குலகிரியின் கொடுமுடிமேல்
கொடிவேங்கைக் குறியெழுதி
நிலவுதரு மதிக்குடைக்கீழ்
நெடுநிலங்காத் தினிதளிக்கும்
மலர்புகழ்வண் தமிழ்ச்சோழர்
வளநாட்டு மாமூதூர்
உலகில்வளர் அணிக்கெல்லாம்
உள்ளுறையூ ராம்உறையூர்.
|
1
|
அளவில்பெரும் புகழ்நகரம்
அதனில்அணி மணிவிளக்கும்
இளவெயிலின் சுடர்ப்படலை
இரவொழிய எறிப்பனவாய்க்
கிளரொளிசேர் நெடுவானப்
பேர்யாற்றுக் கொடிகெழுவும்
வளரொளிமா ளிகைநிரைகள்
மருங்குடைய மறுகெல்லாம்.
|
2
|
நாகதலத் தும்பிலத்தும்
நானிலத்தும் நலஞ்சிறந்த
போகமனைத் தினுக்குறுப்பாம்
பொருவிறந்த வளத்தினவாய்
மாகம்நிறைந் திடமலிந்த
வரம்பில்பல பொருள்பிறங்கும்
ஆகரமொத் துளஅளவில்
ஆவணவீ திகளெல்லாம்.
|
3
|
பார்நனைய மதம்பொழிந்து
பனிவிசும்பு கொளமுழங்கும்
போர்முகவெங் கறையடியும்
புடையினம்என் றடையவரும்
சோர்மழையின் விடுமதத்துச்
சுடரும்நெடு மின்னோடைக்
கார்முகிலும் பலதெரியா
களிற்றுநிரைக் களமெல்லாம்.
|
4
|
படுமணியும் பரிச்செருக்கும்
ஒலிகிளரப் பயில்புரவி
நெடுநிரைமுன் புல்லுண்வாய்
நீர்த்தரங்க நுரைநிவப்ப
விடுசுடர்மெய் யுறையடுக்கல்
முகில்படிய விளங்குதலால்
தொடுகடல்கள் அனையபல
துரங்கசா லைகளெல்லாம்.
|
5
|
| Go to top |
துளைக்கைஅயிரா வதக்களிறும்
துரங்கஅர சுந்திருவும்
விளைத்தஅமு துந்தருவும்
விழுமணியுங் கொடுபோத
உளைத்தகடல் இவற்றொன்று
பெறவேண்டி உம்பரூர்
வளைத்ததுபோன் றுஉளதங்கண்
மதில்சூழ்ந்த மலர்க்கிடங்கு.
|
6
|
காரேறுங் கோபுரங்கள்
கதிரேறும் மலர்ச்சோலை
தேரேறும் மணிவீதி
திசையேறும் வசையிலணி
வாரேறு முலைமடவார்
மருங்கேறு மலர்க்கணைஒண்
பாரேறும் புகழ்உறந்தைப்
பதியின்வளம் பகர்வரிதால்.
|
7
|
அந்நகரில் பாரளிக்கும்
அடலரச ராகின்றார்
மன்னுதிருத் தில்லைநகர்
மணிவீதி யணிவிளக்கும்
சென்னிநீ டநபாயன்
திருக்குலத்து வழிமுதலோர்
பொன்னிநதிப் புரவலனார்
புகழ்ச்சோழர் எனப்பொலிவார்.
|
8
|
ஒருகுடைக்கீழ் மண்மகளை
உரிமையினில் மணம்புணர்ந்து
பருவரைத்தோள் வென்றியினால்
பார்மன்னர் பணிகேட்ப
திருமலர்த்தும் பேருலகும்
|
9
|
பிறைவளரும் செஞ்சடையார்
பேணுசிவா லயமெல்லாம்
நிறைபெரும்பூ சனைவிளங்க
நீடுதிருத் தொண்டர்தமைக்
குறையிரந்து வேண்டுவன
குறிப்பின்வழி கொடுத்தருளி
முறைபுரிந்து திருநீற்று
முதல்நெறியே பாலிப்பார்.
|
10
|
| Go to top |
அங்கண்இனி துறையுநாள்
அரசிறைஞ்ச வீற்றிருந்து
கொங்கரொடு குடபுலத்துக்
கோமன்னர் திறைகொணரத்
தங்கள் குல மரபின்முதல்
தனிநகராங் கருவூரின்
மங்கலநா ளரசுரிமைச்
சுற்றமுடன் வந்தணைந்தார்.
|
11
|
வந்துமணி மதிற்கருவூர்
மருங்கணைவார் வானவர்சூழ்
இந்திரன்வந் தமரர்புரி
எய்துவான் எனஎய்திச்
சிந்தைகளி கூர்ந்தரனார்
மகிழ்திருவா னிலைக்கோயில்
முந்துறவந் தணைந்திறைஞ்சி
மொய்யொளிமா ளிகைபுகுந்தார்.
