சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

11.023   பரணதேவ நாயனார்   சிவபெருமான் திருவந்தாதி


+ Show Meaning   Add audio link Add Audio

ஒன்றுரைப்பீர் போலப் பல உரைத்திட் டோயாதே
ஒன்றுரைப்பீர் ஆயின் உறுதுணையாம் ஒன்றுரைத்துப்
பேரரவம் பூண்டு பெருந்தலையில் உண்டுழலும்
பேரரவும் பூணும் பிரான்.

1

பிரானிடபம் மால்பெரிய மந்தாரம் வில்லுப்
பிரானிடபம் பேரொலிநா ணாகம் பிரானிடபம்
பேணும் உமைபெரிய புன்சடையின் மேலமர்ந்து
பேணும் உமையிடவம் பெற்று.

2

பெற்றும் பிறவி பிறந்திட் டொழியாதே
பெற்றும் பிறவி பிறந்தொழிமின் பெற்றும்
குழையணிந்த கோளரவக் கூற்றுதைத்தான் தன்னைக்
குழையணிந்த கோளரவ நீ.

3

நீயேயா ளாவாயும் நின்மலற்கு நன்னெஞ்சே
நீயேயா ளாவாயும் நீள்வாளின் நீயேயேய்
ஏறூர் புனற்சடையா எங்கள் இடைமருதா
ஏறூர் புனற்சடையா என்று.

4

என்றும் மலர்தூவி ஈசன் திருநாமம்
என்றும் அலர்தூற்றி யேயிருந்தும் என்றும்
இப்பாடல் கிடைக்கவில்லை.
புகலூரா புண்ணியனே என்.

5
Go to top

என்னே இவளுற்ற மால்என்கொல் இன்கொன்றை
என்னே இவளொற்றி யூரென்னும் என்னே
தவளப் பொடியணிந்த சங்கரனே என்னும்
தவளப் பொடியானைச் சார்ந்து.

6

சார்ந்துரைப்ப தொன்றுண்டு சாவாமூ வாப்பெருமை
சார்ந்துரைத்த தத்துவத்தின் உட்பொருளைச் சார்ந்துரைத்த
ஆதியே அம்பலவா அண்டத்தை ஆட்கொள்ளும்
ஆதிஏன் றென்பால் அருள்.

7

அருள்சேரா தார்ஊர்தீ ஆறாமல் எய்தாய்
அருள்சேரோ தாரூர்தீ யாடி அருள்சேரப்
பிச்சையேற்று உண்டு பிறர்கடையிற் கால்நிமிர்த்துப்
பிச்சையேற்று உண்டுழல்வாய் பேச்சு.

8

பேச்சுப் பெருக்குவதென் பெண் ஆண் அலியென்று
பேச்சுக் கடந்த பெருவெளியைப் பேச்சுக்
குரையானை ஊனுக்கு உயிரானை ஒன்றற்
குரியானை நன்நெஞ்சே உற்று.

9

உற்றுரையாய் நன்நெஞ்சே ஓதக் கடல்வண்ணன்
உற்றுரையா வண்ணம்ஒன் றானானை உற்றுரையா
ஆனை உரித்தானை அப்பனை எப்பொழுதும்
ஆனையுரித் தானை அடைந்து.

10
Go to top

அடைந்துன்பால் அன்பாய் அணிமணிகொண் டர்ச்சித்
தடைந்துன்பால் மேலுகுத்த மாணிக் கடைந்துன்பால்
அவ்வமுதம் ஊட்டி அணிமலருஞ் சூழ்ந்தன்று
அவ்வமுத மாக்கினாய் காண்.

11

காணாய் கபாலி கதிர்முடிமேல் கங்கைதனைக்
காணாயக் கார்உருவிற் சேர்உமையைக் காணா
உடைதலைகொண் டூரூர் திரிவானை நச்சி
உடைதலைகொண் டூரூர் திரி.

12

திரியும் புரம்எரித்த சேவகனார் செவ்வே
திரியும் புரம்எரியச் செய்தார் திரியும்
அரிஆன் திருக்கயிலை என்னாதார் மேனி
அரிஆன் றிருக்கயிலை யாம்.

