களமர் கட்ட கமலம் பொழிந்ததேன்
குளநி றைப்பது கோலொன்றில் எண்திசை
அளவும் ஆணைச் சயத்தம்பம் நாட்டிய
வளவர் காவிரி நாட்டு வரிஞ்சையூர்.
|
1
|
வரிஞ்சை யூரினில் வாய்மைவே ளாண்குலம்
பெருஞ்சி றப்புப் பெறப்பிறப்பு எய்தினார்
விரிஞ்சன் மால்முதல் விண்ணவர் எண்ணவும்
அருஞ்சி லம்பணி சேவடிக் காட்செய்வார்.
|
2
|
அத்த ராகிய வங்கணர் அன்பரை
இத்த லத்தில் இகழ்ந்தியம் பும்முரை
வைத்த நாவை வலித்தரி சத்தியால்
சத்தி யார்எனும் நாமந் தரித்துளார்.
|
3
|
தீங்கு சொற்ற திருவிலர் நாவினை
வாங்க வாங்குதண் டாயத்தி னால்வலித்
தாங்க யிற்கத்தி யால்அரிந் தன்புடன்
ஓங்கு சீர்த்திருத் தொண்டின் உயர்ந்தனர்.
|
4
|
அன்ன தாகிய ஆண்மைத் திருப்பணி
மன்னு பேரு லகத்தில் வலியுடன்
பன்னெ டும்பெரு நாள்பரி வால்செய்து
சென்னி யாற்றினர் செந்நெறி யாற்றினர்.
|
5
|
| Go to top |
ஐய மின்றி யரிய திருப்பணி
மெய்யி னாற்செய்த வீரத் திருத்தொண்டர்
வைய்யம் உய்ய மணிமன்று ளாடுவார்
செய்ய பாதத் திருநிழல் சேர்ந்தனர்.
|
6
|
நாய னார்தொண் டரைநலங் கூறலார்
சாய நாவரி சத்தியார் தாள்பணிந்து
ஆய மாதவத் தையடி கள்ளெனும்
தூய காடவர் தந்திறஞ் சொல்லுவாம்.
|
7
|