் அடியவர்களுடைய மனதில் நீங்காது வாழ்பவனே, நினைத்தவற்றை அளிக்கும் கற்பக விருட்சமே, என்று உன்னைத் துதி செய்தால் வினைகள் யாவும் விரைவில் ஓடிப் போய்விடும். ஊமத்த மலரும், (பிறைச்) சந்திரனும் சடையில் தரித்த சிவபெருமானுடைய மகனும், மற்போருக்குத் தக்க திரண்ட தோள்களையுடையவனும், மத யானையை ஒத்தவனும், மத்தளம் போன்ற பெருவயிறு உடையவனும், உத்தமியாகிய பார்வதியின் மகனும் ஆகிய கணபதியைத் தேன் துளிர்க்கும் புது மலர்களைக் கொண்டு நான் வணங்குவேன். இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழ் நூல் முறைமையை, மலைகளுள் முற்பட்டதான மேரு மலையில் முதல் முதலில் எழுதிய முதன்மையானவனே, (அசுரர்களின்) திரி புரங்களையும் எரித்த அந்தச் சிவ பெருமான் எழுந்தருளிய ரதத்தின் சக்கர அச்சை ஒடித்துத் தூளாக்கிய மிகுந்த தீரனே, (வள்ளி மீது கொண்ட காதலாகிய) அந்தத் துயரத்தோடு (உன் தம்பியாகிய) சுப்பிரமணியன் நடந்த அந்தத் தினைப் புனத்திடையில் யானையாகத் தோன்றி, அந்தக் குற மகளாகிய வள்ளியுடன் அந்தச் சிறிய முருக வேளை அத்தருணத்திலேயே மணம் புரியுமாறு திருவருள் பாலித்த பெருமாளே.
அங்கவடி, பேரழகான மணி, பொன் நிறமான சேணம் இவைகளைப் பூண்டு கம்பீரமாக நடக்கும் பறவையாகிய, மிடுக்குள்ள (மயிலாகிய) குதிரையையும், கடம்ப மரத்தின் நன்கு பூத்த மலர்களால் தொடுக்கப்பட்ட மலர் மாலையையும், அந்தக் கிரெளஞ்ச மலை அழிந்து ஒழியும்படி அதன் மேல் பட்டு ஊடுருவிச் செல்லுமாறு விட்டருளிய திருக்கையில் உள்ள கூர்மையான வேலையும், திக்குகள் எட்டும் மதிக்கும்படி எழுந்துள்ள கொடியிலுள்ள சேவலையும், காத்தளிக்கும் சிறிய திருவடிகளையும், திரண்ட பன்னிரண்டு தோள்களையும், வயலூரையும் பாட்டிலே வைத்து உயர்ந்த திருப்புகழை விருப்பமோடு சொல்லுக என்று எனக்கு அருள் செய்ததை மறக்க மாட்டேன். கரும்பு, அவரை, நல்ல பழங்கள், சர்க்கரை, பருப்பு, நெய், எள், பொரி, அவல், துவரை, இள நீர், தேன், பயறு, அப்ப வகைகள், பச்சரிசி, பிட்டு, வெள்ளரிப்பழம், பல வகையான மாவு வகைகள், ஒப்பற்ற கிழங்குகள், சிறந்த உணவு (வகைகள்), கடலை (இவைகளை) பட்சணமாகக் கொள்ளும் ஒப்பற்ற, வினைகளை நீக்க வல்லவர் என்று சொல்லப்படும் அருட் கடலே, கருணை மலையே, வளைந்த சடையையும், பினாகம் என்னும் வில்லையும் கொண்ட மேலான அப்பர் சிவபிரான் பெற்றருளிய திறலோனே, ஒற்றைக் கொம்பு உடைய பெருமாளே.
விண்ணவர் உலகிலுள்ள கற்பக மரம் காமதேனு, சிந்தாமணி (இவைகளைப் போல் ஈதற்கு) என் உள்ளம் நெகிழ்ந்து ஒளிவீசும் பாற்கடலில் தோன்றிய இனிய அமுதம்போன்ற உணர்ச்சி என் உள்ளத்தில் ஊறி இன்பச் சாற்றினை நான் உண்ணும்படி பலமுறை என்னுயிரின் மீது ஆதரவு வைத்து அருள்வாயாக தம்பியின் (முருகனின்) பொருட்டாக தினைப்புனத்திற்கு வந்தடைவோனே தந்தை சிவனை வலம் செய்ததால் கையிலே அருளப்பெற்ற பழத்தை உடையவனே அன்பர்களுக்கு வேண்டிய நிலைத்து நிற்கும் பொருளாக விளங்குபவனே ஐந்து கரங்களையும் யானைமுகத்தையும் உடைய பெருமானே.
நினது திருவடி சத்தி மயில் கொடி நினைவு கருதிடு புத்தி கொடுத்திட நிறைய அமுது செய் முப்பழம் அப்பமு(ம்) நிகழ் பால் தேன் நெடிய வளை முறி இக்கொடு லட்டுகம் நிற வில் அரிசி பருப்பு அவல் எள் பொரி நிகர் இல் இனி கதலி கனி வர்க்கமும் இளநீரும் மனது மகிழ்வொடு தொட்ட கரத்து ஒரு மகர சலநிதி வைத்த துதி கர வளரு(ம்) கரி முக ஒற்றை மருப்பனை வலமாக மருவு மலர் புனை தொத்திர சொல் கொடு வளர் கை குழை பிடி தொப்பண(ம்) குட்டொடு வனச பரி புர பொன் பத அர்ச்சனை மறவேனே தெனன தெனதென தெத்தென அன பல சிறிய அறு பதம் மொய்த்து உதிரப் புனல் திரளும் உறு சதை பித்த(ம்) நிணக் குடல் செறி மூளை செரும உதர நிரப்பு(ம்) செருக் குடல் நிரைய அரவ நிறைத்த களத்து இடை திமித திமிதிமி மத்தள(ம்) இடக்கைகள் செகசே சே எனவெ துகு துகு துத்தென ஒத்துகள் துடிகள் இடி மிக ஒத்து முழக்கிட டிமுட டிமு டிமு டிட்டிம் எனத் தவில் எழும் ஓசை இகலி அலகைகள் கைப்பறை கொட்டிட இரண பயிரவி சுற்று நடித்திட எதிரு நிசிசரரைப் பெலி இட்டு அருள் பெருமாளே.
(முருகா) உன்னுடைய திருவடி, வேல், மயில், சேவல் (இவைகளை) நினைவில் கருதும் அறிவை நான் பெறுவதற்கு, நிரம்பச் செய்யப்பட்ட அமுது, மூன்று வகையான பழங்கள், அப்பமும், புதிய பால், தேன், நீண்டு வளைந்த முறுக்கு, கரும்புடன், லட்டு, நிறமும் ஒளியும் உள்ள அரிசி, பருப்பு, எள், பொரி, ஒப்பில்லாத இனிய வாழைப்பழ வகைகளும், இள நீரும் (ஆகிய நிவேதனப் பொருட்களை), மன மகிழ்ச்சியுடன் தொடும் கைகளையும், ஒப்பற்ற மகர மீன்கள் உள்ள கடலில் வைத்த துதிக்கையையும் உடைய வளரும் யானை முகத்து ஒற்றைக் கொம்பனாகிய கணபதியை வலம் வந்து, அவருக்கென்றே பொருந்திய மலர் கொண்டு (வழிபட்டும்), துதிப்பதற்கு உரிய சொற்களைக் கொண்டு (துதித்தும்), தூக்கிய கைகளால் காதைப் பிடித்தும், தோப்புக்கரணம் போட்டும், சிரசில் குட்டியும், (அந்த விநாயகருடைய) தாமரை போன்ற, சிலம்பு அணிந்த அழகிய பாதங்களில் அர்ச்சனை செய்வதை நான் ஒருபோதும் மறவேன். தெனன தெனதென தெத்தென இவ்வாறான ஒலி செய்யும் பல சிறிய ஈக்கள் மொய்க்கும் ரத்த நீர், திரண்டுள்ள சதைகள், பித்தம் நிறைந்த மாமிசக் குடல்கள், சிதறிய மூளைத் திசுக்கள், பிளந்த வயிற்றில் நிறைந்துள்ள ஈரல்கள், பெருங்குடல்கள், இவைகளோடு வரிசைகளாக ஒலிக்கும் ஒலிகள் நிறைந்த போர்க் களத்தில் திமித திமிதிமி என்று ஒலிக்கும் மத்தளம், இடக்கை என்னும் வாத்தியம் செகசே சே என ஒலிக்கவும், துகு துகு துத்தென்ற ஓசையுடன் ஊது குழலும் உடுக்கைப் பறைகளும் இடி என மிக ஒத்து முழங்க, டிமுட டிமு டிமு டிட்டிம் என மேள வகைகள் ஓசைகள் எழுப்ப, ஒன்றோடொன்று பகைத்த பேய்கள் கைப்பறைகளைக் கொட்ட, ரண பைரவி என்னும் தேவதைகள் சுற்றிக் கூத்தாட, எதிர்த்து வந்து அசுரர்களைப் பலி இட்டு அழித்த பெருமாளே.
நஞ்சு பொருந்திய கடலும், தேவர் படையும், சூலாயுதமும், அருச்சுனன் விடுகின்ற அம்பும் சமானம் என்று கூறும்படியான கண்களும், அதிபாரமான மார்பகங்களும் கொண்ட விலைமாதர்களின் சாகசத் தொழில்களினால் விளையும் துன்பங்கள் ஒன்றையும் அறிந்து கொள்ளாது, வாசனை மிக்க படுக்கையில், பகல் இரவு என்ற வேறுபாடு இல்லாமல் சுகபோகத்தில் மூழ்கி ஏழ்மை அடைந்த கீழ்மகனும், அறிவு குறைந்தவனும் ஆகிய அடியேனும் உனது உயர்ச்சி மிக்க திருவடி இணைகளைச் சேர அருள் புரிவாயாக. அரசன் உக்ரசேனனுடைய மகள் தேவகி நிகழ இருக்கும் உண்மையை அறிய மாட்டாதவளாக (அதாவது கண்ணனால் கம்சன் ஏவிவிட்ட அசுரர்கள் கொல்லப் படுவார்கள் என்ற உண்மை தெரியாது) மனம் வாட்டம் உற்று, என் மகனை ஆண்டருளும் பிள்ளைப் பெருமாளே, கணபதியே என்னும் நாமங்களை வரிசைப்படக் கூற (அவள் முறையீட்டுக்கு இரங்கி), (அன்வயப்படுத்தப்பட்ட வரி) இடையர்களுடைய கொஞ்சம் பாலைத் திருடிக் கொண்டு போக (அதாவது யாதவர்களின் தூய மனத்தைக் கண்ணன் தன்வசமாக்க), பகைவர்கள் உயிருக்கு அஞ்சும்படி நீ அடி எடுத்து வர, (நீ வரும் ஒலியைக் கேட்டு) அயலார் அறியாமல் அவர்கள் ஓட, போவது ஏனடா சொல் எனக் கூறி அவர்கள் தம் முடிகளைத் தாக்கும் அறிவை (கண்ணபிரானுக்கு) அருளிய யானைமுகத்துக் கணபதியே.
வெண்முத்தை நிகர்த்த, அழகான பல்வரிசையும் இளநகையும் அமைந்த தேவயானை தேவியின் தலைவனே, சக்திவேல் ஆயுதத்தை ஏந்தும் சரவணபவக் கடவுளே, மோக்ஷ வீட்டுக்கு ஒப்பற்ற ஒரு விதையாக விளங்கும் ஞான குருவே, என்று துதிக்கும் முக்கண்ணர் பரமசிவனார்க்கு வேதங்களுக்கு முதன்மையான ஓம் என்னும் மந்திரத்தை உபதேசித்து, (மும்மூர்த்திகளில் எஞ்சியுள்ள) பிரம்மா, திருமால் ஆகிய இருவரும், முப்பத்து முக்கோடி தேவர்களும் அடி பணிய நின்றவனே, ராவணனுடைய பத்துத் தலைகளும் சிதறி விழுமாறு அம்பை விட்டு, ஒப்பற்ற மந்தர மலையான மத்தைக் கொண்டு பாற்கடலைக் கடைந்து, ஒரு பகற் பொழுதை வட்டமான சக்ராயுதத்தால் இரவு ஆக்கி, நண்பனாகிய அர்ச்சுனனுக்கு, தேர்ப்பாகனாக வந்து தேரினைச் செலுத்திய பசுமையான நீலமேகவண்ணன் திருமால் பாராட்டும் பரம்பொருளே, பரிவோடு என்னைக் காத்தருளும் நாள் ஒன்றும் உண்டோ? (இப்பாடலின் பிற்பகுதி முருகன் அசுரர்களுடன் செய்த போரினை விரிவாக வருணிக்கிறது). தித்தித்தெய என்ற தாளத்துக்கு ஒத்து, சிலம்புகள் அணிந்த நாட்டியப் பாதங்களை வைத்து காளிதேவி திசைகளில் எல்லாம் சுழன்று தாண்டவம் செய்யவும், கழுகுகளோடு பேய்கள் சேர்ந்து ஆடவும், எட்டுத் திக்குகளிலும் உலகங்களைத் தாங்குகின்ற அஷ்ட பைரவர்கள் இந்த அழகிய கூத்துக்கு ஏற்ப தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு த்ரிகடக என்ற தாள ஓசையைக் கூறவும், கூட்டமாகப் பற்பல பறை வாத்தியங்களை அதே தாளத்தில் முழக்கவும், போர்க்களத்தில் கிழக் கோட்டான்கள் குக்குக்குகு குக்குக் குகுகுகு என்ற ஓசையோடு குத்திப் புதை, புகுந்து பிடி என்றெல்லாம் குழறி வட்டமாகச் சுழன்று மேலே எழவும், சினேக எண்ணம் தவிர்த்து விரோத மனப்பான்மையே கொண்ட அசுரர்களை கொன்று பலி கொடுத்து, அசுரர் குல மலை கிரெளஞ்சகிரி தூளாக, தர்ம மார்க்கத்துக்குப் பொருந்த, போர் செய்யவல்ல பெருமாளே.
யான் உன்னைத் தினந்தோறும் தொழுவதும் இல்லை. உன் தன்மைகளை எடுத்து உரைப்பதுமில்லை. பல மலர்கள் கொண்டு உன் திருவடிகளை பொருந்தப் பணியவில்லை. ஒருவகையான தவமும் யான் செய்தவன் இல்லை. உன்னருள் நீங்காத உள்ளத்தை உடைய அன்பர் இருக்கும் இடம்கூட யான் அறிகின்றதும் இல்லை. ஆர்வத்தோடு உன் மலையை வலம்வருவதும் இல்லை. மகிழ்ச்சியோடு உன் புகழைத் துதிக்க விரும்புவதும் இல்லை. மலைபோல் உருவமுடன், கனைத்தவாறு வரும் எருமையின் கழுத்தின் மீது வருகின்ற, கரிய நிறமும் கடுங்கோபமும் உடைய யமனின் தூதர்கள் என்முன் தோன்றி நெருக்கி எறிகின்ற பாசக்கயிறு கொண்டும், துன்புறுத்தும் கதாயுதம் கொண்டும் என்னோடு போரிடும் போது, மனம் கலங்கும் செயலும், ஓய்வின்றி அழிவுறும் எண்ணமும் நைந்துபோய் யான் துன்புறும்போது ஒரு கண அளவில் என் பயம் நீங்கும்படியாக அஞ்சேல் என்று கூறி மயிலின் முதுகினில் நீ வருவாயாக. போர்க்களத்தில் பேய்கள் கூத்தாடுவதால் ஊன் உடைந்து உடல்களிலிருந்து சிதறின மாமிசத்தை கழுகுகள் உண்ணவும், விரித்த தலைமயிர் உடையவர்கள் என்னும் அசுரர்களோடு போர் புரிந்த வேலனே, நிறைய ராகங்களில் பாடவல்ல குயிலின் மொழி ஒத்த குரலாள், அழகான வள்ளிமலைக்காரி, (வள்ளியின்) குங்குமம் அணிந்த மார்பில் அழுந்தும் வாசமிகு சந்தனமும் கஸ்தூரியும் அணிந்த மலை போன்ற தோள்களை உடையவனே, தினந்தோறும், நால்வேதமும் வல்ல பிரம்மா விதிப்படி, நீரால் அபிஷேகம் செய்து, பூக்களை நிறைய அர்ச்சித்து, தேவர்களும் கோபத்தை நிந்தித்து விட்ட முனிவர்களும் தொழ, அந்த நித்ய பூஜையில் மனம் மகிழ்வோனே, தெனத்தெனந்தன என்ற சப்தத்துடன் இசைக்கும் வண்டுகள் தேனைத் தெவிட்டும் அளவுக்கு ஆசையுடன் குடிக்கும் உயர்ந்த சோலைகள் விளங்கும் திருப்பரங்குன்றத்தில் வீற்றிருக்கும் சரவண மூர்த்தியே.
கருவிலே சேர்ந்து பத்து மாதங்கள் தாயின் வயிற்றில் இருந்து கரு முற்றிப் பக்குவம் அடைந்து கடைசியில் பூமியில் வந்து பிறந்து குழந்தையின் வடிவத்தில் தோன்றி குழந்தையை அங்கு கழுவியெடுத்து சுரக்கும் முலைப்பாலை ஊட்டுவிக்க தரையிலே கிடந்தும், அழுதும், உள்ளங்கையைக் கொட்டியும், தவழ்ந்தும், நடை பழகியும், அரைநாண் கட்டியும், காலில் சதங்கையும், காதில் இட்ட அணியும், பொன் கொலுசு, தண்டை அவைகளை அணிந்தும், முதிர்ந்து வளர்ந்து வயது ஏறி, அருமையான பெண்களின் நட்பைப் பூண்டு, நோய்வாய்ப்பட்டு அலைந்து திரிந்தது போதும். (இனிமேல்) உனது அருள் கடாட்சத்தை எப்போது பெறுவேனோ? சூரியன் (அவன் அம்சமாக சுக்ரிவன்), இந்திரன் (அவன் அம்சமாக வாலி) வெற்றி வானர அரசர்களாகவும், ஒப்பில்லா திருமால் வயிற்றிலே பிறந்த பிரமன் கர் இனத் தலைவன் (ஜாம்பவான்) ஆகவும், நெடிய நீலன் அக்கினியின் கூறாகவும், ருத்திர அம்சம் அநுமன் என்றும், ஒப்பில்லாத தேவர்கள் யாவரும் இன்னின்ன வகைகளிலே வந்து இப் பூமியில் சேர்ந்திட, (இவர்களே) தன் அரிய படைக்குத் தலைவர் எனத் தேர்ந்து, அசுரர்களின் சுற்றமென்னும் கூட்டத்தை வெற்றி கொண்ட ஹரிமுகுந்தனாம் ஸ்ரீராமன் புகழும் குணம் வாய்ந்த மருமகனே, பிரம்மாவையும் தண்டித்து, கோபித்து, (பிரம்மனைச் சிறையிட்ட பின்) உலகத்தையும் படைத்து, அன்புடன் அருள் பாலிக்கும் திருப்பரங்குன்றத்தில் வீற்றிருக்கும் பெருமாளே.
தங்கம் திரண்டு சேர்கின்ற பெரிய மேரு மலையை அடைந்து அதன் மேல் தக தக என்று மின்னுகின்ற ஒளிவீசும் செண்டாயுதத்தை (பொற்பிரம்பை) எறிந்திட்ட புகலிடமானவனே, மிக்க மதம் கொண்டு, பலவித பக்ஷணங்களைப் புசித்து, அனைத்தையும் கவள அளவாக உண்டு வளர்ந்த யானைமுகனுக்கு இளையவனாகப் பிறந்த முருகனே, ஆதிசேஷன் மீது அறிதுயில் கொள்ளும் வல்லமை உடையவரும், பாற்கடலை முன்பு (கூர்மாவதாரத்தில்) தாமே கடைந்த பெரும் பொருளும், வானில் படரும் கார்முகில் நிறத்தவருமான திருமாலின் அன்பார்ந்த மருமகனே, பல துன்பங்களால் மனம் சுழன்று கலக்கமுற்ற அற்பனும், புலால் உண்பவனும், கொலைகாரனுமான நான் செய்கின்ற பாவங்கள் எல்லாம் இன்றோடு அழிந்து போக நீ என் முன் தோன்றி திருவருள் புரியவேண்டும். பாவமில்லாதவன் என்ற பெயர் நிலைத்து நின்று, எப்போதும் சுழன்று திரியும் திரிபுரத்தையும் வெற்றி கொள்ள, அக்கினிதேவன் மகிழ்ச்சியோடு வந்து பற்றிக் கொள்ளும்படியாக சிரித்தே எரித்த திறமைகொண்ட சிவனாரின் திருக்குமரனே, வலிமையோடு வந்து முழங்கும் பறை வாத்தியங்கள் (அதே ஒலியோடு) உலகம் அதிர, அண்டங்கள் கூட்டமிகுதியால் நெரிய, போருக்கு வந்த சூரர்களின் மனத்தில் சென்று அக்கினி சுடும்படி, அந்த நாள் அவர்களின் உடல்களும் குடல்களும் கிழியும்படி, மயிலின் முதுகின் மேல் வந்தருளிய மதிப்பும் பெருமையும் உடையவனே, சந்திரனும் சூரியனும் தடவிச் செல்லும்படியான உயரமான மரங்கள் உள்ள சோலைகள் நிறைந்த வளமிக்க திருப்பரங்குன்றத்தில் எழுந்தருளி அருள் பாலிக்கும் பெருமாளே.
எப்பொழுதும் பாசம் என்ற தொடர்பினாலே துயரத்தால் சோர்ந்து திரியாமல், கந்தன் என அடிக்கடி மனதார உன்னை தினமும் உள்ளக் கண்களால் கண்டு தரிசித்து, யான்அன்பு கொள்வேனோ? (ஐராவதம் என்னும்) யானை வளர்த்த கொடி போன்ற தேவயானையை மணம் செய்துகொண்டு சேர்பவனே, சங்கரனின் பக்கத்தில் தங்கிய பார்வதியின் குழந்தாய், திருச்செந்தூரிலும், அழகிய கண்டியிலும் ஒளிவீசும் வேலோடு விளங்குபவனே, அழகிய திருப்பரங்குன்றில் அமர்ந்த பெருமாளே.
உன் அகன்ற கை தாமரை போன்றது, கொடை வன்மையில் நீ மேகம் போன்றவன், தமிழ்ப் புலவர்க்கு நீயே புகலிடம் என்று கூறி உலகத்தவரைத் தவிப்புடன் நாடி யாசித்து மனம் நொந்து புண்ணாகி தளர்வுற்றுப் பம்பரம் போன்று சுழல்வேனை, உள்ளிருக்கும் பண்டம் ஊசிப்போன மண் சட்டியை, துன்பம் நிறைந்த மண்ணாலான இந்த உடலை, அழிந்துபோகும் இந்தப் பாண்டத்தை, ஐம்பொறிகளால் ஆட்டிவைக்கப்படும் இந்த வாழ்வை, நொடியில் வந்து என் இதயமாம் இடத்தைத் திருத்தி, வீரக்கழல்கள் அணிந்த நின் அழகிய திருப்பாதங்களுக்கு தொண்டு செய்ய என்னை ஏற்றுக்கொண்டு அருள்வாயாக. படைக்கும் தொழிலைச் செய்வதற்குத் தாமரைமலர் மேவும் பிரமன், அழிக்கும் தொழிலைச் செய்வதற்குச் சங்கரன், காக்கும் தொழிலைச் செய்வதற்குத் தாமரையாள் மணாளன் திருமால் என்று தத்தம் தொழில்களை நியமித்து அளித்து, அவரவர் பயங்களைப் போக்கி, எப்போதும் பராகாசத்தில் மேலான நிலையிலே நிற்கும் ஒப்பற்ற வேலாயுதக் கடவுளே, மதுரைக்கு மேற்கே திருப்பரங்குன்றத்தில் தங்கும், உயர்குல நதியாம் கங்கையின் குழந்தாய், குறக்குலத்து அழகிய கொடியாம் வள்ளியை முன்பு தினைப்புனத்தில் நின் செவ்விய கரங்களைக் கூப்பிக் கும்பிட்ட பெருமாளே.
அறிவு மங்கிப் போகவும், மயக்கம் பெருகவும், பேச்சும் அடங்கிப் போகவும், கண்கள் சுழலவும், உடம்பின் சூடு தணியவும், மலம் (தன்னிச்சையின்றி) ஒழுகவும், நீங்காமலே என் அன்னையும் மனைவியும் பக்கத்திலிருந்து பயந்து அழ, உறவினரும் அழ, நெருப்பை நிகர்த்த கொடிய யமன் என்னை அழைத்துச் செல்லாத படிக்கு, என்னை நெருங்கியுள்ள இருவினைகளும் (நல்வினை, தீவினை), என் மனமும், பொருந்தியுள்ள ஐம்புலன்களும் ஒழிந்து நீங்கும்படியாக, உன் உயர்ந்த திருவடிகளை அணுக எனக்கு வரம் தந்தருள்வாயாக சிவனுக்கு ஒப்பான பொதியமலையைச் சார்ந்த முனிவன் (அகத்தியன்) உள்ளம் மகிழ அவனது இரண்டு செவிகளும் குளிர, இனிய தமிழை ஓதியவனே தத்தமக்கு உண்டான வழி தவறி சூரியன், சந்திரன், யமன், இந்திரன், அக்கினி, நிருதி, குபேரன், கரிய நிறமானவனும், துளசி மாலை தரித்த திருமாலும், நிலைத்த பிரமன், ஆகியவர்கள் அலையும்படி (கொடிய) ஆட்சி புரிந்த அசுரனாம் சூரனின் மார்பு பிளவுபடும்படி வேலைச் செலுத்தியவனே மானும், மழுவும் கரங்களில் விளங்கும் பரமசிவனும், உமையும் தங்கள் இருவிழிகளும் உவகைகொள்ளும்படி அவர்தம் மடியின் மேல் வளரும் இளைய குமாரனே கப்பல்கள் தவழும் கடலிடையே வருகின்ற முத்து மணிகள் மணல்மேட்டில் மறையும்படி உயர்ந்த (திருச்செந்தூர்க்) கரையில் அமர்ந்த பெருமாளே.
இலக்கியத் தமிழிலும், இசையிலும் சிறப்பான பெண்களிடம் ஈடுபட்டு, அதனால் தளர்வு அடைந்து, இரவும் பகலும் மனது அவர்களையே நினைத்து நான் அலையாமல் இருந்து, உனது உயர்ந்த கருணையால் வரும் பேரின்பக் கடலில் மூழ்கி உன்னை நான் எனது உள்ளத்திலே அறியக்கூடிய அன்பினைத் தந்தருள்வாயாக. மயிலும் ஆடுகளும் உள்ள மலையிடை வாழும் வேடர்களின் அழகிய தினைப்புனத்தைக் காவல் செய்த லக்ஷ்மி போன்று அழகிய குறத்தியாம் வள்ளியை வணங்கிப் பின் அணைந்து கொண்டவனே, திருக்கயிலை போன்ற புனிதமான செந்தில் திருத்தலத்தில் வாழ்பவனே, யானைமுகனாம் வினாயகனுக்கு தம்பியான கந்தப் பெருமாளே.
அம்பினை நிகர்க்கும் கண்களை உடைய மாதர்களை விரும்பும் கேடுகெட்டவனை, மூடனை, ஒழுக்கம் இல்லாத இழிந்தோனை, படிப்பே இல்லாத முழு ஏழையை, மடையனை, என்னைவிட்டு நீங்கா தீவினை மூடியுள்ள நோயும் பிணியும் கொண்டவனை, உண்மை இல்லாதவானை, இகழ்ந்து ஒதுக்காமல் சிறந்த மணிகளாலான சிலம்புள்ள உன் பாதங்களை, ஒப்பற்ற வாழ்வை (முக்தியை) யான் பெற தந்துதவும் ஒரு நாளும் எனக்கு உண்டோ? புலவர்கள் பாடிய நூல்களில் புகழப்பட்ட நாரத மாமுனிவர் முன்பு வருணித்த குறப்பெண் வள்ளியை விரும்பிச் சென்று காட்டிலே கூடிய வீரனே தலைவனே சிறந்த மயில் வாகனனே தேவி, மனோன்மணி, அன்னை, பராபரை, தேன் மொழியாள் உமையின் சிறுமகனே விண்வரை உயர்ந்த சோலைகளின் நிழலினிலே வளங்கும் திருச்செந்தூரில் அமர்ந்த பெருமாளே.
கொஞ்சமும் சந்தேகம் இல்லாமல், மனத்தில் சஞ்சலம் கொண்டுள்ள மாயையில் தொடக்கத்தில் இருந்தே அகப்பட்டவனும், சந்தனத்துடன், குங்குமம் இவைகளால் சிங்கார ஆடம்பரம் செய்துகொண்டு, பரபரப்பான களிப்பும், ஆனந்தமும் கொண்ட மாயையில் அகப்பட்டவனும் ஆகிய நான் விலைமாதர்களின் மார்பகம் முதலான அங்கங்களின் மேல் உள்ள மோகங்களால் வீணாகத் துன்பம் கொள்ளாமல், வள்ளல் தன்மை வாய்ந்த குகனே, உனது திருவுருவமான பேரொளியுடன் நீ வந்து அன்புடன் என்னை ஆண்டருளுக. கங்கையைத் தலையில் சூடியுள்ள பிரானாகிய சிவ பெருமானின் மகனே, அழகனே, கந்தப் பெருமானே, வித்தையில் சிறந்தவர் ஊர்களில் வாழ்பவனே, நாங்கள் நடுக்கம் கொள்ளாதவாறு எங்கள் பொன்னுலகைக் காத்தருள்க என்று முறையிட்ட அந்த (ஆகண்டலேசன் என்னும்) இந்திரன் புகழ்ந்த வீரனே, செங்கையில் உள்ள ஆயுதமாகிய வெற்றிவேல் கொண்டு சூரன் அழியவே, சென்று அவனைத் தாக்கிய கீர்த்தி உள்ளவனே, சிவந்த கண்களை உடைய திருமாலும், தாமரையில் வாழும் பிரமனும் தொழுகின்ற ஆனந்தமான முருக வேளே, திருச்செந்தூரில் வீற்றிருக்கும் தலைவனே.
தண்டை என்கின்ற காலணி, வெண்டையம் என்ற வீரக் காலணி, கிண்கிணி, (சலங்கை என்னும்) சதங்கையும், அருள் கழல்களும், சிலம்புடன் (எல்லாம் ஒன்றுபட்டுக்) கொஞ்சி ஒலிக்க உன் தந்தை சிவனை அன்புடன் வலம்வந்து நல்ல மகிழ்ச்சி கொண்டு அணைத்து நிலைத்து நின்ற அந்த அன்பு போலவே, (இப்போது நான் உன்னைக்) கண்டு மனம் ஒன்றுபட, கடம்ப மாலையும், அழகிய மணிமுடிகளும், தாமரை மலர் போன்ற சிவந்த கைகளும், சூரனை அழித்த வேலும், பன்னிரு கண்களும், ஆறு திரு முகங்களும், (அவற்றில் தோன்றும்) நிலவொளிகளும், என் கண்கள் குளிரும்படியாக என் முன்புவந்து தோன்ற மாட்டாவோ? தாமரையில் தோன்றியவன் (பிரமன்) உலகமும், அதனை உட்கொண்ட வெளியண்டங்களூம், மகிழ்ச்சி பொங்கி எழ, நீ போர்க்களம் புகுந்த போது, பொன்மலை என்னும்படி அழகு சிறந்து எல்லாத் திசைகளிலும் நிறைந்து நின்று தாமரைக்கண்ணன் திருமாலும், தந்தை சிவனும் மன மகிழ்ச்சி கொள்ளும் படியாக நீ கொண்ட நடனப் பாதங்கள் திருச்செந்தூர் ஆகிய இந்தப் பதியிலும், என்முன் கொஞ்சி நடனம் கொள்ளும் கந்தனாகிய மன்மத சொரூபனே குறமங்கை வள்ளியின் சந்தன மணம் வீசும் மார்பை நுகர்கின்ற தம்பிரானே அகத்திய முனிவர் தொழும் தம்பிரானே.
தந்த பசிதனைய றிந்து முலையமுது தந்து முதுகுதட ...... வியதாயார் தம்பி பணிவிடைசெய் தொண்டர் பிரியமுள தங்கை மருகருயி ...... ரெனவேசார் மைந்தர் மனைவியர்க டும்பு கடனுதவு மந்த வரிசைமொழி ...... பகர்கேடா வந்து தலைநவிர விழ்ந்து தரைபுகம யங்க வொருமகிட ...... மிசையேறி அந்த கனுமெனைய டர்ந்து வருகையினி லஞ்ச லெனவலிய ...... மயில்மேல்நீ அந்த மறலியொடு கந்த மனிதனம தன்ப னெனமொழிய ...... வருவாயே சிந்தை மகிழமலை மங்கை நகிலிணைகள் சிந்து பயமயிலு ...... மயில்வீரா திங்க ளரவுநதி துன்று சடிலரருள் செந்தி னகரிலுறை ...... பெருமாளே.
ஏற்பட்ட பசியை அறிந்து, முலைப்பால் தந்து, முதுகைத் தடவிவிட்ட தாயார், தம்பி, ஏவல் செய்து வந்த வேலைக்காரர்கள், அன்புமிக்க தங்கை, மருமக்கள், தம்முயிர் போல அன்பு பூண்டு சார்ந்திருந்த பிள்ளைகள், மனைவியர், சுற்றத்தார், யாவரும் தத்தம் கடமைக்குரிய அந்த உறவு முறைகளைச் சொல்லிக்கொண்டு, குறையுடன் வந்து தலைமயிர் அவிழ்ந்து தரையில் விழவும், மயங்கவும், ஓர் எருமைக்கடாவின் மேல் ஏறி யமனும் என்னை நெருங்கி வரும்போது, அஞ்சாதே என்று கூறியவண்ணம் வலியதான மயில் மீது நீ அந்த யமனிடம் இவன் நமக்கு மிகவும் வேண்டிய மனிதன், நம்முடைய அன்பன் என்று சொல்லவந்து அருள்வாயாக. சிந்தை மகிழும்படியாக, ஹிமவான் மகளாகிய பார்வதியின் இரண்டு மார்பிலும் பீறிட்ட பால் அமுதை உண்ட வேலாயுதக் கடவுளே, நிலவும், பாம்பும், கங்கைநதியும் நெருங்கிப் பொதிந்துள்ள ஜடாமுடியை உடைய சிவபெருமான் அருளியவனே, திருச்செந்தூர் நகரில் வீற்றிருக்கும் பெருமாளே.
உடுத்தியுள்ள ஆடை அவிழ்கின்றது, விரக வேதனையால் தவிக்கின்றேன், கொடி போன்ற யான் மன்மதனது பாணத்தால் தடை படுகின்றேன், தனிமையில் நின்று திகைக்கின்றேன், மெல்லிய இனிய தென்றல் காற்றினுடன் வந்து சந்திரன் நின்று கொளுத்துகிறான் என்று மனம் புண்படுகின்றேன், என்றெல்லாம் புன்மையான கவிதைகள் சிலவற்றை மனிதர்கள் மீது பாடி சில புலவர்கள் வீணே இருக்கின்றனர். திருச்செந்தூரில் எழுந்தருளிய உன்னைப் பற்றிப் பாடி கடைத்தேற அறிய மாட்டார்களோ? திருமாலுக்கும், நான்கு வேதங்களுக்கும், பிரமனுக்கும் காண்பதற்கு முடியாத திருவடியையும் சிவந்த ஜடாமுடியையும் உடைய சிவ பிரானுக்கும், செய்தவம் நிறைந்தவரும், பொதிய மலையில் வாழ்பவருமான அகஸ்திய முநிவருக்கும், கருணை புரிந்து உபதேசித்த மேலான குருமூர்த்தியே, சுற்றத்தார் சூழ வலிமையுடன் வந்த அரக்கன் சூரன் தன் குலத்தோடு அழியும்படிக் கோபித்த பெருமாளே.
பெருத்த வயிறு சரியவும், முடி நரைக்கவும், வரிசையாயிருந்த பற்கள் ஆடவும், முதுகில் கூன் விழவும், உதடு தொங்கிப்போகவும், (நடக்க உதவ) ஒரு கையானது தடியின் மீது வரவும், பெண்கள் கேலிச்சிரிப்போடு இந்த வயதான கிழவன் யார் என்று பேசவும், முன்னே இருமல் கிண்கிண் என்று ஒலிக்கவும், பின்னே பேச்சு குழறவும், கண்கள் மங்கி குருட்டுத்தன்மை அடையவும், செவிட்டுத்தன்மையை காதுகள் அடையவும், வந்த நோய்களும், அவற்றின் இடையிலே புகுந்த ஒரு வைத்தியனும், உடல் படும் வேதனையும், சிறு பிள்ளைகள் சொத்து எவ்வளவு, கடன் எது எது என்று விடாது கேட்டுத் தொளைக்கவும், மிக்க துயரம் கொண்டு மனைவி அழுது விழவும், யமதூதர்கள் வந்து நின்று உயிரைக் கவர போராடவும், மலம் கட்டுப்பாடு இன்றி ஒழுகவும், உயிர் மங்கும் அந்தக் கடைசி நேரத்தில் முருகா, நீ விரைவில் மயில்மேல் வரவேண்டும். என் அப்பனே வா, ரகுநாயகனே வா, குழந்தாய் வா, மகனே இதோ வா, என் கண்ணே வா, என் ஆருயிரே வா, அழகிய ராமனே வா, இங்கே வா, அரசே வா, பால் குடிக்க வா, பூ முடிக்க வா, என்றெல்லாம் அன்போடு கோசலை கூறி அழைக்க வந்த மாயன் திருமால் மனம் மகிழும் மருமகனே, குறவர் குல இளங்கொடியான வள்ளி அணையும் அழகா, தேவர்களின் சிறைவாசம் ஒழிய, அசுரக் கூட்டம் வேரோடு மடிய அழித்த தீரனே, நிலவும், பாம்பும், நதியும் சூடிய பரமர் தந்தருளிய குமரனே, அலை கரையில் மோதும் திருச்செந்தூரில் இன்பமாய் வீற்றியருளும் பெருமாளே.