13

(இப்பாட்டில் முதல் அடி கிடைக்கவில்லை)
ஆம்பரிசே செய்தங் கழியாக்கை ஆம்பரிசே
ஏத்தித் திரிந்தானை எம்மானை அம்மானை
ஏத்தித் திரிந்தானை ஏத்து.

14

ஏத்துற்றுப் பார்த்தன் எழில்வான் அடைவான்போல்
ஏத்துற்றுப் பார்த்தன் இறைஞ்சுதலும் ஏத்துற்றுப்
பாசுபதம் அன்றளித்த பாசூரான் பால்நீற்றான்
பாசுபதம் இன்றளியென் பால்.

15
Go to top

பாலார் புனல்பாய் சடையானுக் கன்பாகிப்
பாலார் புனல்பாய் சடையானாள் பாலாடி
ஆடுவான் பைங்கண் அரவூர்வான் மேனிதீ
ஆடுவான் என்றென்றே ஆங்கு.

16

ஆங்குரைக்க லாம்பொன் மலர்ப்பாதம் அஃதன்றே
ஆங்குரைக்க லாம்பொன் அணிதில்லை ஆங்குரைத்த
அம்பலத்தும் அண்டத்தும் அப்பாலு மாய்நின்ற
அம்பரத்தும் அண்டத்தும் ஆம்

17

மாயனைஒர் பாகம் அமர்ந்தானை வானவரும்
மாயவரும் மால்கடல்நஞ்சு உண்டானை மாய
உருவானை மாலை ஒளியானை வானின்
உருவானை ஏத்தி உணர்.

18

உணரா வளைகழலா உற்றுன்பாற் சங்கம்
உணரா வளைகழல ஒட்டி உணரா
அளைந்தான மேனி அணியாரூ ரேசென்
றளைந்தானை ஆமாறு கண்டு.

19

கண்டிறந்து காயெரியின் வீழ்ந்து கடிதோடிக்
கண்டிறந்து காமன் பொடியாகக் கண்டிறந்து
கானின் உகந்தாடும் கருத்தர்க்குக் காட்டினான்
கானின்உகந் தாடுங் கருத்து.

20
Go to top

கருத்துடைய ஆதி கறைமிடற்றெம் ஈசன்
கருத்துடைய கங்காள வேடன் கருத்துடைய
ஆன்ஏற்றான் நீற்றான் அனலாடி ஆமாத்தூர்
ஆனேற்றான் ஏற்றான் எரி.

21

எரியாடி ஏகம்பம் என்னாதார் மேனி
எரியாடி யேகம்ப மாகும் எரியாடி
ஈமத் திடுங்காடு தேரும் இறைபணிப்ப
ஈமத் திடுங்காடு தான்.

22

தானயன் மாலாகி நின்றான் தனித்துலகில்
தானயன் மாலாய தன்மையான் தான்அக்
கரைப்படுத்தான் நான்மறையைக் காய்புலித்தோ லாடைக்
கரைப்படுத்தான் தன்பாதஞ் சார்.

23

சாராவார் தாமுளரேல் சங்கரன் தன்மேனிமேல்
சாராவார் கங்கை உமைநங்கை சார்வாம்
அரவமது செஞ்சடைமேல் அக்கொன்றை ஒற்றி
அரவமது செஞ்சடையின் மேல்.

24

மேலாய தேவர் வெருவ எழுநஞ்சம்
மேல்ஆயம் இன்றியே உண்பொழுதின் மேலாய
மங்கை உமைவந் தடுத்திலளே வான்ஆளும்
அங்கை உமைவந் தடுத்து.

25
Go to top

அடுத்தபொன் அம்பலமே சார்வும் அதனுள்
அடுத்த திருநட்டம் அஃதே அடுத்ததிரு
ஆனைக்கா ஆடுவதும் மேல்என்பு பூண்பதுவும்
ஆனைக்கா வான்தன் அமைவு.

26

அமைவும் பிறப்பும் இறப்புமாம் மற்றுஆங்
கமைவும் பரமான ஆதி அமையும்
திருவால வாய்சென்று சேராது மாக்கள்
திருவால வாய்சென்று சேர்.

27

சென்றுசெருப் புக்கால் செல்ல மலர்நீக்கிச்
சென்று திருமுடிவாய் நீர்வார்த்துச் சென்றுதன்
கண்இடந் தன்றுஅப்புங் கருத்தற்குக் காட்டினான்
கண்இடந் தப்பாமைப் பார்த்து.