|
12
|
மாளிகைமுன் அத்தாணி
மண்டபத்தில் மணிபுனைபொன்
கோளரிஆ சனத்திருந்து
குடபுலமன் னவர்கொணர்ந்த
ஓளிநெடுங் களிற்றின்அணி
உலப்பில்பரி துலைக்கனகம்
நீளிடைவில் விலகுமணி
முதனிறையுந் திறைகண்டார்.
|
13
|
திறைகொணர்ந்த அரசர்க்குச்
செயலுரிமைத் தொழிலருளி
முறைபுரியுந் தனித்திகிரி
முறைநில்லா முரண்அரசர்
உறையரணம் உளவாகில்
தெரிந்துரைப்பீர் எனவுணர்வு
நிறைமதிநீ டமைச்சர்க்கு
மொழிந்தயுளி நிகழுநாள்.
|
14
|
சென்றுசிவ காமியார்
கொணர்திருப்பள் ளித்தாமம்
அன்றுசித றுங்களிற்றை
அறஎறித்து பாகரையுங்
கொன்றஎறி பத்தர்எதிர்
என்னையுங்கொன் றருளுமென
வென்றிவடி வாள்கொடுத்துத்
திருத்தொண்டில் மிகச்சிறந்தார்.
|
15
|
| Go to top |
விளங்குதிரு மதிக்குடைக்கீழ்
வீற்றிருந்து பாரளிக்கும்
துளங்கொளிநீண் முடியார்க்குத்
தொன்முறைமை நெறியமைச்சர்
அளந்ததிறை முறைகொணரா
அரசனுளன் ஒருவனென
உளங்கொள்ளும் வகையுரைப்ப
வுறுவியப்பால் முறுவலிப்பார்.
|
16
|
ஆங்கவன்யார் என்றருள
அதிகன்அவன் அணித்தாக
ஓங்கெயில்சூழ் மலையரணத்
துள்ளுறைவான் எனவுரைப்ப
ஈங்குநுமக் கெதிர்நிற்கும்
அரணுளதோ படையெழுந்தப்
பாங்கரணந் துகளாகப்
பற்றறுப்பீர் எனப்பகர்ந்தார்
|
17
|
அடல்வளவர்ஆணையினால்
அமைச்சர்களும் புறம்போந்து
கடலனைய நெடும்படையைக்
கைவகுத்து மேற்செல்வார்
படர்வனமும் நெடுங்கிரியும்
பயிலரணும் பொடியாக
மிடலுடைநாற் கருவியுற
வெஞ்சமரம் மிகவிளைத்தார்.
|
18
|
வளவனார் பெருஞ்சேனை
வஞ்சிமலர் மிலைந்தேற்ப
அளவில்அர ணக்குறும்பில்
அதிகர்கோன் அடற்படையும்
உளநிறைவெஞ் சினந்திருகி
யுயர்காஞ்சி மலைந்தேற்ப
கிளர்கடல்கள் இரண்டென்ன
இருபடையுங் கிடைத்தனவால்.
|
19
|
கயமொடு கயம்எதிர் குத்தின
அயமுடன் அயமுனை முட்டின
வயவரும் வயவரும் உற்றனர்
வியனமர் வியலிட மிக்கதே.
|
20
|
| Go to top |
மலையொடு மலைகள் மலைந்தென
அலைமத அருவி கொழிப்பொடு
சிலையினர் விசையின் மிசைத்தெறு
கொலைமத கரிகொலை யுற்றவே.
|
21
|
சூறை மாருதம் ஒத்தெதிர்
ஏறு பாய்பரி வித்தகர்
வேறு வேறு தலைப்பெய்து
சீறி யாவி செகுத்தனர்.
|
22
|
மண்டு போரின் மலைப்பவர்
துண்ட மாயிட வுற்றுஎதிர்
கண்ட ராவி கழித்தனர்
உண்ட சோறு கழிக்கவே.
|
23
|
வீடி னாருட லிற்பொழி
நீடு வார்குரு திப்புனல்
ஓடும் யாறென வொத்தது
கோடு போல்வ பிணக்குவை.
|
24
|
வானி லாவு கருங்கொடி
மேனி லாவு பருந்தினம்
ஏனை நீள்கழு கின்குலம்
ஆன வூணொ டெழுந்தவே.
|
25
|
| Go to top |
வரிவிற் கதைசக் கரமுற் கரம்வாள்
சுரிகைப் படைசத் திகழுக் கடைவேல்
எரிமுத் தலைகப் பணம்எல் பயில்கோல்
முரிவுற் றனதுற் றனமொய்க் களமே.
|
26
|
வடிவேல் அதிகன் படைமா ளவரைக்
கடிசூ ழரணக் கணவாய் நிரவிக்
கொடிமா மரில்நீ டுகுறும் பொறையூர்
முடிநே ரியனார் படைமுற் றியதே.
|
27
|
முற்றும் பொருசே னைமுனைத் தலையில்
கல்திண் புரிசைப் பதிகட் டழியப்
பற்றுந் துறைநொச் சிபரிந் துடையச்
சுற்றும் படைவீ ரர்துணித் தனரே.