மீண்டும் மீண்டும் என்முன் வந்து, தவழ்ந்து, விரும்பத்தக்க இன்பத்தை அளித்து நின்று, பால் வேண்டும் வேண்டும் என்று அழுகின்ற குழந்தையும், இந்தப் பூமியே குலுங்குமாறு பெரிதாய், வானுலகம் வரை வளர்ந்து நிற்கும் செம்பொன் மண்டபங்கள் நிறைந்த வீடும், பூங்கொத்துக்கள் தரித்த கூந்தல் தழையத் தழைய, குங்குமம் அப்பிய மார்புகளும் வஞ்சிக்கொடி போன்ற இடையும் உடைய மனைவியும், எனக்கு ஆதரவு என்று இருந்த என் அறிவு மங்கி நான் இறக்கும் சமயத்தில், கோங்குப்பூ, அடம்புப் பூ, வாசம் மிகுந்த பசும் கடப்பமலர், தண்டைக்கழல், கொஞ்சுவதுபோல ஒலிக்கும் செவ்விய சதங்கைகள் - இவை தங்கும் தாமரைபோன்ற உன் பாதங்களைத் தந்தருள்வாயாக. சந்தன மரம், அடர்த்தியாக அரும்புவிடும் மந்தாரம், செழிப்பான கரும்பு, குலை தள்ளிய வாழை - இவையெல்லாம் வானம்வரை வளர்ந்த திருச்செந்தூர் தலத்தில் வாழ்பவனே, குளிர்ந்த காட்டைக் கடந்து சென்று இசைப்பண்கள் யாவும் கூடிச்சேர்ந்தது போன்ற இனிமையான குரலுடைய வள்ளியின் செழிப்பான தினைப்புனத்தை அடைந்து அவளைக் கண்டு, பின்பு கும்பிட்ட தலைவனே, யமன் அருகே வருவதற்கு கலங்கி அஞ்சும்படியாக, (உன் அடியார்களின் இதயமாகிய) குகையில் விருப்புற்றுக்கலந்த குங்கும அழகி தேவயானை சிறப்பாக வந்து மகிழ்ச்சியோடு அணைக்கும் திருமார்பனே, அழகிய தினைப்புனத்தில் உன்பொருட்டுச் சென்ற உன் நண்பர் நாரதரும், சிவபிரான், நல்ல இந்திரன், தகுதிபெற்ற வேறு பல தேவர்கள், கும்பமுனி அகஸ்தியர் இவர்கள் யாவரும் உன்னை நம்பித் தொழும் தம்பிரானே.
சுக்கிலத்திலிருந்து ஊறி வந்தது இந்த உடம்பு. நெருப்பில் வீழ்ந்து வெந்த உடம்போ கோடிக்கணக்கானவை. இனியாவது உன்னை விட்டு நீங்காதிருக்கும் பொருட்டு, உன் திருவடிகளை விரும்பும் அறிஞர்களைப் போல யானும் நன்னெறிக்கு வந்து, பேரழிவாகிய முன்வினைக் கேடு நீங்க, வளமையான சிவஞானத்தின் வடிவை அடைந்து, வலிமையான முக்திப்பதத்தைப் பெற்று, என் பிறவிக் களைப்பு தீருமாறு என் முன் வந்து அருள்மயமான உன் திருப்பதங்களெனும் மலரினைத் தருவாயாக. எனது உள்ளத்தில் ஒப்பற்ற செழும் ஜோதியாக விளங்கி, என் கண்களில் நடனம் ஆடுகின்ற, நெருப்பு நிறமான ஜடாமுடியுடைய எனது தந்தையாரும், அன்பினால் தேடும் அடியார்க்கு உதவுகின்றவரும், எங்கள் இறைவனுமாகிய சிவபெருமான் அருளிய குமரனே, அழகும், ஞான அறிவும், மென்மையும் நிறைந்த குறப்பெண் வள்ளியின் திருமார்பினைத் தழுவுபவனே, அழகு மிகுந்த திருச்செந்தூரில் எழுந்தருளியுள்ள கந்தனே, தேவர் தலைவர்களின் பெருமாளே.
விறல்மார னைந்து மலர்வாளி சிந்த மிகவானி லிந்து ...... வெயில்காய மிதவாடை வந்து தழல்போல வொன்ற வினைமாதர் தந்தம் ...... வசைகூற குறவாணர் குன்றி லுறைபேதை கொண்ட கொடிதான துன்ப ...... மயல்தீர குளிர்மாலை யின்க ணணிமாலை தந்து குறைதீர வந்து ...... குறுகாயோ மறிமானு கந்த இறையோன்ம கிழ்ந்து வழிபாடு தந்த ...... மதியாளா மலைமாவு சிந்த அலைவேலை யஞ்ச வடிவேலெ றிந்த ...... அதிதீரா அறிவால றிந்து னிருதாளி றைஞ்சு மடியாரி டைஞ்சல் ...... களைவோனே அழகான செம்பொன் மயில்மேல மர்ந்து அலைவாயு கந்த ...... பெருமாளே.
வீரனாம் மன்மதன் ஐந்து மலர்ப் பாணங்களையும் செலுத்த, ஆகாயத்தில் நிலவு அதிகமாக வெயில் போலக் காய, நிதானமான தென்றல் காற்று வந்து தீப்போல வீசிப் பொருந்த, வீண்வம்பு பேசும் பெண்கள் தத்தம் வசை மொழிகளைக் கூற, குறவர்கள் வாழும் குன்றில் இருக்கும் (வள்ளி போன்ற) பேதைப்பெண்ணாகிய நான் அடைந்த கொடிய துன்ப விரக மயக்கம் தீர, குளிர்ந்த மாலைப் பொழுதினிலே நீ அணிந்த கடப்ப மாலையைத் தந்து என் குறையைத் தீர்க்க வந்து அணுகமாட்டாயா? இள மானை உகந்து ஏந்தும் இறைவன் சிவபிரான் (உன் உபதேசம் பெற்று) மகிழ்ந்து உனக்கு வழிபாடு செய்யப் பெற்ற அறிஞனே, கிரெளஞ்சமலையும், மாமரமும் (சூரனும்) வீழ்ந்து படவும், அலைகடல் கொந்தளித்து அஞ்சவும், கூரிய வேலை வீசிய அதி தீரனே, அறிவு கொண்டு உன்னை அறிந்து, உனது இரு தாள்களையும் வணங்கும் அடியார்களின் துயரைக் களைபவனே, அழகிய செம்பொன் மயில்மீது அமர்ந்து திருச்செந்தூரில் மகிழ்ந்தமரும் பெருமாளே.
அதலம் விதலம் முதலான அந்தக் கீழ் ஏழு உலகங்கள் எனவும், இப்பூமி எனவும், தேவர்களின் அண்டங்களான மேல் ஏழு உலகங்கள் எனவும், சகல கடல்கள் எனவும், எட்டுத் திசைகளிலுள்ள மலைகள் எனவும், அக்கினி, சூரியன், குளிர்ந்த கிரணங்களை உடைய சந்திரன் (என்னும் முச்சுடர்கள்) எனவும், ஒன்றோடு ஒன்று சந்தித்து ஒற்றுமைப்பட்ட மந்திரங்கள் எனவும், சிறப்பாக ஓதுகின்ற வேதம் எனவும், அருமையாகச் சொல்லப்படும் (96) தத்துவப் பொருள்கள் எனவும், அணுவுக்குள் அணு எனவும், இங்ஙனம் எங்கும் நிறை பொருளாய் நின்றுள்ள ஒரு பேருண்மை, எனது உள்ளத்தில் தோன்றி விளங்கவும், அஞ்ஞானம் என்ற இருள் ஒழிந்து அந்தக் கணமே இதயத் தாமரை எனப்படும் மொட்டு அங்கே கட்டு நீங்கி, உணர்விலே உணரப்படும்படியான அநுபவ ஞானத்தை நான் பெற்றிடும் வகையை நீ முன்பு வந்து உதவி அருள, இடைவிடாத அன்பால் அருமையான இனிய சொற்களால் ஆன நூலாக, இசை வடிவப் பாக்களாகிய மதுர கவிகளில் மனம் ஆசை வைத்துத் திருப்புகழ் என்னும் சந்தப் பாவால் பாடும் உரிமைப் பாக்கியத்தைப் பெற்ற அடிமையாகிய நான் உன்னை அல்லால் இவ்வுலக வாழ்வினை நம்ப மாட்டேன். என்ற சந்தத்துக்கேற்ற தாளத்தில் பதலை திமிலை முதலிய பறைகள், தம்பட்டம் இவை ஒலிகளை எழுப்ப, எவ்விடத்திலும் உள்ள அசுரர்கள் நடுக்கம் கொள்ள, கொடிய கழுகுகள் (பிணங்களின்) பருத்த குடல்களையும் விலா எலும்புகளையும் பிடுங்க, போர்க்களத்து வெற்றிக் காளி களி நடனம் புரிய, நரிகள் ஊளையிட, பருந்துகளின் சிறகுகள் சாமரம் வீச, போரை வென்று மயிலின் மேல் பழனி மலை மீது வந்து அமர்ந்துள்ள, தேவர்களின் பெருமாளே.
பிறர்க்குச் செய்த தீமைகளினால் நிந்தனைக்கு ஆளாகி அலையாமலும், நன்னெறியை அறியாத வஞ்சகர்களிடம் சேராமலும், நீ எனக்கருளிய உபதேச மந்திரத்தின் பொருளையே துணையாகக் கொண்டு உன்னையே நான் நினைந்து உன் திருவருளைப் பெற மாட்டேனோ? யானையின் சிறந்த முகத்தை உடைய வினாயகன் தனக்குத் தம்பியானவனே இமயராஜன் மகளாம் (பார்வதி என்னும்) உத்தமியின் பிள்ளையே ஜெபம் செய்யக்கூடிய மாலையை எனக்களித்த நல்ல குரு நாதனே திருவாவினன்குடி என்னும் பதிக்குப் பெருமாளே.
இந்த பூமியிலே பிறந்து குழந்தை எனத் தவழ்ந்து அழகு பெறும் வகையில் நடை பழகி இளைஞனாய் அரிய மழலைச் சொல்லே மிகுந்து வர குதலை மொழிகளே பேசி அதிக விதமாக வயதுக்கு ஒப்ப வளர்ந்து வயதும் பதினாறு ஆகி, சைவ நூல்கள், சிவ ஆகமங்கள், மிக்க வேதங்களை ஓதும் அன்பர்களுடைய திருவடிகளையே நினைந்து துதிக்காமல், மாதர்களின் மீது ஆசை மிகுந்து அதன் காரணமாக மிக்க கவலையுடன் அலைந்து திரிகின்ற அடியேனை, உனது திருவடிகளில் சேர்க்க மாட்டாயா? சும்மா இரு என்ற மெளன உபதேசம் செய்த சம்பு, பிறைச்சந்திரன், அறுகம்புல், கங்கை, தும்பைப்பூ தன் மணி முடியின் மேலணிந்த மகாதேவர், மனமகிழும்படி அவரை அணைத்துக்கொண்டு அவரது இடப்புறத்தில் வந்தமர்ந்த பார்வதியின் குமாரனே பரிசுத்தமும் கூர்மையும் உடைய வேலினை உடையவனே இவ்வுலகைச் சுற்றிவரவே ஆசை கொண்டு மயிலின் மேல் ஏறி விளங்கி பூமி அதிரவே வலம் வந்த வீரக் கழல் அணிந்த வீரனே மோட்ச வீட்டில் பொருந்தி நின்று முருகன் என விளங்கி பழனிமலையில் வீற்ற பெருமாளே.
ஆறுமுகம் .. ஆறுமுகம் என்று ஆறுமுறை சொல்லி திருநீற்றை உடலிலே பூசி அணியும் பெரும் தவசிகள்தம் பாதமலர்களைச் சூடும் அடியவர்களின் திருவடியே துணையென்று கடைப்பிடித்தும், தினந்தோறும், ஏறுதற்கு அமைந்த மயில் வாகனனே , குகனே , சரவணனே , என்னுடைய ஈசனே , என் பெருமை உனது பெருமை என்று கூறியும் ஏழையடியார்களின் மனத்துயர் ஏன் எப்படி வந்தது என்று முறையிட்டுக் கேட்டும் (நீ கேளாதிருந்தால் பின்பு) உன்னை யார்தாம் புகழ்வார்கள்? வேதம்தான் பின்பு உன்னை என்ன சொல்லாதோ? திருநீறு துலங்கும் பொன்னார் மேனியுடையாய் வேலனே அழகிய நீலமயில் வாகனனே உமையாள் பெற்ற முருகவேளே அசுரர்கள் அனைவருடனும் என்னுடைய தீவினையாவும் மடிந்தொழிய நீண்ட ஒப்பற்ற வேலாயுதத்தைச் செலுத்திய வடவாக்கினி போன்ற உக்கிரமான வேலனே கோபித்து வந்த பெரும் அசுரன் (கஜமுகாசுரன்) உயிரை உண்ட ஆனைமுகத் தேவரின் தம்பியே மலைச்சிகரம் வான்முகட்டைத் தொடும் அழகு நிறைந்த பழநிவாழும் குமரனே பிரம்ம தேவருக்கு வரம் தந்தவனே முருகனே, தம்பிரானே.
தனதனன தான தந்த தனதனன தான தந்த தனதனன தான தந்த ...... தனதான
கருவினுரு வாகி வந்து வயதளவி லேவ ளர்ந்து கலைகள்பல வேதெ ரிந்து ...... மதனாலே கரியகுழல் மாதர் தங்க ளடிசுவடு மார்பு தைந்து கவலைபெரி தாகி நொந்து ...... மிகவாடி அரகரசி வாய வென்று தினமுநினை யாமல் நின்று அறுசமய நீதி யொன்று ...... மறியாமல் அசனமிடு வார்கள் தங்கள் மனைகள்தலை வாசல் நின்று அநுதினமு நாண மின்றி ...... யழிவேனோ உரகபட மேல்வ ளர்ந்த பெரியபெரு மாள ரங்கர் உலகளவு மால்ம கிழ்ந்த ...... மருகோனே உபயகுல தீப துங்க விருதுகவி ராஜ சிங்க உறைபுகலி யூரி லன்று ...... வருவோனே பரவைமனை மீதி லன்று ஒருபொழுது தூது சென்ற பரமனரு ளால்வ ளர்ந்த ...... குமரேசா பகையசுரர் சேனை கொன்று அமரர்சிறை மீள வென்று பழநிமலை மீதில் நின்ற ...... பெருமாளே.
கருவிலே ஓர் ஊருவாகி வந்து பிறந்து, வயதுக்கு ஒத்தபடி வளர்ந்து, பல கலைகள் கற்றறிந்து, மன்மதனுடைய சேட்டையினால், கருங் கூந்தலையுடைய பெண்களின் பாதச்சுவடு என் மார்பில் புதையும்படி அழுந்தி, கவலைகள் பெரிதாகி மனம் நொந்து, மிகவும் வாட்டம் அடைந்து, ஹர ஹர சிவாய என்று நாள்தோறும் நினையாது நின்று, (செளரம், காணாபத்யம், கெளமாரம், சைவம், வைஷ்ணவம், சாக்தம் என்று) ஆறு சமயங்களின் உண்மை ஒன்றுகூட அறியாதவனாய், உணவு தருவோர்கள் தம்முடைய வீடுகளின் முன் வாசலில் நின்று, தினந்தோறும் வெட்கத்தை விட்டு அழிந்து போவேனோ? பாம்பின் படத்தின்மேல் கண்வளர்ந்த (ஆதிசேஷன் மீது துயின்ற) பெருமை மிக்க பெருமாள், ஸ்ரீரங்கத்தில் உள்ளவர், உலகை அளந்த திருமால் மகிழ்ச்சி கொள்ளும் மருமகனே (தாய், தந்தை என்ற) இரண்டு வம்சாவளியிலும் பிரகாசமாகவும் பரிசுத்தமாகவும் விளங்குபவனே வெற்றிக் கவிராஜ சிங்கமாக (சம்பந்த மூர்த்தியாக) சொந்த ஊரான புகலியூர் (சீகாழி) பதியில் அன்று வந்து தோன்றியவனே பரவை நாச்சியார் வீட்டுக்கு (சுந்தரருக்காக) அன்று ஒரு காலத்தில் தூது நடந்த பரம சிவனுடைய அருளால் வளர்ந்த குமரேசப் பெருமானே பகையாய் நின்ற அசுரர் சேனைகளை மடிவித்து, தேவர்களை சிறையினின்றும் மீளும்படி வென்று, பழநிமலை மீதில் நின்ற பெருமாளே.
சிறு குடிலாகிய இந்த வீடு - உள்ளே இருப்பது மலமும், மூத்திரமும், கெட்ட வழுவழுப்பான கொழுப்பும், எலும்பும், அடுக்காகச் சரிந்துள்ள தசைகளும், ஈரலும், குடலும், முறையின்றி சிக்குற்ற மயிர்களும், இரத்தம் முதலியவைகளுடன், இவற்றோடு கெட்ட அழுக்குகள் நிறைந்ததுமான, இந்த வீட்டில் (உடலில்) ஐவர் (ஐம்புலன்கள்) குடி புகுந்துள்ளனர். அவர்கள் மிகவும் கடுமையான கொடுங்குணத்தினர். அகந்தை கொண்டவர்கள். ஒரு வழியில் போகாதவர்கள். குற்றம் உடையவர்கள். குரங்கு போல் சேட்டை செய்பவர்கள். அறிவில்லாதவர்கள். நன்னெறியில் ஒழுகாதவர்கள். மிருகத் தன்மை உடைய வலிமை வாய்ந்தவர்கள். விஷம் போன்ற குணம் உடையவர்கள். (இத்தகையோர்களுடன்) நட்பு உடையவனை, நரகம் புகுகின்றவனை, குதிரை போல் மிக வேகமாகச் செல்லும் மனத்தை உடையவனை, அழுது ஏங்கும் வறியவனை, துன்பத்துக்கு உறைவிடமாகிய உடல்மேல் அன்பு கொண்டவனுமாகிய என்னை, அழகிய முகத்தவனே, சரவணப் பொய்கையில் தோன்றியவனே, நீ அழகோடு மயிலின் மீது ஏறி வந்து, செழிப்புடன் பூரித்த சிவ ஒளியை என்னுடைய மனதில் அழுந்தும்படி நன்றாக ஓதி உபதேசிக்கும் பொருட்டு வந்த திருமுகச் சிரிப்பு பூத்த ஒளியையும், குளிர்ந்த கண்களையும், உனது மலர் போன்ற இரண்டு திருவடிகளையும் நான் மறவேன். இலுப்ப மரங்களும் மகிழ மரங்களும் நிறைந்து இவைகளின் மேல் பல மேகங்கள் தங்கும் சோலைகளில் வசிக்கின்ற குயில்களும் வண்டுகளும் இனிமையான ஒலிகளைப் பரப்ப, மயில்கள் அந்த இசைக்கு ஒத்து நடமிடுகின்ற இணை இல்லாத சிதம்பரம் என்னும் வளப்பம் பொருந்திய நாட்டுக்கு உரியவனே. இருள் சூழ்ந்த கிரெளஞ்ச மலை இடிந்து பொடியாக, பல மலைகளும் பொடிபட, மகர மீன்கள் உறையும் கடல் தீப்பற்றிக்கொள்ள, ஒளி பெற்ற எட்டு திசைகளில் உள்ள யானைகளும் கலங்கிப் பிளிற, ஆர்ப்பரித்து வந்த அசுரர்களோடு (அவர்களுடைய) யானை, குதிரை முதலிய படைகளையும் யம லோகத்துக்கு அனுப்பிய தலைவனே, உயர்ந்த பொன் நிறம் கொண்ட பிரமனும், முனிவர்களும், தேவர்களும், அரம்பை மகளிரும் அரகர, சிவசிவ, சுயம்பு மூர்த்தியே என்று புகழ, நடனம் செய்கின்ற திருவடி அழகாக அமையப்பெற்ற சிவபெருமானுக்கு குருநாதனே, செழித்த பவளம் போன்ற, நிலவைப் பழித்துச் சிரிக்கும் மலர்ந்த முகமும், சிறப்புடன் அமைந்த குறப் பெண்ணாகிய வள்ளியின் இரு மார்பகங்களும் அழுந்தும் வண்ணம் வெற்றி கொண்டு அவளை அணைத்த குகனே, பழனி மலையில் வீற்றிருக்கும் பெருமாளே.
சிவபிரானது மனம் குளிரும்படியாக ஓம் என்ற மந்திரத்தின் விளக்க உபதேசத்தை அவரது இரு செவிகளிலும் சொன்ன குருநாதனே, சிவகாம சுந்தரியாம் பார்வதியின் மேன்மையான மைந்தனே, கந்தனே, உனக்குச் செய்யும் தொண்டினையே விரும்பி உள்ளத்தில் நினைக்காமல், கேடு விளைவிக்கும் மாயையின் வசமாகி, உலகிலே வீணாக அலைந்து திரியும் அடியேனை அஞ்சாதே எனக் கூறி அருள்வதற்கு நீ வரவேண்டும். அறிவு மனத்திலே பெருகி வளரவும், துன்பங்களெல்லாம் தொலையவும், நின்னருளால் பெறக் கூடிய ஞான இன்பத்தை தந்தருள்வாயாக. வெண்ணெயையும் திருடி, உரலுடனும் கட்டுப்பட்ட ஹரி, ரகுராமனாம் திருமால் மனமகிழும் மருமகனே, நவகண்ட பூமியில் யாவரும் கைதொழுது வணங்கும் உண்மைத் தெய்வமே, அலங்காரமானவனே, நலம் தரும் மாயவித்தையால் பிறப்புத் தோற்றங்கள் பலவற்றை விளைவிக்கும் தலைவனே, தேவயானை, அழகிய குறப்பெண் வள்ளி இவ்விருவருக்கும் மணவாளனே, நிறைவான திறல் வாய்ந்த வீரனே, மிக்க ஒளி வீசும் கூரிய வேலாயுதனே, திருவாவினன்குடியில் எழுந்தருளிய மன்மதனே, அழகனே, உலகில் உண்மைப் பொருளைக் கண்டு தெரிவித்த திறம் வாய்ந்த பெருமாளே.
சீழும் இரத்தமும் எங்கும் பொருந்தி, புழுக்கள் நிறைந்த, நிலை இல்லாத மலங்கள் நிறைந்த, நோய்களுக்கு இருப்பிடமாகிய (இந்த) உடலை, நெருப்பும், நரிகளும், கழுகுகளும், காகங்களும் ஆகிய இவை உண்ணுவது நீங்காதோ? தீமையான குணங்களே வளர்கின்ற பந்தபாசம் மாயையில் வளர்ந்த தோல், சதை, எலும்பு சேர்ந்துள்ள நரம்பு ஆகிய இவைகளும் நிறைந்து நிலை காண முடியாத இப்படியான இந்த உடம்பு, யமன் கையில் உயிர் போனவுடன், அந்த நேரத்தில் மிகவும் கெட்டுப் போகும் துன்பம் நிறைந்த இவ்வுடலை விரும்பி, அது நிலையானது என்று கருதி மாதர்களிடத்தே காமப் பற்றை வைத்து, காம விஷம் மிகுதியாகச் சேர்வதால் மயக்கம் கொண்டு ஆழ்ந்த துன்பக் கடலில் விழுந்து மடிகின்ற என் மீது அன்பு புரிந்தருளுக. மாயையில் வல்லவனாகிய கம்சனால் விடப்பட்டு கோபத்துடன் வந்து, உலகம் முழுவதும், அண்ட கோளங்களும் நடுங்கும்படியாக வாய்விட்டு சத்தம் செய்துகொண்டு வந்து பயங்கரமாக நின்று, மேகம் போன்ற கருமையான தனது தும்பிக்கையால் எல்லாவற்றையும் வாரும்படியாக நெருங்கி கர்வத்துடன் முழக்கம் புரிந்து, நீரை உண்ணும் கோபத்தோடு எதிர்த்து வந்த (குவலயா பீடம் என்னும்) யானையின் இரண்டு கொம்புகளையும் ஒடித்து வென்ற நீண்ட வடிவை உடையவனும், புல்லாங்குழலின் இன்னிசையைக் கொண்டு பசுக் கூட்டங்களைக் காத்து மேயவிட்ட சிவந்த கண்களை உடையவனும் ஆகிய திருமாலின் மருகனே, பரிசுத்தமான வேலனே, கிரவுஞ்சம் என்ற பெரிய மலை இடிந்து பொடியாகும்படி, வேலைச் செலுத்திய கந்தவேளே, காவிரி ஆற்றின் செழிப்புள்ள நகரமான நீர் சூழ்ந்த கலிசை என்ற ஊரில் வாழ்கின்ற வீரன் உன்னைத் துதிக்க வீரை நகரில் எழுந்தருளியுள்ள பழனிப் பெருமாளே, தேவர்கள் பெருமாளே.
தலைவலி, வசிய மருந்தால் வரும் நோய், மஞ்சட்காமாலை, ரத்தசோகை, ஜுரம், கண்வலி, வறள் என்ற வயிற்றுவலி, காசநோய், மூச்சுப்பிடிப்பு, நீரிழிவு, கொடிய விஷ நோய்கள், உலகமாயையால் வரும் விகாரமான பிணிகள் முதலியவை என்னை அணுகாதவண்ணம், பூமியில் அந்த நோய்கள் நீங்குவதற்காக சில வைத்தியர்களிடம் சொல்லி, இது நீங்குவதற்குப் பரிகாரம் யாதெனக் கேட்டால், காது கேளாததுபோலச் செல்பவர் சிலர், சாகப்போகும் வயதாகிவிட்டதே உமக்கு, எவ்வளவு பணம் தருவீரெனக் கேட்பவர் சிலர் என்று பிறர் கூறும்படியான விதியை என் தலையில் எழுதாமல், ஊக்கக்குறைவு இன்றி, விருப்பமுடன் பெரிய பூந்தோட்டத்தில் பூத்த மணமுள்ள மலர்களை, விதவிதமாகப் பறித்துத் தொடுத்து மாலை வகைகளில் ஆபரணங்கள் போல் அமைத்து உன்னடியில் சூட்டுதற்கு விரும்பும் சிறந்த தவசிரேஷ்டர்களின் இரு பாதங்களையும் மனத்தினில் தரித்தே, ஆய்ந்த அறிவுடன் பாடி, உன்னருளால் உன்னை வழிபடுவதற்கு, என்மீது அன்பு கூர்ந்து, உன் திருவடிகளைத் தந்துதவ பாம்பைத் தூக்கி எறிந்து ஆடும் மயிலின் மீது வந்தருள வேண்டும். அலைகடலை அணையிட்டு அடைத்து, மகா கோரமான ராவவணனுடைய மணிமுடிகளை அறுத்துத்தள்ளி, உயிருக்கு ஒப்பான சீதாதேவியை தன் தோள்வலியால் அழைத்துக்கொண்ட மாயவனான திருமாலை மாமன் என்று அழைக்கும் மருகனே, அறுகம்புல்லை சடையில் முடித்தவனும், உயிர்கட்கெல்லாம் ஆதாரமானவனும், மழு, மான் இவைகளை ஏந்தியவனும், மகா காளி வெட்கும்படியாக முன்னர் சபைதனிலே நடனம் ஆடியவனான சிவபிரானை, சிறந்த தந்தையே என்றழைக்கவும் வந்தவனே, பல கலைகளைப் படித்து ஓதும் கவிஞர்களின் நாவிலே வாசம் செய்கின்ற இரு திருவடிகளை உடைய வித்தகனே, வேலாயுதனே, உயரத்தில் கட்டப்பட்ட பரணின் மீது இருந்த குறப்பெண் வள்ளியின் தோள்களைத் தழுவ மிக்க ஆசை கொண்ட மணவாளனே, தாமரை மலர்கின்ற வயலிலும், பாக்கு மரங்களின் மீதும், வரால் மீன்கள் உறங்கும்படி வரும் நீர்ப்பெருக்கை உடைய ஆறாகிய காவேரி சூழ விளங்கும் பழநியில் எழுந்தருளிய, பச்சைக் கற்பூர மணம் கமழும் அலங்கார ஆடம்பரனே, தேவர்களின் பெருமாளே.
இருண்ட கடல் போன்றதும், நரகத்திற்கு ஒப்பானதும் ஆன பிறப்பு என்பதில் நீ என்னை விழும்படியாகச் செய்தால், செவிடு, குருடு, அங்கஹீனம், சிறிதேனும் வறுமை என்பவை ஏதும் இல்லாது, தேவ லக்ஷணமும், உயர் குடிப்பிறப்பும், அறிவும், நீதி ஒழுக்கமும் எனக்கு வருமாறு உனது திருவருளைத் தந்தருளி, என்னையும் நீ மனம்வைத்து உன் அடிமையாக ஆட்கொள்ள வரவேண்டும். போர்க்களத்தில் வெல்லப்பட்ட அசுரர்களின் தலைகள் உருளும்படியாக, மிகப் பெரிய கடல் அலறும்படியாக, நீண்டுயர்ந்த கிரெளஞ்சமலை பொடியாக, வேலினைச் செலுத்தியவனே, பாம்புப் படுக்கையில் இனிதே துயிலும் தாமரைக்கண்ணன் திருமால் மருகனே, கண்டம் கறுத்த (நீலகண்ட) சிவனின் குமரனே, பழனியில் வந்து தொழும் தேவர்களின் பெருமாளே.
லிங்கம், பீடம் (சிவ சக்தி) ஆகிய தத்துவங்களுக்கு மூலப்பொருளே, போற்றி, போற்றி, வேதங்கள், மந்திரங்கள், இவற்றின் உருவமாக விளங்குபவனே, போற்றி, போற்றி, பேரறிவுக்குத் தலைவனான தெய்வமே, போற்றி, போற்றி, பல கோடிக் கணக்கான திருப்பெயர்களைக் கொண்ட சிவனின் புதல்வனே, போற்றி, போற்றி (அனைத்து உயிர்களுக்கெல்லாம்) இன்பங்களை அளிக்கும் பார்வதியின் குமாரனே, போற்றி, போற்றி தன் காலினால் பாம்பை அடக்கிக் கட்டியுள்ள மயிலை வாகனமாகக் கொண்டவனே, போற்றி, போற்றி, எதிரிகளான சூரர்களை தண்டித்து அழிக்கும் திருவிளையாடல் புரிந்தவனே, போற்றி, போற்றி, இசை ஒலி எழுப்பும் சதங்கைகளை உடைய திருப்பாதங்களைக் கொண்டவனே, போற்றி, போற்றி மிகவும் பராக்ரமசாலியான போர்வீரனே, போற்றி, போற்றி, மலைகளுக்கெல்லாம் அரசனே, திருவிளக்குகளின் மங்களகரமான ஒளியே, போற்றி, போற்றி, பரிசுத்தமான பரவெளியில் லீலைகள் புரிபவனே, போற்றி, போற்றி, தேவயானையை மணாட்டியாகப் பக்கத்தில் கொண்டவனே, போற்றி, போற்றி, உனது திருவருளைக் கொடுத்து அருள்வாயாக. தானம், பல சிறப்பான பூஜைகள் செய்தல், நல்ல நூல்களைப் படித்தல், சற்குணம், ஒழுக்கம், நியாயம், கருணை, குருவின் திருப்பாதங்களைச் சேவித்தல் ஆகியவற்றை மறவாமல் கடைப்பிடிக்கும் (சோழமண்டலத்தில்), ஏழு உலகங்களில் உள்ளோரும் மெச்சுகின்ற காவேரி நதியால் செழித்து வளமுறும் சோழ மண்டலத்தில், மனதுக்கு மகிழ்ச்சி கொடுக்கும் ராஜகெம்பீரம் என்னும் நாட்டை ஆளுகின்ற அரசனே, வயலூருக்குத் தலைவா, தன்மீது அன்புவைத்த திருவாரூராரின் (சுந்தரமூர்த்திப் பெருமானது) நட்பை நாடியவராய், அவருடன் முன்பொருநாள், ஆடலில் சிறந்த, விரும்பத்தக்க குதிரை மீது ஏறி கயிலை மாமலைக்குப் போய் (அங்கே) ஆதி உலா எனப்படும் அழகிய (கயிலாய ஞானக்) கலிவெண்பாவை பாடலாகப் பாடிய சேரர் பெருமானாம் சேரமான் பெருமான் நாயனாருக்கு உரித்தான கொங்கு மண்டலத்து வைகாவூர் என்னும் சிறந்த நாட்டுப் பகுதியில் இருக்கும் திரு ஆவினன்குடி (பழநிமலையின் அடிவாரம்) என்னும் தலத்தில் வாழ்வு கொண்டிருக்கும், தேவர்களின் பெருமாளே.
ஞான உபதேசம் தருகிற தலைவனே, போற்றி, போற்றி, நீதிக்கு இருப்பிடம் ஆன இறைவனே, போற்றி, போற்றி, இந்தப் பூமண்டலத்தை ஆள்கின்றவனே, போற்றி, போற்றி, அணிகலன்கள் அனைத்தையும் அணிகின்ற பெருமானே, போற்றி, போற்றி, வேடர்கள் தம்குலத்தில் அவதரித்த பைங்கொடி வள்ளியிடம் மையல் கொண்டவனே, போற்றி, போற்றி, தாமரை மலர்வாசனாம் பிரமன் துதிக்கும் ஸ்வாமியே, போற்றி, போற்றி, அருமையான வேத மந்திரங்களின் வடிவானவனே, போற்றி, போற்றி, மெய்ஞ்ஞானப் புலவனான தலைவனே, போற்றி, போற்றி, வீரக் கழலை அணிந்த திருவடிகளை உடையவனே, போற்றி, போற்றி, அழகு நிறைந்த திருமேனியை உடைய வேளே, போற்றி, போற்றி, தேவருலகில் வாழும் பசுமையான வளையல் அணிந்த தேவயானையின் மணவாளனே, போற்றி, போற்றி, வெற்றி நிறைந்த விசாக மூர்த்தியே, போற்றி, போற்றி, உனது திருவருளைத் தந்து உதவுவாயாக. தீவினை நிறைந்த சூரன் முதலிய அசுரர்கள் இறக்குமாறு கூர்மையான வேலாயுதத்தால் போர் புரிந்து, பெருமை பொருந்திய தேவர்கள் மீண்டும் வான் நாடு சேரும்படியாக அருள் புரிந்தவனே, பிறைச்சந்திரனைத் தரித்த ஜடாமுடியினரும், திரிசூலத்தைத் தாங்கும் சங்கரனாரும், இசைத் தலைவரும், வலிமையும் திண்மையும் உடைய புயங்கள் வாய்ந்த ஜோதி ஸ்வரூபமும், திருக்கயிலையில் வாழ்பவருமான முதன்மையான சிவப்பரம்பொருளும் ஆகிய சிவபிரானின் இடப்பாகத்தில் இருக்கும் உமாதேவியும், அழகிய அம்பிகையும், உலக மாதாவும், மனோன்மணியும், அன்னையும், சிவகாமசுந்தரியும், உயிர்களுக்குத் தாயான நாராயணியும், அதிரூபவதியுமான பார்வதிதேவி அன்பு கொண்டு பெருமையுடன்சீராட்ட, அழகு பலவாக அமைந்த திருக்கோயில்கள் மிகுந்த திருவாவினன்குடியில் வாழ்வாக வீற்றிருக்கும், தேவர்கள் போற்றும் பெருமாளே.
தனத்ததன தான தந்த தனத்ததன தான தந்த தனத்ததன தான தந்த ...... தனதான
மனக்கவலை யேது மின்றி உனக்கடிமை யேபு ரிந்து வகைக்குமநு நூல்வி தங்கள் ...... தவறாதே வகைப்படிம னோர தங்கள் தொகைப்படியி னாலி லங்கி மயக்கமற வேத முங்கொள் ...... பொருள்நாடி வினைக்குரிய பாத கங்கள் துகைத்துவகை யால்நி னைந்து மிகுத்தபொரு ளாக மங்கள் ...... முறையாலே வெகுட்சிதனை யேது ரந்து களிப்பினுட னேந டந்து மிகுக்குமுனை யேவ ணங்க ...... வரவேணும் மனத்தில்வரு வோனெ என்று னடைக்கலம தாக வந்து மலர்ப்பதம தேப ணிந்த ...... முநிவோர்கள் வரர்க்குமிமை யோர்க ளென்பர் தமக்குமன மேயி ரங்கி மருட்டிவரு சூரை வென்ற ...... முனைவேலா தினைப்புனமு னேந டந்து குறக்கொடியை யேம ணந்து செகத்தைமுழு தாள வந்த ...... பெரியோனே செழித்தவள மேசி றந்த மலர்ப்பொழில்க ளேநி றைந்த திருப்பழநி வாழ வந்த ...... பெருமாளே.
மனத்தில் சிறிதும் சஞ்சலம் இல்லாமல், உனக்குத் தொண்டு செய்யும் பணியையே பூண்டு, வகையாக அமைந்துள்ள நீதி நூல் முறைகளிலிருந்து தவறாமல், நல்ல முறையில் மன விருப்பங்கள் எண்ணிய விதத்திலேயே அமைந்து, சந்தேகம் அற்றுப்போகும்படி வேதத்தின் மெய்ப்பொருளை ஆராய்ந்து உணர்ந்து, வினையைக் கொடுக்கும் பாவச்செயல்களை அறவே அகற்றி, ஆனந்தத்துடன் உன்னைத் தியானித்து, மேலான பொருளைக் கொண்ட ஆகமங்களில் விதிக்கப்பட்ட முறையின்படி, கோபம் என்பதையே முற்றிலும் விலக்கி, மகிழ்ச்சியுடன் கடமைகளைச் செய்து நடந்து, யாவர்க்கும் மேம்பட்டு விளங்கும் உன்னையே வணங்குதற்கு (வேண்டிய அருளைத் தர) நீ வரவேண்டும். தியானித்தால் மனத்தில் வருபவனே என்று நினைத்து உன் அடைக்கலப் பொருளாக வந்து சேர்ந்து உன் மலர்த் திருவடியே பணிந்த முனிவர்களுக்கும், பிற வரசிரேஷ்டர்களுக்கும், தேவர்களுக்கும், மனம் இரக்கப்பட்டு, பயமுறுத்தி வந்த சூரரை வென்ற கூரிய வேலனே, தினைப்புனத்துக்கு முன்னொருநாள் நடந்துசென்று குறவர்கொடி வள்ளியையே மணஞ்செய்து, இந்த உலகம் முழுவதையும் ஆட்கொண்ட பெரியோனே, செழிப்புற்ற, வளம் பொலிந்த மலர்ச் சோலைகள் நிறைந்துள்ள திருப்பழனியில் வீற்றிருக்க வந்த பெருமாளே.