28

பார்த்துப் பரியாதே பால்நீறு பூசாதே
பார்த்துப் பரிந்தங்கம் பூணாதே பார்த்திட்
டுடையானஞ் சோதாதே ஊனாரைக் கைவிட்
டுடையானஞ் சோதாதார் ஊண்.

29

ஊணொன்றும் இல்லை உறக்கில்லை உன்மாலின்
ஊணென்று பேசவோர் சங்கிழந்தாள் ஊணென்றும்
விட்டானே வேள்வி துரந்தானே வெள்ளநீர்
விட்டானே புன்சடைமேல் வேறு

30
Go to top

வேறுரைப்பன் கேட்டருளும் வேதம்நான் காறங்கம்
வேறுரைத்த மேனி விரிசடையாய் வேறுரைத்த
பாதத்தாய் பைங்கண் அரவூர்வாய் பாரூரும்
பாதத்தாய் என்னும் மலர்.

31

மலர்அணைந்து கொண்டு மகிழ்வாய்உன் பாத
மலர்அணைந்து மால்நயன மாகும் மலர்அணைந்து
மன்சக் கரம்வேண்ட வாளா அளித்தனையால்
வன்சக்கர் அம்பரனே வாய்த்து.

32

வாய்த்த அடியார் வணங்க மலரோன்மால்
வாய்த்த அடிமுடி யுங்காணார் வாய்த்த
சலந்தரனைக் கொன்றிட்டுச் சங்கரனார் என்னோ
சலந்தரனாய் நின்றவா தாம்.

33

தாம்என்ன நாம்என்ன வேறில்லை தத்துறவில்
தாம்என்னை வேறாத் தனித்திருந்து தாமென்
கழிப்பாலை சேருங் கறைமிடற்றார் என்னோ
கழிப்பாலை சேருங் கடன்.

34

கடனாகக் கைதொழுமின் கைதொழவல் லீரேல்
கடல்நாகைக் காரோணம் மேயான் கடநாகம்
மாளவுரித் தாடுவான் நும்மேல் வல்வினைநோய்
மாளவிரித் தாடுவான் வந்து.

35
Go to top

வந்தார் வளைகழல்வார் வாடித் துகில்சோர்வார்
வந்தார் முலைமெலிவார் வார்குழல்கள் வந்தார்
சரிதருவார் பைங்கொன்றைத் தாராரைக் கண்டு
சரிதருவார் பைங்கொன்றத் தார்.

36

தாரான் எனினும் சடைமுடியான் சங்கரன்அம்
தாரான் தசமுகனைத் தோள்நெரித்துத் தாராய
நாளுங் கொடுத்தந்த வானவர்கள் தம்முன்னே
வாளுங் கொடுத்தான் மதித்து.

37

மதியாருஞ் செஞ்சடையான் வண்கொன்றைத் தாரான்
மதியாரும் மாலுடைய பாகன் மதியாரும்
அண்ணா மலைசேரார் ஆரோடுங் கூட்டாகி
அண்ணா மலைசேர்வ ரால்.

38

ஆல நிழற்கீழ் இருப்பதுவும் ஆய்வதறம்
ஆலம் அமுதுசெயல் ஆடுவதீ ஆலந்
துறையுடையான் ஆனை உரியுடையான் சோற்றுத்
துறையுடையான் சோராத சொல்லு.

39

சொல்லாயம் இன்றித் தொலைவின்றித் தூநெறிக்கண்
சொல்லாய்ப் பெருத்த சுடரொளியாய்ச் சொல்லாய
வீரட்டத் தானை விரவார் புரம்அட்ட
வீரட்டத் தானை விரை.

40
Go to top

விரையாரும் மத்தம் விரகாகச் சூடி
விரையாரும் வெள்ளெலும்பு பூண்டு விரையாரும்
நஞ்சுண்ட ஆதி நலங்கழல்கள் சேராதார்
நஞ்சுண்ட வாதி நலம்.

41

நலம்பாயு மாக்க நலங்கொண்டல் என்றல்
நலம்பாயு மானன் குருவ நலம்பாய்செய்
தார்த்தார்க்கும் அண்ணா மலையா னிடந்
தார்த்தார்க்கும் அண்ணா மலை.

