சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

12.110   சேக்கிழார்   இலை மலிந்த சருக்கம்


+ Show Meaning   Add audio link Add Audio

வாய்ந்தநீர் வளத்தா லோங்கி
மன்னிய பொன்னி நாட்டின்
ஏய்ந்தசீர் மறையோர் வாழும்
எயிற்பதி யெறிநீர்க் கங்கை
தோய்ந்தநீள் சடையார் பண்டு
தொண்டர்மேல் வந்த கூற்றைக்
காய்ந்தசே வடியார் நீடி
யிருப்பது கடவூ ராகும்.
1

வயலெலாம் விளைசெஞ் சாலி
வரம்பெலாம் வளையின் முத்தம்
அயலெலாம் வேள்விச் சாலை
அணையெலாங் கழுநீர்க் கற்றை
புயலெலாங் கமுகின் காடப்
புறமெலாம் அதன்சீர் போற்றல்
செயலெலாந் தொழில்க ளாறே
செழுந்திருக் கடவூ ரென்றும்.
2

குடங்கையின் அகன்ற உண்கண்
கடைசியர் குழுமி யாடும்
இடம்படு பண்ணை தோறும்
எழுவன மருதம் பாடல்
வடம்புரி முந்நூல் மார்பின்
வைதிக மறையோர் செய்கைச்
சடங்குடை இடங்கள் தோறும்
எழுவன சாமம் பாடல்.
3

துங்கநீள் மருப்பின் மேதி
படிந்துபால் சொரிந்த வாவிச்
செங்கயல் பாய்ந்து வாசக்
கமலமும் தீம்பால் நாறும்
மங்குல்தோய் மாடச் சாலை
மருங்கிறை யொதுங்கு மஞ்சும்
அங்கவை பொழிந்த நீரும்
ஆகுதிப் புகைப்பால் நாறும்.
4

மருவிய திருவின் மிக்க
வளம்பதி அதனில் வாழ்வார்
அருமறை முந்நூல் மார்பின்
அந்தணர் கலயர் என்பார்
பெருநதி அணியும் வேணிப்
பிரான்கழல் பேணி நாளும்
உருகிய அன்பு கூர்ந்த
சிந்தையார் ஒழுக்க மிக்கார்.
5
Go to top

பாலனாம் மறையோன் பற்றப்
பயங்கெடுத் தருளு மாற்றால்
மாலுநான் முகனுங் காணா
வடிவுகொண் டெதிரே வந்து
காலனார் உயிர்செற் றார்க்குக்
கமழ்ந்தகுங் குலியத் தூபம்
சாலவே நிறைந்து விம்ம
இடும்பணி தலைநின் றுள்ளார்.
6

கங்கைநீர் கலிக்கும் சென்னிக்
கண்ணுதல் எம்பி ராற்குப்
பொங்குகுங் குலியத் தூபம்
பொலிவுறப் போற்றிச் செல்ல
அங்கவ ரருளி னாலே
வறுமைவந் தடைந்த பின்னும்
தங்கள்நா யகர்க்குத் தாமுன்
செய்பணி தவாமை யுய்த்தார்.
7

இந்நெறி ஒழுகு நாளில்
இலம்பாடு நீடு செல்ல
நன்னிலம் முற்றும் விற்றும்
நாடிய அடிமை விற்றும்
பன்னெடுந் தனங்கள் மாளப்
பயில்மனை வாழ்க்கை தன்னின்
மன்னிய சுற்றத் தோடு
மக்களும் வருந்தி னார்கள்.
8

யாதொன்றும் இல்லை யாகி
இருபக லுணவு மாறிப்
பேதுறும் மைந்த ரோடும்
பெருகுசுற் றத்தை நோக்கிக்
காதல்செய் மனைவி யார்தங்
கணவனார் கலய னார்கைக்
கோதில்மங் கலநூல் தாலி
கொடுத்துநெற் கொள்ளு மென்றார்
9

அப்பொழு ததனைக் கொண்டு
நெற்கொள்வான் அவரும் போக
ஒப்பில்குங் குலியங் கொண்டோர்
வணிகனும் எதிர்வந் துற்றான்
இப்பொதி யென்கொல் என்றார்
உள்ளவா றியம்பக் கேட்டு
முப்புரி வெண்ணூல் மார்பர்
முகமலர்ந் திதனைச் சொன்னார்.
10
Go to top

ஆறுசெஞ் சடைமேல் வைத்த
அங்கணர் பூசைக் கான
நாறுகுங் குலியம் ஈதேல்
நானின்று பெற்றேன் நல்ல
பேறுமற் றிதன்மே லுண்டோ
பெறாப்பேறு பெற்று வைத்து
வேறினிக் கொள்வ தென்னென்
றுரைத்தெழும் விருப்பின் மிக்கார்.
11