உருவேற ஏற மிகவும் ஜபம்செய்து (அந்த ஜபத்தால்) உன்னை மறவாமல் இருந்து, என் மனம் துயரம் தரும் வழிகளில் அலைந்து திரியாதிருக்கவும் மீண்டும் மீண்டும் சொல்லிப் பயில்கின்ற ஆறெழுத்து மந்திரம் (சரவணபவ) தரும் பயனாலே இம்மைக்கும் மறுமைக்கும் நல்வாழ்வை அருள் புரிவாயாக சிவபிரானது வேத சிவாகமங்களை அறிந்தவனே பழனிமலையில் எழுந்தருளியிருந்து அருள் புரியும் வேலனே அசுரர் கூட்டங்களை வாட்டி ஒடுக்கியும், தேவர்கள் நன்கு வாழும்படியாக சிறையினின்று மீட்டுவித்த பெருமாளே.
ஆசை ஏற்படுத்துகின்ற துன்பம் விளைவதற்கு மண்ணாசையும், விரும்பிப் பார்க்கின்ற இளம் மாதர்கள் என்ற பெண்ணாசையும் காரணமாம். அவர்களுடன் வாழ்க்கை நெருப்பின் மேல் வாழ்வு என்றுணராமல் பாம்பின் வாயில் அகப்பட்டு துன்பமுறு தவளையின் கதி அடைந்த அந்நிலையிலும் இன்பத்தை நாடும் அறிவுடையவனாகி உள்ளத்தில் மயக்கம் கொண்டு அதன் காரணமாக சிவாய என்ற திருமந்திரத்தை ஒருபோதும் நினைக்காத அஞ்ஞான இருளுக்கு இருப்பிடமாக உள்ள அடியேனை, உன் திருவடியில் சேர்ந்து இன்புற வருக என்றழைத்து அருள்வாயாக. உன்னை மறத்தல் என்ற குற்றம் இல்லாத மெய்யடியார்களாலும், அரிய பெரிய தவ முனிவர்களாலும் தியானம் செய்யப்படும் உன் திருவடிகளைத் தந்தருள்வாயாக. இளமைமிகுந்து, இனிய கானகத்தில் ஒளிவீசித் திரியும் மயிலை வாகனமாகக் கொண்டு, அதன்மீது குதூகலத்துடன் ஏறும் வீரக் கழலோனே, வானில் உலாவும் உதய சூரியர்கள் நூறு கோடி கூடினாற்போல ஒளிபடைத்த அழகிய கூர் வேல் திருக்கரத்துள்ளோனே, பன்னிரண்டு மலைபோன்ற புயங்களை உடையவனே, ஆறுமுகக் கடவுளே, சிறந்தவனே, சிவனின் சேயே, வேடர் குலத்து மான் போன்ற வள்ளியிடம் அன்புடையவனே, தேவேந்திரனும், திருமாலும், பிரம்மனும் அன்போடு வணக்கம் செய்கின்ற சுவாமிமலையில் வாழ்கின்ற பெருமாளே.
நீங்குதற்கு அரிய மண்ணாசை என்ற விலங்கும், பெரும் மயக்கத்தைத் தரும் ஆணவம் என்ற இருளும் ஒழிந்து, ஒன்றுபட்ட தன்மை என்று கூறும்படியாக, வானம் போல் பரந்த பெரிய ஞான ஜோதியான பராசக்தியை அடைந்து நினைப்பு எதுவும் இன்றி, முப்பத்தாறு மேலான தத்துவங்களுக்கு அப்பால் முதன்மையானதாய், என்றும் யோகீசர் எவர்க்கும் எட்டாததான பெரிய துரிய நிலைக்கும் மேம்பட்டதாய், உருவம் இல்லாததாய், எப்போதும் தோன்றி நிற்பதாய், அளவற்ற வசீகரம் வாய்ந்ததாய், வான் முதலிய எல்லாமாய் விரிவான உயிர்ப்பொருளாய், உலகத்தின் முதலாகவும் முடிவாகவும் விளங்குவதாய், உண்மை அறிவாய், தாமரையான் பிரமன், திருமால், சிவபிரான் என்ற மும்மூர்த்திகளுக்கும் மூலகாரணமாக விளங்கும் பெருமை வாய்ந்ததாய், சந்தேகம் இன்றி நீடூழிகாலம் இறப்பின்றி தானே மெய்த்தன்மைத்தாக இருப்பதாய், அரியதாய், மற்ற ஒன்றையும் சாராததாய், அழிவின்றி சத்திய ஜோதியாகத் துலங்குவதாய், உருவம் ஏதும் இல்லாததாய், மாறுதல் இல்லாது விளங்கும் இன்ப வெள்ளமான சிவத்துடன் யான் இனிமையாக என்றைக்கு இணைவேன்? பல்விதமான ஆயுதங்கள் (கத்தி, வில், வாள் முதலியவை) தாங்கிய சேனைகள் விதவிதமாக சூழ்ந்து வர, பிரசித்தி பெற்ற வீரர்களுடன், பெரும் கப்பல்கள் செல்லும் சமுத்திரத்தை அணைகட்டிக் கடந்து, அக்கரை சென்று, நிலைத்திருந்த இலங்கையை வீழ்த்தி, பத்து மணிமுடிகளைத் தரித்த பாவியாகிய ராவணனை வதைத்த ஸ்ரீராமனின் மருகனே, இருண்ட சோலைகளில் நறுமணம் நன்றாக வீசும் வயலூரில் வீற்றுள்ள அக்னீஸ்வரருடைய குமாரனே, கடப்பமலர் அணிந்தவனே, வேலாயுதனே, காட்டை ஆளும் வேட்டுவர் குலத்திலே வளர்ந்த குறமானாகிய வள்ளியோடு மகிழ்வதற்கு எண்ணம் கொண்டு, மருட்சியைத் தருகின்றதும், காதுவரை நீண்டதுமான உனது கண்களிலிருந்து வரும் பாணமானது என்னுடைய நெஞ்சினில் பாய்வதை நீகாணாமல் இருக்கின்றாய், உன் செருக்கை விடுத்து என்னுயிர் உய்ய அருள்வாயாக என்றெல்லாம் வள்ளியிடம் உரைத்து மிக்க அன்புடன் சேர்ந்த இளையவனே, காவேரியின் வடகரையினுள்ள சுவாமிமலைத் தலத்தில் எழுந்தருளிய தனிப் பெரும் தலைவனே.
ஆசைப்படும் பொருள்களில் அழுந்தி ஈடுபட்டு மெலிந்து போகாமல், யம தூதர்களின் கைகளிற் சிக்கி இறந்து போகாமல், ஓம் என்னும் பிரணவப் பொருளில் ஈடுபாடு மிகவும் ஏற்பட்டு, யான் சித்திரம் போன்ற மோன நிலை முடிவை (அடைய) அருள்வாயாக. வாசனைப் புகையை மேனியில் அணிந்துள்ள சுகமான லீலைகளைப் புரியும் பெருமானே, சூர சம்ஹாரம் செய்த ஒளி வேலனே, பொன்மலையைப் போலச் சிறந்த மயிலில் ஏறும் வீரனே, திருவேரகம் என்ற சுவாமிமலையில் வீற்றிருக்கும் பெருமாளே.
உனது தாமரை போன்ற திருவடிகளில் அரை நிமிஷ நேர அளவுக்காவது தவ நிலையில் தியானத்தில் வைத்திட அறியாத பொய்யும் குற்றமும் கொண்ட மூடனான மட்டி யான் பிறப்பதே தொழிலாகக் கொண்டு பிறந்துள்ள தன்னம் தனியனான யான் வறுமையால் மயக்கத்தை அடையலாமோ? கருணை காட்டாமல் இருப்பது என்ன குறையைக் கண்டு? இப்பொழுதே சொல்லி அருளவேண்டும் கயிலாயமலை நாதராம் சிவன் பெற்ற குமரனே வீரக் கடகம் அணிந்த புஜத்தின் மீது ரத்னாபரணம், தங்கமாலை, வெட்சிப் பூமாலை வாசனை நிறைந்த கடம்பமாலை இவைகளை அணிந்தவனே தக்க சமயம் இதுதான் ஐயா மிக்க பெருமையைத் தரும் நீடித்த சுகம் எல்லாவித செல்வம், அதிர்ஷ்டம், நிறைந்த பெருவாழ்வு நன்மதிப்பு, சிவஞானம், முக்தியாம் மேலான கதி இவையாவும் நீ கொடுத்(து) உதவி புரிய வேண்டுகின்றேன், பளபளப்பும் கூர்மையும் உடைய வேலனே சிவந்த தாமரையிதழ் போன்ற உன் பாதமதனை தினந்தோறும் நான் துதிப்பதற்கு அருமையான் தமிழ் ஞானத்தை தந்த மயில்வீரனே அதிசயக் கோலங்கள் பல நிறைந்த பழனிமலை மீது விளங்கித் தோன்றும் அழகனே திருவேரகத்து (சுவாமி மலையின்) முருகப்பெருமானே.
சுற்றப்பட்டுள்ள நரம்புகளுடன் எலும்பு பொருந்திய மாமிசம், குடல் இவற்றுடன், நீர், கொழுப்பு, (மூக்குச்) சளி, இழுப்பு நோய், இருதயம், இந்திரியம், விளைகின்ற கிருமிகள், எலும்புகள், அழுக்குகள், ரோமம், சங்கு போல் வெளுத்த மூளை, துக்கத்தை விளைவிக்கின்ற சேர்க்கை நோய், மாதவிடாய் முதலிய மாசு, அவயவ நுனிகளில் விருத்தியாகும் குஷ்ட நோய், சிலந்தி, புண் புரை வைத்தல், முட்டு வலி, புசிக்கின்ற ராஜப் புண், வயிறு உப்பும் நோய், பித்தம், தூக்கம் மிகுந்து வர, உடலில் எத்தனை எண்ணங்கள், செய்கைகள், மயக்கங்கள், எத்தனை வெறுப்பும், பொலிவும், வலிமைப் பெருமையும், எத்தனை க்ஷய நோய், மலத்தையும் அடைத்துள்ள ஐந்து பூதத்தாலாகிய உடலிலே, எத்தனை குலுக்கு, எத்தனை மினுக்கு, மனக் கவலை, எத்தனை கபடம், நடவடிக்கை, உயிரின் சேர்க்கை, எத்தனை பிறவிகளையும், மரணங்களையும் எடுத்து (நான்) இவ்வுலகில் வாட்டமுற்று அழிவேனோ? தத்தனத னத்தனத னத்தன என்று பறைகள் ஒலிக்கவும், ஒரு வகைப் பறை, உடுக்கை, இடக் கையால் கொட்டும் தோல் கருவிகள் பேரொலி செய்யவும், கூட்டமாய் வருவதை ஒத்துத் தோன்றிய இரத்த வெள்ளம் நெருங்கி ஓடவும், ஆதிசேஷனாகிய பாம்பு நெளியவும், அசுர்களின் பிணங்கள் (ரத்த வெள்ளத்தில்) மிதக்கவும், தேவர்கள் கைகளைத் தூக்கி, அரஹர சிவ, பிழைத்தோம் என்று முழங்கவும், சக்ரவாளகிரியின் சுவர்கள் அந்தக் கணத்திலேயே பிளவுபடவும், வெற்றி கொண்ட வேலனே, உனது திருவுள்ளத்தில், எத்தனை உலகங்களைப் படைத்து, உடனே அழித்து, தாமரையில் வீற்றிருக்கும் பிரமனின் அழகிய குடுமியைப் பிடித்து (உனது) அழகிய திருக்கரம் வருந்த பல முறை அவனைக் குட்டி நடனம் கொண்ட தலைவனே, செட்டி வேடம் பூண்டு, தினைப்புனத்தில் (வாழும்) சிறிய குறப் பெண்ணாகிய வள்ளியின் படுக்கையில் மகிழும் செட்டியே, சுவாமி மலையில் வீற்றிருக்கும் ஞானமயமான சிவ பெருமானுக்கு ஒப்பற்ற குருமூர்த்தி என்று முக்தி நிலை பெற்ற பெரியோர் புகழ்கின்ற தம்பிரானே.
கேடு செய்யும் கீழ்மக்களின் இருப்பிடங்களுக்குச் சென்று அவர்களுடன் கலந்து அதனால் மிகவும் நொந்து போய், தடுமாற்றம் அடைந்து சுய அறிவும் கெட்டுப்போய், முழுவதுமாக தவறான வழியில் விழுந்து, ஆழமாகத் தீய நெறியில் அழுந்தி நான் மெலிவுறாமல், இந்தச் சிறந்த உலகமே போற்றும் உனது புகழின் ஒரு சொல்லளவு பகுதியாவது சொல்லி அதனால் சுகமடைந்து, நறுமணம் வீசும் உன் இரண்டு தாமரைப் பாதங்களை மனம் ஒருமுகப்பட்டு நின்று வணங்க மாட்டேனோ? உபதேச மொழியை நீ கூற, ஒப்பற்ற சிவபிரான் மெச்சிப் புகழ்ந்த குருநாதனே, இந்திரன் வளர்த்தளித்த லக்ஷ்மியின் அம்சமாகும் ஒப்பில்லா தேவயானைக்கு இரங்கி மணம்புரிந்தவனே, மூங்கில், கற்பக மரம், மகிழ மரம், மாமரம், அத்தி மரம், சந்தன மரம் இவையெல்லாம் சுற்றிலும் சூழ்ந்துள்ள, திருமாலே போற்றிப் புகழும் சுவாமி மலையில் உபதேச குருவாக யோகநிலையில் அமர்ந்த பெருமாளே.
நாவினில் இருந்து வெளிப்படும் பாமலர்களின் நறுமணம் கமழும் பாதத் தாமரைகளையே நினைத்து, (4..ஐ 6..ஆல் பெருக்கி வந்த 24..ம் 4..ம் சேர்ந்த) 28 சிவ சம்பந்தத்தை உடையதும், சரியை, கிரியை, யோகம், ஞானம் என்ற நான்கு பாதங்கள் பொருந்தினவாயும் உள்ள சிவாகம நூல்களில் கூறப்பட்டுள்ள ஞான முத்தி நெறியே நாள் தோறும் நான் அனுஷ்டிக்கும் நெறியாகவும், நீ வேறு என்றில்லாமல் நான் வேறு என்றில்லாமல், ஜீவாத்மாவும் பரமாத்மாவும் ஒன்றுபட்ட நிலையில், நேர்பட்டு வாழ்வதற்கு உன் கிருபை பெருகி, பெருமை பொருந்திய ஆறு ஆதாரங்களையும் கடந்து பெரிய பொருள்கட்கெல்லாம் பெரிய
பொருளான சிவத்தை நீ காண்பாயாக என்று
அந்த ஐக்கிய வசனத்தை
உபதேசித்து அருள்வாயாக.
நந்தியின் மீது ஏறுகின்ற ஈசராம் சிவனார்
உன்னை வலம் வர,
சிறந்த ஞான உபதேசத்தை
செம்மையாகவே சொன்ன
குருநாதனே,
பகைவர்களாம்
தேவர்களின் நாட்டைச் சுட்டழித்த அசுரர்கள் சாகும்படி வெட்டிய
தீரனே, குகனே, குறத்தி
வள்ளியின் மணவாளனே,
காவேரி ஆற்றின்
நேர் வடக்கில் தடாகங்களில் மலர்கள் மணக்கும்
சோலைகள் சூழ்ந்த
சுவாமிமலையில் எழுந்தருளிய முருகக் கடவுளே,
கரு மேகத்து
நிற மேனியுடைய மகா காளி, என்றும் இளையாள், சக்தி,
காமனை எரித்தவரின்
இடதுபக்கம் உள்ள பார்வதி பெற்ற பெருமாளே.
பிறைச் சந்திரனையும், கங்கை நதியையும், கொன்றை மலரையும் அணிந்த சடைப் பெருமான் சிவபிரான் அருளிய குமரேசனே, சர்க்கரைப் பாகும், கனிகளும் போன்ற இனிய மொழியை உடைய மாதரசி, குறமகளாகிய வள்ளியின் பாதத்தைப் பிடித்துவிடும் மணவாளனே, பிரிக்கப்பட்ட ஒரு விழியை காகாசுரன் என்னும் காகம் அடையும்படி அருளிய ஸ்ரீராமர் மாய ஹரிக்கும், லக்ஷ்மிக்கும் மருமகனே, யமன் என்னை அணுகாத வகைக்கு உன் இரு திருவடிகளில் வழிபடும் புத்தியை அருள்வாயாக. ஆதி பிரமனோடு அமரர்கள் அனைவரும் தேவலோகத்தை ஆளும்படி சிறையினின்று அவர்களை மீட்டவனே, நடனம் ஆடும் மயில் மீது ஏறி தேவர்கள் உன்னைச் சூழ்ந்துவர வருகின்ற இளையவனே, மாமரங்கள் மிகுந்து வளர்ந்த சோலைகள் நிறைந்த சுவாமிமலையில் வீற்றிருப்பவனே, சூரனின் உடல் வீழ, கடல் வற்றிப்போக, வேலினைச் செலுத்தவல்ல பெருமாளே.
வாத நோய், வயிற்றுளைவு நோய், கழுத்தைச் சுற்றி வரும் புண் கட்டி, மார்பு எரிச்சல், எலும்புருக்கி நோய், பெரிய இழுப்பு நோய், மகோதரத்துடன், கோழை நோய், வாயுவினால் உண்டாகும் படர்தாமரை போன்ற சொறி, படை, மூக்கடைப்பு, பின்னும் ஒழுக்கம் கெட்ட விலைமாதர்களுடன் இணைவதால் கிடைக்கும் ஆபரணங்கள் என்று சொல்லத்தக்க புண் வகைகள், பாவ நோய்ப் புண்கள் ஆகிய இவை உடனே என்னைப் பீடிப்பதால், படுக்கையை விடாது கிடந்து, உடல் நலம் குறைந்து, இக்காரணத்தால் உனது திருவடி மலர்களில் அன்பு என்பதை முற்றும் மறந்து, பாவம் நிறைந்த கள்ளைக் குடித்து, அதனால் மயக்கம் மிகுந்து, குற்றம் தரும் பந்த பாசக் கட்டுகளான வலையில் அகப்பட்டு அலைந்து, இழிவான என் ஜாதித் தொழில்களிலே ஈடுபட்டு, நான் வலிமை அற்று அழிந்த பின், இவன் ஒரு முட்டாள் எனப் பிறர் கூறுவர். (அங்ஙனம் பிறர்) சொல்லுவதற்கு முன்பு உனது கருணை நிறைந்த திருவருள் மிக்கு வந்து என்னை ஆட் கொள்வாயாக. மாமரம், மகிழ மரம், பாலை மரம், கொன்றை மரம் (இவைகளின்) பூந்தாது நிறைந்துள்ள சோலைகள் நெருங்கியுள்ளதும், சூழ்ந்துள்ள மதில் உயர்ந்து மேகத்தை அளாவி நிற்பதும், தோரணங்கள், நல்ல வீடுகளில் எங்கும் உயர் கொடிகள் தழைந்துள்ளதுமான, சுவாமிமலையில் வாழ வந்த பெருமாளே.
மிகுந்த பசி உற்றவர்களுக்கு, மன அமைதியுடன், அன்னத்தைப் பங்கிட்டுத் தருவதற்கு மனம் வராமல், வைத்துள்ள பொருள் அத்தனையும் எனது இளமைப்பருவத்துக்கு என்று கைவசமாக இறுகப் பிடித்து வைத்துக்கொண்டு, அருள் நெறியினின்றும் தவறிப் போய் அகங்காரத்தினால் தளர்ச்சி அடையாமல், சுற்றத்தார் சுற்றி நின்று அழவும், பறைகள் வாசிக்கவும், யமன் நெடுந்தூரத்திற்கு உயிரைக் கொண்டு போகும் இந்த உடம்பை நிலையாக நிற்கும் என்று கருதி இவ்வுடம்பிற்காகவே பாடுபட்டு நான் தளர்ந்து அழிவது முறையாகுமோ? இமவான் வளர்த்த மயில் போன்ற பார்வதிக்கு தன்னுடம்பின் ஒரு பாகத்தைத் தந்த சிவபெருமானுக்கு உள்ளம் இசையுமாறு உபதேசம் அருளியவனே, போர்க்களத்தில் தாக்கி எதிர்ப்பவர்களை கழுகுகட்கு இரையாக அளிக்கும் வீரமுள்ள வேலாயுதனே, சமயச் சண்டை இடுகின்ற சமயவாதிகளின் பக்கம் சாராமல் விலகி எனது தவம் நிறைவுறவும், உனது திருவருளில் புகவும், நான் விரும்பும் ஆறு தாமரையன்ன திரு முகங்களை உடைய குகனே, (வள்ளியை மணந்த பின்) நீ புகுந்த, பெருமை வாய்ந்த, திருத்தணிகைப் பதியில் வீற்றிருக்கும் குமரப் பெருமாளே.
பாவங்களைப் போக்கவல்ல சிவனும், திருமாலும், பிரம்மாவும், ஆகிய இம்மூவரும் போற்றி நின்று உனது முன்னிலையில் ஆறுமுகனே, சரவணபவனே, என்று கூறி நாள்தோறும் துதிக்க, சூரன் முதலிய அசுரர்கள் அழியுமாறு அக்கினி போல எழும்பிய வேலினை விடுத்த வீர மூர்த்தியே, வீரச் சிலம்பு அணிந்த, தாமரை மலர் போன்ற உன் திருவடிகளை உன் அடியார்களின் உள்ளத்தில் பொருந்துமாறு அருள்செய்யும் முருகக் கடவுளே. மலையரசன் மகளாக வந்த பகவதியின் அருளினால் வந்த குகனே, சிவனின் இருசெவிகளும் மகிழும்படி யாவரும் புகழும் ஒப்பற்ற மொழியாகிய பிரணவ மந்திரத்தின் முடிவுப்பொருளை உபதேசித்த மேலான குருவே, உயர்ந்த இவ்வுலகில் வாழும் எண்ணற்ற உயிர்களும் தேவர்களும் பெருந்தவ சிரேஷ்டரான முனிவர்களும் உன் முன்னேவணங்கி துதி செய்து, நாள்தோறும் மனம் மகிழ்ச்சி அடையுமாறு அழகியதும், வாசுகி என்ற நாகம் வழிபட்டதுமாகிய திருத்தணிகைத் தலத்தில் வாழ்பவனே, புகழ்வாய்ந்த குறப்பெண் வள்ளியும், கற்பகத்தருவின் கீழே வளர்ந்த தேவயானையும், இருபுறமும் பொருந்த வந்த பெருமாளே.
உயிர் போகும் தொலையா வழிக்கு உற்ற துணையாய் இருக்கும் அவல் போன்ற திருப்புகழை ஆர்வத்தோடு படிப்பவர்களுடைய சங்கடங்களை அறுத்தெறியும் என்ற உண்மையை எடுத்துச் சொல்கின்ற, இசைத்தமிழ், நாடகத்தமிழ் என்றும், அகத்துறைப் பாக்கள், இலக்கணம், இலக்கியம் என்றும், நால்வகைக் கவிகளையும் உள்ளத்தில் தரிப்பவர்கள், உரைப்பவர்கள், நினைப்பவர்கள் ஆகிய உன் அடியார்களை மிகவும் இவ்வுலகில் புகழாமல், தங்கள் மார்பாலும், முகத்தாலும், மனத்தை உருக்கச் செய்யும் சாமர்த்தியசாலிகளான பொதுமகளிரின் மோக மயக்கில் நான் விழலாமோ? (கூடாது என்றபடி), கரும்பு வில்லினை வளைத்து அதில் அழகிய மலர்ப் பாணங்களைத் தொடுத்து, மிகச் செருக்குடன் ஒளிந்திருந்து செலுத்திய மன்மதனை, தன் மனத்தில் நினைத்த மாத்திரத்திலேயே அந்த மன்மதன் எரிந்து சாம்பலாகும்படி தன் நெற்றிக் கண்ணால் எரித்தவரும், கயிலை மலையிலே வீற்றிருப்பவரும், பர்வத குமாரி உமாதேவிக்கு தன் இடது புறத்தைத் தந்தவருமான பரமசிவன் பெற்ற மகனே, மேகங்கள் தங்கும் சோலைகளும், வயல்களும் சூழ்ந்த ஊராகிய இனிமை வாய்ந்த திருத்தணி மலையில் விருப்பம் கொள்ளும் பெருமாளே.
இருமலு ரோக முயலகன் வாத மெரிகுண நாசி ...... விடமேநீ ரிழிவுவி டாத தலைவலி சோகை யெழுகள மாலை ...... யிவையோடே பெருவயி றீளை யெரிகுலை சூலை பெருவலி வேறு ...... முளநோய்கள் பிறவிகள் தோறு மெனைநலி யாத படியுன தாள்கள் ...... அருள்வாயே வருமொரு கோடி யசுரர்ப தாதி மடியஅ நேக ...... இசைபாடி வருமொரு கால வயிரவ ராட வடிசுடர் வேலை ...... விடுவோனே தருநிழல் மீதி லுறைமுகி லூர்தி தருதிரு மாதின் ...... மணவாளா சலமிடை பூவி னடுவினில் வீறு தணிமலை மேவு ...... பெருமாளே.
இருமல் என்ற நோய், முயலகன் என்ற வலிப்பு நோய், வாத நோய், எரியும் குணமுள்ள மூக்கு நோய், விஷ நோய்கள், நீரிழிவு நோய், நீங்காத தலைவலி, ரத்த சோகை, கழுத்தைச் சுற்றி உண்டாகும் மாலை போன்ற புண் இவற்றுடன், மகோதர நோய், நுரையீரலில் கோழை நோய், நெஞ்சு எரியும் நோய், தீராத வயிற்று வலி, ஆகிய பெரு வலியுடன் கூடிய பிற நோய்கள் ஒவ்வொரு பிறவியிலும் என்னைப் பீடிக்காதபடி, உன்னுடைய திருவடிகளைத் தந்தருள்வாயாக. உன்னை எதிர்த்துவந்த கோடிக்கணக்கான அசுரர்களின் காலாட்படை இறந்துபடவும், அனேக வீரப் பாட்டுக்களைப் பாடிக்கொண்டு வந்த ஓர் காலபைரவர் (சிவ பெருமான்) போர்க்களத்தில் நடனமாடவும், கூரிய ஒளிவீசும் வேலைச் செலுத்தியவனே, கற்பக விருட்சங்களின் நிழலில் வசிக்கும் மேக வாகனன் இந்திரன் வளர்த்த அழகிய பெண் தேவயானையின் மணவாளனே, கடலால் சூழப்பட்ட இந்தப் புவியின் மத்தியில் சிறப்போடு விளங்கும் திருத்தணிகை மலையில் வீற்றிருக்கும் பெருமாளே.
எனக்கென்றே எல்லாம் சேகரிக்க வேண்டி தினந்தோறும் இளைப்பு உண்டாகும்படியாக பலகாலமாய் ஓய்ச்சல் இல்லாமல் எடுக்கின்ற தேகங்களுடன் பிறந்து (பின்னர் அவை) இறந்து போகும் வெட்கம் இல்லாத என் பிறப்பு ஓய்வு பெற, உன்னை பலகாலமும் திருப்புகழ் பாடிப் புகழ்கின்றவர்கள் அவர்களது இருப்பிடம் சென்றடைந்து விளக்கும் அறிவுரையை விட்டுவிலகாது ஒளி பொருந்திய உன் திருவடியை நான் தொழும் பாக்கியம் பெறுவேனோ? தன் தொழிலில் திறமையுடன் அன்றொருநாள் எதிர்த்துவந்து அம்பு எய்த வீரனாம் (மன்மதன்) வெந்து விழும்படி அந்த மன்மதனைக் கொன்றவனாகிய சிவன் நீயே (பிரணவப் பொருளை) இனி உரைப்பாயாக என்று கூறிட பிரமனும் விரும்பி மகிழ, வேதப் பொருளை உரைத்தவனே கோபத்துடன் சூரனைக் கடுமைகொண்ட வேலால் (அவனது) சிரத்தை அறுத்த முருகோனே தினைப்புனத்தில் வாசம் செய்த குறப்பெண் வள்ளியுடன் திருத்தணிகையில் வீற்றிருக்கும் பெருமாளே.
நினைத்தது எந்த அளவும் தவறாமல் கைகூடவும், நிலையான ஞானத்தை விட்டு யான் பிரியாமல் இருக்கவும், பெருமை வாய்ந்த தத்துவங்களைக் கடந்து அப்பாலான நிலையை யான் அடைந்து அழியாமல் இருக்கவும், வெளிப்படுகின்ற நிரந்தரமான சித்தநிலையை நீ அருள்வாயாக. மனிதர்களுக்குள் அன்புடையார்க்கு மிக எளியவனே, மதிக்கப்படுகிற இயல், இசை, நாடகமாகும் முத்தமிழில் சிறந்தவனே, சிவ மூர்த்தியிடம் தோன்றிய குமாரர்களுள் இளையவனே, திருத்தணிகைப் பதியில் எழுந்தருளியுள்ள பெருமாளே.
பருமனனான பல்லை உடைய தலையையும், வலிமை உடைய கைகளையும், தாங்குகின்ற அந்தக் கால்களையும், அன்புடனே செய்யப்பட்ட, பொய்யாலான இந்தப் பானை போன்ற உடலை, பழிக்கும் பாவத்துக்கும் இடமான இந்த உடலை, பசிக்கு இருப்பிடமான குடலோடு கூடிய இந்த உடலை, பயத்தோடும் கூடிய பெரிய பித்த சரீரத்தை, தோலாலான உலை ஊதும் கருவியை, பொருத்தப்பட்டுள்ள (காமம், வெகுளி, மயக்கம் என்ற) மூன்று குற்றங்களோடும், (சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்ற) ஐந்து புலன்களோடும் கட்டுப்பட்ட இந்தத் நோய்ப் பையை (வாழும்போது) தாங்குவதும், (சாவில்) ஆழ்த்துவதுமான இந்தப் பிறப்பு ஒழிந்து போவதற்கான நோக்கத்தைக் கொண்ட கருத்தை எனக்குத் தந்து அருள்வாயாக. தமது கருத்தில் வைத்து உன்னைப் புகழ்ந்த அடியார்களை (வாழ்வித்து), மிகுந்த வஞ்சம் உடையவர்களை ஒதுக்கித்தள்ளி, (அடியார்களை மட்டும்) உன் மெய்ப்பதத்தில் சேர்த்துக்கொள்ளும் வீரனே, விளைந்த நல்ல தினைப்பயிர் மிகுந்த புனத்தில் விளங்கும் நல்ல குறத்தியாம் வள்ளியை உயர்ந்த உன் அழகிய தோள்களிலே அணைந்தவனே, போரில் நெருங்கிவந்து எதிர்த்த திரிபுரத்து வலிய அரக்கர்களை சிரித்தே எரித்து அழித்தவரும், அழிவில்லாதவருமான சிவபெருமானின் அழகிய குமரேசனே, சிறப்பாகத் தனிநின்று அறநெறி கூறும் தமிழ்நாட்டின் உயர்ந்த வட எல்லையில் இருக்கும் சிறப்பைப் பெற்றுள்ள திருத்தணித்தலத்துப் பெருமாளே.
தினைப்புனத்து மடந்தையாகிய வள்ளிக்கு ஏற்றதான புயங்களை உடையவன், குமரன் என்று போற்றி பக்தர்கள் துதிக்கின்ற பொருளை, மனத்தில் கொண்ட கற்பனைகள் முழுமையும், பிறவான பலவற்றையும், புகழ்ந்து சொல்லப்படும் தொண்ணூற்றாறு வகையான தத்துவ உண்மைகளும் ஆக எல்லாவற்றையும், பற்றியும், பற்று இல்லாமலும் நிற்கும் பொதுப் பொருளை, சூரியனுக்கு ஒப்பாகத் தக்க (பேரொளியைக் கொண்ட) ஒப்பற்றச் செல்வத்தை நாள் தோறும், கோபத்துடன் வாதாடிப் பேசி சண்டையிட்டுக் கொண்டு அறு வகைச் சமயத்தாரும் கைக்குத்துடன் வாதம் செய்து, ஒருவருக்கும் தெரிதற்கு அரிதான சத்தியப் பொருளை தரிசனம் செய்து, உன் திருவிளையாடல்களைப் பாடி, திக்குகள் தோறும் (உள்ள யாவருக்கும்) எடுத்து உபதேசிக்க, இனி மேல் நீ சற்று தயை கூர்ந்து, வெட்சி மாலை மணம் வீசும், சிறிய சதங்கை அணிந்துள்ள உன் அழகிய திருவடித் தாமரையை எனக்கு எப்போது தந்து அருள்வாய்? கனத்த பெரிய வயிற்றில் எள், பொரி, அப்பம், பழம், கிழங்கு, கரும்பு இவைகளையும், சர்க்கரை, தேங்காய், கடலை, கற்கண்டு இவைகளையும் வாரி உண்டு, பிட்டுடன் விழுங்கும் திரு வாயை உடையவர், சோற்றுத் திரளை உண்ணும் சிறந்த துதிக்கையை உடைய கற்பக விநாயகர் (கற்பகத்தரு போல கேட்டதைக் கொடுப்பவர்), முக்கண்ணர், விளங்கும் நமது வீரம் வாய்ந்த ஒற்றைக் கொம்பர், யானை முகத்தினர், அழகிய, பொலிவுள்ள (மத்தகத்தில்) புள்ளிகளை உடைய மலை போன்ற கணபதியைப் பெற்ற அந்தணி, (1+8) ஒன்பது கோணங்களை உடைய சக்ரத்தில் (நவாவரணத்தில்) வீற்றிருக்கும் பெண், கெளரி, செவ்விய அழகிய பட்டாலாகிய மேலாடை அணிந்துள்ள அந்தப் பெண், பழையவளும், அண்டங்களைப் பெற்றவளுமாகிய இளம் பெண், தன்னைப் பணிபவர்களுடைய பிறப்பு என்னும் அலை கடலை விலக்கி நிறுத்தும் பகவதி (பார்வதி), ஏகாம்பர நாதரைக் கணவராக அடைந்தவள் ஆகிய உமா தேவிக்குப் பக்கத்தில் அமர்ந்து, வரத்தைப் பெற்று, காஞ்சீபுரத்தில் நின்றருளும் பெருமாளே.
சங்கடப்பட்டு, தேவ, மனித, நரக, விலங்கு என்ற நால்வகை கதிகளிலும் முழுவதுமாக அலைந்து திரிந்து பல பிறவியிலும் தடுமாற்றம் அடைந்து சுழல்கின்ற என்னை சிறிதாவது கவனித்துக்கொள்ள நினைத்தலாகாதோ? வட்டமாகிய என் இதயகமல பீடத்தின் மேலே வைத்துப் பூஜிக்கத்தக்க திருவடிகளை உடையவனே, துன்பமுறும் சமயத்தில் வந்து அருள் புரிபவனே, காஞ்சீபுரத்தில் வீற்றிருக்கும் அழகிய பெருமாளே.
வினையின் காரணமாக நேர்ந்த இந்தப் பிறப்பு தொலைவதற்கு ஒரு வழியும் தெரியாமல் இளைத்துத் தடுமாறுபவரும், குழப்பத்தை விளைவிக்கும் பொல்லாத குணமுடையவருமான சமயவாதிகளின் பலவிதமான சாஸ்திர நூல்களில் சொல்லப்பட்ட அனேக மாறுபாடுகள் கொண்டதும், பொருந்தாததுமான மன உணர்ச்சிக்கு எட்டாததான, மெளனநிலை, நிறைவு இவற்றைக் கொண்டதான, உண்மை ஒளியை நான் இறப்பின்றி விளங்குவதற்காக உபதேசித்து அருள்வாயாக. தருமன், வீமன், அர்ச்சுனன், நகுலன், சகாதேவன் ஆகிய ஐவர்க்கும் பாதுகாப்பு அளிப்பவனாகி, போர்க்களத்தில் வெற்றிச் சங்கை (பாஞ்சஜன்யத்தை) ஊதி, நாள் ஒரு பதினெட்டில் நிகழும் போரில் குருக்ஷேத்திரம் பாழ்நிலமாக, தனது திருவுள்ளம் கோணாது நெறிமுறையில் நிற்கவும், கெளரவ அரசர்கள் யாவரும் இறந்து படவும், (அர்ச்சுனனின்) விளக்கமுற்ற தேரைச் செலுத்திய அச்சுதனின் (திருமாலின்) மருகனே, குமாரஸ்வாமியே, காஞ்சீபுரத்துப் பெருமாளே.