42

மலையார் கலையோட வார்ஓடக் கொங்கை
மலையார் கலைபோய்மால் ஆனாள் மலையார்
கலையுடையான் வானின் மதியுடையான் காவாத்
தலையுடையான் என்றுதொழு தாள்.

43

தாளார் கமல மலரோடு தண்மலரும்
தாள்ஆர வேசொரிந்து தாமிருந்து தாளார்
சிராமலையாய் சேமத் துணையேஎன் றேத்தும்
சிராமலையார் சேமத் துளார்.

44

ஆர்துணையா ஆங்கிருப்ப தம்பலவாஅஞ்சொலுமை
ஆர்துணையா ஆனை உரிமூடின் ஆர்துணையாம்
பூவணத்தாய் பூதப் படையாளி பொங்கொளியாய்
பூவணத்தாய் என்னின் புகல்.

45
Go to top

புகலூர் உடையாய் பொறியரவும் பூணி
புகலூர்ப் புனற்சடையெம் பொன்னே புகலூராய்
வெண்காடா வேலை விட முண்டாய் வெள்ளேற்றாய்
வெண்காடா என்பேனோ நான்.

46

நானுடைய மாடே என்ஞானச் சுடர்விளக்கே
நானுடைய குன்றமே நான்மறையாய் நானுடைய
காடுடையாய் காலங்கள் ஆனார் கனலாடும்
காடுடையாய் காலமா னாய்

47

ஆயன் றமரர் அழியா வகைசெய்தான்
ஆயன் றமரர் அழியாமை ஆயன்
திருத்தினான் செங்கண் விடையூர்வான் மேனி
திருத்தினான் சேதுக் கரை.

48

கரையேனும் மாதர் கருவான சேரும்
கரையேனும் ஆது கரையாம் கரையேனும்
கோளிலியெம் மாதி குறிபரவ வல்லையேல்
கோளிலியெம் மாதி குறி.

49

குறியார் மணிமிடற்றுக் கோலஞ்சேர் ஞானக்
குறியாகி நின்ற குணமே குறியாகும்
ஆலங்கா டெய்தா அடைவேன் மேல் ஆடவரம்
ஆலங்கா டெய்தா அடை.

50
Go to top

அடையும் படைமழுவும் சூலமும் அங்கி
அடையும் பிறப்பறுப்ப தானால் அடைய
மறைக்காடு சேரும் மணாளர்என்பாற் சேரார்
மறைக்காடு சேர்மக்கள் தாம்.

51

தாமேய ஆறு சமய முதற்பரமும்
தாமேய ஆறு தழைக்கின்றார் தாமேல்
தழலுருவர் சங்கரவர் பொங்கரவம் பூண்ட
தழலுருவர் சங்காரர் என்பார்.

52

பார்மேவு கின்ற பலருருவர் பண்டரங்கர்
பார்மேவு கின்ற படுதலையர் பார்மேல்
வலஞ்சுழியைச் சேர்வர் மலரடிகள் சேர்வார்
வலஞ்சுழியைச் சேரவரு வார்.

53

வாரணிந்த கொங்கை உமையாள் மணவாளா
வாரணிந்த கொன்றை மலர்சூடி வாரணிந்த
செஞ்சடையாய் சீர்கொள் சிவலோகா சேயொளியாய்
செஞ்சடையாய் செல்ல நினை.

54

நினைமால் கொண்டோடி நெறியான தேடி
நினைமாலே நெஞ்சம் நினைய நினைமால்கொண்
டூர்தேடி யும்பரால் அம்பரமா காளாஎன்
டூர்தேடி என்றுரைப்பான் ஊர்.

55
Go to top

ஊர்வதுவும் ஆனேறு உடைதலையில் உண்பதுவும்
ஊர்வதுவும் மேல்லுரகம் ஊடுவர்கொல் ஊர்வதுவும்
ஏகம்பம் என்றும் இடைமருதை நேசத்தார்க்
கேகம்ப மாய்நின்ற ஏறு.

56

ஏறேய வாழ்முதலே ஏகம்பா எம்பெருமான்
ஏறேறி யூரும் எரியாடி ஏறேய
ஆதிவிடங் காகாறை கண்டத்தாய் அம்மானே
ஆதிவிடங் காஉமைதன் மாட்டு.

