எட்டாந் திசைக்கு மிருதிசைக் கும்மிறை வாமுறையென் றிட்டா ரமரர்வெம் பூச லெனக்கேட் டெரிவிழியா ஒட்டாக் கயவர் திரிபுர மூன்றையு மோரம்பினால் அட்டா னடிநிழற் கீழதன் றோவென்ற னாருயிரே.
|
1
|
பேழ்வா யரவி னரைக்கமர்ந் தேறிப் பிறங்கிலங்கு தேய்வா யிளம்பிறை செஞ்சடை மேல்வைத்த தேவர்பிரான் மூவா னிளகான் முழுவுல கோடுமண் விண்ணுமற்றும் ஆவா னடிநிழற் கீழதன் றோவென்ற னாருயிரே.
|
2
|
தரியா வெகுளிய னாய்த்தக்கன் வேள்வி தகர்த்துகந்த எரியா ரிலங்கிய சூலத்தி னானிமை யாதமுக்கட் பெரியான் பெரியார் பிறப்பறுப் பானென்றுந் தன்பிறப்பை அரியா னடிநிழற் கீழதன் றோவென்ற னாருயிரே.
|
3
|
வடிவுடை வாணெடுங் கண்ணுமை யாளையொர் பான்மகிழ்ந்து வெடிகொ ளரவொடு வேங்கை யதள்கொண்டு மேன்மருவிப் பொடிகொ ளகலத்துப் பொன்பிதிர்ந் தன்னபைங் கொன்றையந்தார் அடிக ளடிநிழற் கீழதன் றோவென்ற னாருயிரே.
|
4
|
பொறுத்தா னமரர்க் கமுதருளி நஞ்ச முண்டுகண்டம் கறுத்தான் கறுப்பழ காவுடை யான்கங்கை செஞ்சடைமேல் செறுத்தான் றனஞ்சயன் சேணா ரகலங் கணையொன்றினால் அறுத்தா னடிநிழற் கீழதன் றோவென்ற னாருயிரே.
|
5
|
Go to top |
காய்ந்தான் செறற்கரி யானென்று காலனைக் காலொன்றினால் பாய்ந்தான் பணைமதில் மூன்றுங் கணையென்னு மொள்ளழலால் மேய்ந்தான் வியனுல கேழும் விளங்க விழுமியநூல் ஆய்ந்தா னடிநிழற் கீழதன் றோவென்ற னாருயிரே.
|
6
|
உளைந்தான் செறுதற் கரியான் றலையை யுகிரொன்றினால் களைந்தா னதனை நிறைய நெடுமால் கணார்குருதி வளைந்தா னொருவிர லின்னொடு வீழ்வித்துச் சாம்பர்வெண்ணீ றளைந்தா னடிநிழற் கீழதன் றோவென்ற னாருயிரே.
|
7
|
முந்திவட் டத்திடைப் பட்டதெல் லாமுடி வேந்தர் தங்கள் பந்திவட் டத்திடைப் பட்டலைப் புண்பதற் கஞ்சிக்கொல்லோ நந்திவட் டந்நறு மாமலர்க் கொன்றையும் நக்கசென்னி அந்திவட் டத்தொளி யானடிச் சேர்ந்ததென் னாருயிரே.
|
8
|
மிகத்தான் பெரியதொர் வேங்கை யதள்கொண்டு மெய்ம்மருவி அகத்தான் வெருவநல் லாளை நடுக்குறுப் பான்வரும்பொன் முகத்தாற் குளிர்ந்திருந் துள்ளத்தி னாலுகப் பானிசைந்த அகத்தா னடிநிழற் கீழதன் றோவென்ற னாருயிரே.
|
9
|
பைம்மா ணரவல்குற் பங்கயச் சீறடி யாள்வெருவக் கைம்மா வரிசிலைக் காமனை யட்ட கடவுண்முக்கண் எம்மா னிவனென் றிருவரு மேத்த வெரிநிமிர்ந்த அம்மா னடிநிழற் கீழதன் றோவென்ற னாருயிரே.
|
10
|
Go to top |
பழகவொ ரூர்தியரன் பைங்கட் பாரிடம் பாணிசெய்யக் குழலு முழவொடு மாநட மாடி யுயரிலங்கைக் கிழவ னிருபது தோளு மொருவிர லாலிறுத்த அழக னடிநிழற் கீழதன் றோவென்ற னாருயிரே.
|
11
|