அழியக் கூடிய இந்த உடல் என்றும் நிலைத்து இருக்கச் செய்ய, மூக்கை அடைத்து மூச்சு ஓடாத வகையை அப்யசித்து, வீணாக நிரம்ப மூலிகைகளை உண்டு, வாடுகின்ற, அலுப்பும் மூடத்தனமும் உள்ள யோகியாக ஆகாமல், மும்மலங்களினாலும் மாயையினாலும் தோன்றுகின்ற காரியங்களையும் வேதனைகளையும் ஒழித்து, அறிவும், ஆசாரமும், முயற்சியும் உடையவனாக ஆகி, யான் வேறு, எனது உடல் வேறு, இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள யாவுமே வேறு என்ற பற்றற்ற நிலையினால் அடையக் கூடியதும், நிகழ்ச்சிகளைக் காட்டும் இந்த மனதுக்கு எட்டாததாய் விளங்குவதும் ஆன சிவ ஸ்வரூப மஹா யோகி என யான் ஆகுமாறு என்னை ஆண்டருள்வாயாக. ஒலி தரும் இசையுடன் கூடிய புல்லாங்குழலை ஊதுபவனும், ஆயிரம் நாமங்கள் கொண்டவனும், நந்தகோபனின் மகனுமான திருமாலின் அன்பு மாறுபடாத மருமகனே, தேவர் உலகம் என்ற கப்பலைக் காப்பாற்றிய மாலுமியே, சகல லோகங்களையும் பாலித்து அருளும் அரசனே, அப்பொழுதுதான் தொடுக்கப் பெற்ற கடப்ப மலர்மாலையனே, வேல் வீரனே, வயலூரானே, மனிதர்கள் முதல் சகல ஜீவராசிகளும் உள்ள சோழநாடு தழைத்திட வரும் காவேரியின் பெரும் வெள்ள நீர் அலைகள் மோதும், நறுமணம் கமழும் சோலைகள் சூழும் திருவானைக்காவை மேவியவனே, சகல லோகங்களை ஆள்பவர்களும் மதித்திடும் தெய்வமே, எல்லாத் தேவர்களுக்கும் பெருமாளே.
ஓம் என்று ஒலிக்கும் வேதங்களால் பேசப்பெறும் ஒப்பற்ற ஒன்று அது. பிரம்மாந்தரத்திற்கும் அப்பாலுள்ள மேலைப் பெருவெளியில் ஒளிர்கின்ற அருட்பெருஞ் ஜோதி அது. நூல்களில் சொல்லப்படும் சரியை, கிரியை, யோகம் என்ற மூன்று வழிகளை அநுசரித்தவர்களாலும் சொல்லுதற்கு அரியதாகிய துரிய நிலையைக் கடந்தது அது. உணர்வு மயமாகிய அருவம், உருவம் என்ற இரண்டு நிலையிலும், உலகம், உயிர், உடம்பு இவற்றோடு முழுவதாகக் கலந்தது அது. சிவஞானம் மிகுத்த தவசீலர்கள் கண்டுகொண்டது அது. மூலப்பொருளாக நிறைந்துள்ளதாய், குறைவேயின்றி நிற்பது அது. சாதி, குலம் முதலியன இல்லாதது அது. மேலும், அன்புள்ள அடியார்கள் கூறும் ஞான ஆகாயத்தைச் சார்ந்துள்ள அநுபவம் கொண்ட பெரியோர்கள் மனம் ஒடுங்கிப் பொருந்தியுள்ள உண்மையான மோக்ஷ வீட்டு இன்பமும் பரம ஆனந்தக்கடலும் போன்றது அது. (இத்தனை பெருமை வாய்ந்தது நின் கழல்). ஐந்து இந்திரியங்களினால் ஏற்படுகின்ற தாக ஆசைகள், மெலிவுகள் ஒழிய அருகில் வந்து அத்தகைய கழலினை நான் பெறும் பாக்கியம் உடையவனோ? பால குமாரா, குகனே, கந்தனே, கிரெளஞ்சமலையைப் பிளந்த வேலாயுதனே, மயில் வாகனனே, என்று சொல்லித் துதித்துக் கொண்டு வந்த வானத்து அமரர்களின் தலைவன் இந்திரனின் கொடும் துயரத்தைப் போக்கியவனே, வாசம் மிகுந்த சந்தனத்தையும், சிறந்த தூய்மையான மங்கலத்தையும், வீரத்திற்கு அறிகுறியான கடகத்தையும் அணிந்த புயங்களை உடையவனே, சிங்க ஏறு போன்ற அழகியவனே, வெற்றி மாலை சூடும், போர்க்களத்தில் சிறந்த வீர சிகாமணியே, வயலூரில் வாழ்பவனே, உலகங்களுக்குத் தலைவியும், இமவான் பெற்ற மின்னொளி போன்றவளும், நீல நிறமுடையவளும், பொன்னிறமுடன் கெளரி எனப்படுபவளும், பராசக்தியும், மங்கைப் பருவத்தாளும், குண்டலினி சக்தியாக விளங்குபவளும், என்றும் இனிய கனி போன்றவளும், எங்களுக்கு அருள் புரியும் அன்னையும், மூன்று உலகங்களையும் பெற்றெடுத்தவளும், நாத வடிவாக விளங்குபவளும், உலகெங்கும் பரவி நின்றவளும், ஆலிலை போன்று வயிறை உடையவளும், பசிய கரும்பு அனையவளும், வெள்ளை நாவல் மரத்தின் கீழ் வீற்றிருக்கும் அரசன் ஜம்புநாதனின் மனைவியும் ஆன வஞ்சிக்கொடி போன்ற உமாதேவி பெற்றருளிய பெருமாளே.
வேலைப் போன்று கூர்மையான கண் கொண்டு மயக்குபவர்கள், காமம், கோபம் இவைகளை உண்டு பண்ணும் துஷ்டப் பெண்கள், தெருக்களில் திரியும் பயனிலிகள், யானையைப் போல விளங்கும் மார்பகத்தை மேலே எதிர்த்துப் போர் செய்ய விடுகின்ற தந்திரவாதிகள், மார்பையும், தோளையும் அசைத்து நடப்பவர்கள், மன்மதனுக்கே ஆண்மைச் சக்தியைத் தருகின்ற சாமர்த்தியசாலிகள், மகிழ்ச்சி பொங்கும் சோலைக் குயில்கள் போன்ற பேச்சை உடையவர்கள், பொருள் இல்லாதவர்களைப் பக்குவமாக நீக்குபவர்கள், உடலின் தோலைப் பொடியால் பூசி மினுக்கி (கண்டோர்) மனதை உருக்குபவர்கள், யாரோடும் சிற்றின்ப சுகத்துக்காக படுக்கைக்கு அழைக்கும் கேடு கெட்டவர்கள், மோகானுபவத்தைத் தந்து இணைந்து மயங்க வைப்பவர்கள், இத்தகைய கொள்ளைக்காரிகளான விலைமாதருடைய துன்பம் தருவதான வலைக்குள் மாட்டிக்கொள்ளுதலை நீங்கேனோ? காலை நேரத்தில் குளித்து, கிழக்கு திசையை நோக்கி சூரிய பகவானே என்று துதிக்கும் நீர்க் கடன், காயத்திரி மந்திரம், அர்ச்சனை முதலியன செய்யும் முனிவர்கள் (வாழும்) காட்டில் ஆசிரமத்தில் மேன்மை வாய்ந்த யாக சாலையை (இடையூறின்றிக்) காக்கும் பொருட்டு, எதிர்த்து வந்த கொடியவளாகிய தாடகி என்னும் அரக்கியைக் கொன்ற கருணைக் கடலான திருமாலின் மருகனே, கரும்பாலைகளின் சாறு கொதித்து, வயலிடத்தே பாய்வதால், நெற் பயிர் செழுமையாக வளர்ந்து சுவை தருவதான அமுதம் ஆகின்ற, தேவர்கள் போற்றும் வயலூரில் வீற்றிருக்கும் வேலனே, சக்கரங்கள் கொண்ட தேர் வீதியில் வருகின்ற, உண்மை விளங்கும் திருநீறிட்டான் மதிள் சுற்றிலும் உள்ள, அழகிய திருவானைக்கா என்னும் தலத்தில் எழுந்தருளிய சிவபெருமான் விரும்பும் பெருமாளே.
குமரனே, குருமூர்த்தியே, நற்குணங்கள் நிறைந்தவனே, அசுரர்கள் என்னும் இருளை நீக்கும் சூரியனே, சரவணபவனே, இமயமலையின் மகளுக்கு மகனே, பகீரதியின் (கங்கையின்) மகனே, தேவர்களுக்குத் தலைவனான இந்திரனின் சிறந்த மகளான மான் போன்ற தேவயானையையும், வேடர் குலப் பெண்ணான வள்ளியையும் தழுவும் வலிமை வாய்ந்த தோள்களை உடைய முருகனே, அடைக்கலம் என்று கூறி மனம் உருகுதல் கொஞ்சமும் இல்லாத கொடுமையான வினைக்கு ஈடானவனை, வீணனை, முட்டாளை, மிகுந்த காமம் என்னும் நிலப் பிளப்பில் விழும்படித் தள்ளுகின்ற அழகு வாய்ந்த விலைமாதர்கள், வஞ்சகமாக, (வருபவருடைய) கைப் பொருள் கொடுத்த அளவுக்குத் தகுந்தபடி இன்பம் கொடுக்கின்ற சேர்க்கை என்னும் சேற்றில் சோர்வுறும் அறிவிலியாகிய என்னை, (என் குறைகளைக் கருதாது,) அன்புடன் ஆண்டருள, கருணைக்குப் பாத்திரமான அடியார் கூட்டத்துடன் திருவண்ணாமலையில் ஒரு முறை வேதங்கள் பக்கங்களில் முழங்க நடந்து வந்த, இரண்டு சிலம்பணிந்த தாமரை போன்ற திருவடிகளை, கனவிலும், விழித்துக் கொண்டிருக்கும் போதும் மறவேனே. ஒலி மிக்க அலைகளை வீசும் வளைந்த கடலின் உட்பாகங்கள் கலங்க அலைச்சல் உறவும், விஷத்தை ஆறு போலக் கக்கி உமிழும், விளக்கமான தோற்றத்தைக் கொண்ட கூட்டமான படங்களை உடைய, பாம்பு அரசனாகிய வாசுகி (கடலைக் கடையும்) நீண்ட கயிறாகவும், எல்லா உலகங்களும் நிலைபெறும்படி நிறுத்தி வைக்கப்பட்ட பொன்மயமான மேரு மலை (மத்தாகச்) சுழலவும், (கடைபவர்களின்) அனேக பல திருக்கர மலர்களும் தளர்ச்சி அடைய, இனியதான அமுதத்தை ஒப்பற்ற தனி முதல்வனாக நின்று கடைந்து, தேவர்கள் பசி நீங்க உதவி செய்த கருணை வாய்ந்த மேக வண்ணன், எல்லா உலகங்களையும் பாதத்தால் அளக்க வல்ல குட்டை வடிவுடைய வாமனன், அளந்த போது நீண்ட (திரிவிக்கிரம) உருவம் கொண்டவன், மதித்து எண்ணுதற்கு அரியவன் (ஆகிய அத்தகைய திருமாலுக்கு) மருகனே, பாம்பை அணிகலனாகக் கொண்ட தூய்மையான சிவபெருமானும் துதிக்கும்படி, உனது குதலைச் சொல்லால் அவர் தெளிவு பெறும்படி, ஒளி மயமான அறிவை அறிவது தான் பொருள் ஆகும் என்று அவருக்கு உணர்த்தி அருளிய பெருமாளே.
பனிக்கு அரசனாகிய சந்திரன் வீசுகின்ற நெருப்புக் கதிர்களாலே, மெல்லிய தென்றல் காற்றும், ஊர்ப் பெண்களின் ஏச்சும் வருத்துகின்ற தன்மையாலே, காமப்போருக்கு என்றே மன்மதன் தொடுக்கும் மலர்ப் பாணங்களாலே, உன்னைப் பிரிந்து தனியே தவிக்கும் மான் போன்ற இப்பெண் உயிர் சோர்ந்து போகாமல் இருக்க ஏதேனும் ஒரு வழி கூறி அருள்வாயாக. குமரா, முருகா, சடைமுடிப் பெருமான் சிவனுடைய குருநாதனே, குறமகள் வள்ளியின் ஆசையை அணைத்துத் தணிக்கும் திருமார்பா, தேவலோக வாழ்க்கையை அன்று அமரர்களுக்கு அருளியவனே, திருவண்ணாமலை வீதியில் வீற்றிருக்கும் பெருமாளே.
நல்வினை, தீவினை இரண்டுமே அஞ்சி ஒழிய, மலக் கூட்டங்கள் (மாசுகள்) மங்கி அழிய, அஞ்ஞானமும், நோய்களும் அகல, நீ மயில் வாகனத்தில் ஏறிவந்து, அருள் வாக்குகளும், அன்பான மொழிகளும் கூற, உன் கடப்பமலரின் உயிர்தரு மருந்தாம் தேனைச்சுற்றி வண்டுகள் ரீங்காரம் செய்து முரல, யானைமுகன் கணபதி என் தம்பியே, முருகா என்றழைக்க, தேவர்கள் மகிழ்ந்து மலர் மாரி பொழிய, என் முன்னே கருணை மிகக் காட்டி மலர்ந்த முகத்தோடு வேகமாக நடனம் செய்தவாறு வந்து அருள் புரியவேண்டும். திரிபுரம் அழியவும், மன்மதனின் உடல் எரியவும், விளங்கும் புன்சிரிப்பைச் சிரித்தே எரித்த ரிஷப வாகனம் ஏறும் சிவபெருமான் பரவெளியில் திருவருளோடு வீற்றிருந்து, விளங்க நடனம் செய்து, எம்மைப் பெற்ற தேவியை இடது பாகத்தில் ஏற்றுக்கொண்டு, மழு ஆயுதத்தை ஏந்திய எம் தந்தை மாசற்றவன் மகிழ்ச்சியடைந்த குருநாதனே, திருஅண்ணாமலைக் குன்றிலே மகிழும் குறமங்கையின் மலர்ப்படுக்கையிலே மனமகிழும் பெருமாளே.
(மாதரின்) ராக ஜாலங்கள் காட்டக்கூடிய மெச்சத்தக்க குரலின் இனிமையிலும், வகிடு எடுத்த, கரிய நிறமுள்ள, வாரி முடிக்கப்பட்ட கூந்தலினாலும், மயங்கி நீதியற்ற அக்ரமங்களைச் செய்து நான் திரியாதிருக்க, நீ மயில் மீது ஏறி மனது வைத்து வரவேண்டுகிறேன். சூதான எண்ணங்கள் நிறைந்த சூரர்கள் பயப்படும்படி போர் செய்த சூரனே, (சோணகிரி) திருவண்ணாமலையில் வாழும் குமரேசனே, ஆதிதேவர் சிவனது காதில் ஒப்பற்ற பிரணவச்சொல்லை ஓதியவனே, யானைமுகக் கணபதிக்கு கனிஷ்ட (தம்பியான) பெருமாளே.
சிவம் என்கின்ற தலைவியுடன் இன்ப நுகர்ச்சி கொண்டவனாக, சிவஞானம் என்ற அமுதத்தை உண்டு அதனால் அறிவுப் பசி தீர்ந்து, விளங்கும் தலைவன் - தலைவி என்ற ஈருருவமும் ஒரே உருவமாய் எட்டுத் திசையிலுள்ளவர் சுகித்து உணர்பவன் இவன்தான் என்று திருமால், பிரமன், தேவர்கள் அனைவரும் கூறி, இவன் இளையவன் (முருகன்) என வியந்து கூற, வேதமும் அவ்வாறே என்று ஆமோதித்துக் கூற, சிவபிரானிடத்தில் வேண்டி, யான் (உன்னைப் போல்) விளையாடுவதற்காக அழகிய வேலும் மயிலும் தந்தருள்வாயாக. மிகவும் உலகங்கள் யாவும் இது முறையாகுமா என்று ஓலமிட, நெருப்பை வீசும் வேலுடன் சென்று அசுரர்களின் தலைகள் பொடிபடும்படி, ஏழு கடல்களும் தூள்படும்படி, சிறந்த தவத்தினர் வாழ்வுறுமாறு அந்த வேலைச் செலுத்தியவனே, மனம் கவரும் மலரின் அழகுடையவளும், குறப்பெண்ணும் ஆகிய வள்ளியிடம் ஆசை கொள்வது உன் கடமை என்று அவளை அணைந்த மார்பனே, கடைப்பட்டவனாகிய என் துன்பம் தூள்படவும், என் நோய் தொலையவும் (அருளி), அக்கினிப் பெருமலையாம் திருவண்ணாமலையில் வீற்றிருக்கும் பெருமாளே.
அஜயஜெய அருணாசலா, சிவயநம,1 அஜயஜெய அருணாசலா, மசிவயந,2 அஜயஜெய அருணாசலா, நமசிவய3, மூலப் பொருளே, அஜயஜெய அருணாசலா, யநமசிவ4, அஜயஜெய அருணாசலா, வயநமசி5, அஜயஜெய அருணாசலா, சிவயநமஸ்த்து6 என்று மாறி மாறிச் செபித்து, ஜெயஜெய என்று கூறி அருணாசலத்தில் கண்ணை வைத்து, ஹர ஹர திருவடி மலையே (சிவ மலையே) என்று கூறித் தியானித்து, ஜெய ஜெய என்னும் இந்த மந்திரம் எங்கள் குரு தந்த பாக்கியம் என்று என் உள்ளம் பொருந்தி, பேரொளியாக விளங்கும் திருவடியை சிவசிவ திருவடி மலையே ஜெயஜெய எனப் புகழ்ந்து, திருவடி (சிவமலை) யின் மீது வீழ்ந்து தொழுது போற்றிய இன்பம் பெருக அந்தத் திருவடியின் (ஆண்டவனது) சிவ மந்திரமாகிய பாற்கடலில் இருந்து கிடைத்த அமுதம்போன்ற இன்பரசத்தைப் பருகி மகிழேனோ? ஜெய ஜெய திருவடி மலையே என்று முனிவர்களின் கூட்டங்கள் இத் திருமலை வினையினின்றும் நம்மைக் காத்திடும் என்று கூடிப் பொருந்திட, தங்கள் உடலையும் முடியையும் கிரெளஞ்சம், ஏழு குலகிரிகள் என்னும் மலைகள் காப்பாற்றுவதாக நினைத்த அசுரர்கள் மடிந்து விழச்செய்து சுட்டெரித்த வேலாயுதனே, திருமுடியையும் திருவடியையும் கண்டு பிடியுங்கள் எனக் கூறி திருமால், பிரமன் ஆகிய இருவருக்கும் அடியும் முடியும் தெரியாதவண்ணம் நின்ற செந்நிறச் சிவ சுடராகிய நெருப்புக் கண்ணை உடைய சிவபெருமானுடைய இரண்டு காதுகளிலும் (பிரணவ மந்திரத்தை) உபதேசம் செய்தவனே, ஜெயஜெய திருவடி மலையே (சிவமலையே) எனத் துதிக்கின்ற அடியேனுக்கு, எனது (நல்வினை, தீவினை ஆகிய) இரு வினைகளையும் பொடியாக்கிய ஒளி வெளியில் திருநடனம் இதோ பார்ப்பாயாக எனக் கூறி மகிழ்ந்திடும் அழகிய குரு நாதனே, விளங்கும் கிளி மொழி போலவும், பாலின் சுவை போலவும், வாயிதழின் ஊறல் அமுதம் போலவும் அமைந்த குறப் பெண்ணாகிய வள்ளியின் மார்பின் மீது உள்ள புது மணத்தைச் சுகித்து, சிவ மலையாகிய அருணாசலத் தலத்தில் மகிழ்கின்ற அழகிய பெருமாளே.
தான தத்த தந்த தான தத்த தந்த தான தத்த தந்த ...... தனதான
தோத கப்பெ ரும்ப யோத ரத்தி யங்கு தோகை யர்க்கு நெஞ்ச ...... மழியாதே சூலை வெப்ப டர்ந்த வாத பித்த மென்று சூழ்பி ணிக்க ணங்க ...... ளணுகாதே பாத கச்ச மன்தன் மேதி யிற்பு குந்து பாசம் விட்டெ றிந்து ...... பிடியாதே பாவ லற்கி ரங்கி நாவ லர்க்கி சைந்த பாடல் மிக்க செஞ்சொல் ...... தரவேணும் வேத மிக்க விந்து நாத மெய்க்க டம்ப வீர பத்ர கந்த ...... முருகோனே மேரு வைப்பி ளந்து சூர னைக்க டிந்து வேலை யிற்றொ ளைந்த ...... கதிர்வேலா கோதை பொற்கு றிஞ்சி மாது கச்ச ணிந்த கோம ளக்கு ரும்பை ...... புணர்வோனே கோல முற்றி லங்கு சோண வெற்பு யர்ந்த கோபு ரத்த மர்ந்த ...... பெருமாளே.
மன நோயைத் தரும் பெரிய மார்பகங்களைக் கொண்டு நடமாடும் விலைமாதர்கள் பொருட்டு என் மனம் அழிவுறாமல், சூலை என்னும் கொடிய வயிற்று நோய், சுரம், மிக்க வாத நோய், பித்த நோய் என்னும் பெயருடன் சூழ்கின்ற நோய்க் கூட்டங்கள் என்னைப் பீடிக்காமல், பாதகனாகிய யமன் தன் எருமைக் கடா வாகனத்தின் மீது வந்து என்னைப் பாசக் கயிற்றை வீசி என்னுயிரைப் பிடியாமல், நக்கீரருக்கு இரக்கம் காட்டிய தேவனே, புலவர்கள் பாராட்டும் நல்ல பாடல்களையும், செவ்விய சொற்களையும் எனக்குத் தந்து அருள வேண்டும். வேதங்களால் பாராட்டப்பட்ட விந்து, நாதம் (லிங்கம், சிவசக்திப் பீடம்) எனப்படும் மூலப் பொருளே, கடம்ப மாலை அணிந்தவனே, வீரனே, அழகனே, கந்தனே, முருகோனே, மேருவைப் போன்ற கிரெளஞ்சத்தைப் பிளந்து, சூரனை அழித்து, கடலில் குளித்தெழுந்த ஒளி வீசும் வேலாயுதனே, அழகிய குறிஞ்சிநிலப் பெண்ணாகிய வள்ளியின் கச்சணிந்த இளம் குரும்பை போன்ற மார்பகங்களை அணைந்தவனே, அழகு நிறைந்து விளங்கும் சோணகிரி என்னும் திரு அண்ணாமலையில் உயர்ந்த கோபுரத்தின் மீது வீற்றிருக்கும் பெருமாளே.
துர்க்குணம் படைத்த தந்திரசாலியான என்னை, வேதாளமே உருவெடுத்தது போன்ற உருவத்தினனான என்னை, முட்டாளும் குணம் கெட்டவனுமான என்னை, ஆசாரக் குறைவுபட்டவனான என்னை, கதியற்றவனை, மலை வேடனைப் போன்ற என்னை, வீம்பு பேசும் வாயையுடைய என்னை, ஐம்பூதங்களின் சேர்க்கையான பயனற்ற உடலை உடைய என்னை, மூடர்களுக்குள் தலைமையான மூடனாகிய என்னை, அழிந்து போகும் கருவில் வந்த வீணருள் தலையான வீணனை, அழுகிப் போனஅவிந்து போன பண்டமாகிய என்னை, அறுசுவை உணவை விரும்பி உண்ணும் என்னை, அன்பில்லாமல் கபடமே குடிகொண்ட நெஞ்சினனான என்னை, உன்மத்தம் கொண்ட என்னை, பலவித மனவிகாரங்களுள்ள என்னை, கோபியை, மிகுந்த மூதேவித்தனம் உடைய சனியனை, ஆண்மையற்றவனாகிய என்னை, நிலையற்ற வாழ்வு வாழும் என்னை, வீணாகி விழும் பெருங்குடியனாகிய என்னை, நல்ல நெறி உரைகளை விரும்பாத மனிதப்பதர் போன்ற என்னை, இடிபோன்ற குரலனை, மகா பாதகனை, கதியேதும் அற்ற என்னை, இத்தகைய நாயினும் கீழான என்னை நீ ஆண்டருளும் நாள் உண்டோ? மணிமுடிகள் அழகாக உள்ள பாதாளலோகனாகிய ஆதிசேஷனும், பச்சை நிறம் உடல் முழுதும் உள்ள சர்ப்பராஜன் பதஞ்சலியும், மநு நீதியுடன் ஆளும் சோழநாட்டரசர் தலைவன்அநபாயனுடன் தேவர்கள் புடைசூழ வரும் இந்திரனும், புகழ்கின்ற புலியூர் சிதம்பரத்தில் வாழ்கின்ற சபாநாயகர் நடராஜரும் அவர் அருகில் இளமயில் போல நிற்கின்ற சிவகாமசுந்தரியும் மகிழ்ச்சி அடைய வானில் உள்ள தேவர்களுக்கெல்லாம் தலைவனாக விளங்கும், மலைமகள் பார்வதி பெற்ற செல்வமே, மனத்துக்கு இனியவனே, பொன்னம்பலத்தில் நடனமாடும் சிவசிவ ஹரஹர தேவா, போற்றி, போற்றி, கண்டு களிக்க வேண்டிய மேலான கதிப் பொருளானாய், போற்றி, போற்றி, எல்லாத் திசைகளிலும், இசைகளிலும் வாழ்பவனே, போற்றி, போற்றி, இனிய சொற்களையே பேசுகின்ற வள்ளிநாயகியின் இன்ப மணவாளனே, போற்றி, போற்றி, திரிபுரத்தை எரித்த தலைவனே, போற்றி, போற்றி, ஜெயஜெய ஹரஹர தேவா, தேவர் தலைவர்களுக்குத் தம்பிரானே.
வாதம் பித்தம் மிகுதியால் ஏற்படும் நோய்கள், வயிற்று உளைவு, சிலந்தி, கல் போன்ற ஒரு வகைப் புண் கட்டி, கோழை நோய், குத்திருமல், கண்ட மாலை, புற்றுநோய், (உடல், மனம்) தடுமாற்றம், பல விதமான ஜன்னி நோய் இவற்றுடன் மாலைக்கண், அழுக்கு அடைவதால் வரும் குருடு, காது அடைப்பினால் வரும் செவிட்டுத் தன்மை, ஊமை, கெட்ட வலிப்புகள், மூல நோய் (ஆகிய நோய்கள்) காய்த்து முதிர்ந்த மரம்போன்றது இந்த உடல், முறையாகப் பொருந்திய தொண்ணூற்றாறு தத்துவங்கள் இடம்பெறுகின்ற உடல், வேதத்தின் வித்தாகிய இறைவன் பல திருக்கோலத்தைப் பூண்டு விளையாட்டாக ஆட்டுவிக்கின்ற கடலிடைத் தோணிபோல அலைப்புறும் உடல், சூழ்கின்ற பலவிதமான வேடங்களைப் பூண்டு பொருளாசை கொண்டு திரிகின்ற, விஷம் போன்ற அழி செயலாலே, வீடு கட்டி, அதனுள் காம மயக்க ஆசையில் பட்டு வீழ்ந்து, (உள்ளோசையாகிய) நாதம் அழிந்து, நான் இறந்து படாமல் முக்தியை அடையுமாறு வீட்டை அளித்து, நீ மயில் மீது நடனம் செய்கின்ற வெட்ட வெளியான பரமானந்த நிலையைப் பெற என் உள்ளம் தியானிக்காதோ? அலையோசை மிகுந்த கடல், மேகங்கள், (ஆதிசேஷனாகிய) பாம்பின் முடிகள் (இவை எல்லாம்) பொடிபட்டுக் கலங்க, சூரனும், அவனுடைய எழுகிரியும், அங்கிருந்த அசுரர்களோடு அழிந்து விழும்படி கடலில் செலுத்திய புகழ் மிக்க நெருப்புப்போன்ற வேலை உடையவனே, ஓம் நமசிவய என்னும் பிரணவத்தோடு கூடிய ஐந்தெழுத்துக்கு மூலப் பொருளாகிய கடவுள், தூய அடியார்களுக்கு உதவி செய்பவர், பச்சை நிறங் கொண்ட உமையை தமது ஒரு பாகத்தில் வைத்து அருள் சுரக்கும் சிகாமணித் தெய்வமாகிய சிவபெருமான் பெற்ற குழந்தையே, முதலில் தோன்றிய கற்பக விநாயகருக்குப் பின்னர் தோன்றிய அழகிய சரவண மூர்த்தியே, ஆதியாயுள்ள மூலமந்திரப் பொருளை ஓதுவிக்கும் தன்மை எவ்வண்ணம் என்று தெரிந்திருந்த தலைவனே, உன் காதலைப் பெற்ற குற மாதாகிய வள்ளியை நாள்தோறும் தினைப்புனத்துக்குச் சென்று பரிசுத்தமான வகையில் திருமணம் புரிந்து நல்ல புலியூர் (சிதம்பரம்) என்னும் தலத்தில் பொன்னும் பளிங்கும் போல அழகு வாய்ந்த கோபுரத்தில் மகிழ்ந்து மேவும் தம்பிரானே.
ஏழு கடல்களின் கரையிலுள்ள மணலையெல்லாம் எண்ணிப்பார்த்தால் வரும் அளவை விட அதிகம் என் துன்பம் நிறை பிறவிகள் என்ற அவதாரங்கள். இனி உனக்கே அடைக்கலமாம் என் உயிரும், உடலும். இனியும் பிறப்பெடுத்து உடலைவிட என்னால் முடியாது. கழுகும், நரியும், நெருப்பும், மண்ணும், யமனும், பிரம்மாவும், என்னுடலை பலமுறை பிரித்தும், பிறப்பித்தும் சோர்வடைந்து விட்டார்கள். என் கடமை இனி உன்னிடம் அடைக்கலம் புகுவதே ஆகும். யான் அடிமைசெய்வது உன்னிடம் அடிமை பூணுதற்கே ஆகும். நீ விரைவில் உன் திருவடிகளைத் தர வேண்டும். சிறந்து திகழும் அழகியும், பச்சை வடிவானவளும், பரிசுத்தமானவளுமான பார்வதி முன்பே ஈன்றருளிய முருகப் பெருமானே, விரிந்த பூமியானது பற்றி எரிய, கிரெளஞ்சகிரி நெரிந்து பொடிபட, வேகமாக வரவல்ல மயிலில் வருபவனே, ஏழு கடல்களும் கொந்தளிக்க அசுரர்களின் உயிரை உணவாகக் கொள்ளும் வேலினை ஆயுதமாகக் கொண்டவனே, தேவர்களும், முனிவர்களும் வணங்கித் துதித்த புலியூர் என்னும் சிதம்பரத்தில் நடனம் செய்கின்ற பெருமாளே.
மனமே, உனக்கு உறுதி தரக்கூடிய நன்மொழிகளைக் கூறுவேன், என் சமீபத்தில் வா, நான் சொல்லும் சொற்படி தவறாமல் நடப்பாயாக. மயிலை வாகனமாகக் கொண்ட தெய்வம், அடியவர்களுக்கெல்லாம் அரசர், மனம், மாயை என்பதெல்லாம் இல்லாத சுகத்தைத் தரும் இளம் குழந்தை. உனக்கு வேறு நினைவு எதற்கு? தேவலோகத்தையும், சிவலோகத்தையும் உனக்குத் தந்தருளி, மும்மலங்களில் (ஆணவம், கன்மம், மாயை) நிலைத்துள்ள வேர்களை அறுக்கவல்ல ஒளியுருவானவர், சங்க நிதி, பதுமநிதி, கற்பக மரம் போன்று அளிக்கவல்லவர், அவரே நமக்கு உறுதி, அவரே முழு முதற் கடவுள். நீதிமான், அத்தகைய பெருமானைத் தொழுது வழிபட்டு வருவாயாக. நமது உண்மையான சுற்றம் என்று சொல்லக் கூடிய ஒரே ஒருத்தியும், பேரழகுள்ளவளும், நலமும், சிறப்பும் உடைய வேதங்களுக்கு எட்டாதவளும், என்றும் இளையவளும், ஒருவிதத்திலும் தனக்குச் சமானம் இல்லாதவளும், உடையற்ற திகம்பரியும், என்னைப் பெற்றெடுத்தவளும், புகழ் பெற்ற கல்யாணியுமாகிய உமாதேவியை ஒரு பக்கத்தில் கொண்ட கொன்றை அணிந்த ஜடையுடைய எம் தந்தை சிவபெருமானின் குருநாதனே, முன்னவர்களாகிய அரி, அரன், அயன் ஆகிய மூவரும் துதி செய்து, மலர்களை மழைபோலத் தூவி வர, பழமை வாய்ந்த சூரன் முதலியவர்களின் சிரங்களைக் கொய்தறுத்த முருகனே, சர்க்கரைப் பாகு போன்ற மொழியும், முத்துப் போன்ற பற்களையும் உடைய, மயிலை ஒத்த சாயல் கொண்ட வள்ளிக்காக உள்ளம் உருகும் முருகனே, தமிழ் மணம் கமழும் புலியூர் என்ற சிதம்பரத்தில் உறையும் பெருமாளே.
சிரித்து, (மனத்தை) உருக்கி, விழிகளை விழித்து, அச்சத்தைத் தந்து, நடித்து, பல விதமாக அதிக மோக மயக்கத்தை ஊட்டுகின்ற சாமர்த்தியத்தைக் காட்டி, முகத்தை மினுக்கிக்கொண்டு, இதமாகவே அணைத்து, பேச்சினாலும் திகைப்பு உண்ட நிலையில், அவர்கள் கேட்டபடி கிடைத்த பொருளைக் கையில் சேகரித்துக்கொண்டு வரும்படி செய்கின்ற திருட்டுப் பெண்களின் மார்பகங்களான மயக்கம் தரும் காம வலையிலும், மிகுந்த காம சாத்திரச் செயல்களிலும் விழுவேனோ? பகைத்து வந்த அரக்கர்களின் தலைகளை அறுத்து, படர்ந்த கரு நிறம் கொண்ட மயிலின் மேல் ஏறி, செழுமையான திருக்கரங்களும், குணமான நறு மணம் கொண்ட பாதங்களும், விம்மிப் பெருத்த மார்பகங்களும் கொண்ட பெண்ணாகிய வள்ளியை, சிறப்பு மிக்க தினைப் புனத்தில் (வள்ளிமலையில்) வைத்து அணைத்து, வெள்ளி மலையாகிய கயிலைகிரியில் உறைகின்ற நாதனே, விரிந்துள்ள சடையில் கங்கை என்னும் ஒரு பெண் இருக்க, மானைக் கையில் ஏந்திய சிவபெருமானுக்கு (உரிய) பெருமாளே.
இந்தப் பூமண்டலத்தின் தனிப் பெரும் தலைவரும், சீர்காழிப்பதியில் அவதரித்தவருமான திருஞான சம்பந்த மூர்த்தியைப் போல இறப்பை நீக்கி மரணமிலா வாழ்வைத் தரவல்ல தேவாரப் பாடல்களைப் போன்று பாடுதற்கு இந்த அடிமைக்கும் திருவருள் புரிவாயாக. போரில் எதிர்த்து வந்த சூரன் மாண்டொழிய ஒப்பற்ற வேலாயுதத்தை ஏவி அருளியவனே, நமசிவய என்ற ஐந்தெழுத்தின் தத்துவமாகியவனே, வெள்ளியங்கிரியில் (கயிலைமலை) உள்ள பெருமாளே.
ஒரு பத்து, இருபது, அறுபது, ஆறு (10+20+60+6) ஆக தொண்ணூற்றாறு தத்துவங்களின் உண்மையை உணர்ந்து, உன் இரண்டு திருவடிகளையும் உள்ளத்தில் தியானித்து அதனால் உள்ளம் உருகிட, பூரண சந்திரனது தீப்போன்று ஒளி வீசும் பரவெளியின் ஒளியை யான் பெற்று அதோடு கலவாமல், வீதியிலே மரம் போல நின்று யாரோடும் பேசித் திரியும் தொழிலை யான் மேற்கொண்டு வீணாக அலையாது இருப்பதற்காக, லக்ஷ்மியின் மகள் வள்ளி தழுவிய திரண்ட தோள்களை உடையவனே, ஆறுமுகனே, உன் அருட்காட்சி பெற எனக்கு அருள் புரிவாயாக. அன்போடு நிவேதனம் செய்யப்பட்ட நல்ல பழங்களுடன், கடலை வகைகள், பயறு, சில பணியாரங்களை உண்ணும் பெரு வயிற்றை உடையவரும், பழமையான மொழியாகிய மஹாபாரதத்தை மேருமலையில் எழுதியவருமான கணபதிக்குத் தம்பியே, பெரிய கிரெளஞ்சமலையை ஊடுருவவும், உன் அடியவர்கள் உள்ளம் உருகிடவும், அடியார்களின் பிறவிநோய் தொலையவும் திருவருள் புரிகின்ற குமாரக் கடவுளே, பெண்யானைகளோடு ஆண்யானைகள் உலாவும், கலைமான்களின் கூட்டம் பெண்மான்களோடு விரும்பி அமரும் திருமலையாகிய ஸ்ரீசைலத்தில் உள்ள பெருமாளே.