57

மாட்டும் பொருளை உருவு வருகாலம்
வாட்டும் பொருளை மறையானை மாட்டும்
உருவானைச் சோதி உமைபங்கார் பங்காம்
உருவானைச் சோதி உரை.

58

உரையா இருப்பதுவும் உன்னையே ஊனில்
உரையாய் உயிராய்ப் பொலிந்தாய் உரையாய
அம்பொனே சோதி அணியாரூர் சேர்கின்ற
அம்பொனே சோதியே ஆய்ந்து.

59

ஆய்ந்துன்றன் பாதம் அடைய வரும்என்மேல்
ஆய்ந்தென்றன் பாச மலமறுத் தாய்ந்துன்றன்
பாலணையச் செய்த பரமா பரமேட்டி
பாலணையச் செய்த பரம்.

60
Go to top

பரமாய பைங்கண் சிரம்ஏயப் பூண்ட
பரமாய பைங்கண் சிரமே பரமாய
ஆறடைந்த செஞ்சடையாய் ஐந்தடைந்த மேனியாய்
ஆறுஅடைந்த செஞ்சடைஆய் அன்பு.

61

அன்பே உடைய அரனே அணையாத
அன்பே உடைய அனலாடி அன்பே
கழுமலத்துள் ஆடுங் கரியுரிபோர்த் தானே
கழுமலத்து ளாடுங் கரி.

62

கரியார்தாம் சேருங் கலைமறிகைக் கொண்டே
கரியார்தாஞ் சேருங் கவாலி கரியாகி
நின்ற கழிப்பாலை சேரும் பிரான் நாமம்
நின்ற கழிப்பாலை சேர்.

63

சேரும் பிரான்நாமம் சிந்திக்க வல்லீரேல்
சேரும் பிரான்நாமஞ் சிந்திக்கச் சேரும்
மலையான் மகளை மகிழ்ந்தாரூர் நின்றான்
மலையான் மகளை மகிழ்ந்து.

64

மகிழ்ந்தன்பர் மாகாளஞ் செய்ய மகளிர்
மகிழ்ந்தம் பரமாகி நின்றார் மகிழ்ந்தங்கம்
ஒன்றாகி நின்றபங்கர் ஒற்றியூர்
ஒன்றாகி நின்ற உமை.

65
Go to top

உமைகங்கை என்றிருவர் உற்ற உணர்வும்
உமைகங்கை என்றிருவர் காணார் உமைகங்கை
கார்மிடற்றம் மேனிக் கதிர்முடியான் கண்மூன்று
கார்மிடற்றம் மேனிக் கினி.

66

இனியவா காணீர்கள் இப்பிறவி எல்லாம்
இனியவா ஆகாமை யற்றும் இனியவா
றாக்கை பலசெய்த ஆமாத்தூர் அம்மானை
ஆக்கை பலசெய்த அன்று.

67

அன்றமரர் உய்ய அமிர்தம் அவர்க்கருளி
அன்றவுணர் வீட அருள்செய் தான் அன்றவுணர்
சேராமல் நின்ற அடிகள் அடியார்க்குச்
சேராமல் நின்ற சிவம்.

68

சிவனந்தஞ் செல்கதிக்கோர் கண்சேர்வ தாக்கும்
சிவனந்தஞ் செல்கதிக்கோர் கண்ணாம் சிவனந்தம்
சேரும் உருவுடையீர் செங்காட் டங்குடிமேல்
சேரும் உருவுடையீர் செல்.

69

செல்லும் அளவும் சிதையாமல் சிந்திமின்
செல்லும் அளவும் சிவன்உம்மைச் செல்லும்
திருமீச்சூர்க் கேறவே செங்கண்ஏ றூரும்
திருமீச்சூர் ஈசன் திறம்.

70
Go to top

திறமென்னும் சிந்தை தெரிந்தும்மைக் காணும்
திறமென்னும் சிந்தைக்கும் ஆமே திறமென்னும்
சித்தத்தீர் செல்வத் திருகடுவூர் சேர்கின்ற
சித்தத்தீரே செல்லும் நீர்.

