செம்பொன் மேனிவெண் ணீறணி வானைக் கரிய கண்டனை மாலயன் காணாச் சம்பு வைத்தழல் அங்கையி னானைச் சாம வேதனைத் தன்னொப்பி லானைக் கும்ப மாகரி யின்னுரி யானைக் கோவின் மேல்வருங் கோவினை எங்கள் நம்ப னைநள் ளாறனை அமுதை நாயி னேன்மறந் தென்நினைக் கேனே
|
1
|
விரைசெய் மாமலர்க் கொன்றையி னானை வேத கீதனை மிகச்சிறந் துருகிப் பரசு வார்வினைப் பற்றறுப் பானைப் பாலொ டானஞ்சும் ஆடவல் லானைக் குரைக டல்வரை ஏழுல குடைய கோனை ஞானக் கொழுந்தினைக் கொல்லை நரைவிடை யுடைநள் ளாறனை அமுதை நாயி னேன்மறந் தென்நினைக் கேனே
|
2
|
பூவில்வா சத்தைப் பொன்னினை மணியைப் புவியைக் காற்றினைப் புனல்அனல் வெளியைச் சேவின் மேல்வருஞ் செல்வனைச் சிவனைத் தேவ தேவனைத் தித்திக்குந் தேனைக் காவியங் கண்ணி பங்கனைக் கங்கைச் சடைய னைக்கா மரத்திசை பாட நாவில் ஊறுநள் ளாறனை அமுதை நாயி னேன்மறந் தென்நினைக் கேனே
|
3
|
தஞ்ச மென்றுதன் தாளது வடைந்த பாலன்மேல் வந்த காலனை உருள நெஞ்சில் ஓர்உதை கொண்டபி ரானை நினைப்ப வர்மனம் நீங்ககில் லானை விஞ்சை வானவர் தானவர் கூடிக் கடைந்த வேலையுள் மிக்கெழுந் தெரியும் நஞ்சம் உண்டநள் ளாறனை அமுதை நாயி னேன்மறந் தென்நினைக் கேனே
|
4
|
மங்கை பங்கனை மாசிலா மணியை வான நாடனை ஏனமோ டன்னம் எங்கும் நாடியுங் காண்பரி யானை ஏழை யேற்கெளி வந்தபி ரானை அங்கம் நான்மறை யான்நிறை கின்ற அந்த ணாளர் அடியது போற்றும் நங்கள் கோனைநள் ளாறனை அமுதை நாயி னேன்மறந் தென்நினைக் கேனே
|
5
|
Go to top |
கற்ப கத்தினைக் கனகமால் வரையைக் காம கோபனைக் கண்ணுத லானைச் சொற்ப தப்பொருள் இருள்அறுத் தருளுந் தூய சோதியை வெண்ணெய்நல் லூரில் அற்பு தப்பழ ஆவணங் காட்டி அடிய னாஎன்னை ஆளது கொண்ட நற்ப தத்தைநள் ளாறனை அமுதை நாயி னேன்மறந் தென்நினைக் கேனே
|
6
|
மறவ னைஅன்று பன்றிப்பின் சென்ற மாயனை நால்வர்க் காலின்கீழ் உரைத்த அறவ னைஅம ரர்க்கரி யானை அமரர் சேனைக்கு நாயக னான குறவர் மங்கைதன் கேள்வனைப் பெற்ற கோனை நான்செய்த குற்றங்கள் பொறுக்கும் நறைவி ரியும்நள் ளாறனை அமுதை நாயி னேன்மறந் தென்நினைக் கேனே
|
7
|
மாதி னுக்குடம் பிடங்கொடுத் தானை மணியி னைப்பணி வார்வினை கெடுக்கும் வேதனை வேத வேள்வியர் வணங்கும் விமல னைஅடி யேற்கெளி வந்த தூதனைத் தன்னைத் தோழமை யருளித் தொண்ட னேன்செய்த துரிசுகள் பொறுக்கும் நாத னைநள் ளாறனை அமுதை நாயி னேன்மறந் தென்நினைக் கேனே
|
8
|
இலங்கை வேந்தன் எழில்திகழ் கயிலை எடுப்ப ஆங்கிம வான்மகள் அஞ்சத் துலங்கு நீள்முடி ஒருபதுந் தோள்கள் இருப துந்நெரித் தின்னிசை கேட்டு வலங்கை வாளொடு நாமமுங் கொடுத்த வள்ளலைப் பிள்ளை மாமதி சடைமேல் நலங்கொள் சோதிநள் ளாறனை அமுதை நாயி னேன்மறந் தென்நினைக் கேனே
|
9
|
செறிந்த சோலைகள் சூழ்ந்தநள் ளாற்றெஞ் சிவனை நாவலூர்ச் சிங்கடி தந்தை மறந்து நான்மற்று நினைப்பதே தென்று வனப்பகை அப்பன் ஊரன்வன் றொண்டன் சிறந்த மாலைகள் அஞ்சினோ டஞ்சுஞ் சிந்தைஉள் ளுருகிச் செப்ப வல்லார்க் கிறந்து போக்கில்லை வரவில்லை யாகி இன்ப வெள்ளத்துள் இருப்பர்கள் இனிதே
|
10
|
Go to top |