சரவணபவனே, நிதியே, ஆறுமுகக் கடவுளே, குமரகுருபரனே, சரவணபவனே, நிதியே, ஆறுமுகக் கடவுளே, குமரகுருபரனே, சரவணபவனே, நிதியே, ஆறுமுகக் கடவுளே, குமரகுருபரனே, என்று பல முறை தமிழினில் ஓதிப் புகழ்ந்து உள்ளம் உருகுகின்ற உன் அடியார்களுக்கு உற்ற பிறப்பு, இறப்பு என்பவை நீங்கவும், சிவப்பேறு அடையவும், வினைகள் தருகின்ற நோய்கள் துள்ளி ஓடவும், வரத்தினை நீ எங்கள் உயிர் இன்பம் அடையுமாறு தந்தருள்வாயாக. கண்களினின்றும் பொழிகின்ற கருணையை உடையவனே, ஒப்பற்ற தனிப் பெரும் தலைவனென வந்த யானைமுகக் கணபதியை துணையாகக் கொண்ட இளையவனே, கவிதைகளாகிய அமுத மொழிகளை வழங்குபவருடைய உயிர் நற்கதியைப் பெறுமாறு அருள் புரியும் நேசம் உடையவனே, கடல் சூழ்ந்த இவ்வுலகில் உயிர்கள் படுகின்ற துன்பங்களும், கலக்கங்களும், இன்னும் இத்தகையதாக உள்ள வேதனைகள் நீங்கும்படியும், நிலைத்திருக்குமாறு நற்கதி பெறுதலையும், உனது திருவடி நிழல் அருளக்கூடிய ஒருநாள் எனக்கும் உண்டோ? திரிபுரங்களை எரித்த சிவபெருமான் பெற்றருளிய குமாரனே, திருப்போரூரிலும், திருத்தணிகையிலும், மிகவும் உயர்ந்த சிவகிரியிலும், திருவேங்கடத்திலும் உலவும் வடிவேலனே, நாள்தோறும் உன் புகழைக் கூறும் அடியார்களின் உள்ளக் கோவிலில் குடிகொண்டவனே, அருட்செல்வம், பொருட்செல்வம் ஆகிய இரண்டிலும் விளங்குபவனே, இருண்ட ஆணவ மலம் ஒழியுமாறு ஞானசூரியனாக வருகின்ற பெரும் செல்வமே, பாம்பணையில் துயில்பவரும், நரசிம்மருமாகிய நெடிய திருமாலின் மருகோனாக வரும் அதிசய மூர்த்தியே, மலத்தை நீக்குபவளும், மலம் அற்றவளும், பெரியவளும் ஆகிய உமாதேவி தந்தருளிய முருகக் கடவுளே, அதலம் விதலம் முதலிய ஏழு உலகங்களும் கிடுகிடுவென நடுநடுங்க வருகின்ற மயிலின் மீது இனிதாக ஒளி வீசுபவனே, ஆறுகோணச் சக்கரத்தின் மையத்தில் அழகுடன் அமர்கின்ற ஹர ஹர சிவ சிவ, பெருமாளே.
தாமரை இதழ் போன்ற கண்களாலும், முல்லை அரும்பை நிகர்த்த பற்களாலும், துயரத்தை அடையும்படி ஆசையைக் கடல் போலத் தருபவர்களும், அள்ளி எடுக்கலாம் போல இனிதாக அமைந்து நடு இரவு போன்று இருண்ட வினைகளை உடைய விலைமாதரும், அந்தச் செல்வம் மிகுந்த வீடும், மக்களாகிய இளைஞரும், அனைவருமே மெல்ல மெல்ல வேறாகும்படி, வலிய எருமையை வாகனமாகக் கொண்ட மாயக்கார யமனும் என்னை இகழ்ந்து, என் உயிரைக் கொள்ளை அடித்துக் கொண்டு போகும் அந்த நாளில் அடியேன் உய்யும் பொருட்டு ஒப்பற்ற உனது அழகிய திருவடியைத் தந்தருள்வாயாக. பழமையான வேதங்கள் தேடிப்பார்த்து காண முடியவில்லை என்று முறையிடுகின்ற சிவபிரானுக்கு உபதேச மொழியைச் சொல்லி அருளிய குருநாதனே, துள்ளி ஓடி விளையாடுகின்ற புள்ளிமான் வெட்கப்படும்படி அதனை இகழ்கிற வள்ளி வாழும் வள்ளிமலைக் காட்டிற்கு வலியச் சென்று வாழ்கின்றவனே, வலிமையான அசுரர்கள் மாளவும், நற்குணமுள்ள தேவர்கள் வாழவும், மிக விரைவாக கூரிய வேலைச் செலுத்தியவனே, வள்ளிக்கொடி படர்ந்திருக்கின்ற, சாரலுடன் கூடிய வள்ளிமலையில் எழுந்தருளியுள்ள வள்ளியின் மணவாளனே, பெருமாளே.
வேதகிரியாகிய திருக்கழுக்குன்றத்திலும், வள்ளிமலையில் உள்ள தினைப்புனத்திலும் விரும்பி இருக்கும் பேரழகு உடையவனே, வேடுவச்சி வள்ளியின் பாதத் தாமரையின் மீது வெட்சி மாலை அணிந்த உன் திருமுடி படும்படியாக காதலித்து, ஆட்கொள்ளும் வேளை இது என்று சமயத்தில் தினைப்புனத்துக்குள் புகுந்த பன்னிரு தோள்களை உடைய நண்பனே, ஆர்வத்துடன் நான் உன்னை அன்பு வழிபாடு செய்ய உரிய புத்தியை உபதேச மொழியாகச் சொல்லி அருள்வாயாக. வெகுண்டு வந்த வீரபத்திரரின் துணைவியான காளி நாணம் அடையும்படி தமது கிரீடத்தை வானில் முட்டும்படி உயரமாக வீசி விட்டு (ஊர்த்துவ தாண்டவம்) ஆடிய பாதத்தை உடைய பரமசிவன், பக்தியுள்ள தேவர்களுக்கு கற்பித்த நாதராகிய சிவபெருமான், உன்னிடம் பாடம் கேட்கவும், சிவனால் ஓதுவிக்கப்பட்ட பிரமன் வெட்கமடையவும், ஓரெழுத்தாகிய ஒப்பற்ற ஓம்கார ப்ரணவத்தில், ஆறெழுத்தாகிய ஓம்நமசிவாய அல்லது சரவணபவ மந்திரமே அடங்கியுள்ள தன்மையை விளக்கி அந்தச் சிவனுக்கே உபதேசித்த பெருமாளே.
நூல்களைக் கற்று கலையறிவால் காணமுடியாததும், பூஜை செய்து கிரியாமார்க்கத்தால் அடைதற்கு அரியதும், வாக்கினால் இத்தன்மைத்து எனப் பேசமுடியாததும், உள்ளத்தில் குற்றமுடையோருக்குத் தோன்றி விளங்காததுவும், அன்பு செய்தார் நெஞ்சினின்றும் நீங்காது நிற்பதுவும், மாயையினால் சூழமுடியாததும், விந்து (சக்தி) சுழல அதனின்று எழும் நாதம் (சிவம்) என்னும் ஓசைக்கு அப்பால் வெகு தூரத்தில் இருப்பதுவும், ஆகாயத்திற்கு முடிவிலே இருப்பதுவும், இவ்வுலகத்திற்கு ஆதியானதுவும் ஆகிய மெய்ப்பொருளை, உள்ளக் கண்களால் நாயேன் கண்டு, சிவயோகத்தை அடையுமாறு உண்மை அறிவை நீ உபதேசித்து அருள்வாய். இனி யான் இந்த உடம்பை வெறுத்து ஒதுக்காது மாயை வசப்படலாமோ? நீயே மிக விரும்பி, தினைப்புனம் காவல் செய்த வேட்டுவப் பெண் வள்ளிக்காக பெரிதும் மயங்கி, பொன் போல் ஒளிரும் அவள் பாதத்தில் வீழ்ந்து வணங்கிய கந்தக் கடவுளே. ஆரவாரித்து சேல்மீன்கள் பாய்ந்து விளையாடுகின்ற வயலூர் என்னும் திருத்தலத்தில் எழுந்தருளி, விஷம் நிறைந்த பாம்பை மாலையாகப் பூண்ட மயிலாகிய குதிரை மீது பவனிவரும் வீரனே, நாசியின் வழியாக பிராணவாயுவை வெளியேவிட்டு, மீண்டும் பூரகம் செய்து
அன்பினால் உன்னை உறுதியாக பல நாட்களாக விடாது பற்றிக்கொண்டு உயர்ந்த திருப்புகழைப் பாடி ஜீவன் முக்தனாகும் வழியிலே என்னை இடையறா இன்ப வாழ்வாம் சிவகதியை சேர்ந்து உய்வதற்கு திருவருள் புரிவாயாக உத்தம குணங்களைப் பற்றிக்கொண்டுள்ள நல்ல இயல்புள்ளவர்களின் நண்பனே சமானம் இல்லாத பெருமை பொருந்திய ரத்னகிரியில் வாழ்பவனே பேரறிவாளனே திருவருள் ஞானத்தைப் பதியச் செய்பவனே வெற்றியைத் தரும் வேலை ஆயுதமாகக் கொண்ட பெருமாளே.
சீரான கோல கால நவமணி மாலாபி ஷேக பார வெகுவித தேவாதி தேவர் சேவை செயுமுக ...... மலராறும் சீராடு வீர மாது மருவிய ஈராறு தோளு நீளும் வரியளி சீராக மோது நீப பரிமள ...... இருதாளும் ஆராத காதல் வேடர் மடமகள் ஜீமூத மூர்வ லாரி மடமகள் ஆதார பூத மாக வலமிட ...... முறைவாழ்வும் ஆராயு நீதி வேலு மயிலுமெய்ஞ் ஞானாபி ராம தாப வடிவமும் ஆபாத னேனு நாளு நினைவது ...... பெறவேணும் ஏராரு மாட கூட மதுரையில் மீதேறி மாறி யாடு மிறையவர் ஏழேழு பேர்கள் கூற வருபொரு ...... ளதிகாரம் ஈடாய வூமர் போல வணிகரி லூடாடி யால வாயில் விதிசெய்த லீலாவி சார தீர வரதர ...... குருநாதா கூராழி யால்முன் வீய நினைபவ னீடேறு மாறு பாநு மறைவுசெய் கோபால ராய னேய முளதிரு ...... மருகோனே கோடாம லார வார அலையெறி காவேரி யாறு பாயும் வயலியில் கோனாடு சூழ்வி ராலி மலையுறை ...... பெருமாளே.
வரிசையானதும், ஆடம்பரமுள்ள ஒன்பது மணிகள் பதிக்கப்பெற்ற பெருமை பொருந்திய கிரீடங்களின் கனத்தை உடையதும், பல வகையான தேவாதி தேவர்களெல்லாம் வணங்குவதுமான ஆறு திரு முகங்களையும், சிறப்பு உற்று ஓங்கும் வீர லக்ஷ்மி குடிகொண்டிருக்கும் பன்னிரு தோள்களையும், நீண்ட ரேகைகள் உள்ள வண்டுகள் ஸ்ரீராகம் என்னும் ராகத்தைப் பாடி ரீங்காரம் செய்யும் கடப்ப மலரின் மணம் வீசும் இரண்டு திருவடிகளையும், முடிவில்லாத ஆசையை உன் மீது கொண்ட வேடர்களின் இளம் மகளான வள்ளியும், மேகத்தை வாகனமாகக் கொண்ட இந்திரனுடைய அழகிய பெண்ணாகிய தேவயானையும், பக்தர்களின் பற்றுக் கோட்டின் இருப்பாக வலது பாகத்திலும், இடது பாகத்திலும் உறைகின்ற உனது திருக்கோல வாழ்க்கையையும், நன்கு ஆராய்ந்து நீதி செலுத்தும் உனது வேலையும் மயிலையும், ஞான ஸ்வரூபியான கீர்த்தி பெற்ற உனது பேரழகுடைய திருவுருவத்தையும், மிகக் கீழ்ப்பட்டவனாக நான் இருப்பினும், நாள் தோறும் (மேற்சொன்ன அனைத்தையும்) தியானம் செய்யும்படியான பேற்றைப் பெற வேண்டுகிறேன். அழகு நிறைந்த மாட கூடங்கள் உள்ள மதுரையில், வெள்ளி அம்பலத்தில் நடன மேடையில் கால் மாறி ஆடிய இறைவராகிய சிவ பெருமான் (இயற்றிய இறையனார் அகப் பொருள் என்ற நூலுக்கு), நாற்பத்தொன்பது சங்கப் புலவர்கள் பொருள் கூறிய பொருள் அதிகாரத்தின் உண்மைப் பொருள் இதுதான் என்று கூறுவதற்காக, தகுதி உள்ள ஊமைப் பிள்ளை போல செட்டி குலத்தில் தோன்றி விளையாடி, ஆலவாய் என்னும் மதுரையில் உண்மைப் பொருளை நிலை நிறுத்திக் காட்டிய திருவிளையாடலைப் புரிந்த தீரனே, வரங்களைக் கொடுப்பவனே, குரு நாதனே, முன்பு (பாரதப் போர் நடந்தபோது) இறந்து போவதற்கு எண்ணித் துணிந்த அர்ச்சுனன் உய்யுமாறு கூர்மையான சக்கரத்தால் சூரியனை மறைத்து வைத்த கோபாலர்களுக்கு அரசனாகிய கிருஷ்ணன் அன்பு வைத்த அழகிய மருகனே, தவறுதல் இன்றி பேரொலியுடன் அலைகளை வீசி வரும் காவேரி ஆறு பாய்கின்ற வயலூரிலும், கோனாடு என்னும் நாட்டுப் பகுதியில் உள்ள விராலி மலையிலும் வீற்றிருக்கும் பெருமாளே.
நோய் இல்லாததும், பழமையானதும், எல்லாவற்றிற்கும் மேலானதும், வரத்தைத் தருவதும், அழிவற்றதும், கவலை அற்றதும், முதன்மையான பேரொளியாக விளங்கி, ஆசையற்றதும், சிவத்தில் மகிழும் தவசிரேஷ்டர்கள் புகழ்வதுமாகி, ஆயுதமே இல்லாமல் (புன்னகையால்) திரிபுரத்தை எரித்த சிவன், திருமால், பிரமன், தேவலோகம், மண்ணுலகம், இயங்கியும் நிலைத்தும் இருக்கும் உயிர்கள், இந்த எல்லா உருவங்களிலும் கலந்த முழு முதற் பொருளாகிய முருகனைக் குறித்து தியானிக்காமல், பயனற்ற புகழைக் கொண்ட மற்றவருக்கு அடிமைப்பட்டு, முதலை போன்ற உள்ளத்தை உடையவரும் அலட்சிய சுபாவம் கொண்டவருமான பாவிகளை மண்ணாசை கொண்டு நான் சேரலாமோ? ரகுவின் மரபிலே வந்த இராம பிரான் முன்னொருநாளில் அழுகுரலுற்றவனும், இரவின் வண்ணமாகிய கரிய நிறம் படைத்தவனும் ஆகிய இராவணன் என்ற அரசன் அச்சப்பட்டு மாயும்படியாக வெற்றி கொண்ட அன்பு நிறைந்தவனாகிய திருமாலின் கண்ணையே மலராகக் கொண்டருளிய உண்மை வரலாற்றை உடைய சிவபெருமானின் திருக்குமரா, கலைகளுக்கு எல்லாம் தலைவனே, புகழப்படும் அந்த யானைமுகத்தோனுக்குத் தம்பியே, ஆசையே இல்லாதவனே, தேவர்களுக்கு அதிபதியே, போர் செய்யாமலேயே, தவறாமல், வெல்லவல்ல வீர வழியிலே மிக விருப்பம் உடையவனே, திருப்போரூரில் உறைபவனே, கலந்து விளங்கும் குராமரமும், அகில் மரமும் பருத்த அடிமரத்துடன் நன்கு முதிர்ந்து வளர்கின்ற விராலிமலையில் வாழ்கின்ற, அரசகுணம் படைத்த பெருமாளே.
அன்பாக வந்து உன்றாள் பணிந்து ஐம்பூத மொன்ற ...... நினையாமல் அன்பால் மிகுந்து நஞ்சாரு கண்க ளம்போரு கங்கள் ...... முலைதானும் கொந்தே மிகுந்து வண்டாடி நின்று கொண்டாடு கின்ற ...... குழலாரைக் கொண்டே நினைந்து மன்பேது மண்டி குன்றா மலைந்து ...... அலைவேனோ மன்றாடி தந்த மைந்தா மிகுந்த வம்பார் கடம்பை ...... யணிவோனே வந்தே பணிந்து நின்றார் பவங்கள் வம்பே தொலைந்த ...... வடிவேலா சென்றே யிடங்கள் கந்தா எனும்பொ செஞ்சேவல் கொண்டு ...... வரவேணும் செஞ்சாலி கஞ்ச மொன்றாய் வளர்ந்த செங்கோ டமர்ந்த ...... பெருமாளே.
அன்புடன் வந்து உன் பாதங்களைப் பணிந்து, பஞ்ச பூதங்களுடனும் ஒருவழிப்பட்டு உன்னை நினையாமல், அன்பு அதிகமாய்ப் போய், விஷம் நிறைந்த கண்களும், தாமரை மொட்டுப் போன்ற மார்பகங்களும், பூங்கொத்துக்கள் நிறைந்து வண்டுகள் விளையாடி மகிழ்கின்ற கூந்தலும் உடைய பொது மகளிரை மனதில் நினைத்தே, மிக்க அறியாமை பெருகி மனம் குன்றி ஒருவழிப்படாது அலைந்து திரிவேனோ? சபையில் நடனமாடும் சிவபிரான் தந்த குமரனே, மிக்க வாசனை நிறைந்த கடப்பமாலையை அணிபவனே, வந்து பணிந்து நின்ற அடியார்களின் பிறப்புக்களை அடியோடு தொலைக்கும் கூரிய வேலை உடையவனே, பல இடங்களுக்கும் சென்று கந்தா என அழைக்கும்போது செவ்விய சேவலை ஏந்தி என்முன் வரவேண்டும். செந்நெல் பயிரும் தாமரையும் ஒன்றாக வளரும் திருச்செங்கோட்டில் வீற்றிருக்கும் பெருமாளே.
பந்தாட்டம் விளையாடி அழகிய கை நொந்துள்ள பெண்கள் ஆசையோடு அணிந்த பசுமை வாய்ந்த பூ மாலையைச் சூடிய கூந்தலின் மீதும், அழகு நிறைந்த வண்டுகள் இசை பாடுகின்ற தாமரை போன்ற முகத்தின் மேலும், மந்தாரம் என்னும் செவ்வரத்தம் பூவின் வாசனையைக் கொண்ட சந்தனம், முத்து மாலை இவைகளை அணிந்தனவாய், கொடிய பாவங்களுக்கு இடமான மார்பகங்களின் மேலும், நிரம்ப ஆசை பூண்டு, ஆவி விண்டு உயிர் பிரிவது போல வருந்தி, நான் சோர்வு அடையாமல் உன்னுடைய திருவருளைத் தந்து அருள்வாய். கந்தனே, சிவபெருமானுடைய குமாரனே, விளங்குகின்ற கன்றுகளை உடைய பசுக்களுக்குப் பிரியமானவர் ஆகிய கண்ணனின் மருகனே, கோபித்து, மலையாகிய கிரெளஞ்சம் ஒன்றை வழி திறக்கச் செய்யுமாறு வேலைச் செலுத்திய வீரனே, தேவலோகப் பெண்ணான தேவயானையின் கணவனே, சிவந்த மகரந்தத் தூள் பொருந்திய பூங் கொத்துக்கள் அடர்ந்த கடப்ப மாலையை உறுதியுள்ள தோள்களில் மிகவும் விரும்பி அணிபவனே, வலிய குரங்குகள் கரடியுடன் தூங்குகின்ற திருச் செங்கோட்டில் வீற்றிருக்கும் பெருமாளே.
யமனுடைய ஊரை நெருங்காத வகைக்கும், இந்தப் பூமியில் மீண்டும் பிறவாத வகைக்கும், நற்குணம் வாய்ந்த அகத்திய முநிவருக்கு நீ அருளிய ஞானோபதேசம் என்ற தேன் போன்று இனிக்கும் நல்லமிர்தத்தை எனக்கும் தந்தருள்க. திருமாலுக்கும் பிரமனுக்கும் அரியவனே, சிறந்த தவசிரேஷ்டர்களை விட்டுப் பிரியாதவனே, நான்கு வேதங்களின் மறை பொருளாக உள்ளவனே, நாககிரியாகிய திருச்செங்கோட்டில் எழுந்தருளியுள்ள பெருமாளே.
மாலையை உடையவனே, இனிமையாக உரையாடுபவனே, உலகுக்கு ஆதாரமாக உள்ளவனே, நீர், மண் முதலிய ஐந்து பூதங்களுக்கும் ஈசனே, கொடை அளிக்கும் ஒழுக்கம் உள்ளவர்களால் தியானிக்கப் படுபவனே, பாவ நாசனே, பாசங்களில் பற்று வைத்ததின் அபராதமாக தெற்கில் உள்ள யமபுரியைச் சேர்ந்தவர்களிடையே, ஆராய்ச்சி இல்லாமல் ஆபத்தான நிலையை என்னுடைய உயிர் அடைதல் ஆகுமோ? என்னைக் காத்து அருள்வாய். கெட்டவனாகிய நான் நற் குணம் வாய்க்காமல் சுடுகாட்டைத் தீயைத் தாவிச் சேர்தல் நன்றோ? அன்பனே, அடியார்கள் விரும்புவதை அளிப்பவனே, நீண்ட நாக கிரி என்னும் திருச்செங்கோட்டில் வீற்றிருப்பவனே, எலும்பு மாலையை விளையாட்டாக அணியும் சிவனின் குழந்தையே, கடப்ப மாலை அணிந்தவனே, மிகுந்த விருப்பமுள்ள, பெருமை பொருந்திய மான் போன்ற வள்ளியின் தேன் கலந்த இனிய தினை மாவில் விருப்பம் உள்ளவனே, தகுதி வாய்ந்தவனே, ஒளி உள்ளவனே, உலகத்தோர் போற்றும் குழந்தையே, தலைவனே, பொலிவு உடையவனே, அரசனே, தேவனே, தேவர்களுடைய பெருமாளே.
அடியார் திருக்கூட்டத்தின் மீது அன்புள்ளவனே, நடனம் ஆடவல்ல மயிலை வாகனமாகக் கொண்டு உலவும் குகமூர்த்தியே, கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு ஆகிய நாலாதிசைகளிலும் உள்ள அன்பர்கள் இது அற்புதம் என வியந்து கொண்டாடும் அழகிய கவிபாடும் திறத்தின் ஒலி மிகுந்துள்ள திருப்புகழை ஓரளவுக்காவது நானும் சொல்லும்படியாக வைத்தும், அப்பாடல்கள் உலகெங்கும் பரவும்படியாகச் செய்தும், திருப்புகழில் உன்னைத் தரிசனம் செய்வித்த அருளை அடியேன் ஒரு நாளும் மறக்க மாட்டேன். கத்துகின்ற கிளிகள் களைத்து விழும்படி சுழற்றும் கவணில் கல்லை வைத்து எறிகின்ற, தினைப்புனத்தைக் காவல் செய்யக் கற்ற குறத்தி வள்ளியின் அழகிய நிறமுடைய கழுத்தினைக் கட்டி அணைத்த பன்னிரண்டு புயங்களை உடையவனே, பராசக்தியைப் பொருந்த தன் இடப்பக்கத்தில் வைத்த தந்தையாகிய சிவ பெருமானும் மெச்சும்படி வேத நூலின் மெய்ப்பொருள் பரம்பொருள் அனைத்தையும் உபதேசித்து விளக்கிய நாகமலையில் வாழும், தேவர்கள் போற்றும் பெருமாளே.
மனைவி நகைக்கவும், ஊரவர் யாவரும் நகைக்கவும், உலகத்திலுள்ள மாதர்களெல்லாம் நகைக்கவும், தந்தையும் சுற்றத்தாரும் உள்ளம் வெறுப்படையவும், என்னுடைய மனமும் மிகச் சலிப்படையவும், எல்லோரும் பழிமொழிகளை ஆராயாமல் கூறி, தினம்தோறும் என்னை அனைவரும் இகழவும், எண்ணமிடும் மனத்தில் இருள் மிகுந்து யோசித்துப் பார்த்தால் நான் பிறந்து பெற்ற பயன் இதுதானோ என்று நானும் நாள்தோறும் நினைத்து கடைசியில் உடலினின்றும் உயிரை விடத் துணிந்த சமயத்தில் என்னருகே வந்து முன்பு நீ அளித்த பாத தீக்ஷையை இப்போதும் அருள்வாயாக. தனதன தனத்த தான என்ற தாளத்தில் முரசு ஒலிக்க, வீணை, உடுக்கை, வேத கோஷங்கள் இவையாவும் அலைமோதுவது போலப் பெருக, மின்னல் போன்ற ஒளிவிடும் வேலாயுதத்தை வீசி அசுரர்கள் மாயும்படி போர்க்களத்தில் செலுத்திய ஜோதி முருகனே, என் மனத்தை உருக்கி, யோக அநுபூதியை அளித்த திருவடிகளை உடையவனே, எழுதுதற்கு அரியதான மரகதப் பச்சை மேனியள் உமாதேவியின் பாலனே, தேவர்கள் துதிக்க ஞானமலையில் வீற்றிருக்கும் குறத்தி வள்ளியின் மணவாளனே, விளங்குகின்ற இந்திராணியின் மகள் தேவயானை விரும்பும் பெருமாளே.
ஐந்து கரங்களை உடைய விநாயகரைப் போன்ற மனமும் (மனோவேகத்துக்கு விநாயகர் அகிலத்தையும் எளிதாக வலம் வந்த வேகத்தைத் தான் ஒப்பிட முடியும்) ஐந்து புலன்களாகிய சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் ஆகியவற்றை விலக்கி, அடக்கி இடைவிடாமல் வளரும் இரவு, பகல், இவை இல்லாமல் போகும் நினைவினை அருள் புரிவாயாக. இந்தப் பூமியில் பெருகி வளரும் செந்தமிழால் போற்றி, உன்னை அன்புடனே துதிக்க மன நிலையை அருள் புரிவாயாக. நிலைபெற்ற தவநிலை உணர்ச்சியைக் கொடுத்து உந்தன் அடிமையாகிய நான் முக்திநிலை பெறவேண்டி சந்திர வெளியைக் காணும்படியான யோகநிலை மார்க்கத்தைக் காட்டி அருள் புரிவாயாக. பல்லக்கு, பெருமை, கெளரவம் இவைகளை எட்டு திக்கிலும் உள்ளோரெல்லாம் மதிக்கும்படியாக ஓங்கும் சிறப்பு வகையில் அருள்வாயாக மாதர்கள் தரும் இன்பமே மிக்க இனிமையான சுகம் என்றிருந்த என் மனம் உன்னையே நினைத்த நிலையாய் அமைதிபெற அருள்வாயாக நாட்டுக் காவலர்கள் இரவும் பகலும் மக்களை சுபமாக காக்கும் முறைகளை அறியவேண்டி என்னை வந்தடைந்து கேட்க, அவர்களுக்கு அருளும் புத்தியினை நீ எனக்கு அருள்வாயாக. கொங்கு நாட்டில் உயிர் மீளப்பெற்று வளர்ந்த தென்கரை நாட்டில் (திருப்புக்கொளியூரில்) (அவிநாசி என்னும்) சிவபெருமான் அருள்பெற்று ( முதலை உண்ட பாலனது உடலில் மீண்டும் உயிர் பொருந்திய) ரகசியப் பொருளை எனக்கு அருள் புரிவாயாக. யானைமுகப் பெருமானுக்கு இளையவனாம் கந்தன் என்ற வெற்றிப் புகழ் பெற்ற கொங்கணகிரி என்னும் மலையில் வீற்றிருக்கும் பெருமாளே.
இரவில் தோன்றும் மின்னல் நிலைக்கும் நேரம்கூட நிலைக்காத இந்த உடல் வெறும் மாயை. கல் நிறைந்த அந்த மாய வாழ்க்கை வழியில் என் ஒழுக்க நெறியும் அடியேனும் நிலைகுலையலாமோ? தம் வீரதீரத்தைச் சொல்லிக்கொண்டு எதிர்த்த பெரும்சூரர் அழிய, அவர்கள் ஊர் பாழ்பட செலுத்திய வேலாயுதனே, கொடிபோன்ற தேவிமார் (வள்ளி, தேவயானை) இருபுறமும் ஆக வள்ளியூரில் குடிகொண்ட பெருமாளே.
லக்ஷ்மிதேவி விளையாடும் இரண்டு புயங்களும் உடைய திருமாலின் அழகிய மருகன் என்ற திருநாமத்தைக் கொண்ட பெருமான் நீதான். மண்ணுலகிலும் விண்ணுலகிலும் மிகவும் போற்றிப் புகழும் (தேவாரப்) பாடல்களை அளித்தருளிய (ஞானசம்பந்த) குமாரப்பெருமான் நீதான். வணங்கும் அடியார்களின் மனதிலே விளையாடும் பச்சை மயில் ஏறும் பெருமான் நீதான். மணியையும் முத்தையும் வீசி அழகிய அருவி சூழ்ந்து விளங்கும் கதிர்காமத் தலத்துப் பெருமான் நீதான். பெருமலைகள் பொடிபட, அசுரர்கள் இறக்க போர் புரிந்த வீரப் பெருமான் நீதான். பாம்பு நிலவு, கங்கை நீர் இவை கலந்த சடையுடைய பரிசுத்தமான சிவனுக்கு குருநாதப்பெருமான் நீதான். நல்வினை தீவினை என்பதே இல்லாதவர்களும் கற்பகத் தருவை விட்டு நீங்காதவர்களுமான தேவர்களின் குலத்துக்கு அரசன் தேவேந்திரனுக்கும் பெருமான் நீதான். விளங்கும் வில் ஏந்திய வேடர்குலக் கொடி வள்ளியின் அதிக பாரமான இரு மார்பிலும் களிக்கும் பெருமாளே.
உடுப்பதற்கு உடைகள் வேண்டும். பெரும் பசியைத் தணிக்க உயர்ந்த சுவைநீர் வேண்டும். தேகம் நல்ல ஒளிவீசும் பொருட்டு நீரும் பட்டாடையும் வேண்டும். உடல் நோயை அகற்ற மருந்துகள் வேண்டும். வீட்டுக்குள் இருக்க இளமையான மனைவி வேண்டும். படுத்துக்கொள்ள ஒரு தனி வீடும் வேண்டும். இத்தனை நலன்கள் யாவும் எனக்குக் கிடைக்கப் பெற்று குடும்பத்தனாகி, அந்த வாழ்வு என்ற மயக்கக் கடலில் மூழ்கி, பெரிய சுற்றத்தார் கூட்டத்தைக் காப்பாற்றுபவனாகி முடிவில் என்னுயிர் வீணாகக் கழிந்து விடும். கருணை உள்ளத்தையும் சிவஞான போதத்தையும் நீ என்னைக் கூப்பிட்டு வைத்துத் தந்தருள வேண்டும். ஊழ்வினையால் வரும் பிறவி என்ற மலைச் சூழலில் சுழலும் என்னை ஆட்கொள்ளும் நாள் ஒன்றும் உண்டோ? மேற்குத் திசையில் சில தூதர்கள் தேடட்டும் என்றும், வடக்குத் திசையில் சில தூதர்கள் தேடட்டும் என்றும், கிழக்குத் திசையில் சில தூதர்கள் தேடட்டும் என்றும் அனுப்பி குறிப்பினால் குறிப்பை உணரும் அனுமனை இனி தெற்கு திசையில் தூதனாக அனுப்ப வேண்டியது. சொல்லி வைத்த குறிப்பின்படி தேடும் பொருள் (சீதை) கிடைக்காமல் போனாலும் தோல்வியுடன் வரலாமோ? (வருதல் நன்றன்று என சுக்ரீவன் சொல்லி அனுப்ப), அடியோடு வஞ்சகர்களாகிய அரக்கர்களிடம் தோற்று இளைக்காத தீரனாகிய அனுமனும் அலை கடலைத் தாண்டி அப்புறம் உள்ள இலங்கைக்குச் சென்று, சீதாபிராட்டி இருந்த அசோகவனத்தை அடைந்து, ராமபிரானது அழகிய பொன் மோதிரத்தை அன்னைக்கு அளித்து மீண்டு வந்த அந்த அனுமனுக்கு அனுக்கிரகத்தைத் தந்தருளி, கதிர்காமத்தில் வீற்றிருக்கும் பெருமாளே.
வலிமை வாய்ந்த திருமாலின் பிள்ளையாகிய பிரமன் எழுதிவிட்ட விதியின் வழியின்படி செல்லுகின்ற சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் ஆகிய ஐந்து உணர்ச்சிகளும் நெருங்கி (வேலை செய்யும்) குடிலாகிய உடலுடன் நாள்தோறும் அலைகளை உடைய கடல் சூழ்ந்த உலகத்தில் துன்பம் உண்டாக்கி கலகம் செய்யும் ஐந்து (மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய) இந்திரியங்களால் மனம் உடைந்து தடுமாற்றம் அடைந்து, வருத்தங்களுக்கு ஆளான அடிமையாகிய நான் மனம், வாக்கு, காயம் இவை மூன்றும் உலகத்தில் ஈடுபடுதலில் இருந்து விடுபடவும், மயக்கம் தீரவும், எனது எனப்படும் பாசம் (மமகாரம்) நீங்கவும், உனது திருவடியைப் பெறவும், மோன வரம்பைக் குறிப்பதாகிய ஓர் உபதேசத்தை அருள்புரிவாயாக. (வள்ளியின்) மணி வடம் அணிந்த மார்பும், அழகான முகமும், வள்ளைக் கொடி போல விளங்கும் இரண்டு காதுகளும், மரகத நிறமும், படத்தில் எழுதி வள்ளியினுடைய தினைப்புனத்தில் நின்ற மயில் வீரனே, விஷத்தைக் கண்டத்தில் தரித்தவர், மேலான குணத்தை உடையவர், சந்திரனைச் சடையில் தரித்தவர், பரிசுத்தமானவர், வெள்ளி மலையாகிய கயிலையில் வீற்றிருக்கும் சுயம்பு மூர்த்தியான சிவபெருமானுக்கு குருநாதனே, மலர்ந்த தாமரை போன்ற, சிலம்பணிந்த தாமரை மலர் போன்ற, திருவடியை உடையவனே, வெள்ளிகரம் என்னும் தலத்தில் அமர்ந்த பெருமாளே.
தாமரை போன்ற முகமும், அம்பு போன்ற கண்களும் உடைய வள்ளியின் தினைப்புனத்தில் போய் நின்று கொண்டு, நீ என்னுடன் வருவாயாக, என் ஊர் (திருத்தணிகை) இரண்டரை காதம் தூரம்தான் (25 மைல்), என் ஊரும், உன்னூராகிய வள்ளிமலையும் நெருங்கி உள்ளன, இடையில் ஒரே ஒரு வயல்தான் உள்ளது, என்று கூறி, ஒரு சோலையிலே உன் வலிமை எல்லாம் இழந்து, வள்ளி மீது மிக்க மயக்கம் கொண்டு மடல் ஏறிய மோகம் நிறைந்த எம்பெருமானே, இதோ இவ்வுணவு இனிப்புடன் கலந்து இருப்பதைப் பார் என்று கூறிய வேடுவன் கண்ணப்பன் சேர்ப்பித்த எச்சில் உணவைத் தின்று (கண்ணில் ரத்தத்துடன்) திருவிளையாடல் ஆடிய சுத்த சிவன் மகனே, எப்போதும் இளமையுடன் இருப்பவனே என்றும், பழைய நூல் திருமுருகாற்றுப்படையில் சொன்னபடி மலை கிழவோனே (மலைகளுக்கு உரியவனே) என்றும் ஓதினால், ஒரு பெரிய எண்ணிக்கையாகக் கூடி நூறாயிர பேதமாக வருவதாகிய பிறப்புக்கள் ஒழிந்து போயினவே, இது பெரிய அற்புதந்தான். (கெளமோதகி என்னும்) கதாயுதமும், பெருமை பொருந்திய சாரங்கம் என்னும் வில்லும், சுதர்சனம் என்னும் சக்கரமும், பாஞ்ச சன்யம் என்னும் சங்கும், நாந்தகம் என்னும் வாளும் (ஆகிய பஞ்ச ஆயுதங்களை) கைகளில் ஏந்தியவனும், நந்த கோபாலன் என்ற கோகுலத்து மன்னனது தேவி யசோதை மகிழ்ந்து வாழ உரலோடு கட்டப்பெற்ற கயிறோடு அந்த உரலை இழுத்தவண்ணம் உலாவியனும், வெண்ணெய் திருடும் கள்வனும், மிகவும் பயப்படும்படியாக ஆகாயத்தையும் தனது தலை கிழிக்கும்படி உயரமாக வளர்ந்து கொடையிற் சிறந்த மகாபலிச் சக்கரவர்த்தி அஞ்சும்படி மகா விரதசீல வாமனனாய் பகிரங்கமாக எதிரில் நின்றவனும் ஆகிய நாராயண மூர்த்தியாம் உன் மாமனின் மகனாகிய பிரமனைக் கோபித்த தலைவனே, விளைச்சல் உள்ள வயல்களின் இடையில் சங்குகள் தவழ்ந்தாடும் வெள்ளிநகர் என்னும் திருத்தலத்தில் வீற்றிருக்கும் வேலாயுதனே, உன்னைத் துதிக்கும் தேவர்களுக்கெல்லாம் தலைவனே.
புவிபுனல் காலுங் காட்டி சிகியொடு வானுஞ் சேர்த்தி புதுமன மானும் பூட்டி ...... யிடையூடே பொறிபுல னீரைந் தாக்கி கருவிகள் நாலுங் காட்டி புகல்வழி நாலைந் தாக்கி ...... வருகாயம் பவவினை நூறுங் காட்டி சுவமதி தானுஞ் சூட்டி பசுபதி பாசங் காட்டி ...... புலமாயப் படிமிசை போவென் றோட்டி அடிமையை நீவந் தேத்தி பரகதி தானுங் காட்டி ...... யருள்வாயே சிவமய ஞானங் கேட்க தவமுநி வோரும் பார்க்க திருநட மாடுங் கூத்தர் ...... முருகோனே திருவளர் மார்பன் போற்ற திசைமுக னாளும் போற்ற ஜெகமொடு வானங் காக்க ...... மயிலேறிக் குவடொடு சூரன் தோற்க எழுகடல் சூதந் தாக்கி குதர்வடி வேலங் கோட்டு ...... குமரேசா குவலயம் யாவும் போற்ற பழனையி லாலங் காட்டில் குறமகள் பாதம் போற்று ...... பெருமாளே.