|
28
|
மாறுற் றவிறற் படைவாள் அதிகன்
ஊறுற் றபெரும் படைநூ ழில்படப்
பாறுற் றஎயிற் பதிபற் றறவிட்டு
ஏறுற் றனன்ஓ டியிருஞ் சுரமே.
|
29
|
அதிகன் படைபோர் பொருதற் றதலைப்
பொதியின் குவையெண் ணிலபோ யினபின்
நிதியின் குவைமங் கையர்நீள் பரிமா
எதிருங் கரிபற் றினர்எண் ணிலரே.
|
30
|
| Go to top |
அரண்முற் றியெறிந் தஅமைச் சர்கள் தாம்
இரணத் தொழில்விட் டெயில்சூழ் கருவூர்
முரணுற் றசிறப் பொடுமுன் னினர்நீள்
தரணித் தலைவன் கழல்சார் வுறவே.
|
31
|
மன்னுங் கருவூர் நகர்வா யிலின்வாய்
முன்வந் தகருந் தலைமொய்க் குவைதான்
மின்னுஞ் சுடர்மா முடிவேல் வளவன்
தன்முன் புகொணர்ந் தனர்தா னையுளோர்.
|
32
|
மண்ணுக் குயிராம் எனுமன் னவனார்
எண்ணிற் பெருகுந் தலையா வையினும்
நண்ணிக் கொணருந் தலையொன் றில்நடுக்
கண்ணுற் றதொர்புன் சடைகண் டனரே.
|
33
|
. கண்டபொழு தேநடுங்கி
மனங்கலங்கிக் கைதொழுது
கொண்டபெரும் பயத்துடன்
குறித்தெதிர்சென் றதுகொணர்ந்த
திண்டிறலோன் கைத்தலையிற்
சடைதெரியப் பார்த்தருளிப்
புண்டரிகத் திருக்கண்ணீர்
பொழிந்திழியப் புரவலனார்.
|
34
|
முரசுடைத்திண் படைகொடுபோய்
முதலமைச்சர் முனைமுருக்கி
உரைசிறக்கும் புகழ்வென்றி
ஒன்றொழிய வொன்றாமல்
திரைசரித்த கடலுலகில்
திருநீற்றி நெறிபுரந்தியான்
அரசளித்த படிசால
அழகிதென அழிந்தயர்வார்.
|
35
|
| Go to top |
தார்தாங்கிக் கடன்முடித்த
சடைதாங்குந் திருமுடியார்
நீர்தாங்குஞ் சடைப்பெருமான்
நெறிதாங்கண் டவரானார்
சீர்தாங்கும் இவர்வேணிச்
சிரந்தாங்கி வரக்கண்டும்
பார் தாங்க இருந்தேனோ
பழிதாங்கு வேன்என்றார்.
|
36
|
என்றருளிச் செய்தருளி
இதற்கிசையும் படிதுணிவார்
நின்றநெறி யமைச்சர்க்கு
நீள்நிலங்காத் தரசளித்து
மன்றில்நடம் புரிவார்தம்
வழித்தொண்டின் வழிநிற்ப
வென்றிமுடி என்குமரன்
தனைப்புனைவீர் எனவிதித்தார்.
|
37
|
அம்மாற்றங் கேட்டழியும்
அமைச்சரையும் இடரகற்றிக்
கைம்மாற்றுஞ் செயல்தாமே
கடனாற்றுங் கருத்துடையார்
செம்மார்க்கந் தலைநின்று
செந்தீமுன் வளர்ப்பித்துப்
பொய்ம்மாற்றுந் திருநீற்றுப்
புனைகோலத் தினிற்பொலிந்தார்.
|
38
|
கண்டசடைச் சிரத்தினையோர்
கனகமணிக் கலத்தேந்திக்
கொண்டுதிரு முடிதாங்கிக்
குலவும்எரி வலங்கொள்வார்
அண்டர்பிரான் திருநாமத்
தஞ்செழுத்து மெடுத்தோதி
மண்டுதழற் பிழம்பினிடை
மகிழ்ந்தருளி யுள்புக்கார்.
|
39
|
புக்கபொழு தலர்மாரி
புவிநிறையப் பொழிந்திழிய
மிக்கபெரு மங்கலதூ
ரியம்விசும்பில் முழக்கெடுப்பச்
செக்கர்நெடுஞ் சடைமுடியார்
சிலம்பலம்பு சேவடியின்
அக்கருணைத் திருநிழற்கீழ்
ஆராமை யமர்ந்திருந்தார்.
|
40
|
| Go to top |
முரசங்கொள் கடற்றானை
மூவேந்தர் தங்களின்முன்
பிரசங்கொள் நறுந்தொடையல்
புகழ்ச்சோழர் பெருமையினைப்
பரசுங்குற் றேவலினால்
அவர்பாதம் பணிந்தேத்தி
நரசிங்க முனையர்திறம்
நாமறிந்த படியுரைப்பாம்.
|
41
|