71

நீரே எருதேறும் நின்மலனார் ஆவீரும்
நீரே நெடுவானில் நின்றீரும் நீரேய்
நெருப்பாய தோற்றத்து நீளாரம் பூண்டீர்
நெருப்பாய தோற்றம் நிலைத்து.

72

நிலைத்திவ் வுலகனைத்தும் நீரேயாய் நின்றீர்
நிலைத்தில் வுலகனைத்தும் நீரே நிலைத்தீரக்
கானப்பே ரீங்கங்கை சூடினீர் கங்காளீர்
கானப்பே ரீர்கங்கை யீர்.

73

ஈரம் உடைய இளமதியம் சூடினீர்
ஈரம் உடைய சடையினீர் ஈர
வருங்காலம் ஆயினீர் இவ்வுலகம் எல்லாம்
வருங்காலம் ஆயினீர் வாழ்வு.

74

வாழ்வார் மலரணைவார் வந்த அருநாகம்
வாழ்வார் மலரணைவார் வண்கங்கை வாழ்வாய
தீயாட வானாள்வான் வான்கழல்கள் சேராதார்
தீயாட வானாளு மாறு.

75
Go to top

மாறாத ஆனையின் தோல் போர்த்து வளர்சடைமேல்
மாறாத நீருடைய மாகாளர் மாறா
இடுங்கையர் சேரும் எழிலவாய் முன்னே
இடுங்கையர் சேர்வாக ஈ.

76

ஈயும் பொருளே எமக்குச் சிவலோகம்
ஈயும் பொருளே இடுகாட்டின் ஈயும்
படநாகம் பூணும் பரலோகீர் என்னீர்
படநாகம் பூணும் படி.

77

படியேறும் பார்த்துப் பரத்தோடும் கூட்டி
படியேரு பார்த்துப் பரன்இப் படிஏனைப்
பாருடையாய் பைங்கண் புலியதளாய் பால்நீற்றாய்
பாருடையாய் யானுன் பரம்.

78

பரமாய விட்டுநின் பாதம் பணிந்தேன்
பரமாய ஆதிப் பரனே பரமாய
நீதியே நின்மலனே நேரார் புரம்மூன்றும்
நீதியே செய்தாய் நினை.

79

நினையடைந்தேன் சித்தம் நிலையாகும் வண்ணம்
நினையடைந்தேன் சித்த நிமலா நினையடைந்தேன்
கண்டத்தாய் காளத்தி யானே கனலாரும்
கண்டத்தாய் காவாலி கா.

80
Go to top

காவார் பொழிற்கயிலை ஆதீ கருவேஎம்
காவாய்ப் பொலிந்த கடுவெளியே காவாய
ஏறுடையாய் என்னை இடைமருதிலேஎன்றும்
ஏறுடையாய் நீயே கரி.

81

கரியானும் நான்முகனு மாய்நின்ற கண்ண
கரியாருங் கூற்றங் கனியே கரியாரும்
காடுடையாய் காலங்கள் ஆனாய் கனலாடும்
காடுடையாய் காலமா னாய்.

82

ஆன்ஆய ஆய அடலேறே ஆரூர்க்கோன்
ஆனாய னாவமுத மேயானாய் ஆனாய்
கவர்எலும்போ டேந்தி கதநாகம் பூணி
கவலெலும்பு தாகை வளை.

83

வளைகொண்டாய் என்னை மடவார்கள் முன்னே
வளைகொண்டாய் மாசற்ற சோதி வளைகொண்டாய்
மாற்றார் கதுவ மதில்ஆரூர் சேர்கின்ற
மாற்றார் ஊர்கின்ற மயல்.

84

மயலான தீரும் மருந்தாகும் மற்றும்
மயலானார் ஆரூர் மயரார் மயலான்
கண்ணியர்தம் பாகர் கனியேர் கடிக்கொன்றைக்
கண்ணியன்றன் பாதமே கல்.

85
Go to top

கலைமான்கை ஏனப்பூண் காண்கயிலை மானின்
கலைமான் கறைகாண் கவாலி கலைமான
ஆடுவதும் பாடுவதும் காலனைப்பொன் அம்பலத்துள்
ஆடுவதும் ஆடான் அரன்.