மண், நீர், காற்று இவைகளைக் கலந்தும், நெருப்பு, வான் என்ற இரண்டையும் கூடச் சேர்த்தும், புதுமை வாய்ந்த மனம் என்ற குதிரையை அதில் பூட்டியும், இவைகளுக்கு இடையே ஐம்பொறிகள், ஐம்புலன்கள் என்ற பத்து இந்திரியங்களையும் இணைத்தும், மனம், புத்தி, அகங்காரம், சித்தம் என்ற நான்கு கருவிகளைப் பிணைத்தும், சொல்லப்படுகின்ற துவாரங்களாக (வழிகளாக) ஒன்பது வாயில்களை உண்டுபண்ணியும், இந்த உடல் ஏற்படுத்தப்படுகிறது. (இத்தகைய உடலுக்குக் காரணமான) பாவ வினைகள் பொடிபட்டு அழிதலைக்காட்டி, நல்ல அறிவை எனக்குப் பொருந்தவைத்து, பசு, பதி, பாசம் (உயிர், இறைவன், தளை) என்ற முப்பொருள்களின் இலக்கணங்களை எனக்கு விளக்கி, ஐம்புலன்களும் மாய்ந்து ஒடுங்க இந்தப் பூமிக்குப் போ என்று என்னை விரைவில் அனுப்பிய நீதான், உன் அடிமையாகிய என்னை இப்போது வந்து வாழ்த்தி, முக்தியையும் அடைவதற்கான வழியைக் காட்டி அருள்வாயாக. சிவமயமான ஞானோபதேசத்தை உலகோர் கேட்டு மகிழவும், தவம் நிறைந்த முநிவர்கள் பார்த்து மகிழவும், திருநடனம் ஆடும் கூத்தபிரான் சிவனின் குழந்தை முருகனே, லக்ஷ்மியை மார்பில் வைத்த திருமால் போற்றவும், நான்கு திசைகளையும் நோக்கும் முகனான பிரமன் நாள்தோறும் போற்றவும், மண்ணுலகையும் விண்ணுலகையும் காக்கும் பொருட்டு மயில் மீதேறி, கிரெளஞ்சகிரியுடன் சூரன் தோல்வியுற, ஏழு கடல்களையும், மாமரத்தையும் (சூரனையும்) தாக்கி, எடுத்த கூரிய வேலினை அங்கு போர்க்களத்தில் செலுத்தின குமரேசனே, உலகெலாம் போற்ற பழையனூரிலும், திருவாலங்காட்டிலும் வீற்றிருந்து, குறமகளாகிய வள்ளியின் பாதம் போற்றுகின்ற பெருமாளே.
உடலின் நிறத்தை கருநீலமாகக் காட்டி, முடிவு காலத்தில் வரும் யமன்அழைத்து வர அனுப்புகின்ற அவனுடைய தூதன் வளைத்து எறிகின்ற பாசக் கயிற்றினால் (மரணம் அடைகின்ற பொழுது), மகனும், மாமன், பாட்டி முதலான உறவினர்களும் (மரண நிலையைக்) கேட்டு புத்தி கலங்கும்படி, உலக மாயை அதிகமாகி உயிர் போவதற்கு முன்பு, இந்தப் பூமியில் உனது திருவடிகளைக் காட்டி, உடலுக்கு ஏற்பட்ட நோய்கள், முன் செய்த கர்மப் பயனால் அடைந்துள்ள பழைய வினைகளாகிய பாவங்களை ஒழித்து, உனது அடியேனாகிய என்னை அன்புடன் நாள்தோறும் காத்தளித்து, விரிந்த அழகிய தமிழ் மொழியால் அழகு மிக்க மேலான திருப்புகழைப் பாடுவாயாக என்று ஆட்கொண்டு அருள் புரிவாயாக. தலையில் சந்திரனைத் தரித்து, அழகுள்ள திருவாலங்காடு என்னும் ஊரில் முதன்மையான நடனம் ஆடுகின்ற கூத்தர் நடராஜனின் மகனே, நறுமணம் கமழும் மாலையையும் சூட்டி, ஒப்பற்றுத் தனித்து வர யானையையும் (விநாயகரையும்) வரவழைத்து முன்பு, வேடர்குலப் பெண்ணாகிய வள்ளியோடு சேர்தலில் மோகம் மிக்கவனே, இடியைப் போல வேகத்தைக் காட்டி, புலால் நாற்றம் கொண்ட சூலாயுதத்தைக் கையில் எடுத்து, எதிர்த்து வந்த சூரன் சண்டைக்கு வர, அவனை எதிர்த்துச் சென்று விளங்குகின்ற வேலாயுதத்தை ஆரவாரத்துடன் செலுத்தி, அவன் உடலை இரண்டு பிளவாக அன்று ஆக்கி, தேவர்களுடைய துன்பத்தை நீக்கிய பெருமாளே.
தேவேந்திரன் மீண்டும் தேவலோகத்தில் குடிபுகச்செய்து, நெருங்கி வந்த அசுரர்களின் உருமாறி அவர்களை மடியச்செய்து, தேவர்களின் மனம் மிகக் களிப்படையும்படி அருள்செய்து, காளியுடன் நடனமாடுகின்ற சிவபெருமான் மகிழ்ச்சி அடைய, விநாயகனும், உமாதேவியும் மிகக் களிப்படைய, பூமியில் உள்ளோரும், முநிவர்களும், எட்டுத்திசையில் உள்ளோரும், இந்திரனும், பிரமனும் எதிரே நின்று கண்டு களிக்க, லக்ஷ்மியுடன் திருமாலும் தம்மகிழ்ச்சியை இன்பமாகக் கூற, வலிமையான மயிலுடன் ஆடி என்முன் நீ வரவேண்டும். தாமரை போன்ற கண்களை உடையவனே, தேவர்கள் வளர்த்த மகள் தேவயானையின் மணவாளனே, அறிவு நிறைந்த மெய்ஞ்ஞானியே, உயர்ந்த புயங்களை உடையவனே, பொங்கிய கடலுடன், கிரெளஞ்சமலையையும் பிளவுபடச் செய்து ஏழு மலைகளின் வலிமையையும் பாய்ந்து அழித்த பொன்னொளி பரப்பிச் சுடர் வீசும் கூரிய வேலாயுதனே, குளிர்ந்த முத்துமாலையை அணிந்த மார்பனே, செம்பொன்னின் அழகு நிறைந்த உருவத்தோனே, நல்ல தமிழில் மிகுந்த நேசம் கொண்ட முருகேசப் பெருமானே, எப்போதும் உன் அடியார்களின் சிந்தையிலே குடிகொண்ட குளிர்ந்த சிறுவைத் தலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே.
கரிய மேகம் போன்றதும் வாசனை கொண்டுள்ளதும் ஆகிய கூந்தலை உடையவர்கள். தேனில் வெல்லத்துடன், பழம், அமுதம் இவைகள் ஊறியது போன்ற இனிய பேச்சுக்களை உடையவர்கள் இந்த விலைமாதர்கள். புணர்ச்சியைத் தருதற்கு நேரான ஏற்புடையவர்கள். செருக்கு உடையவர்கள். காமமும் கோபமும் மிக்கவர்கள். வட்டமான மார்ப் பாரத்தை உடையவர்கள். வேகத்துடன் சண்டை செய்யும் கயல் மீனையும் வாளை மீனையும் கடக்க வல்ல கண்களை உடையவர்கள். கொள்ளைக்காரிகள். பொருள் எவ்வளவோ அவ்வளவுக்குத் தகுந்தபடித் தங்கள் ஆசையைச் செலுத்துபவர்கள். பூமியில் இப் பொது மகளிர் காம இன்பத்தைத் தரும் பாவிகள், ஆகிய இவர்கள் வசம் அழிகின்ற எனக்கு ஒப்பற்ற உனது திருவடியை அருள் புரிவது தான் எப்போது என்பதைச் சொல்லி அருள்க. கற்பகத் தருவை அழித்த தைரியத்தை உடைய அசுரர்களும், அவர்களுடைய சுற்றத்தாரும் மாண்டு பொடிபட, யமனுடைய கொலைத் தொழில் பெருக, பருந்துகளுடன் அண்டங்காக்கைகள் (போர்க்களத்துக்கு) விரும்பி வந்து சேர, தனதன தானத் தானன என்ற இவ்வாறான சந்தங்களுடன் இசை பாடி பேய்கள் பல விதமான மாமிசங்களை உண்ணும்படி வேலைச் செலுத்தி அனுப்பிய ஒப்பற்ற வீரனே, அரி, திருமால், சக்ராயுதன் என்று சொல்லப்படுபவனுக்குத் தங்கையும், முக்தாம்பிகை என்னும் பெயரை உடையவளும் ஆகிய அழகு உடையவள், சிவபெருமானுடைய உடலில் ஒரு பாகத்தில் உள்ள உமா தேவி ஈன்ற மகனே, பாம்புடன், பூளை என்னும் பூவால் ஆகிய மாலையையும், சந்திரனையும், அறுகம் புல்லுடன் சடையில் சூடிய அழகுடைய சிவபெருமான் இருக்கும் எழிலுடைய திருவாமாத்தூரில் வீற்றிருக்கும் பெருமாளே.
தான தான தந்த தந்த, தான தான தந்த தந்த தான தான தந்த தந்த ...... தனதான
தார காசு ரன்ச ரிந்து வீழ வேரு டன்ப றிந்து சாதி பூத ரங்கு லுங்க ...... முதுமீனச் சாக ரோதை யங்கு ழம்பி நீடு தீகொ ளுந்த அன்று தாரை வேல்தொ டுங்க டம்ப ...... மததாரை ஆர வார வும்பர் கும்ப வார ணாச லம்பொ ருந்து மானை யாளு நின்ற குன்ற ...... மறமானும் ஆசை கூரு நண்ப என்று மாம யூர கந்த என்றும் ஆவல் தீர என்று நின்று ...... புகழ்வேனோ பார மார்த ழும்பர் செம்பொன் மேனி யாளர் கங்கை வெண்க பால மாலை கொன்றை தும்பை ...... சிறுதாளி பார மாசு ணங்கள் சிந்து வார வார மென்ப டம்பு பானல் கூவி ளங்க ரந்தை ...... அறுகோடே சேர வேம ணந்த நம்ப ரீச னாரி டஞ்சி றந்த சீத ளார விந்த வஞ்சி ...... பெருவாழ்வே தேவர் யாவ ருந்தி ரண்டு பாரின் மீது வந்தி றைஞ்சு தேவ னூர்வி ளங்க வந்த ...... பெருமாளே.
தாரகாசுரன் நிலை பெயர்ந்து வீழ்ந்து இறக்க, வேருடன் பறிபட்டு மேலான மேருமலையும் நடுக்கம் கொள்ள, முற்றிய மீன்களைக் கொண்ட அழகும் ஓசையும் உடைய சமுத்திரம் கலக்கமுற்று பெரும் தீயில் பட, அன்று கூரிய வேலினைச் செலுத்திய கடம்பனே என்றும், மதநீர் ஒழுகும் வாயையும், ஆரவாரத்தை உடையதும், தேவலோகத்தில் உள்ள பெருந்தலை கொண்டதுமான மலைபோன்ற ஐராவதம் என்ற யானை மீது அமர்ந்த தேவயானை என்னும் மானைப் போன்றவளும், வள்ளிமலை என்ற குன்றத்தில் இருந்த மான் போன்ற வேடப்பெண் வள்ளியும், இருவரும் ஆசை கொள்ளும் நண்பனே என்றும், சிறந்த மயில்வாகனனே என்றும், என் ஆசை தீர என்று மனம் ஒருநிலையில் நின்று புகழ்வேனோ? (பார்வதி தேவியின்) பாரமான மார்பின் தழும்பை உடையவர், செம்பொன் போன்ற திருமேனியாளர், கங்கை நதி, வெண்ணிறத்துக் கபால மாலை, கொன்றை, தும்பை, சிறுதாளி என்னும் பூக்கள், பாரமான பாம்புகள், நொச்சிப்பூ இவற்றை மாலையாகப் பூண்டவர், எலும்பு, அடம்பு என்ற மலர், கருங்குவளை, வில்வம், கரந்தை, அறுகம்புல் இவற்றோடு சேர்ந்து விளங்கி மணக்கும் பெருமான், ஈசனார் ஆகிய சிவனின் இடது பாகத்தில் சிறந்து விளங்கும் குளிர்ந்த தாமரையில் அமரும் மாது பார்வதி தேவியின் பெருஞ் செல்வமே, தேவர்கள் யாவரும் ஒன்றுகூடி பூமியில் வந்து வணங்கும் தேவனூருக்கு விளக்கம் தர வந்த பெருமாளே.
நான்கு இதழ் கொண்டதாய், தரையின் நான்கு திசைகளையும் நோக்கியதாய் உள்ள (மூலாதாரக்) கமலம் தொடங்கி, முச்சுடர்களால் (அதாவது, சூரிய, சந்திர, அக்கினிச் சுடர்களால்) ஆன மண்டலங்கள் (ஆறாதார நிலைகள்) குளிர்ந்து தழைய, சிவப் பேற்றைத் தருவதான நடனப் பெரும்பேறு ஆகிய திருவடிக் கழலை (அடியேனுக்குக்) காட்டி, என்னுடைய யான் எனது என்னும் அகங்கார மமகார மலங்கள் ஒழியுமாறு கெடுத்து ஒழித்த (உனது) பன்னிரண்டு சிறந்த மலைகள் போன்ற தோள்களையும், ஆறு முகங்களையும், ஒளி சுற்றிலும் பரவி (ஆன்மாக்களைப்) பாதுகாக்கின்ற திருவடியும், மயிலின் மேலிருந்து பாதுகாக்கின்றவனாக கருணைக் கடலைக் காட்டி அருளிய திருக்கோலத்தையும், அடியேனை பொன்னைக் காட்டிலும் இனிய பார்வையுடன் பார்த்து, உன் அடியவர்கள் போல யானும் முத்தமிழ் கொண்டு பாடிப் புகழவும், (நான்) மேலான நற் கதியைப் பெற நின் அருள்மிக்க தனிப்பார்வையையும் மறவேன். பூமி அதிர, நான்கு திசைகளில் உள்ள மலைகள் நெரிந்து பொடிபட, பறை அடித்து வந்த மூர்க்க அசுரர்களின் பெரிய முடிகள் சிதறுண்டு விழ, கடல் ஒலி செய்து வாய்விட்டு அலற வேலைச் செலுத்தியவனே, சிவனது பத்தினியும், யமனை உதைத்த பாதத்தைக் கொண்ட சக்தி வாய்ந்தவளும், யாவர்க்கும் மூத்தவளும், (அடியார்களின்) இடர்களை நீக்குபவளும், அண்டங்களை இவ்வாறு ஒரு நொடியில் படைத்தவளுமாகிய பார்வதி தேவி ஈன்ற பாலனே, விதுரனுக்கும், பாம்புக் கொடி கொண்ட துரியோதனனுக்கும், (மனம்) வேறுபடும்படியான பிரிவினையை உண்டு பண்ணிய கண்ணபிரான், அருச்சுனனின் பெரிய தேர்க் குதிரைகளை (பார்த்த சாரதியாக இருந்து) செலுத்தியவன் ஆகிய திருமாலின் மருகனே, வெளியிலே எட்டுத் திக்குகளிலும் வெகு வீரமாய் நின்று போர் செய்த சூரனை (இறுதியில் வென்று, அவனது ஒரு பகுதியைச் சேவல்) கொடியாகக் கையிலேந்தி புகழ் விளங்க உலவிய (பெருமாளே), வெற்றியும் சத்தியமும் விளங்கும் திருவேட்களம் என்னும் தலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே.
ஊனத்தசை தோல்கள் சுமந்த காயப்பொதி மாய மிகுந்த ஊசற்சுடு நாறு குரம்பை ...... மறைநாலும் ஓதப்படு நாலு முகன்ற னாலுற்றிடு கோல மெழுந்து ஓடித்தடு மாறி யுழன்று ...... தளர்வாகிக் கூனித்தடி யோடு நடந்து ஈனப்படு கோழை மிகுந்த கூளச்சட மீதை யுகந்து ...... புவிமீதே கூசப்பிர மாண ப்ரபஞ்ச மாயக்கொடு நோய்க ளகன்று கோலக்கழ லேபெற இன்று ...... அருள்வாயே சேனக்குரு கூடலி லன்று ஞானத்தமிழ் நூல்கள் பகர்ந்து சேனைச்சம ணோர்கழு வின்கண் ...... மிசையேறத் தீரத்திரு நீறு புரிந்து மீனக்கொடி யோனுடல் துன்று தீமைப்பிணி தீர வுவந்த ...... குருநாதா கானச்சிறு மானை நினைந்து ஏனற்புன மீது நடந்து காதற்கிளி யோடு மொழிந்து ...... சிலைவேடர் காணக்கணி யாக வளர்ந்து ஞானக்குற மானை மணந்து காழிப்பதி மேவி யுகந்த ...... பெருமாளே.
அழிந்து போகும் தன்மையுடைய மாமிசம், தோல்கள் (இவைகளைச்) சுமக்கும் உடற்சுமை, மாயம் மிக்கதும், ஊசிப்போவதும், கடைசியில் சுடப்படுவதும், நாறுவதுமான சிறு குடிலாகிய இந்த உடல் நான்கு வேதங்களால் ஓதப்படுகின்ற நான்முகன் பிரமனால் ஏற்படுத்தப்பட்ட அழகுடன் உருப்பெற்று எழுந்து, ஓடியும், தடுமாறியும், திரிந்தும், தளர்ச்சி அடைந்தும், கூனித் தடிகொண்டு நடந்தும், இழிவைத் தரும் கோழை மிக்க குப்பையான இந்த உடலை, மிக விரும்பி, இந்தப் பூமியில், நாணம் உறும்படியாக விதிப் பிரகாரம் செல்வதான இந்த உலக மயக்கத்தில் உண்டாகும் பிணிகள் நீங்கி, உனது அழகிய இரண்டு திருவடிகளை இன்று எனக்கு அருள் புரிவாயாக. சேனன் என்னும் பட்டப் பெயர் வைத்திருந்த சமண குருக்களின் முன்னிலையில், மதுரையில் முன்பு (சம்பந்தராக வந்து) ஞானத் தமிழ் நூல்களாகிய தேவாரப் பாக்களைப் பாடி, கூட்டமான சமணர்கள் கழுவில் ஏறும்படிச் செய்து, திடத்துடன் திரு நீற்றை விநியோகித்து, மீனைக் கொடியாகக் கொண்ட பாண்டியனின் உடலில் பொருந்திய கொடிய சுர நோய் தீரும்படியாக அருள் சுரந்த குரு நாதனே, (வள்ளி மலைக்) காட்டில் மீது இருந்த சிறு மான் போன்ற வள்ளியை நினைந்து, தினைப்புனத்தில் நடந்து சென்று, ஆசைக் கிளியாகிய அவளோடு பேசி, வில் ஏந்திய வேடர்கள் காணும்படியாக வேங்கை மரமாக வளர்ந்து, அந்த ஞானக் குறப்பெண்ணை மணந்து, சீகாழிப் பதியில் அமர்ந்து மகிழும் பெருமாளே.
எத்தனை கோடி கோடி விட்டுட லோடி யாடி யெத்தனை கோடி போன ...... தளவேதோ இப்படி மோக போக மிப்படி யாகி யாகி யிப்படி யாவ தேது ...... இனிமேலோ சித்திடில் சீசி சீசி குத்திர மாய மாயை சிக்கினி லாயு மாயு ...... மடியேனைச் சித்தினி லாட லோடு முத்தமிழ் வாண ரோது சித்திர ஞான பாத ...... மருள்வாயே நித்தமு மோது வார்கள் சித்தமெ வீட தாக நிர்த்தம தாடு மாறு ...... முகவோனே நிட்கள ரூபர் பாதி பச்சுரு வான மூணு நெட்டிலை சூல பாணி ...... யருள்பாலா பைத்தலை நீடு மாயி ரத்தலை மீது பீறு பத்திர பாத நீல ...... மயில்வீரா பச்சிள பூக பாளை செய்க்கயல் தாவு வேளூர் பற்றிய மூவர் தேவர் ...... பெருமாளே.
எத்தனையோ கோடிக்கணக்கான உடல்களை விட்டு, புது உடல்களில் ஓடிப்புகுந்தும், ஆடியும், இவ்வாறு எத்தனை கோடிப் பிறப்புக்கள் போனதோ? இதற்கு ஓர் அளவும் உண்டோ? இவ்வாறு மோகமும் போகமும் கலந்து, இப்படி பிறந்து இறந்து மீண்டும் இவ்வாறு பிறந்து ஆவதினால் என்ன பயன்? இனிமேல் இதைப்பற்றி ஆராய்ந்து பார்த்தால், சீசசீ, சீச்சீ, மிக இழிவானது இந்த மாயமான வாழ்க்கை. இதன் சிக்கலில் அகப்பட்டு மாய்கின்ற அடியேனை, அறிவு என்னும் மேடையிலே ஆட்டுவித்து, மூன்று தமிழ்த் துறையிலும் வல்ல புலவர்கள் ஓதுகின்ற உன் அழகிய ஞானத் திருவடிகளை எனக்கு அருள்வாயாக. நாள்தோறும் உன்னைத் துதிப்பவர்களின் உள்ளமே நீ தங்கியுள்ள இருப்பிடமாகக் கொண்டு அதில் நடனமாடிடும் ஆறுமுகத்துக் கடவுளே, உருவ அருவமாக உள்ளவரும், பாதி மரகதப் பச்சை நிற உடல் கொண்டவரும், மூன்று நீண்ட இலைகளை உடைய சூலத்தைக் கையில் ஏந்தியவருமான சிவபெருமான் அருளிய புதல்வனே, ஆயிரம் பெரிய படங்கொண்ட தலைகள் வாய்த்த ஆதிசேஷனை கீறிக் கிழிக்கும் வாள் போன்ற கூரிய நகங்களை உடைய நீல மயில் மீது வரும் வீரனே, பசுமையான இளம் கமுக மரத்தின் மடல் மீது வயலில் உள்ள கயல் மீன்கள் தாவுகின்ற புள்ளிருக்கும் வேளூரில் விருப்புடன் அமரும் முத்தேவர் (பிரம்மா, விஷ்ணு, சிவன்) போற்றும் பெருமாளே.
சூலம் போல
மூன்று கிளைகளாக ஓடுகின்ற பாம்பு போன்ற பிராணவாயுவை
வெளியேறாது அடக்கி,
பரிசுத்தமான பர ஒளியைக்
காணவும், முத்தி நிலை கை கூடவும்,
சூழ்ந்துள்ள ஆணவ இருளாகிய உருவத்தை அழிபடும்படியாக யோக
நெருப்பில் அதை எரித்து,
ஜோதி ரத்னபீடம்
அமைந்துள்ள நிர்மலமான வீட்டை அடைந்து,
அந்த மேலைப் பெரு வெளியிலே,
ஆயிரத்தெட்டு இதழோடு கூடிய மேலான குரு கமலத்தில்
( ஹஸ்ராரத்தில்) சேர்ந்து, சிவ ஞான இன்ப ஒளியைப் பிரதிபலிக்கும்
புனலில் மூழ்கி,
வேல், மயில்
இவைகளின் தரிசன ஒளியை அந்த நிலையில் கிடைக்கப் பெற்று,
முக்தி நிலையைச்
சிறப்புடன் பெறும் அருளைத் தந்தருளுக.
ஓலமிட்டு அழும்
அசுரர்களும், எட்டுத் திசைகளில் உள்ள கடல்களும், சக்ரவாளகிரியும்
அழிபடவும்,
கிரெளஞ்ச
மலையும் தொளை படும்படியாகவும் வேலைச் செலுத்திய மயில் வீரனே,
சிறப்பான குற மானாகிய வள்ளியின் தினைப்புனக் காட்டுக்குச் சென்று,
அவளுடைய காலை வருடி,
அவளுடைய மனத்துள் பதியும்படி ஓம் என்னும் பிரணவ உபதேசமாகிய
மூலப் பொருளோடு அவளை அணைந்தவனே,
யமனுடன் (அவன் வாகனம்) எருமையும் அழிய, விதிப்படியே பூமியின்
மேல் விழும்படி உதைத்துக் கிடத்தின காலகாலனாகிய சிவபிரானின்
இடப் பாகத்தில் உள்ள பராசக்தி
பார்வதி அருளிய பாலனே,
ஊழிக்
காலம் முதலாக வாழ்ந்து வரும் இந்தப் பூமிக்கு ஆதார நகராயுள்ள
திருக்கடவூரில் இருக்கும் கோபுரத்தில்
காட்டு மயில் போன்ற
வாகனத்தின் மீது வீற்றிருக்கும் பெருமாளே.
நறுமணம் கமழும் மலர்ப் படுக்கை (விரகத்தின் காரணமாக) கொதித்துச் சூடு தராமலும், வளர்த்த தாயும் சுற்றத்தாரும் வசை மொழிகளைப் பேசாமலும், காரணமாக (கருவைத்து) நட்பு கொண்டாடிய அயலார்கள் பழிச் சொல் கூறாமலும் (இருக்க வேண்டுமானால்) உன் (அடையாளமாய்) கடம்ப மாலையை இனி அனுப்பி வைக்க வேண்டும். கற்பக விருட்சத்தின் கீழ் வளர்ந்த, கொடிபோன்ற இடையை உடைய தேவயானையின் மணவாளனே, சாமர்த்தியசாலியே, மரகத மணியின் நிறம் கொண்ட மயில்மீது வரும் வீரனே, திருவிடைக்கழியில் உள்ள திருக்குராமரத்தின் அடிநிழல் தன்னில் வீற்றிருப்பவனே, திருக்கையில் வேல் ஏந்திய, வடிவம் அழகிய பெருமாளே.
நான் நாணம் கொள்ளாமல், உலகத்தோர் என்னைப் பழிக்காமல், உன் பெருமையைக் கூறாத அசட்டு நூல்களைக் கற்று என் உள்ளம் மாறுபட்டு கோணல் வழியைப் பின்பற்றாமல், உன் வேலாயுதத்தை நான் பாடாமலும், ஆசை மிகுந்து கூதாள மலர்மாலையை உன் தோள்களில் வீசாமலும், உன் புகழைப் பற்றி நான் பேசாமலும், சிறப்பான வேதங்களுக்கும் எட்டாத உன் திருவடிகளில் வீழாமலும், அலைந்து போய், நாயைவிடக் கீழோனான அடியேனுடைய வாழ்நாள் வீணாகப் போவது நீதியாகுமோ? அன்பனே, தேவர்களின் தெய்வமே, அழகனே, கடப்பமாலையை அணிந்தவனே, காட்டில் தினைப்புனத்தில் உள்ள மான்போன்ற வள்ளியைச் சந்தித்தவனே, உள்ளம் குளிர்ந்தவனே, சூரன் இருக்கும் மகேந்திரபுரியைச் சென்றடைந்து போர்செய்தவனே, பெரிய மேகங்கள் சூழ்ந்த கற்பகத் தருக்கள் நிறைந்துள்ள தேசமாகிய தேவலோகத்துக்கு உரிமையாளனே, அனாதைகளின் ரட்சகக் கடவுளே, சிறப்பு வாய்ந்த திருவாரூரில் வீற்றிருக்கும் பெரும் செல்வமே, சிவப்பு நிறத்தோனே, முருகவேளே, மிக்க பொலிவுள்ளவனே, தலைவனே, தேவே தேவப் பெருமாளே.
கூர்மையான நீண்ட வாயை உடைய நாரையே, இங்கு வருவாய். என்னை விட்டுப் பிரிந்தவர் மீண்டும் வந்து என்னைத் தழுவ மாட்டாரோ? கொஞ்சம் அல்ல, என் உயிர் பயனற்றது ஆயிற்று. என் தாயும் என்னோடு மாறுபட்டுப் பகை ஆனாள். சுற்றத்தார்கள் கோள் மூட்டுதலிலையே ஈடுபட்டு இருக்கின்றார்கள். மேலும் இள வாடைக் காற்று அறுக்கின்ற வாளைப் போல் என் மேல் வீசி, எறிகின்ற நெருப்பைப் போல் உடல் மீது படுகின்றது. ஒருவருக்கும் கொடாமல் வாழ்கின்றவர்களின் பேர்களைப் பாடி ஈடேறாது தவிப்போர் போல நானும் கெட்டுப் போகலாமோ? சூரன் வாழாத வண்ணம், தங்களது சுக நிலை மாறாமல் உள்ள வாழ்வைச் சூழும் தேவர்களுக்கு அருள் புரிந்த, தோல்வியைக் கண்டறியாத வேலனே, மேம்பட்டு விளங்கும் திருவாரூரில் வீற்றிருக்கும் சோதி மயமான சிவபெருமானுடைய பாகத்தில் உள்ள உமா தேவி (இவர்கள்) மத்தியில் (சோமாஸ்கந்த மூர்த்தியாய் உருவில்) விளங்குவாய். நீதிப் பெருமானே, தேவர்களுக்குத் தலைமை தாங்கும் வீரனே, பகைவர்களுடைய திரிபுரங்களைச் சுட்டவராகிய சிவபெருமானுடைய குழந்தையே, அரசே, பொலிவு உள்ளவனே, தலைவனே தேவனே, தேவர்கள் பெருமாளே.
நீ பால் தானோ, தேன்தானோ, வெல்லக்கட்டிதானோ? தேவர்கள் பாற்கடலில் இருந்து கடைந்தெடுத்த அமுதமோ? நீ இவ்வுலகிலுள்ளோரின் சிறப்புப் பொருளோ? மன்மதனுக்கு நிகரான வாழ்வோ நீ? பானுவோ (சூரியனோ) நீ? சிறந்த முத்தோ நீ? என்றெல்லாம் விரிவாகத் தாலோ தாலேலோ என்று தாய்மார் என்னைத் தாலாட்டுப் பாடாமலும், தாய்மார் அன்புடன் என்னை நினைத்து தாய்ப்பால் தராமலும், புகழ்ச்சிக்கு உரிய பெயர் ஒன்றும் எனக்குச் சூட்டாமலும், அன்புடன் என்னோடு பேசாமலும், ஏச்சுக்கு இடமாக நான் வளர்வது நீதியாகுமோ? வள்ளி ஆலோலம் என்று கூவி பறவைகளை ஓட்டும் குரலோசை கேட்டு, முன்னொரு நாளில், ஆசை குன்றாத நிலையில் அவளிருந்த தினைப்புனத்திற்குச் சென்று, அந்த வள்ளித் தாயின் பாதங்களில் விழுந்தும், அதனால் வாழ்வு பயன்பெற்றது என்று கூறி வாழ்ந்தும், அவளுக்கு ஆளாக, வேளைக்காரனாக, சமயத்தில் புகுந்து விளையாடியவனே, சேல் மீனோடு சேர்ந்து ஆரல் மீன்கள் மிக நிறைந்துள்ள சீர்பெற்ற திருவாரூர் தலத்தின் பெருஞ் செல்வமே, இறைவன் சேயே, கந்த வேளே, மலர் போன்ற பொலிவு உள்ளவனே, அரசே, இறைவனே, தேவர்களின் பெருமாளே.
கைகள் தாமரையின் மலரையும், முகம் சந்திரனையும், கூந்தல் மேகத்தையும், மதிக்கத் தக்க சொற்கள் பழத்தையும், ஒளி பொருந்திய பற்கள் முல்லை மலரையும், போரை விளைவிக்கும் கண்கள் கடல் என்னும்படியும் நஞ்சையும் ஒக்கும் என்றும் மனதுக்குள்ளே எண்ணி, அன்னப் பறவையைப் போன்ற நடை, கொடி போன்ற இடை, மயில் போன்ற இயல்பு, நறு மணம் வீசும் அகிலுடன் இழைந்துள்ள கஸ்தூரிக் கலவை, மகிழ்ச்சி தரும் மலை போன்ற மார்பகம் இவற்றையுடைய விலைமகளிர் மீது மோகம் கொண்டு திரிகின்ற நானும், இரவு பகல் என்ற வித்தியாசம் இல்லாதவாறு, பகையான எண்ணம் அற, (ஆணவம், கன்மம், மாயை என்ற) மும் மலங்கள் அற, பொருந்துகின்ற ஆசைகள் அற, கண்களில் கண்ணீர் ஒழுக, உள்ளம் உருகி பாகு வெல்லம் போன்ற பதத்தை நிலையாகப் பொருந்த, எழுதுவதற்கு முடியாத குற மகளாகிய வள்ளி நாயகியின் இரண்டு மார்பகங்களாகிய மலைகளில் முழுகிய இளையவனே என்கின்ற சொல்லானது எனக்கு இன்பம் தருவதும், நான் உனது இரண்டு திருவடிகளைச் சேர்வதுமான ஒரு நாள் வருமோ? பசு இறந்த தனது கன்றை எழுப்புதற்கு வழியை ஆராய்ந்து நாடி மனு நீதிச் சோழனின் ஆராய்ச்சி மணியைச் சென்று அசைத்து ஆட்ட, அந்த மணியின் ஒலி மிக்க துயரை விளைவித்து அரசனின் காதுகளில் ஒலிக்க, மிகவும் கொடிய செயல் ஏதோ நடந்திருக்கின்றது, போய் விசாரிக்கவும் என்று அவர் சொல்ல, நிச்சயமாக இது பெரிய தவறாகும் என்று எழுந்து வந்த மன்னனாகிய மநு மனம் கசிந்து, அரகர சிவசிவ என்ற வார்த்தைகள் வரச் செய்த ஒரு பசு வேதனைப்பட்டு கண்ணீர் பெருகுதலைப் பார்த்து, நடு நிலைமையை அறிந்து இறைவனைத் தியானித்து, அந்தப் பசுவுக்கு துயரத்தைத் தரும்படியாக ரதத்தை ஓட்டிய குற்றத்துக்கு ஆளான தன் மகனை உடல் இரண்டு பிளவாகும்படி, அவன் மேல் படியுமாறு ரதத்தை நடத்தும்படி சொன்னவனாகிய மநு நீதிச் சோழன் ஆட்சி செய்த திருவாரூர் என்னும் தலத்தில் வீற்றிருக்கும் ஆறு முகனே, சிவபெருமானின் மகனே, விநாயகப் பெருமானின் தம்பியே, குமரனே, அரசர்கள் தலைவனே, சரவணப் பெருமாளே, கடல் முறை இடும்படி வேல் கொண்டு செலுத்திய பெருமாளே.
உற்பத்திக்கு வேண்டிய எருவாய், கர்ப்பக் கருவாய், அதனின்று உருவமாகி, இவ்வுருவமே பயிர் வளர்வதுபோல் விளைபொருளாகி இவர் இவர் என்று இன்று இருப்பவர், இறந்தபின்பு, அவர் அவர் என்று சொல்லும்படியாகி, அவர் அவர் என்று பேசப்பட்டவர், பிறந்தபின்பு இவர் இவர் என்று சொல்லும்படியாகி, இந்தச் சங்கிலியே ஒரு தொடர்ச்சியாக, வெறி பிடித்தது போல, ஒரு தாயார், இரண்டு தாயார், பல கோடி தாய்மார்களை அடைந்து வீணாக யான் அழிவுறாமல், ஒருமுறையாவது முருகனே, பரமனே, குமரனே, என்றும் என்னுயிரைக் காத்தருள் என்றும் கூவித் துதிக்க உனது திருவருளைத் தந்தருள்வாயாக. முருகனே என ஒரே முறை ஓதும் அடியார்க்கு நீ அவர்தம் தலைமேல் இருதாள்களையும் வைத்து அருள்பவனாயிற்றே. முனிவர்களும், தேவர்களும் முறையோ முறையோ என உன்முன் ஓலமிட, பழைய சூரனது மார்பில் செலுத்திய வேலனே, திருமாலும் பிரமனும், (அடியும் முடியும்) அறியாதவராகிய சிவபெருமானின் செல்வச் சிறுவனே, திருமாலின் மருமகனே, செழிப்புள்ள அழகிய மதில்கள் சேர்ந்த, அழகு நிறைந்த சோலைகள் சூழ்ந்த, திருவீழிமிழலையில் வாழும் பெருமாளே.
