பொன்றிரண்டன்ன புரிசடைபுரளப் பொருகடற்பவளமொ டழனிறம்புரையக் குன்றிரண்டன்ன தோளுடையகலங் குலாயவெண்ணூலொடு கொழும்பொடியணிவர் மின்றிரண்டன்ன நுண்ணிடையரிவை மெல்லியலாளையோர் பாகமாப்பேணி அன்றிரண்டுருவ மாயவெம்மடிக ளச்சிறுபாக்கம தாட்சிகொண்டாரே.
|
1
|
தேனினுமினியர் பாலனநீற்றர் தீங்கரும்பனையர்தந் திருவடிதொழுவார் ஊனயந்துருக வுவகைகடருவா ருச்சிமேலுறைபவ ரொன்றலாதூரார் வானகமிறந்து வையகம்வணங்க வயங்கொளநிற்பதோர் வடிவினையுடையார் ஆனையினுரிவை போர்த்தவெம்மடிக ளச்சிறுபாக்கம தாட்சிகொண்டாரே.
|
2
|
காரிருளுருவ மால்வரைபுரையக் களிற்றினதுருவுகொண் டரிவைமேலோடி நீருருமகளை நிமிர்சடைத்தாங்கி நீறணிந்தேறுகந் தேறியநிமலர் பேரருளாளர் பிறவியிற்சேரார் பிணியிலர்கேடிலர் பேய்க்கணஞ்சூழ ஆரிருண்மாலை யாடுமெம்மடிக ளச்சிறுபாக்கம தாட்சிகொண்டாரே.
|
3
|
மைம்மலர்க்கோதை மார்பினரெனவு மலைமகளவளொடு மருவினரெனவும் செம்மலர்ப்பிறையுஞ் சிறையணிபுனலுஞ் சென்னிமேலுடையரெஞ்சென்னிமேலுறைவார் தம்மலரடியொன் றடியவர்பரவத் தமிழ்ச்சொலும்வடசொலுந் தாணிழற்சேர அம்மலர்க்கொன்றை யணிந்தவெம்மடிக ளச்சிறுபாக்கம தாட்சிகொண்டாரே.
|
4
|
விண்ணுலாமதியஞ் சூடினரெனவும் விரிசடையுள்ளது வெள்ளநீரெனவும் பண்ணுலாமறைகள் பாடினரெனவும் பலபுகழல்லது பழியிலரெனவும் எண்ணலாகாத விமையவர்நாளு மேத்தரவங்களோ டெழில்பெறநின்ற அண்ணலானூர்தி யேறுமெம்மடிக ளச்சிறுபாக்கம தாட்சிகொண்டாரே.
|
5
|
Go to top |
நீடிருஞ்சடைமே லிளம்பிறைதுலங்க நிழறிகழ்மழுவொடு நீறுமெய்பூசித் தோடொருகாதினிற் பெய்துவெய்தாய சுடலையிலாடுவர் தோலுடையாகக் காடரங்காகக் கங்குலும்பகலுங் கழுதொடுபாரிடங் கைதொழுதேத்த ஆடரவாட வாடுமெம்மடிக ளச்சிறுபாக்கம தாட்சிகொண்டாரே.
|
6
|
ஏறுமொன்றேறி நீறுமெய்பூசி யிளங்கிளையரிவையொ டொருங்குடனாகிக் கூறுமொன்றருளிக் கொன்றையந்தாருங் குளிரிளமதியமுங் கூவிளமலரும் நாறுமல்லிகையு மெருக்கொடுமுருக்கு மகிழிளவன்னியு மிவைநலம்பகர ஆறுமோர்சடைமே லணிந்தவெம்மடிக ளச்சிறுபாக்கம தாட்சிகொண்டாரே.
|
7
|
கச்சுமொள்வாளுங் கட்டியவுடையர் கதிர்முடிசுடர்விடக் கவரியுங்குடையும் பிச்சமும்பிறவும் பெண்ணணங்காய பிறைநுதலவர்தமைப் பெரியவர்பேணப் பச்சமும்வலியுங் கருதியவரக்கன் பருவரையெடுத்ததிண் டோள்களையடர்வித் தச்சமுமருளுங் கொடுத்தவெம்மடிக ளச்சிறுபாக்கம தாட்சிகொண்டாரே.
|
8
|
நோற்றலாரேனும் வேட்டலாரேனு நுகர்புகர்சாந்தமொ டேந்தியமாலைக் கூற்றலாரேனு மின்னவாறென்று மெய்தலாகாததொ ரியல்பினையுடையார் தோற்றலார்மாலு நான்முகமுடைய தோன்றலுமடியொடு முடியுறத்தங்கள் ஆற்றலாற்காணா ராயவெம்மடிக ளச்சிறுபாக்கம தாட்சிகொண்டாரே.
|
9
|
வாதுசெய்சமணுஞ் சாக்கியப்பேய்க ணல்வினைநீக்கிய வல்வினையாளர் ஓதியுங்கேட்டு முணர்வினையிலாதா ருள்கலாகாததோ ரியல்பினையுடையார் வேதமும்வேத நெறிகளுமாகி விமலவேடத்தொடு கமலமாமதிபோல் ஆதியுமீறு மாயவெம்மடிக ளச்சிறுபாக்கம தாட்சிகொண்டாரே.
|
10
|
Go to top |
மைச்செறிகுவளை தவளைவாய்நிறைய மதுமலர்ப்பொய்கையிற் புதுமலர்கிழியப் பச்சிறவெறிவயல் வெறிகமழ்காழிப் பதியவரதிபதி கவுணியர்பெருமான் கைச்சிறுமறியவன் கழலலாற்பேணாக் கருத்துடைஞானசம் பந்தனதமிழ்கொண் டச்சிறுபாக்கத் தடிகளையேத்து மன்புடையடியவ ரருவினையிலரே.
|
11
|