86

அரனே அணியாரூர் மூலட்டத் தானே
அரனே அடைந்தார்தம் பாவம் அரனே
அயனார்தம் அங்கம் அடையாகக்கொண்டார்
அயனாக மாக அடை.

87

அடையுந் திசைஈசன் திண்டோளா காசம்
அடையுந் திருமேனி அண்டம் அடையும்
திருமுடிகால் பாதாளம் ஆடைகடல் அங்கி
திருமுடிநீர் கண்கள்சுடர் மூன்று.

88

மூன்றரணம் எய்தானே மூலத் தனிச்சுடரே
மூன்றரண மாய்நின்ற முக்கணனே மூன்றரண
மாய்நின்ற சோதி அணியாரூர் சேர்கின்ற
ஆய்நின்ற சோதி அறம்.

89

அறமாய்வ ரேனும் அடுகாடு சேர
அறமானார் அங்கம் அணிவர் அறமாய
வல்வினைகள் வாரா வளமருக லாரென்ன
வல்வினைகள் வாராத வாறு.

90
Go to top

ஆறுடையர் நஞ்சுடையர் ஆடும் அரவுடையர்
ஆறுடையர் காலம் அமைவுடையர் ஆறுடைய
சித்தத்தீர் செல்வத் திருக்கயிலை சேர்கின்ற
சித்தத்தீர் எல்லார்க்குஞ் சேர்வு.

91

சேர்வும் உடையார் செழுங்கொன்றைத் தாரார்நஞ்
சேர்வும் உடையர் உரவடையர் சேரும்
திருச்சாய்க்காட் டாடுவரேல் செய்தக்க என்றும்
திருச்சாய்க்காட் டேநின் உருவு.

92

உருவு பலகொண் டொருவராய் நின்றார்
உருவு பலவாம் ஒருவர் உருவு
பலவல்ல ஒன்றல்ல பைஞ்ஞீலி மேயார்
பலவல்ல ஒன்றாப் பகர்.

93

பகரப் பரியானை மேல்ஊரா தானைப்
பகரப் பரிசடைமேல் வைத்த பகரப்
பரியானைச் சேருலகம் பல்லுயிர்க ளெல்லாம்
பரியானைச் சேருகலம் பண்.

94

பண்ணாகப் பாடிப் பலிகொண்டாய் பாரேழும்
பண்ணாகச் செய்த பரமேட்டி பண்ணா
எருத்தேறி ஊர்வாய் எழில்வஞ்சி எங்கள்
எருத்தேறி ஊர்வாய் இடம்.

95
Go to top

இடமாய எவ்வுயிர்க்கும் ஏகம்பம் மேயார்
இடமானார்க் கீந்த இறைவர் இடமாய
ஈங்கோய் மலையார் எழிலார் சிராமலையார்
ஈங்கோய் மலையார் எமை.

96

எமையாள வந்தார் இடரான தீர
எமையாளும் எம்மை இமையோர் எமையாறும்
வீதிவிடங் கர்விடம துண்டகண் டர்விடையூர்
வீதிவிடங் கர்விடையூர் தீ.

97

தீயான மேனியனே செம்பவளக் குன்றமே
தீயான சேராமற் செய்வானே தீயான
செம்பொற் புரிசைத் திருவாரூ ராய்என்னைச்
செம்பொற் சிவலோகஞ் சேர்.

98

சேர்கின்ற சிந்தை சிதையாமல் செய்வானே
சேர்கின்ற சிந்தை சிதையாமல் சேர்கின்றோம்
ஒற்றியூ ரானே உறவாரும் இல்லைஇனி
ஒற்றியூ ரானே உறும்.

99

உறுமுந்த முன்னே உடையாமல் இன்னம்
உறுமுந்த முன்னே யுடையா உறுமும்தம்
ஒரைந் துரைத்துஉற்று உணர்வோ டிருந்தொன்றை
ஒரைந் துரக்கவல்லார்க் கொன்று.

தனி வெண்பா
ஒன்றைப் பரணர் உரைத்தஅந் தாதிபல
ஒன்றைப் பகரில் ஒருகோடி ஒன்றைத்
தவிராது உரைப்பார் தளரா உலகில்
தவிரார் சிவலோகந் தான்.

100
Go to top

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location:

This page was last modified on Thu, 11 Dec 2025 05:33:28 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org