அறுகம் புல்லின் நுனியில் உள்ள பனி போல சிறிய துளி ஒன்று பெரியதான ஓருடலை அடைந்ததாகி, ஒரு குழந்தை உருவம் கொண்டு வெளிவர, அந்த அருமைக் குழந்தையின் மழலை மொழிகளில் கனிவு கொண்டு அக் குழந்தையின் தாயும் தந்தையும், அதன் மீது உலக மாயையின் வசப்பட்டு வெகு வெகு அருமையாக அன்பு காட்டி வளர்க்க, மொளு மொளு என்று உடலும் வளர, கவலை அற்ற இன்ப வாழ்க்கையராய் இளம்பருவ உருவத்தை அடைந்து, அவர் ஒரு பெரியவராகி அழகு விளங்கும் நடையைக் கொண்டவராய், ஒய்யாரத்தைக் காட்டும் பேச்சுக்களில் பழகினவராய், உயிர்போல அருமை வாய்ந்த மனைவிமாருடன், விழப் போகும் சுவரை, மாதர்கள் என்னும் பெருங் குழியை நிலைத்திருக்கும் என்று எண்ணி, வீடும் வாசலும் மாடமும் கூடமும் கட்டி அனுபவித்து, அணு அளவு தவிடும் கீழே விழுந்து சிதறக் கூடாது என மன அழுத்தம் கொண்டு, ஆசைக்கு ஆளாக ஊசியின் தன்மை பூண்டவராய், அவிந்து போவதற்கு முன் ஒளி விட்டு எரியும் விளக்கைப் போல (பின் வரும் கேடு தெரியாது மகிழ்ந்திருந்து), சுத்த தரித்திரன் ஒருவனோ, தவ புருஷனோ அமுது படையுங்கள் என்று கேட்ட உடனே, மேலை வீட்டுக்குப் போங்கள், கீழை வீட்டுக்குப் போங்கள் எனச் சொல்லி, திடு திடென்று நடந்து போய், பிச்சை கேட்டவர் வீட்டுக்குள் நுழைவதற்கு முன்பாகவே எதிரே வேகமாகச் சென்று அவர்கள் மேல் மிகவும் கோபித்து, நாயைப் போல் பாய்ந்து விழுந்து, தமது சாமர்த்தியத்தால் சேர்த்த பொருள்கள் வற்றிப் போவதற்கான பேச்சுக்களைப் பேசும் ஒரு வீணர்களின் பேச்சே நல்லது என மேற்கொள்ளப்பட்டதாகி, வரப் போகும் விதியின் போக்கைச் சற்றும் யோசிக்காமல், மினுகு மினுகு என்று செழிப்புற்றிருந்த தேகம் முற்றும் வளைவுற்றுத் தளரவும், வீண் பொழுது போக்குபவர்களின் தரிசனத்தையே மேற் கொண்ட பாவியாகி, அம் மறு பிறப்பில் துன்பம் நேரும் என்று அறிவுரை கூறுபவரை, உம் பேச்சை நிறுத்தும், கோரைப் புல் போலத் தோன்றி மறைபவர்கள் (மறுமை என்ற ஒன்றை) காண்பார்களா என்ன என்று எதிர்த்துப் பேசியும், பாசங்களை விட்ட துறவிகளாகிய பெரியோர்களையும் வேதியர்களையும் வெடு வெடு என்று காரமாகப் பேசியும், தவில் வாத்தியம் போல் பேரொலியுடன் இரைந்து பேசி, யாளி போலத் திறந்த வாயினராய் மாதர்களுடன் புணர்ச்சி பொருந்திக் காலங் கழித்து வரும் நாளில், வறுமைகள் நெருங்கி வர, கையில் உள்ள பொருளும் விலகி ஒழிய, சில வகையான வாத சம்பந்தமான நோய்கள, உடல் வீக்கம் தரும் காமாலை, ரத்தம் இன்மையால் உடல் வெளுத்து ஊதுமாறு செய்யும் நோய், மகோதர நோய், வயிற்று வலி, ஒரு வகையான புண் கட்டி இவையெல்லாம் வர, இரண்டு கண்களிலும் பீளை ஒழுக, கோழை மேலிட்டு எழ, வழ வழ என்று உமிழ்கின்ற கபம் கொழ கொழ என்று ஒழுகி விழ, தேகத்தில் உள்ள சதை எல்லாம் வற்றிப் போய் நாடியும் பேதப்பட்டு வேறாகி, மனையாளும் (இனி எப்படி இவர் பிழைப்பது என) மன உறுதி வேறுபட்டு கலக்கம் உற, வீட்டில் உள்ளவர்களும் சமீபத்தில் சென்று பாருங்கள் என்று சொல்லும் போது, பெண்கள் சீ என வெறுக்க, குழந்தைகள் சீ என்று அருவருக்க, கனவில் தேர் வருவது போலவும் குதிரை வருவது போலவும் காட்சிகள் தோன்ற, பெரிய சுடுகாடு வா என்று கூப்பிட, வீடு போ என்று கூற, சாமர்த்தியம் அழிய, உற்சாகம் அழிய, பேச்சுத் தடுமாறி, கண்கள் சொருகிப் போக, மேல் மூச்சு எழ உயிர் உடலை விட்டுக் கழியும் நாளில் மனிதர்கள் பல பேச்சுக்கள் பேச, இவர் இறந்த பின் நமது எல்லா வளமும் அற்றதென்று சுற்றத்தார் எல்லாம் கதறி அழ, அறியாமை கொண்ட மாதர்கள் தலையில் அடித்துக் கொண்டு மேலே விழ, என்னுடைய பொருள், என்னுடைய அடிமை ஆட்கள் என்கின்ற அறிவு சிறிதளவும் இல்லாமல போக, ஈக்கள் மொலேல் என்று உடலை மொய்க்க, (உயிர் பிரிந்ததும்) வாயை ஆ என்று திறந்து வைக்க, ஒடுங்கின ஒலி செய்யும் பறை, சிறிய பறைகள், திமிலை என்ற ஒரு வகையான பறையுடன் மேளவகை (இவை எல்லாம்) ஒலிக்க சுடு காட்டுக்கே கொணரப்பட்டு, பேய்களால் சூழப்பட்டு, நெருப்பில் இடப்படும் இத்தகைய வாழ்க்கையை (உனது) இரண்டு திருவடிகளைப் போற்றி செய்யும் உன் அடியார்கள் பெறுவதென்றால அவர்களை உலகத்தார் இகழ மாட்டார்களா? பாச நாசம் செய்யும் பெருமாளே, (ஆதலால் நல் வினை தீ வினை என்னும்) இரண்டு வினைகளும் மூன்று மலங்களும், இறப்பு, பிறப்பு என்பனவும் ஒழிய, ஒரே இன்ப நிலையில் நீயும் நானும் ஒன்றுபட்டு அழுந்திக் கலக்கும் வகை வருமாறு பேரின்ப நிலையை அருள்வாயாக. திருவிடை மருதூரில் வீற்றிருக்கும் தனி நாயகனே, தேவர்கள் பெருமாளே.
நீரிழிவு குட்ட மீளை வாதமொடு பித்த மூல நீள்குளிர் வெதுப்பு வேறு ...... முளநோய்கள் நேருறு புழுக்கள் கூடு நான்முக னெடுத்த வீடு நீடிய விரத்த மூளை ...... தசைதோல்சீ பாரிய நவத்து வார நாறுமு மலத்தி லாறு பாய்பிணி யியற்று பாவை ...... நரிநாய்பேய் பாறோடு கழுக்கள் கூகை தாமிவை புசிப்ப தான பாழுட லெடுத்து வீணி ...... லுழல்வேனோ நாரணி யறத்தி னாரி ஆறுச மயத்தி பூத நாயக ரிடத்து காமி ...... மகமாயி நாடக நடத்தி கோல நீலவ ருணத்தி வேத நாயகி யுமைச்சி நீலி ...... திரிசூலி வாரணி முலைச்சி ஞான பூரணி கலைச்சி நாக வாணுத லளித்த வீர ...... மயிலோனே மாடம தில்முத்து மேடை கோபுர மணத்த சோலை வாகுள குறட்டி மேவு ...... பெருமாளே.
நீர் இழிவு, குஷ்ட நோய், கோழை, வாயு இவைகளோடு பித்த நோய், வெகு நாளாக உள்ள குளிர் நோய், சுர நோய், மற்ற நோய்கள், வேர் ஊன்றி இருப்பதுவாய், புழுக்களுக்கு இருப்பிடமானதாய், பிரமனால் படைக்கப்பட்டது (இந்த உடலாகிய) வீடு. நெடிதாய்ப் பரவி இருக்கும் ரத்தம், மூளை, மாமிசம், தோல், சீழ் ஆகியவைகள் பொருந்திய பருத்த, ஒன்பது துவாரங்களை உடைய, நாற்றம் மிகுந்த, ஆணவம், கன்மம், மாயை என்னும் மும்மலங்களின் வழியால் ஏற்படுகின்ற பிணி இவைகளால் ஆக்கப்பட்ட பொம்மை. நரியும் நாயும் பேயும் பருந்தும் கழுகுகளும் கோட்டான்களும் இவைகள் உண்ணுவதற்கு உரிய பாழான இந்த உடலை நான் எடுத்து வீண் பொழுது போக்கித் திரிவேனோ? துர்க்கை, முப்பத்திரண்டு அறங்களைப் புரிந்த தேவி, ஆறு சமயங்களையும் சார்ந்தவள், பூத கணங்களுக்குத் தலைவரான சிவபெருமானுடைய இடது பாகத்தில் விரும்பி இருப்பவள், மகமாயி, நடனங்களைச் செய்பவள், அழகிய நீல நிறம் உடையவள், வேதத் தலைவி, உமையம்மை, காளி, முத்தலைச் சூலத்தைக் கொண்டவள், கச்சு அணிந்த மார்பகங்களை உடையவள், ஞானத்தைப் பூரணமாகக் கொண்டவள், கலைகளுக்குத் தலைவி, மலை மகளாகிய, ஒளி வீசும் நெற்றியைக் கொண்ட பார்வதி தேவி பெற்ற வீரனே, மயில் வாகனனே, மாடங்களும் மதில்களும் முத்து இழைத்த மேடான தளங்களும் கோபுரங்களும் நறு மணம் வீசுகின்ற சோலைகளும் அழகாக வாய்ந்துள்ள குறட்டி என்னும் தலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே.
என் செயலால் நான் இவ்வுலகில் பிறப்பதற்கும், என் திறத்தால் நான் இறப்பதற்கும், என் எண்ணத்தால் நான் துதிப்பதற்கும், என் கண்கொண்டு மற்றவரை நான் அழைப்பதற்கும், என் செயலால் என் கால்கொண்டு நான் நடப்பதற்கும், என் திறம் கொண்டு நான் ஓரிடத்தில் இருப்பதற்கும், மாதர், வீடு இவற்றை நான் இன்புற்று சுகிப்பதற்கும், வேண்டுதல் வேண்டாமை காரணமாக நான் நலிவுற்று மெலிவதற்கும், இது போதும் என அலுப்புடன் நான் சலிப்பு அடைவதற்கும், வினையின் வசமாக வரும் நோய்களை நான் பொசுக்குவதற்கும், பல நினைவுகளையும் நான் இங்கு நினைப்பதற்கும், இன்ப துன்பங்களை நான் தாங்கிக் கொள்வதற்கும், இங்கே நான் யார்? (எனக்கு என்ன சுதந்திரம் உண்டு?) என் நெஞ்சக் கல்லிலிருந்து நார் உரிப்பது போலக் கசியச் செய்த அரசே, செவிக்கு நல்ல அமுதம் போன்ற உபதேச மொழியை எனக்கு அருளிச்செய்த அரசனே, உன்னைக் கற்றறியார் மனத்தில் தங்காத மனத்தோனே, கண்ணாடி போல் தெளிவான தடாகத்தை வேலால் கண்டவனே, அரசனாக விளங்கிய தக்ஷப்ரஜாபதியை முன்னொருநாள் அவனது கிரீடம் அணிந்த தலையை கொடிய அம்பால் கொய்த பொன் போன்ற மேனியுடைய சிவபிரானுக்கு குருராஜனே, குறத்தி வள்ளியின் தலைவனே, வயலூரின் அரசனே, பிரமன், திருமால், சிவன் ஆகிய மும்மூர்த்திகளுக்கும் ஒப்பற்ற தலைவனே.
என் புத்தியைக் கொண்டு நான் ஒரு பேரறிவாளனாகி, என் மனம் நன்னெறியின் செல்ல அதனால் நான் ஒரு உத்தம மனிதனாகி, சிவ ஞானத்தில் என் சிந்தை ஊன்றுவதாகி, மேலான யோக வழியை நான் பற்றும்படியாக அருள் புரிவாயாக. என் செல்வமே, அழிவில்லாப் பொருளே, எனது தியானப் பொருளே, சிறந்த பேரின்பப் பொருளானவனே, எனக்குப் புகலிடமே, எல்லாராலும் புகழப்பெறும் மேலான செவ்வேளே, கருவூர்த் தலத்தில் எழுந்தருளிய பெருமாளே.
சதையின் திரளால் முழுமையும் தலை முதல் கால் வரை அலங்காரமாகவே அமையப்பெற்று, சஞ்சலம் என்பது கொஞ்சமேனும் ஒருநாள் கூட இந்த உலகைவிட்டு நீங்காத (எப்போதும் தடுமாறும்) உடம்பை உடைய அடி நாயேன் அகங்காரத்தையும், பந்தங்களையும் விட்டு ஞானத்தால் அறியப் பெறுகின்ற பூரணமானதும், உருவம் இல்லாததும் ஆகிய பரம்பொருளாம் கடவுள் தியானத்தை மேற்கொண்டு, அந்த அனுபவ ஞானத்தில் என் சிந்தனை மாறாத வண்ணம் அப்படியே சேர்ப்பித்து அருள் புரிவாயாக. அசைவே இல்லாத கயிலைமலைக் கடவுள் சிவனார் (அசலேசுரர்) பெற்ற புத்திரனே, கிழக்குத் திசையில் தோன்றுகின்ற உதயசூரியனின் செம்மை ஒளி உடையவனே, இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழ்க் கடவுளே, சகல வேதாகமங்களிலும் வல்லவனே, குற்றமற்றவர்கள் வாழும் வயலூர் என்ற திருத்தலத்தில் வாழ்வோனே, உள்ளம் கசிபவர்களது மனத்தில் ஊறுகின்ற அமிர்தமே, வண்டுகள் மொய்க்கும் தாமரை மலரை ஆசனமாக உடைய பிரமனின் மைத்துனன் முறையில் உள்ள கந்த வேளே, கருணை நிறைந்தவனே, சற்குரு மூர்த்தியே, மேற்குத் திசையில் உள்ள கருவூரில் வீற்றிருக்கும் அழகுப் பெருமாளே.
இறவாத வரம் தந்தும், மீண்டும் பிறவாத வரம் தந்தும், என்னை ஆண்டருளும் நல்ல குருவாகியும், மற்ற எல்லாத் துணைகள் ஆகியும், நிலையான (ஸ்திரமான) முக்தியாம் மோக்ஷவீட்டை அருள்வாயாக. குறப்பெண் வள்ளியை மணந்தவனே, குகனே, புகழ் வாய்ந்த குமரேசனே, அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கு புருஷார்த்தங்களையும் உபதேசிப்பவனே, அவிநாசியில் வீற்றிருக்கும் பெருமாளே.
பக்குவமான ஆசார ஒழுக்க நிலையிலே நின்று, சிறப்பான பச்சிலை, மூலிகைகள் போன்ற உணவையே உண்டு, மெளனத் தவநிலையில் நிற்கும் சிவயோகிகள் தங்களது பக்தி மூலமாக முப்பத்தாறு தத்துவங்களுக்கும் மேற்பட்டதாய் உள்ள மோக்ஷவீட்டைப் பற்றுவதானதும், எந்தவிதமான பற்றும் இல்லாத நிலையை நான் அடைவதற்காகவும், அந்நிலையை நான் அடைந்ததுமே, மாயமாக வந்து என்னைப் பற்றியுள்ள துர்க்குணங்கள் யாவும் என்னை விட்டுப் பிரியவும், அந்த ஞான உபதேசமே என்னைக் காக்கும் ஆயுதமாக மாறி, பாசம் யாவும் அற்றுப்போகும்படி உபதேச மந்திரத்தை வாய்விட்டுக் கூறிய சற்குருநாதனே, உனது அற்புதமான அழகிய திருவடிகளை நான் என்றும் மறவேன். வலிமைமிக்க பன்னிரு தோள்களை, உண்மைக்கு எடுத்துக்காட்டான புயங்களை உடையவனே, நீலோத்பல மலர்க் கூட்டங்களின் நறுமணம் மிகவும் வீசுவதும், பொருந்திய நிலாவின் ஒளி வீசுவதும், முத்தைப் போல் தெளிவான நீருள்ள குளங்களில் குவளைகளும், தாமரைகளும் பூத்திருக்கும் வயலூரின் நாதனே, பொய்யே இல்லாத மெய்யான வீரத்தைக் கொண்டவனே, அழகிய மேனி பொன்னொளியை வீசும் தேகத்தை உடையவனே, அவிநாசி என்ற தலத்தில் இந்தக் கலியுகத்தின் பொய்மை நீங்குமாறு இறைவன் திருவருளின் புகழ் சிறக்கும்படிச் செய்த திருப்புக்கொளியூர் தலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே.
முடிவே இல்லாத பிறவி நோய் முடிவு பெறவும், ஜீவனாகிய ஆத்மாவைப் பற்றிய இந்தச் சிற்றுயிர் ஞான நிலை பெறுவதற்கும், உலகெல்லாம் ஆட்சி செய்யக் கூடிய ஒப்பற்ற உபதேச மொழியொன்றை நீ எனக்கு ஓதி அருள்வாயாக. உலகத்துக்கெல்லாம் தலைவராகிய சிவபிரானின் குமாரனே, இளையோனே, குன்றுகளுக்கெல்லாம் அரசனான குமரனே, புகழால் மிகவும் பெரியவனே, பேரூர்த் தலத்தில் எழுந்தருளியுள்ள பெருமாளே.
முத்தும் நவரத்ன மணிகளும் வரிசையாக விளங்கும் பார்வதி (தமது) இடப் பாகத்தில் நெருங்கி இணைந்துள்ள மலை போன்றவரும், முக்திக் கனியை அளிக்கும் மரம் என்றெல்லாம் ஓதப்படும் முக்கண்களை உடையவருமான சிவபெருமானுக்கும் அருள் பாலித்து உபதேசித்த முருகக் கடவுள், முப்பத்து மூன்று வகையான தேவர்களும் (தமது) திருவடியைப் போற்றி விரும்ப, (இராவணனுடைய) பத்துத் தலைகளும் சிதறும்படி அம்பைச் செலுத்திய (ராமனாகிய) திருமால், அருச்சுனன் (மகாபாரதப்) போரில் வெற்றி பெறும் வகையில் (கண்ணனாக வந்து) தேரைச் செலுத்திய, பச்சை நிறம் கொண்ட மேக நிறப் பெருமான் ஆகிய திருமால் (சூரபத்மன், சிங்கமுகன், தாரகன் ஆகிய அசுரர்களிடத்தில் கொண்ட) பயத்தை நீங்க வைத்த முருகக் கடவுளே, பக்தர்கள் மனத்தில் பொருந்தி விளங்கும் மங்கலத்தை எனக்கும் அருள் புரிவாயாக. (இவ்வகை) ஒலிகளுடன் மத்தளம், இடது கையால் அடிக்கப்படும் ஒரு தோல் கருவி, உடுக்கை ஆகியவை ஒலிக்க, தத்ததகு செச்சரிகை செச்சரிகை என்ற ஜதிக்கு நடனம் ஆடும் தந்தை சிவபெருமானுடன் ஒத்ததான நடனம் புரிபவள், மூன்று லோகங்களுக்கும் முதல்வி, புதுமையான வரப்ரசாதங்களை அடியார்களுக்கு அருளும் பார்வதி ஈன்றருளிய குழந்தையே, நுண்ணிய இடையை உடைய மாதர்களின் மெத்தை வீடுகள் எல்லாம் நிலை பெற்றனவாய் உயர்ந்த மதில்களுடன் விளங்கும், பொற்றாமரைக் குளம் அமைந்த பட்டணமாகிய மதுரையில் வீற்றிருக்கும் பெருமாளே.
அணிந்துள்ள மலரின் மேல் வண்டுகள் திகழும் கரு மேகம் போன்ற நீண்ட கூந்தலைப் பார்த்தும், வேகமாக செலுத்தி வீசப்பட்ட வேல் போன்ற கண்ணைப் பார்த்தும், (என் மனம்) சுழற்சி அடைந்து, மிகவும் வாட்டமுற்று, சோர்வுற்று, மயக்கம் உற்று, விலைமாதர்களின் தோள்களை விருப்பம் கொண்டு அளவு கடந்து நடந்தும், மெலிந்தும் தளர்ந்தும் (நான்) இறந்து போகாமல், விளங்குகின்ற உனது கடப்ப மாலையை விரும்பி, அழகிய தண்டையையும், பல இன்னிசை வகைகளை ஒலிக்கும் கிண்கிணியையும் அணிந்த திருவடிகளைத் தருவாயாக. நன்றாகப் பொருந்தி அமைந்து, மேன்மை பெற நின்ற பொன் மலையாகிய கிரெளஞ்சத்தை அழித்தவனே. உன்னைப் புகழ்ந்தும், (உனது ஆற்றலைக்) கண்டு மகிழ்ந்தும், வணங்கியும் வழிபட்ட குணத்தைக் கொண்ட இந்திரனுடைய வஞ்சிக் கொடி போன்ற நங்கையாகிய தேவயானையின் கணவனே, தினைப் புனத்தைக் காத்த மங்கையாகிய வள்ளியின் நிரம்பப் புளகாங்கிதம் கொண்ட தென்னங் குரும்பை போன்ற மார்பை அணைந்து கலந்த அழகிய மார்பனே, (சரவணக்) குளத்தில் வந்த காரணத்தால் குளவன் (குளத்தில் உற்பவித்தவன்) என்று திருப் பெயர் கொண்டு, இலஞ்சி என்னும் தலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே.
மாலையில் வந்து மாலை வழங்கு மாலை யநங்கன் ...... மலராலும் வாடை யெழுந்து வாடை செறிந்து வாடை யெறிந்த ...... அனலாலுங் கோல மழிந்து சால மெலிந்து கோமள வஞ்சி ...... தளராமுன் கூடிய கொங்கை நீடிய அன்பு கூரவு மின்று ...... வரவேணும் கால னடுங்க வேலது கொண்டு கானில் நடந்த ...... முருகோனே கான மடந்தை நாண மொழிந்து காத லிரங்கு ...... குமரேசா சோலை வளைந்து சாலி விளைந்து சூழு மிலஞ்சி ...... மகிழ்வோனே சூரிய னஞ்ச வாரியில் வந்த சூரனை வென்ற ...... பெருமாளே.
அந்திப் பொழுதில் வந்து காம இச்சையைத் தருகின்ற (மகிழம் பூ) மாலையை அணிந்த மன்மதன் எய்கின்ற மலர்ப் பாணங்களாலும், வாடைக் காற்று கிளம்பி, (அதனுடன் கலந்து வரும் மலர்களின்) வாசனைகள் மிகுந்து வடவா முகாக்கினி போல வீசி எறியும் நெருப்பாலும், தனது அழகு எல்லாம் அழிந்து, மிகவும் மெலிந்து, அந்த இளமை வாய்ந்த வஞ்சிக்கொடி போன்ற பெண் சோர்வு அடைவதற்கு முன்பு, இளமை கூடிய மார்பு அன்பு மிக்கு விம்மும் படியாகவும் நீ இன்று வந்து அருள வேண்டும். யமன் நடுங்கவும், கையிலே வேலாயுதத்தைக் கொண்டு, (பொய்யாமொழிப் புலவர் வரும்) காட்டில் (வேடனாய்) நடந்த முருகனே, வள்ளி மலைக் காட்டில் இருந்த பெண்ணாகிய வள்ளி நாணும்படியாக அவளிடம் பேசி, அவள்மீது உனக்கிருந்த காதலை வெளிப்படுத்திய குமரேசனே, சோலைகள் சுற்றியும் உள்ள, நெற்பயிர் உள்ள வயல்கள் விளைந்து சூழ்ந்துள்ள, இலஞ்சி என்னும் நகரில் (வீற்றிருந்து) மகிழ்ச்சி கொண்டவனே, சூரியன் தான் உதிப்பது எப்படி என்று பயப்படும்படியாக, கடலில் நின்று கொண்டிருந்த (மாமரமாகிய) சூரனை வென்ற பெருமாளே.
(வேண்டுவோர்க்கு வேண்டியதைத் தரும்) கற்பக மரம் போன்ற ஞான மூர்த்தியாகிய கடவுளே, முன்பு விண்ணுலகத்தில் வளர்ந்த தேவயானைக்குத் தலைவனே, இன்பகரமான தேன் சுவை கொண்ட கரும்பு, வெல்லம், சோறு, வெள்ளைச் சர்க்கரை, பால், தேன், நிரம்பிய இளநீர், வாழை, மா, பலா என்னும் மூன்று வகையான பழங்கள், பயறு ஆகிய இவைகளை அழகிய பொலிவுள்ள வயிற்றில் ஏற்றுக் கொண்டு அருளும் யானையாகிய கணபதியின் வலிமை நிறைந்த தம்பியே, (உன்) எழில்மிகு திருவடியை (முற்பிறப்பில்) வணங்கி, உனக்கு வாகனமாக (இப்பிறவியில்) அமைந்த அழகிய மயிலை உடையவனே, திரளாக உள்ளதும், உருளும் தன்மை உடையதுமான ரத்தினம் பதித்த தண்டையையும், அழகிய சுநாதத்தோடு ஒலிக்கின்ற சிலம்புகளையும் அணிந்தவனே, என்றெல்லாம் அழகாக உன்னைத் துதித்து, மனம் கசிந்து தியானித்து, நன்றாக நான் உனது அழகிய திருப்புகழைப் பாடி சிவ நிலையையும் பெற்று, மெய்ஞ் ஞானப் பெரு வெளியாகிய சிதாகாச உயர் நிலையைப் பெற்று, அப்போது உண்டாவதாகச் சொல்லப்படுகின்ற உடலில் ஊறும் ஞான அமுதை உண்ணப் பெறுவேனோ? போர்ச்செருக்குள்ள உடலை உடைய கூட்டமான குதிரைகளும், யானைகளும் குப்பைகளாக உள்ள உடல்களை உடைய அசுரர்களின் பிணங்களும் எட்டுத் திசைகளையும் மூடி இரத்தத்தால் திசைகளெல்லாம் சிவக்க, எட்டுத் திக்குகளில் உள்ள யானைகள் (அஷ்ட திக்கஜங்கள்) அசைந்து ஆடவும், சிற்சில பறை வகைகள் தத்தன தானத் தடுடுடு என்று முழங்க, தாளங்கள் செய்யும் ஒலி தகு தொகு என்று ஒலிக்க, சில முரசு வாத்தியங்கள் மின்னல் மின்னுவது போலவும், இடி இடிப்பது போலவும் தோற்றம் கொடுக்க, அற்புதமான விண்ணுலகத்து தேவர்களின் ஊராகிய பொன்னுலகத்தைத் திரும்பப் பெற்று, அங்கே உள்ள செல்வங்களையும் அடைந்து பொன் மலர்களைச் சிந்த, வேலாயுதத்தைச் செலுத்திய வேலனே, உண்மைப் பொருளை அறிந்த ஞானியாகிய குற மகள் வள்ளியும், (ஐராவதமாகிய) யானையால் வளர்க்கப்பட்ட அழகிய தேவயானையும், மேம்பட்ட அந்த வாகனமாகிய மயிலும் விளங்கப் பெற்று, உத்தர கோச மங்கை என்ற தலத்தில் எழுந்தருளியிருக்கும் பெருமாளே.
தந்திரம் ஏதும் இல்லாத நேரான பார்வையோடு உன்னை நோக்கிக் கருதியும், உன்னை நினைந்து மனம் உருகியும், உன்னைத் துதித்து வாழ்த்தியும், கண்களில் நீர் நிறைந்து வழிய, பக்தி மேலும் மேலும் பெருகவும், இரவும் பகலும் மற்ற விஷயங்களில் சிந்தனை அற்றுப்போக, விருப்பமுடன் குராமலரை அணியும் குமரனே, முருகனே, ஆறெழுத்து அண்ணலே, சரவணபவனே, கார்த்திகைப் பெண்களின் முலைப்பால் அருந்தி அருளிய அரசனே, என்றெல்லாம் பாடி, மொழிகள் குழறும்படி உன்னைத் தொழுது, ஓயாமல் அழுது யான் உன்னால் ஆட்கொள்ளப்பட, உலகப் பொருட்கள் யாவற்றையும் கடந்த ஞானப் பொருளை அடியேனுக்குத் தரமாட்டாயா? உபதேச மூலமாக மோக்ஷ வீட்டைக் காட்டிய சாமர்த்தியசாலியே, மலை அரசனே, மிக்க பராக்கிரமசாலியே, மன்மதன் சாம்பலாய் அழிய நெற்றிக்கண் கொண்டு அவனை எரித்த பசுபதி சிவபிரான் போற்றிய பகவதியாகிய பார்வதி பெற்றளித்த பெருவாழ்வே, அலை ஓசை ஒலிக்கும் கடல் எரிபடவும், அசுரர்கள் அலறி கூப்பாடு போடவும், கிரெளஞ்சமலைக் கூட்டங்களான ஏழு மலைகளும் அதிர்ந்து ஆர்ப்பரிக்கவும், வெற்றி கொண்ட வேலனே, தேவர்களின் உலகில் யாவரையும் நிறைவாகக் குடியேற்றிய எழுகரைநாடு என்ற தலத்தவர் தம்பிரானே.
ஆறு இதழ்த் தாமரையால் வகுக்கப்பட்ட, தொங்கிப் பொருந்தி உள்ள அந்தத் தாமரையின் மேல் உள்ள (சுவாதிஷ்டானம் என்னும்) ஆதார நிலையில், உதிக்கும் செஞ் சூரியன் என்று சொல்லும்படியான செம்பொன் நிறமுள்ள, ஆடம்பரமான பிரமனும், அந்த ஆதாரத்தின் மேல் நிலையில் (மணி பூரகம் என்னும் ஆதார நிலையில் உள்ள) பூமியை உண்டவரும், உயிர்களைக் காக்கும் தொழிலைக் கொண்டவருமாகிய திருமாலும், யோகத்துக்கும் மந்திரங்களுக்கும் மூலமான இருதய கமலத்தில் (அனாகதம் என்ற ஆதார நிலையில்) உள்ள ருத்திரனும், (இம்மூவரும்) தேடி நிற்கும், ஒளியும் மேன்மையும் கொண்ட உருவத்தனாய் (புருவ மத்தியில் உள்ள சதாசிவ மூர்த்தியும்) நடு நிலையில் வீற்றிருக்க, இவர்களுக்கு மேலான நிலையில் இருந்த (உனது) லீலைகளுக்கு வேண்டிய இருப்பிடமும், சாஸ்திர நூல்கள் இறைவன் வீற்றிருக்கும் இடம் இது என்று அறிந்து கூறுவதுமான இரத்தின மயமான அழகிய மண்டபமும், மேன்மை வாய்ந்த ஒளி கோடிக் கணக்காய் விளங்கும் (உனது) இடமாகக் கொண்டு, வீசி நின்று காட்டப்படும் தூபங்களும் தீபங்களும் விளங்கும் விசாலமான மண்டபத்திலே ஏறி அமர்ந்துள்ள வீர பண்டிதனே, வீர குரு மூர்த்தியே, எனது வினைகளைத் தீர்த்து அருள்வாயாக. விஷம் பொருந்திய கழுத்தை உடையவள், ஆடம்பரமுள்ள துர்க்கை, மூப்பு இல்லாதவள், பொன்னிறத்தவள், பலவிதமான ஒளிகளில் விருப்பம் உள்ளவள், ஆசையற்றவள், சுமங்கலி, எல்லா உலகங்களையும் ஈன்று காப்பவள், எல்லா உயிர்களிடத்தும் அன்பு வைத்துள்ள பெருமிதம் உடையவள், துர்க்கைத் தாய், ஆதி நாயகி, அம்பிகை, எல்லாம் அறிந்த இறைவன் நடராஜனாய் ஆடும்போது, அவருடன் அம்பலத்தில் நடனம் புரிய விரும்பிய பேரழகி, காலனை அழித்தவள், பரிசுத்த தேவதைகள் யாவரிலும் தூயவள், முத்தலைச் சூலத்தை ஏந்தியவள், மந்திரங்களின் நல்ல சொற்களைப் பேசுபவள், கறுத்த நீல நிறக் கழுத்தை உடையவள், கபாலத்தை ஏந்தியவள், மாலையை அணிந்தவள், நித்ய கல்யாணி, காம சாஸ்திரம் கூறும் லீலைகளை உலகில் நடத்தி வைப்பவள், சக்தி வழிபாடு முறைகளைக் கூறும் ஆகம நூல்களால் ஆராயப்படுபவள், அத்தகைய சிவகாம சுந்தரியான பார்வதியின் பெருஞ் செல்வமே, தேவர்களின் பெருமாளே.
கடலை, பயறு இவைகளுடன், துவரை, எள், பொரி, சுகியன், வடை, கரும்பு, வாழை இனிய அமுது போன்ற சுவையுடன் பழுத்துள்ள முதிர்ந்த பலவிதமான பழ வகைகள் நல்லபடியாக இவைகளை இன்பத்துடன், கடலால் சூழப்பட்ட பூமியில் உள்ளவர்கள் முதல் யாவரும் தழைத்து வளப்பம் பெறுவதற்காக, அமுதாக தனது துதிக்கையில் மனம் மகிழ்ச்சி பெற கருணை மிகுந்து அள்ளி எடுத்து திருவருள் பாலிக்க, பெரிய குடம் போன்ற வயிற்றினில் அடைக்கின்ற மத யானை போன்ற கணபதியின் பின் தோன்றிய ஒப்பற்ற முருகனே, ஷண்முகனே என்று இரண்டு கைகளும் குவிய, மலர்ந்த கண்களிலிருந்து நீர் பெருக, உன்னைப் பணியாமல், கொடியதும் பெரிதானதுமான மிக்க வினையால் ஏற்படும் துயரத்துடன், வறுமையால் வரும் தாழ்வினால் மனம் அலைச்சல் அடைந்து, விலைமாதர்களின் வஞ்சகப் படுகுழியில் முழுகியும், பாழடைந்தும் திரிகின்ற தன்மை என்னைவிட்டு நீங்காதோ? பெரிய கடல் போல விரைந்து எழுந்து (உயிர்களைக் கவரும்) வரம் பெற்ற யமன் பயப்படவும், சூரியனும் சந்திரனும் பயப்படவும், பூமியும் நெறு நெறு என அதிரவும் போர்க்களத்துக்கு வந்த கொடியர்களான அசுரர்களின் கொடிய தலைகள் சட சட சட என்று அதிர்ந்து வீழவும், சொல்லப்படும் எட்டு மலைகளின் சிகரங்கள் கிடு கிடு என்று அதிர்ச்சி உறவும், உவமை இல்லாத வேலாயுதத்துடன், ஒளி வீசும் பச்சை நிறமுள்ளதும் நடனம் செய்யும் வாகனமான குதிரை போன்ற மயில் மீது ஏறி வேகமாக உக்கிரத்துடன் புவியை வலம் வந்த தாமரை போன்ற திருவடிகளை உடையவனே, ஜீவநதியாகிய கங்கை குமு குமு என்று கொந்தளிக்க, முனிவர்களும் வாசனை மிகுந்த மலர்களோடு ஹர ஹர என்று போற்ற, தேவர்கள் சிறை நீங்க, நறு மணம் வீசும் தாமரை மலர் மீது தங்கியிருந்து சரவணப் பொய்கையில் வளர்ந்த அழகிய பெருமாளே.
நஞ்சு போலவும் அம்பு போலவும் கொல்லும் தன்மையை உடையனவாய், யமனுக்கு ஒப்பாக விளங்குவனவாய், சுழலுகின்ற கண்களின் (மயக்கும்) வித்தைக்கு சொல்லக் கூடிய உவமைப் பொருள் ஏதும் இல்லை என்று சொல்லத்தக்க தந்திரத்தைக் கொண்ட பெண்களின் படுக்கை மீதில் மனம் உருகிய பலவிதமான சிற்றின்ப லீலைகளில் ஆசைப்பட்டு, அதனால் உயிர் அலைச்சல் உற்று கலங்கி வாடுகின்ற, துன்பந் தரும் வழியில் மிகவும் அழிந்து போகின்ற தனியனாம் என்னை, யமன் அனுப்பும் தூதர் கூட்டம் கட்டி அகப்படும்படி, கைகளை இறுகப் பிணைத்து இழுத்துக் கொண்டு போய், இவனை நரகத்தில் தள்ளுங்கள் என்னும் காலம் வரும் போது, விளங்கும் நறு மணம் வீசும் நின் திருவடியாகிய முக்தி நிலையில் சேரும் அழியா இன்ப நிலை எனக்கு ஏற்படக் கூடாதோ? இடி போல் ஒலிக்கும் குரலை உடையவனும், அசுரர்களுடைய அரக்கர் குலத்துக்குத் தலைவனும் ஆகிய ராவணனுடைய இருபது திரண்ட புயங்கள் அறுந்து விழவும், அழகிய (பத்து) தலைகளும் கொத்தாகிச் சிதறி விழவும், விஷம் கொண்ட அம்பு தீயைக் கக்கும்படி செலுத்திய (கோதண்டம்) என்னும் வில்லை உடைய ராமனாகிய திருமாலின் அழகு ஒழுகும் தன்மை வாய்ந்தவளும், சிறிய தொழிலாகிய புனம் காத்தலைச் செய்தவளும் ஆகிய மகள், பச்சைக் கிளி போன்றவளுமாகிய வள்ளியை மணந்த விண்ணுலக சேனாதிபதியே, வடக்கே இருந்த (கிரவுஞ்ச மலை) இடிபட்டுப் பொடியாக, அலை வீசும் கடல் வற்றிப் போக, பெரிய மேரு மலையும் பொடி பட, கருங்கண்களை உடையதும் உக்கிரமானதுமான ஆதிசேஷன் என்னும் பாம்பு பயப்பட, சூரனுடைய ரத்ன கிரீடம் அணிந்த தலை சிதறி விழ, பேய்கள் பல சூழ்ந்து, அவற்றுடன் (சிவகணங்களான) பைரவர்கள் (போர்க்களத்தில்) நடனம் இட, (பகைவர்களைத்) தாக்கிப் பொடியாகும்படி அவர்களை வாளால் வெட்டி, வேலால் குத்திய தம்பிரானே.
தோலாலும் எலும்பினாலும் நீராலும் ஒப்பில்லாத வகையில் அமைந்துள்ள தோள், கை, கால் இவை கூடிய குடிசையாகிய இந்த உடலில் தளர்ந்து போகாமல் நான் வாழ்ந்திருந்த காலத்தில் (உனது திருவடியைப்) பிடித்து நான் வாழ்நாளைச் செலுத்துதற்கு விடாமல் என் மேல் மாறு கொண்ட, திரிசூலத்தை ஏந்திய, யமன் என்னை நெருங்கிவரும் முன்பாக, தனது உருவை கடலுக்குள் (மாமரமாய்) மாற்றுவித்த சூரன் தன் குலத்தாருடன் அழிந்து விழச் செய்து கொன்ற வேலாயுதனே, குற்றமற்ற உனது திருவடியில் பக்தி மிகுந்த புத்தி நுண்மை அடைவதற்கு நீ வெற்றி தரும் திருவருளை எனக்குத் தந்தருள்க. ஆலகால விஷத்தை பூமியில் உள்ளவர்களும் பல திசைகளில் இருந்த விண்ணோர்களும் தத்தம் உயிர் மாண்டு இறந்து படாமல், களித்து நடனமாடி அடியோடு (முழு விஷத்தையும்) உட்கொண்ட ஆதி மூர்த்தியாகிய சிவபெருமானுக்கும் ஏற்றதான உண்மை ஞானமாகிய அந்த வேதப் பொருளை உபதேசித்தவனே, சேல் மீன் போன்றதும், வேலாயுதம் போன்றதும், நீலோற்பல மலரைவிடச் சிறந்ததுமான கண்களைக் கொண்டு உனக்கு விரக தாபம் தந்த மான் போன்ற வள்ளிக்கு மணவாளனே, குற்றம் இல்லாத நீதி வழியில் பொருந்திய பக்தி மிக்க அடியார்கள் உன்னைப் போற்ற, அவர்களை வாழ்வித்த பெருமாளே.
