மறையாளர் திருக்கடவூர்
வந்துதித்து வண்தமிழின்
துறையான பயன்தெரிந்து
சொல்விளங்கிப் பொருள்மறையக்
குறையாத தமிழ்க்கோவை
தம்பெயரால் குலவும்வகை
முறையாலே தொகுத்தமைத்து
மூவேந்தர் பால்பயில்வார்.
|
1
|
அங்கவர்தாம் மகிழும்வகை
அடுத்தவுரை நயமாக்கிக்
கொங்கலர்தார் மன்னவர்பால்
பெற்றநிதிக் குவைகொண்டு
வெங்கண்அரா வொடுகிடந்து
விளங்கும்இளம் பிறைச்சென்னிச்
சங்கரனார் இனிதமரும்
தானங்கள் பலசமைத்தார்.
|
2
|
யாவர்க்கும் மனமுவக்கும்
இன்பமொழிப் பயனியம்பித்
தேவர்க்கு முதல்தேவர்
சீரடியார் எல்லார்க்கும்
மேவுற்ற இருநிதியம்
மிகஅளித்து விடையவர்தம்
காவுற்ற திருக்கயிலை
மறவாத கருத்தினராய்.
|
3
|
ஏய்ந்தகடல் சூழுலகில்
எங்குந்தம் இசைநிறுத்தி
ஆய்ந்தவுணர்வு இடையறா
அன்பினராய் அணிகங்கை
தோய்ந்தநெடுஞ் சடையார்தம்
அருள்பெற்ற தொடர்பினால்
வாய்ந்தமனம் போல்உடம்பும்
வடகயிலை மலைசேர்ந்தார்.
|
4
|
வேரியார் மலர்க்கொன்றை
வேணியார் அடிபேணும்
காரியார் கழல்வணங்கி
அவரளித்த கருணையினால்
வாரியார் மதயானை
வழுதியர்தம் மதிமரபில்
சீரியார் நெடுமாறர்
திருத்தொண்டு செப்புவாம்.
|
5
|
| Go to top |