செருவிலிபுத் தூர்மன்னும்
சிவமறையோர் திருக்குலத்தார்
அருவரைவில் ஆளிதனக்கு
அகத்தடிமை யாம்அதனுக்கு
ஒருவர்தமை நிகரில்லார்
உலகத்துப் பரந்தோங்கிப்
பொருவரிய புகழ்நீடு
புகழ்த்துணையார் எனும்பெயரார்.
|
1
|
தங்கோனைத் தவத்தாலே
தத்துவத்தின் வழிபடுநாள்
பொங்கோத ஞாலத்து
வற்கடமாய்ப் பசிபுரிந்தும்
எங்கோமான் தனைவிடுவேன்
அல்லேன்என் றுஇராப்பகலும்
கொங்கார்பன் மலர்கொண்டு
குளிர்புனல்கொண்டு அருச்சிப்பார்.
|
2
|
மாலயனுக் கரியானை
மஞ்சனமாட் டும்பொழுது
சாலவுறு பசிப்பிணியால்
வருந்திநிலை தளர்வெய்திக்
கோலநிறை புனல்தாங்கு
குடந்தாங்க மாட்டாமை
ஆலமணி கண்டத்தார்
முடிமீது வீழ்த்தயர்வார்.
|
3
|
சங்கரன்றன் அருளாலோர்
துயில்வந்து தமையடைய
அங்கணனுங் கனவின்கண்
அருள்புரிவான் அருந்துணவு
மங்கியநாட் கழிவளவும்
வைப்பதுநித் தமும்மொருகா
சிங்குனக்கு நாமென்ன
இடர்நீங்கி யெழுந்திருந்தார்.
|
4
|
பெற்றம் உகந்து ஏறுவார் பீடத்தின்
கீழ் ஒரு காசு
அற்றம் அடங்கிட அளிப்ப அன்பரும்
மற்று அது கைக்கொண்டு
உற்ற பெரும் பசி அதனால்
உணங்கும் உடம்புடன் உவந்து
முற்றுணர்வு தலை நிரம்ப முகம்
மலர்ந்து களி கூர்ந்தார்.
|
5
|
| Go to top |
அந்நாள்போல் எந்நாளும்
அளித்தகா சதுகொண்டே
இன்னாத பசிப்பிணிவந்
திறுத்தநாள் நீங்கியபின்
மின்னார்செஞ் சடையார்க்கு
மெய்யடிமைத் தொழில்செய்து
பொன்னாட்டில் அமரர்தொழப்
புனிதர்அடி நிழற்சேர்ந்தார்.
|
6
|
பந்தணையும் மெல்விரலாள்
பாகத்தர் திருப்பாதம்
வந்தணையும் மனத்துணையார்
புகழ்த்துணையார் கழல்வாழ்த்திச்
சந்தணியும் மணிப்புயத்துத்
தனிவீர ராந்தலைவர்
கொந்தணையும் மலர்அலங்கல்
கோட்புலியார் செயல்உரைப்பாம்.
|
7
|