நரம்புகளாலும், தோலாலும், நீராலும் ஆகியுள்ள பலவித வாயில்களை (நவத் துவாரங்களை) உடைய குடிசையாகிய இந்த உடலினுள் அறிவு வாய்ந்தவானாக வாழ்கின்ற காலத்தில், உயிர் போதலுற்று இறந்து போகும் சமயம் நாயும் பேயும் என் உடலைச் சூழுதற்கான காலம் வருமுன்பாக, ஆத்திமாலைகள் நிறைந்த பன்னிரண்டு தோள்களை உடையவனே, உன்னைச் சார்ந்தவர்களுக்கு நல்ல பெரு வாழ்வே, சற்றும் தாமதியாமல் நாயனைய அடியேன் என் நாவைக்கொண்டு உன் திருவடிகளைப் பாடும் வலிமைத்திறலைத் தருவாயாக. ஏழுலகங்களையும் தன் ஒப்பற்ற முயற்சியால் காத்து ஆளுகின்ற திருமாலும், தூய்மையான பாடல்கள் உள்ள வேதத்தை ஓதும் பிரமனும், வெட்டவெளிப் பாழிலும், வானிலும், மண்ணிலும் பரவி நிற்கும் பாதத்தினை நாடமுடியாத சிறப்பினை உடையவரும், பார்வதி தேவியுடன் வாழ்பவரும், பெரிய ரிஷபத்தை வாகனமாக உடையவரும், பொன்னிறச் சடை உடையவருமான ஈசர் சிவபிரானுடைய குமாரனே, செவ்வேளே, அழகனே, தலைவனே, தெய்வமே, தேவர்களின் பெருமாளே.
தாயுடன் அம்மான்மாரும், மனைவியுடன் மைத்துனன்மாரும், என்னுடன் பகைமை பூண்டவர்கள் போல, பெரு நெருப்பின் இடையில், மாயைக்கும் ஆசைக்கும் இடம் தந்த இந்த உடலை இட்டு, நீரின் இடையே போய் முழுகி, பின்பு (மயானத்தை விட்டு) நீங்குதல் என்கிற துன்பத்துக்கு இடம் தந்து, உயிர் போவதற்கு முன்பாக, ஞான உருவத்தனே, கண் பார்த்து அருள்வாயாக. சிறப்பு நிறைந்த தாமரை மலர்போன்ற திருவடியின் அருளைத் தருவாயாக. பிரமனுடன் திருமால், மற்றும் விண்ணில் உள்ள தேவர்கள் இவர்களின் உடலில் கண்ட பயம் நீங்குவதற்கு, தானவர்களாகிய அசுரர்கள் மேம்படாதவாறு ஒப்பற்ற வேலாயுதத்தால் அவர்களை வதைத்திட்ட வீரனே, கொடியவர்களாகிய திரிபுராதி அசுரர்கள் தீயின் இடையே சேரும்படி அழித்தவராகிய சிவபெருமானின் குழந்தையே, செவ்வேள் முருகனே, அழகனே, தலைவனே, தேவனே, தேவர்களுக்கெல்லாம் பெருமாளே.
பிராண வாயு மேற்கொண்டு செல்லாதபடி மூலாதார கமலத்தின் மீது அங்ஙனம் செய்ததின் மூலம் அமுத பானம் பருகும்படி மூலாக்கினி சுடர் விட்டு எழ, மனம், வாக்கு, காயம் இவை மூன்றும் சலனமில்லாமல் நெகிழாதபடி ஒரு நிலையில் இருந்து சிறிதும் மாறாமல், மகிழ்ச்சி தருவதான படிப்படியாக மேலேறும் யோக முறையாலே, நமனையும் தாக்குவது போல் ஆகாயம் வரை பறந்து போகும் மனத்தின் தன்மை மிகவும் எளிதான வகையில் மேலெழுந்து ஆணவத்துடன் பேசுகின்ற எனது என்ற மமகாரமும், நான் என்ற அகங்காரமும் நீங்கி, பிற பொருள்கள் யாவும் நானே ஆகக்கூடிய மனோ பாவத்திற்கு எட்டாத பெரு நிலையைத் தந்து அருள்வாயாக. பரிசுத்தமான தேவியின் தொடி என்னும் கை வளையினின்றும் (மேலெழுந்து வந்த) யமுனை நதி போலவும், ஒப்பற்ற, எங்கும் வியாபித்திருக்கும் தன்மை வாய்ந்த, மேகத்தைப் போலவும், ஏழு உலகங்களின் பரப்பையும் காணவல்ல பெரிய திருமால் (அண்டங்களின்) முழுமையும் எட்டும்படி விசுவ ரூபம் எடுத்தது போலவும், பல திசைகளின் அளவுக்கும், ஆகாய அளவுக்கும் ஓடிச் சென்று, (திருமாலின் உந்தித்) தாமரையில் உதித்த பிரமனின் இருப்பிடமான விண்ணில் உள்ள பிரம்ம மண்டலத்தின் மீதும் ஓடுகின்ற நீலத் தோகை விளங்கும் மயில் வாகனனே, என்றும் இளையவனே, கருணை மேகமே, பரிசுத்தமான கருணைக் கடலே, முடிவில்லாத கருணையை உடைய மேரு மலையே, தேவர்கள் போற்றும் பெருமாளே.
(பூமிக்கு கீழேயுள்ள) அதலத்தில் இருக்கும் ஆதிஷேஷன் நடனம் ஆடவும், பூமி மீதுள்ள மேருமலை அசைந்தாடவும், மாறுபாடு இன்றி (சிவதாண்டவத்துக்கு) ஒற்றுமையாக காளி தான் ஆடவும், அக்காளியோடு அன்று அவள் அதிர்ந்து நடுங்கும்படி (காலை ஊர்த்துவகோலத்தில்) வீசி போட்டியிட்டவரும் ரிஷபத்தில் ஏறுவாரும் ஆகிய சிவனும் ஆடவும், அருகில் பூதங்களும் பேய்களும் ஆடவும், இனிமை மிக்க
ரஸ்வதியும் ஆடவும், தாமரை மலரில் அமரும் பிரமனும் ஆடவும், அருகில் பொருந்திய தேவர்கள் எல்லாம் ஆடவும், சந்திரன் ஆடவும், தாமரையாள் நின் மாமியார் லக்ஷ்மியும் ஆடவும், விஸ்வரூபம் எடுத்த நின் மாமனார் விஷ்ணுவும் ஆடவும், நீ ஏறிவரும் மயிலும் ஆடி, நீ நடனம் ஆடி என்முன்னே வரவேண்டும் கதாயுதத்தை தன் தோளினின்று அகற்றாத வீமன் எதிர்த்துச் செலுத்திய அம்பு மழையில் பெரும் பகைவர்களின் (கெளரவர்கள்) பெரிய சேனை பொடிபட (உதவியவரும்), கதறிச் சென்ற பசுக்கள் மீண்டுவரக் (குழலை ஊதியவரும்), அர்ச்சுனன் ஏறிய தேரின் பாகனாயிருந்து, தங்க மயமானதும், வேத ஒலியைத் தரும் சங்கை ஊதியவரும், அலை வீசும் பாற்கடல் மீதிலே (பாம்பணையில்) பள்ளி கொண்டவரும், (வாமனாவதாரத்தில்) உலகத்தை அளந்து மூடிய பாதத்தாரும், கருடனை வாகனமாகக் கொண்டவரும், ஆன மாமாயன் திருமாலின் மருமகனே அன்றலர்ந்த மலர் மாலையை அணிமார்பனாகிய (திருவண்ணாமலையை ஆண்ட) ப்ரபுட தேவ மஹாராஜனின் உள்ளமும் மகிழ்ச்சியில் ஆடும் வண்ணம் அவனது நெஞ்சிலே வாழும் தேவர் பெருமாளே.
கொடுமையான நோய்களை அடைந்து, விக்கல் எடுத்தும், வாந்தி எடுத்தும், கூன் விழுந்தும், அறிவு கலங்கப் பெற்றும், உடலில் பொருந்தி வரும் ஒரு மிக வேடிக்கையான மாறுபட்ட நிலையை அடையாதபடி, நிலைத்து நிற்காது அழிவு பெறும் மற்ற சமயக் கூச்சல்களிலிருந்து பிழைத்து வந்துள்ள என் தலை மீது, மெய்ப் பொருளை நான் பெற, உனது திருவடியை அன்பு கொஞ்சம் வைத்து ஆண்டு அருள்வாயாக. உடுக்கை வாத்தியம் ஒலிக்க, பேய்கள் கைகளைக் கொட்டிச் சூழ்ந்து அவ்விடத்தில் தம்முடன் கூத்தாட, தொகு தொகு திகு திகு தொக்குத் திக்குத் தோம் தாம் தரி என்ற தாளத்தைப் படியப் போடுகின்ற பதி விரதையாகிய பார்வதி (அதற்குத் தகுந்தபடி) ஒத்திட்டு ஒலிக்க, தூய சுடு காட்டில் ஆடுகின்ற பழையவராகிய சிவபெருமானுடைய குமரனே, குறப்பெண்ணாகிய வள்ளிக்குத் துணைவனான பெருமாளே.
குற்றமற்ற சேவற்கொடியை உடையவனே, உயர்ந்த பற்களுடையவர்களும், போரை விரும்பும் தன்மையும் உடைய அசுரர்கள் மீது கோபிக்கின்றவனே, நீண்ட மலையாகிய கிரெளஞ்சமலையைப் பிளந்த வீர மூர்த்தியே, வேடர் குலக்கொழுந்தாகிய வள்ளியின் கணவனே, தூய்மையான அந்தணரும், தேவர்களும் வணங்கும், மலைபோன்ற தோள்களை உடையவனே எனத் துதித்து, இரு கண்களிலிருந்தும் ஆனந்தக் கண்ணீர் சொரியவும், மேன்மேலும் அன்பு பெருகிய மனத்தனாகி எல்லா பூதங்களும் சேர்ந்த உடம்பும், உடம்பில் பொருந்திய அரிய உயிரும், மனம், புத்தி முதலிய கரணங்களும் கட்டு நீங்கவும், யான் என்ற நினைப்பும் விலகியபோது சிவ போதம் என்ற ஓர் உணர்வினாலே மாறுபட்ட எல்லா வாதிகளும், சமயங்களும் ஒதுங்கிப் போய்விடவும், உள்ளது என்றும், இல்லது என்றும் நின்ற உண்மைப் பொருளை அறிவில்லாத சிறிய அடியேன் அறியும்படியாக இன்றைய தினம் உபதேசித்து அருள் புரிவாயாக. மகர மீனக் கொடியைக் கொண்டு விளங்குவதும், செம்மையான தமிழ் முழங்குவதுமான சந்தன மலையாம் பொதிகையில் பிறந்த தென்றல் காற்றும், நானாவிதமான ஆசையைத் தூண்டும் மணமுள்ள மலர் அம்புகளும், பலவிதமான மலர்க் கொத்துக்களில் உள்ள மணத்தில் விளையாடும் வண்டுகளின் வரிசையாகிய நாணுடன், மேலான மலர் அலங்காரமும், கரத்திலே ஏந்திய இனிய கரும்பு வில்லும் கொண்டு காதல் போர் செய்ய எழுந்து வந்த மன்மத ராஜனை வெந்து சாம்பலாகும்படியாகக் கோபித்த நெற்றியில் குவிந்த கண்ணை உடையவரும், அழகிய இளம்பிறைச் சந்திரனையும், பழமையான கங்கா நதியையும் தரித்த ஜடாமுடியை உடையவருமாகிய சிவபெருமானும், வேதமும் நின்று தொழும்படியாக விளங்கி ஞான மணம் திகழும் அபிராமி அம்மையும், சங்குகளால் செய்த கொலுசுகளை அணிந்த திருவடித் தாமரையை உடைய சங்கரியும், ஹிமவானின் புத்திரியும், மூன்று கண்களை உடையவளுமான பார்வதியும் பெற்றருளிய முருகனே, தேவயானை விரும்புகின்ற பெருமாளே.
நெருப்பு, காற்று, மண், நீர், உயர்ந்த விண் இந்த ஐம்பூதங்களால் விளங்குகின்றதும், ஆசை என்னும் சேறு ஊறியுள்ளதும், தோலால் ஆனதுமான பையாகிய இந்த உடம்பு, நானாக எண்ணுகின்ற பெரும் மாயையை ஒழிக்க அறியாமல், பேய்களும், பூதங்களும், வயதான பருந்துகளும், நரிகளும், காகங்களும் கிழித்து, இழுத்து உண்ணப் போகின்ற உடலை விரும்பிப் பாதுகாத்து, பேய் போன்ற நான் நடத்துகின்ற கோணங்கித்தனமான வாழ்க்கை தொலையும் வண்ணம் விலக்கவல்ல உனது திருவடிகளைத் தந்து அருள்வாயாக. புல்லாங் குழலில் வைத்துத் தடவும் சீரான கையில் வேல் ஏந்தும் வேடுவர்கள் (வாழும்) வள்ளிமலைக் காட்டில், பொருந்தி இருந்த வள்ளியை விரும்பித் திருமணம் செய்ய உருவத்தை மாற்றிக் கொண்டு, திரும்பாது காம ஆசை மேலெழ, பொருந்திய வேலுடனே, ஒற்றர் செய்தி அறியப் போவதுபோலச் சென்ற இளையவனே, ஒப்பற்ற மயிலின் மேல் ஏறி, பொன்னிறம் உடைய கிரெளஞ்ச மலையின் வேர் பறியும்படி அதனைத் தாக்கி, மாறுபட்டு எதிர்த்த அசுரர்கள் வெந்து சாம்பலாக ஓட்டி ஒழித்து, தேவர்களின் திருநாட்டைக் காப்பாற்றிய பெருமாளே.
செருக்குடன் வரும் மன்மத வேளின் கைகளிலிருந்து வரும் மலர்ப் பாணங்களினாலும், நீண்ட துன்பத்தைத் தரும் நீலநிறக் கடலாலும், மெதுவாக வந்து (தன்சோகக் குரலைக் காட்டும்) சோலையிலுள்ள குயிலினாலும், காதலால் உடல் உருகும் மான் போன்ற என் மகளை அணைத்துக் கொள்ள மாட்டாயா? இனிமையான தமிழில் பாடல்களைப் பாடவல்ல தெளிவு கொண்ட சம்பந்தப் பெருமானே, செம்மை வாய்ந்த குமரேசன் எனப் பெயர்பெற்ற பராக்கிரமசாலியே, வள்ளற் பெருமானாம் சிவபிரான் தொழுகின்ற ஞானத் திருவடிகளை உடையவனே, வள்ளிக்கு மணவாளனாம் பெருமாளே.
நீல நிறத்தைக் கொண்ட மேகத்தைப் போன்ற மயில் மேலே நீ எழுந்தருளிவந்த புறப்பாட்டுத் தரிசனத்தைக் கண்ட காரணத்தால் உன்மீது ஆசை கொண்ட இந்தப் பெண்ணுக்கு, உனது நறுமணம் மிக்க மார்பில் தங்கி விளங்கும் மாலையைத் தந்து அருள்புரிவாயாக. உன் வேலாயுதத்தைக் கொண்டு கடலினை முன்பு வற்றும்படி செலுத்தியவனே, வீரம் மிக்க சூரர்களின் குலத்துக்கே யமனாக விளங்கியவனே, ரிக், யஜூர், சாம, அதர்வண என்ற நான்கு அழகிய வேதங்களின் பொருளாக விளங்கியவனே, எல்லா உயிர்களுக்கு உள்ளும் இருப்பவன் நான்தான் என்று பெருமை பாராட்டி மார்பினைத் தட்டிக் கொள்ளும் பெருமாளே.
என்னை மலர்ப் பாணங்களினால் தாக்கியும் தாக்காததுபோல மறைந்திருக்கும் மன்மதனாலும், அண்டை அயலிலுள்ள பெண்களின் பழிச்சொற்களினாலும், தன் கிரணங்களினால் எரித்தும் எரிக்காதது போல விளங்கும் நிலவினாலும், நான் விரக வேதனையில் மூழ்கித் தவிப்பது தகுதியாகுமா? குறையொன்றும் இல்லாத பராக்கிரமம் உடைய வீரனே, உன்னுடன் வாதிட்டு எதிர்த்த சூரனின் குலத்துக்கே யமனாக வந்து வாய்ந்தவனே, அடக்க முடியாத வீரம் செறிந்த மயிலை வாகனமாகக் கொண்டோனே, வேறு யாரையும் உனக்கு ஒப்பாகச் சொல்லமுடியாத பெருமாளே.
(1) கும்பகோணம், அதனுடன் (2) திருவாரூர், (3) சிதம்பரம், தேவர்கள் விரும்பி வாழ்க்கை கொள்ளும் (4) சீகாழி, நிலையான கொன்றை மலர்ச்சடையர் சிவனுடைய (5) மாயூரம், அழகு வாய்ந்த (6) சிவகாசி, திரளான பக்த ஜனங்கள் கூட்டமாக உலாவும் (7) ராமேஸ்வரம், ஒப்பற்ற நிலையில் வந்து பூஜை செய்கின்ற, நான்கு வேதங்களும் வல்ல மறையவர்கள் கூட்டமாகக் கூடும் (8) புள்ளிருக்கும் வேளூர் - வைத்தீஸ்வரன் கோயில், (9) திருப்பரங்குன்றம் எனப்படும் தலங்களில் வீற்றிருக்கும் செல்வமே, (10) ஜம்புகேஸ்வரம் - திருவானைக்கா, (11) திருவாடானை, நீ மகிழ்ந்து வாழும் (12) திருச்செந்தூர், (13) திருவேடகம், நீ வாழ்கின்ற சோலைமலையாம் (14) பழமுதிர்ச்சோலை, தென்றல் காற்றுக்குப் பிறப்பிடமான பெருமலை (15) பொதியமலை, என்னும் தலங்களில் எல்லாம் வீற்றிருக்க வந்தவனே, (வடக்கே) பூரித்தலத்தில் (16) ஜெகந்நாதன் உருவில் காட்சி தந்தவனே, செம்மையான உபதேசச் சொல்லை நீ உன் தந்தைக்குச் சொன்ன (17) திருவேரகம், சிறந்த (18) திருவாவினன்குடி - பழநி, (19) குன்று தோறாடல், இவையுடன் பழம்பதி எனப்படும் (20) திருப்புனவாயில், விரிஞ்சிபுரம் எனப்படும் (21) திருவிரிஞ்சை, ஆகிய தலங்களில் அமரும் சிறந்த செம்பொன் நிறம் கொண்ட திருமேனியனே, சோழநாட்டின் தலைநகராகிய வஞ்சி என்னும் (22) கருவூரில் எழுந்தருளியுள்ள தெய்வமே, கம்பாநதி தீரத்தில் உள்ள (23) காஞ்சியில் மாமரத்தின் அடியில், மேலே லிங்க ரூபத்தில் பொருந்தி விளங்கும் அழகனே, சங்குகள் உலவும் காவேரி ஆறு கடலில் சங்கமம் ஆகும் (24) காவிரிப் பூம்பட்டினத்திலும், (25) திருச்சிராப்பள்ளி மலையில் வாழ்கின்ற தேவ சேனாபதியே, (26) வயலூர்ப் பெருமானே, நறுமணங்கள் நிரம்பிய (27) திருப்போரூர், நீ நடனம் புரிந்த தலமாம் அழகிய சிவாயம் என்ற (28) திருவாட்போக்கி எனப்படும் தலங்களில் விளங்குபவனே, பாவத்தைத் தொலைக்கும் (29) திருக்கண்டியூரில் எழுந்தருளும் ஸ்வாமியே, கடப்ப மாலையை அணிந்துள்ள அழகிய மார்பனே, எங்கள் சிவபிரானுடன் நடனப் போட்டி செய்த காளியும், அவளைச் சேர்ந்த தோழியரும், தேவலோகத்து ரஸ்வதியும், லக்ஷ்மி எனப்படும் நெடுமாலுக்கு உரிய அழகியும், ஆகிய இவர்கள் யாவரும் தினந்தோறும் உள்ளத்தில் எழுச்சியுடன் நின்று, பொருந்திய துதியுடன் போற்றுகின்ற தேவயானையாம், இந்திரன் மனைவி சசியின் மகளோடு, குறக்குலத்தில் தோன்றிய பெண் மான் வள்ளியையும் ஆசையுடன் திருமணம் செய்து கொண்டு உலகத்தில் எங்குமுள்ள தேவாலயங்கள் தோறும் வீற்றிருக்கும் பெருமாளே.
எழுத்துக்களுள் அகரம் முதலில் நிற்பது போல எப்பொருளுக்கும் முதன்மையாகி எல்லாவற்றிற்கும் தலைவனாகி எல்லோருக்கும் மேம்பட்டவனாகி யாவர்க்கும் உள்ள - யான் - என்னும் பொருளாகி பிரமன் என்னும் படைப்பவன் ஆகி திருமால் என்னும் காப்பவன் ஆகி சிவன் என்னும் அழிப்பவனாகி அம்மூவருக்கும்மேலான பொருளாகி இங்குள்ள பொருட்கள் யாவுமாகி எங்கெங்கும் உள்ள பொருட்களும் ஆகி இனிமை தரும் பொருளாகி வருபவனே இந்த பெரிய பூமியில் எளியவனாகிய இந்த அடியேனும் வாழ எனதுமுன் ஓடி வரவேணும் யாகங்களுக்குத் தலைவனாக விளங்கும் இந்திரன் (வலாசுரப் பகைவன்) மகிழ்ச்சியும் களிப்பும் அடையச்செய்யும் அழகிய வடிவம் கொண்டவனே காட்டில் வசித்த வேடன் (அந்திமான்) செய்த பூஜையை மகிழ்வுடன் ஏற்ற கதிர்காமம் (உன் பதியாக) உடையவனே (அதே ஒலி) என்ற ஜதிகளில் ஆடும் மயிலோனே லக்ஷ்மிகரம் நிறைந்த பழமுதிர்ச்சோலை மலையின்மீது வீற்றிருக்கும் பெருமாளே.
காரணம தாக வந்து ...... புவிமீதே காலனணு காதி சைந்து ...... கதிகாண நாரணனும் வேதன் முன்பு ...... தெரியாத ஞானநட மேபு ரிந்து ...... வருவாயே ஆரமுத மான தந்தி ...... மணவாளா ஆறுமுக மாறி ரண்டு ...... விழியோனே சூரர்கிளை மாள வென்ற ...... கதிர்வேலா சோலைமலை மேவி நின்ற ...... பெருமாளே.
ஊழ்வினையின் காரணமாக வந்து இந்த பூமியில் பிறந்து, காலன் என்னை நெருங்காதபடிக்கு நீ மனம் பொருந்தி நான் நற்கதியை அடைய, திருமாலும் பிரம்மாவும் முன்பு கண்டறியாத ஞான நடனத்தை ஆடி வருவாயாக. நிறைந்த அமுது போல் இனிய தேவயானையின் மணவாளனே, ஆறு திருமுகங்களையும், பன்னிரண்டு கண்களையும் உடையவனே, சூரர் கூட்டங்கள் இறக்கும்படியாக வெற்றி கொண்ட ஒளிமிக்க வேலனே, பழமுதிர்ச்சோலை மலையில் மேவி விளங்கும் பெருமாளே.
திக்குகள் நான்கு பக்கங்களாகக் கொண்ட சதுரமான மூலாதாரக் கமலத்தில் பொருந்தி இனிய ஒளி வீசிட, இரண்டு பக்கங்களிலும் பொருந்தி (இடை கலை, பிங்கலை என்னும் இரு நாடிகளின் வழியாக) ஓடுகின்ற பிராண வாயு விருப்பம் மிக்கெழ சுவாதிஷ்டான (கொப்பூழ்) முதல் ஆக்கினை (புருவநடு) ஈறாக உள்ள ஐவகைக் கமலங்களிலும் ஓட வைத்து, (தில்லையில் நடனம் செய்யும் நடராஜரின்) கனக சபையும் சந்திர காந்தியால் நிரம்பி விளங்க, மூன்று (அக்கினி, ஆதித்த, சந்திர) மண்டங்களிலும் பொருந்த நிறுத்தி, வெளிப்படும் சோதியான ஆயிரத்து எட்டு இதழோடு கூடிய, (பிரமரந்திரம் - பிந்து மண்டலம்,
ஹஸ்ராரம் - அதனுடன் கூடிய ஆறு ஆதாரங்களுடன் மொத்தம்) ஏழு இடங்களையும் கண்டறிந்து, சிவந்த ஒளியுடன் கூடிய பன்னிரண்டாம் (துவாதசாந்த) ஆதாரத்தில், சிவசக்தி ஐக்கிய நாத ஓசை நிறைந்துள்ள ஒப்பற்ற சத்தம் மிகுந்த பளிங்கு போன்ற காட்சியுடன் கூடியதாய், ஒன்று சேர்ந்து மதி மண்டலத்தினின்றும் பெருகிப் பாயும் கலா அமிர்தப் பேற்றுடன், புகழ்ந்து சொல்லப்படும் வேத வாசி சக்திக்கு ஆதாரமாக உள்ள திரு நந்தி ஒளிக்குள்ளே, ஊமையாகிய என்னை விளங்க வைத்து நீ அருளும் முத்தியைப் பெற, பிரமரந்திரம் எனப்படும் மூலவாசல் வெளியிட்டு விளங்க, உனது அருளாற்றலால் ஒளிர்கின்ற யோக விதங்கள் எட்டும் இதில் பொருந்தும் வகையை நான் அறியுமாறு இன்று தந்தருளுக. குதிரை வியாபாரி என வந்து குதிரைகளை விற்று மகிழ்ச்சிகொண்ட திருவாதவூரராகிய மாணிக்க வாசகரை அடிமையாகக் கொண்ட கிருபாகர மூர்த்தி, பொன் உருவத்தினன், குதிரைச் சேணம், சவுக்கு வகைகளைப் பிடித்த செவ்விய திருக்கையைக் கொண்டவனாகிய சிவபெருமானுடைய இடது பக்கத்தில் உறைகின்ற சக்தி, கெளரி, மழலைச் சொல் பேசும் மாது, பவளமும் பச்சை நிறமும் கொண்ட வடிவினள், என்னுடைய குற்றம் நிறைந்த ஏழு பிறப்புகளையும் அறுத்த உமா தேவியார் ஈன்ற செல்வமே, காசி, இராமேசுரம், திருவாட்போக்கி, திருச்செங்கோடு, திருவாரூர், வேலூர், தேவூர், காஞ்சீபுரம், மதுரை, திருப்பறியல், திருவானைக்கா, திருப்புனைவாசல், திருவண்ணாமலை, திருத்தணிகை, திருச்செந்தூர், நாகப்பட்டினம், சீர்காழி, வைத்தீஸ்வரன் கோவில் (வேளூர்), பழநிமலை, திருக்குறுக்கை, திருநாவலூர், திருவெண்ணெய் நல்லூர் முதலிய தலங்களில் விளங்கும், (மேலும்) உனக்கு விருப்பமான சோலை மலையிலும் உறைகின்ற ஜீவன் முக்தர்கள் புகழ்கின்ற தம்பிரானே.
அழகு மிக்க உடல் பசுமையான குளிர்ந்த நிறத்துடன் விளங்க, கால் சிலம்பின் ஓசை கலீர் கலீர் என்று ஒலிக்க, இணைந்து செல்லும் பாதங்கள் செக்கச் செவேல் எனத் திகழ வருகின்ற விலைமாதர்கள் சிலரும், கூட்டங்களுக்குக் (கொடுப்பதற்காக) கட்டிளமைப் பருவத்து சில சில பெண்களும், நூறு லக்ஷ கோடி அளவில் மிகப் பலத்த மோகத்தோடு தேடி வைத்துள்ள பொருள்கள் அவ்வளவையும் வாட்டமுற்று ஐயோ ஐயோ என்னும்படி (இழக்கச் செய்கின்ற) இளம் மாதர்களின் நெஞ்சம் எல்லாம் பரந்துள்ள மலை போன்ற மார்பகம் பளீர் பளீர் என்று ஒளி வீச, அதைக் கண்டு மனக் கலக்கம் உற்று என் உயிர் பகீர் பகீர் எனப் பதைக்க, அம்மாதர்களின் பெரிய மயக்கத்தில் ஆசை உண்டு, உண்டு என்று நினைவானது ஓடி, (அந்தக் காமப் பித்தக்) காற்று என்னைப் பிடிக்கின்ற சமயத்தில் அடா அடா என்று என்னைக் கூவி அழைத்து, உனக்கு என்ன மயக்கம் இது சொல்லுக, சொல்லுக என வற்புறுத்தி, நீ அன்பு வைத்த திருவடி இதோ, இதோ என்று கூறித் தந்து அருள் புரிவாயாக. பாரதத்தை மேரு மலையின் வெளிப் புறத்தில் நன்கு விளங்கும்படி தமது தந்தத்தையே ஒடித்து அந்த நாளில் மலையில் எழுதிய யானை முகத்தவரும், சூரியனைப் போன்ற நிறத்தை உடைய கணபதியும், சிறிய மூஞ்சூறு வாகனத்தவரும் ஆகிய விநாயகருக்குத் தம்பியே, பாக்கள் சிறப்புடனும் அழகுடனும் உள்ள தமிழை, தமிழ்க் கடவுளாய் நின்று, சிறந்த அகத்திய முனிவருக்கு, செவியில் நன்கு ஆராய்ந்து உபதேசம் செய்த, இயல்பாகவே பாசங்களினின்று நீங்கிய வேத குருபரனாகிய குமரேசனே, போரில் மிக்கவனாகிய சூரன் விட மாட்டேன் விடமாட்டேன் என்று, நேராக வந்து எதிர்த்தவுடன் வேலாயுதத்தை படீர் படீர் என்ற ஒலியுடன் (அந்த அசுரர்களைப்) போய் அறுத்த போது ரத்தம் குபீர் குபீர் என்று பூமியில் சிந்த ஆயுதத்தை வீசிய குகனே, குகனே, விளங்கும் சோலை மலையில் வீற்றீருக்கும் தெய்வமே, தேவயானையின் தோளை அணைந்து அன்பு கொண்ட (6+6=12) பன்னிரண்டு புயங்களைக் கொண்ட பெருமாளே.
துடிகொ ணோய்க ளோடு வற்றி தருண மேனி கோழை துற்ற இரும லீளை வாத பித்த ...... மணுகாமல் துறைக ளோடு வாழ்வு விட்டு உலக நூல்கள் வாதை யற்று சுகமு ளாநு பூதி பெற்று ...... மகிழாமே உடல்செய் கோர பாழ்வ யிற்றை நிதமு மூணி னாலு யர்த்தி யுயிரி னீடு யோக சித்தி ...... பெறலாமே உருவி லாத பாழில் வெட்ட வெளியி லாடு நாத நிர்த்த உனது ஞான பாத பத்ம ...... முறுவேனோ கடிது லாவு வாயு பெற்ற மகனும் வாலி சேயு மிக்க மலைகள் போட ஆழி கட்டி ...... யிகலூர்போய்க் களமு றானை தேர்நு றுக்கி தலைக ளாறு நாலு பெற்ற அவனை வாளி யால டத்தன் ...... மருகோனே முடுகு வீர சூர பத்மர் தலையின் மூளை நீறு பட்டு முடிவ தாக ஆடு நிர்த்த ...... மயில்வீரா முநிவர் தேவர் ஞான முற்ற புநித சோலை மாமலைக்குள் முருக வேல த்யாகர் பெற்ற ...... பெருமாளே.
துடிதுடிக்கச் செய்கின்ற நோய்களால் உடல் வற்றிப் போய், இளமையாக இருந்த மேனியில் கபமும் கோழையும் மிகுந்து, இருமலும், காச இழுப்பும், வாதமும், பித்தமும் என்னை அணுகாதபடி, இல்லறம், துறவறம் என்ற வகைப்படும் இந்த வாழ்வை விட்டு, உலகிலுள்ள சாத்திர நூல்களைக் கற்க வேண்டிய வேதனை நீங்கி, சுகத்தைத் தரும் சுய அனுபவம் அடைந்து மகிழாமல், உடலை வளர்க்கும் கோரமான பாழும் வயிற்றுக்கு நாள்தோறும் உணவு வகைகளைத் தந்து உடலைக் கொழுக்கச் செய்து, வெறும் ஆயுளை நீட்டிக்கும் யோக சித்தியைப் பெறலாமோ? உருவம் கடந்த பாழ்வெளியில் ஆகாயமாகிய வெட்டவெளியில் இசையுடன் ஆடுகின்ற நடனனே, உனது கூத்தாடும் ஞான மயமான திருவடித் தாமரையை நான் அடைவேனோ? வேகமாகத் தாவ வல்லவனும், வாயு பெற்ற மகனுமான அநுமனும், வாலியின் மகன் அங்கதனும் நிரம்ப மலைகளைக் கடலின் மீது போட்டுக் கட்டிய அணைவழியாக பகைவனது ஊராம் இலங்கையை அடைந்து, போர்க்களத்தில் யானைப்படையையும், தேர்ப்படையையும் தூளாக்கி, பத்துத் தலைகள் கொண்ட ராவணனை அம்பினால் கொன்ற அண்ணல் ராமனின் மருகனே, வேகமாக எதிர்த்துவந்த வீரர்களான சூரன், பத்மன், சிங்கமுகன், தாரகாசுரன் ஆகியோரின் தலைகளில் உள்ள மூளைகள் சிதறித் தூளாகி முடிவுபெற, (துடிக் கூத்து) நடனம் ஆடிய மயிலின் மீதமர்ந்த வீரனே, முநிவர்களும், தேவர்களும் ஞானம் அடைந்த பரிசுத்தமான சோலை மாமலைக்குள் (பழமுதிர்ச்சோலைக்குள்) வீற்றிருக்கும் வேல் முருகனே, தியாகமூர்த்தியாம் சிவபிரான் ஈன்ற பெருமாளே.
வாதினை யடர்ந்த வேல்விழியர் தங்கள் மாயமதொ ழிந்து ...... தெளியேனே மாமலர்கள் கொண்டு மாலைகள் புனைந்து மாபதம ணிந்து ...... பணியேனே ஆதியொடு மந்த மாகிய நலங்கள் ஆறுமுக மென்று ...... தெரியேனே ஆனதனி மந்த்ர ரூபநிலை கொண்ட தாடுமயி லென்ப ...... தறியேனே நாதமொடு விந்து வானவுடல் கொண்டு நானிலம லைந்து ...... திரிவேனே நாகமணி கின்ற நாதநிலை கண்டு நாடியதில் நின்று ...... தொழுகேனே சோதியுணர் கின்ற வாழ்வுசிவ மென்ற சோகமது தந்து ...... எனையாள்வாய் சூரர்குலம் வென்று வாகையொடு சென்று சோலைமலை நின்ற ...... பெருமாளே.
வம்பு செய்வது போன்று அடர்ந்து நெருங்கி வேலொத்த கண்களை உடைய பெண்களின் மயக்குதல் என்னை நீங்கி நான் தெளிவு பெறவில்லையே. நல்ல மலர்களால் ஆன மாலைகளைத் தொடுத்து நின் சீரிய அடிகளில் சூட்டி நான் பணியவில்லையே. முதலில் தொடங்கி இறுதி வரை உள்ள சகல நலன்களும் ஆறுமுகம் என்ற உண்மையை நான் தெரிந்து கொள்ளவில்லையே. ஒப்பற்ற ஓங்கார மந்திர ரூபநிலை கொண்டது ஆடுகின்ற நிலையிலுள்ள மயில்தான் என்று அறியவில்லையே. நாதமும் விந்துவும் சேர்ந்து உருவாக்கிய இவ்வுடலால் உலகமெல்லாம் அலைந்து திரிகின்றேனே. குண்டலினியாக ஓடும் பிராணவாயு அடைகின்ற ஆறாவது நிலையை (ஆக்ஞாசக்ரமாகிய ஒளி வீசும் ஞான சதாசிவ நிலையைக்) கண்டு தரிசித்து விருப்புற்று அந்த நிலையிலே நின்று நான் தொழவில்லையே. அந்த ஞான ஒளியை உணர்கின்ற வாழ்வே சிவ வாழ்வு என்ற சோஹம் -> ஸ + அஹம் -> அது நானேஅதுவே நான்
என்ற நிலை தந்து, என்னை ஆள்வாய்.
சூரர் குலத்தை
வென்று வெற்றியோடு போய்
பழமுதிர்ச்சோலை மலையில்
வீற்றிருக்கும் பெருமாளே.
ஏறத்தக்க மயில் மீது ஏறி திருவிளையாடல்களைச் செய்தது உன் ஒரு முகம்தான். சிவபெருமானுக்கு ஞான உபதேசம் செய்தது உன் ஒரு முகம்தான். உன் திருப்புகழைக் கூறும் உன் அடியார்களின் இருவினைகளையும் தீர்த்துவைப்பது உன் ஒரு முகம்தான். கிரெளஞ்ச மலையை உருவும்படியாக வேலை ஏவியதும் பின்பு அமைதிகாத்ததும் உன் ஒரு முகம்தான். உனக்கு எதிரியாக முரண்பட்ட அசுரர்களை வதைத்து அழித்ததும் உன் ஒரு முகம்தான். வள்ளியைத் திருமணம் செய்துகொள்ள விழைந்து ஆசையுடன் வந்ததும் உன் ஒரு முகம்தான். அவ்வாறெனில், நீ ஆறுமுகனாகக் காட்சி அளிப்பதன் பொருளை நீ எனக்கு அருளிச் செய்ய வேண்டும். தொன்மைவாய்ந்த திருவண்ணாமலையில் வீற்றிருக்கும் பெருமாளே.