அடையார்தம் புரங்கண்மூன்று மாரழலில் லழுந்த விடையார்மேனி யராய்ச்சீறும் வித்தகர் மேயவிடங் கடையார்மாட நீடியெங்கும் கங்குல் புறந்தடவப் படையார்புரிசைப் பட்டினஞ்சேர் பல்லவ னீச்சரமே.
|
1
|
எண்ணாரெயில்கண் மூன்றுஞ்சீறு மெந்தைபிரா னிமையோர் கண்ணாயுலகங் காக்கநின்ற கண்ணுதல் நண்ணுமிடம் மண்ணார்சோலைக் கோலவண்டு வைகலுந் தேனருந்திப் பண்ணார்செய்யும் பட்டினத்துப் பல்லவ னீச்சரமே.
|
2
|
மங்கையங்கோர் பாகமாக வாணில வார்சடைமேற் கங்கையங்கே வாழவைத்த கள்வ னிருந்தவிடம் பொங்கயஞ்சேர் புணரியோத மீதுயர் பொய்கையின்மேற் பங்கயஞ்சேர் பட்டினத்துப் பல்லவ னீச்சரமே.
|
3
|
தாரார்கொன்றை பொன்றயங்கச் சாத்திய மார்பகலம் நீரார்நீறு சாந்தம்வைத்த நின்மலன் மன்னுமிடம் போரார்வேற்கண் மாதர்மைந்தர் புக்கிசை பாடலினாற் பாரார்கின்ற பட்டினத்துப் பல்லவ னீச்சரமே.
|
4
|
மைசேர்கண்ட ரண்டவாணர் வானவ ருந்துதிப்ப மெய்சேர்பொடிய ரடியாரேத்த மேவி யிருந்தவிடங் கைசேர்வளையார் விழைவினோடு காதன்மை யாற்கழலே பைசேரரவா ரல்குலார்சேர் பல்லவ னீச்சரமே.
|
5
|
Go to top |
குழலினோசை வீணைமொந்தை கொட்ட முழவதிரக் கழலினோசை யார்க்கவாடுங் கடவு ளிருந்தவிடஞ் சுழியிலாருங் கடலிலோதந் தெண்டிரை மொண்டெறியப் பழியிலார்கள் பயில்புகாரிற் பல்லவ னீச்சரமே.
|
6
|
வெந்தலாய வேந்தன்வேள்வி வேரறச்சாடி விண்ணோர் வந்தெலாமுன் பேணநின்ற மைந்தன் மகிழ்ந்தவிடம் மந்தலாய மல்லிகையும் புன்னைவளர் குரவின் பந்தலாரும் பட்டினத்துப் பல்லவ னீச்சரமே.
|
7
|
தேரரக்கன் மால்வரையைத் தெற்றி யெடுக்கவவன் றாரரக்குந் திண்முடிக ளூன்றிய சங்கரனூர் காரரக்குங் கடல்கிளர்ந்த காலமெலா முணரப் பாரரக்கம் பயில்புகாரிற் பல்லவ னீச்சரமே.
|
8
|
அங்கமாறும் வேதநான்கு மோதுமய னெடுமால் தங்கணாலு நேடநின்ற சங்கரன் றங்குமிடம் வங்கமாரு முத்தமிப்பி வார்கட லூடலைப்பப் பங்கமில்லார் பயில்புகாரிற் பல்லவ னீச்சரமே.
|
9
|
உண்டுடுக்கை யின்றியேநின் றூர்நக வேதிரிவார் கண்டுடுக்கை மெய்யிற்போர்த்தார் கண்டறி யாதவிடந் தண்டுடுக்கை தாளந்தக்கை சார நடம்பயில்வார் பண்டிடுக்கண் டீரநல்கும் பல்லவ னீச்சரமே.
|
10
|
Go to top |
பத்தரேத்தும் பட்டினத்துப் பல்லவ னீச்சரத்தெம் அத்தன்றன்னை யணிகொள்காழி ஞானசம் பந்தன்சொற் சித்தஞ்சேரச் செப்புமாந்தர் தீவினை நோயிலராய் ஒத்தமைந்த வும்பர்வானி லுயர்வினொ டோங்குவரே.
|
11
|