நறைகொண்ட மலர்தூவி விரையளிப்ப நாடோறும் முறைகொண்டு நின்றடியார் முட்டாமே பணிசெய்யச் சிறைகொண்ட வண்டறையுஞ் செங்காட்டங் குடியதனுள் கறைகொண்ட கண்டத்தான் கணபதீச் சரத்தானே.
|
1
|
வாரேற்ற பறையொலியுஞ் சங்கொலியும் வந்தியம்ப ஊரேற்ற செல்வத்தோ டோங்கியசீர் விழவோவாச் சீரேற்ற முடைத்தாய செங்காட்டங் குடியதனுள் காரேற்ற கொன்றையான் கணபதீச் சரத்தானே.
|
2
|
வரந்தையான் சோபுரத்தான் மந்திரத்தான் தந்திரத்தான் கிரந்தையான் கோவணத்தான் கிண்கிணியான் கையதோர் சிரந்தையான் செங்காட்டங் குடியான்செஞ் சடைச்சேரும் கரந்தையான் வெண்ணீற்றான் கணபதீச் சரத்தானே.
|
3
|
தொங்கலுங் கமழ்சாந்து மகிற்புகையுந் தொண்டர்கொண் டங்கையாற் றொழுதேத்த வருச்சனைக்கன் றருள்செய்தான் செங்கயல்பாய் வயலுடுத்த செங்காட்டங் குடியதனுள் கங்கைசேர் வார்சடையான் கணபதீச் சரத்தானே.
|
4
|
பாலினால் நறுநெய்யாற் பழத்தினாற் பயின்றாட்டி நூலினான் மணமாலை கொணர்ந்தடியார் புரிந்தேத்தச் சேலினார் வயல்புடைசூழ் செங்காட்டங் குடியதனுள் காலினாற் கூற்றுதைத்தான் கணபதீச் சரத்தானே.
|
5
|
Go to top |
நுண்ணியான் மிகப்பெரியான் நோவுளார் வாயுளான் தண்ணியான் வெய்யான்நந் தலைமேலான் மனத்துளான் திண்ணியான் செங்காட்டங் குடியான்செஞ் சடைமதியக் கண்ணியான் கண்ணுதலான் கணபதீச் சரத்தானே.
|
6
|
மையினார் மலர்நெடுங்கண் மலைமகளோர் பாகமாம் மெய்யினான் பையரவ மரைக்கசைத்தான் மீன்பிறழச் செய்யினா ரகன்கழனிச் செங்காட்டங் குடியதனுட் கையினார் கூரெரியான் கணபதீச் சரத்தானே.
|
7
|
தோடுடையான் குழையுடையா னரக்கன்றன் றோளடர்த்த பீடுடையான் போர்விடையான் பெண்பாக மிகப்பெரியான் சேடுடையான் செங்காட்டங் குடியுடையான் சேர்ந்தாடும் காடுடையா னாடுடையான் கணபதீச் சரத்தானே.
|
8
|
ஆனூரா வுழிதருவா னன்றிருவர் தேர்ந்துணரா வானூரான் வையகத்தான் வாழ்த்துவார் மனத்துளான் தேனூரான் செங்காட்டங் குடியான்சிற் றம்பலத்தான் கானூரான் கழுமலத்தான் கணபதீச் சரத்தானே.
|
9
|
செடிநுகருஞ் சமணர்களுஞ் சீவரத்த சாக்கியரும் படிநுகரா தயருழப்பார்க் கருளாத பண்பினான் பொடிநுகருஞ் சிறுத்தொண்டர்க் கருள்செய்யும் பொருட்டாகக் கடிநகராய் வீற்றிருந்தான் கணபதீச் சரத்தானே.
|
10
|
Go to top |
கறையிலங்கு மலர்க்குவளை கண்காட்டக் கடிபொழிலின் நறையிலங்கு வயற்காழித் தமிழ்ஞான சம்பந்தன் சிறையிலங்கு புனற்படப்பைச் செங்காட்டங் குடிசேர்த்தும் மறையிலங்கு தமிழ்வல்லார் வானுலகத் திருப்பாரே.
|
11
|