பொன்தரத் தாரு மென்று
புகன்றிட வணிகன் தானும்
என்தர விசைந்த தென்னத்
தாலியைக் கலயர் ஈந்தார்
அன்றவன் அதனை வாங்கி
அப்பொதி கொடுப்பக் கொண்டு
நின்றிலர் விரைந்து சென்றார்
நிறைந்தெழு களிப்பி னோடும்.
12

விடையவர் வீரட் டானம்
விரைந்துசென் றெய்தி என்னை
உடையவர் எம்மை யாளும்
ஒருவர்தம் பண்டா ரத்தில்
அடைவுற ஒடுக்கி யெல்லாம்
அயர்த்தெழும் அன்பு பொங்கச்
சடையவர் மலர்த்தாள் போற்றி
இருந்தனர் தமக்கொப் பில்லார்.
13

அன்பரங் கிருப்ப நம்பர்
அருளினால் அளகை வேந்தன்
தன்பெரு நிதியந் தூர்த்துத்
தரணிமேல் நெருங்க எங்கும்
பொன்பயில் குவையும் நெல்லும்
பொருவில்பல் வளனும் பொங்க
மன்பெரும் செல்வ மாக்கி
வைத்தனன் மனையில் நீட.
14

மற்றவர் மனைவி யாரும்
மக்களும் பசியால் வாடி
அற்றைநா ளிரவு தன்னில்
அயர்வுறத் துயிலும் போதில்
நற்றவக் கொடிய னார்க்குக்
கனவிடை நாதன் நல்கத்
தெற்றென உணர்ந்து செல்வங்
கண்டபின் சிந்தை செய்வார்.
15
Go to top

கொம்பனா ரில்ல மெங்கும்
குறைவிலா நிறைவிற் காணும்
அம்பொனின் குவையும் நெல்லும்
அரிசியும் முதலா யுள்ள
எம்பிரான் அருளாம் என்றே
இருகரங் குவித்துப் போற்றித்
தம்பெருங் கணவ னார்க்குத்
திருவமு தமைக்கச் சார்ந்தார்.
16

காலனைக் காய்ந்த செய்ய
காலனார் கலய னாராம்
ஆலுமன் புடைய சிந்தை
அடியவ ரறியு மாற்றால்
சாலநீ பசித்தாய் உன்தன்
தடநெடு மனையில் நண்ணிப்
பாலின்இன் அடிசில் உண்டு
பருவரல் ஒழிக வென்றார்.
17

கலயனார் அதனைக் கேளாக்
கைதொழு திறைஞ்சிக் கங்கை
அலைபுனற் சென்னி யார்தம்
அருள்மறுத் திருக்க அஞ்சித்
தலைமிசைப் பணிமேற் கொண்டு
சங்கரன் கோயில் நின்று
மலைநிகர் மாட வீதி
மருங்குதம் மனையைச் சார்ந்தார்.
18

இல்லத்தில் சென்று புக்கார்
இருநிதிக் குவைகள் ஆர்ந்த
செல்வத்தைக் கண்டு நின்று
திருமனை யாரை நோக்கி
வில்லொத்த நுதலாய் இந்த
விளைவெலாம் என்கொல் என்ன
அல்லொத்த கண்டன் எம்மான்
அருள்தர வந்த தென்றார்.
19

மின்னிடை மடவார் கூற
மிக்கசீர்க் கலய னார்தாம்
மன்னிய பெருஞ்செல் வத்து
வளமலி சிறப்பை நோக்கி
என்னையும் ஆளுந் தன்மைத்
தெந்தைஎம் பெருமான் ஈசன்
தன்னருள் இருந்த வண்ணம்
என்றுகை தலைமேற் கொண்டார்.
20
Go to top

பதுமநற் றிருவின் மிக்கார்
பரிகலந் திருத்திக் கொண்டு
கதுமெனக் கணவ னாரைக்
கண்ணுதற் கன்ப ரோடும்
விதிமுறை தீபம் ஏந்தி
மேவும்இன் அடிசில் ஊட்ட
அதுநுகர்ந் தின்பம் ஆர்ந்தார்
அருமறைக் கலய னார்தாம்.
21

ஊர்தொறும் பலிகொண் டுய்க்கும்
ஒருவன தருளி னாலே
பாரினில் ஆர்ந்த செல்வம்
உடையராம் பண்பில் நீடிச்
சீருடை அடிசில் நல்ல
செழுங்கறி தயிர்நெய் பாலால்
ஆர்தரு காதல் கூர
அடியவர்க் குதவும் நாளில்.
22

செங்கண்வெள் ளேற்றின் பாகன்
திருப்பனந் தாளின் மேவும்
அங்கணன் செம்மை கண்டு
கும்பிட அரசன் ஆர்வம்
பொங்கித்தன் வேழம் எல்லாம்
பூட்டவும் நேர்நில் லாமைக்
கங்குலும் பகலும் தீராக்
கவலையுற் றழுங்கிச் செல்ல.
23

மன்னவன் வருத்தங் கேட்டு
மாசறு புகழின் மிக்க
நன்னெறிக் கலய னார்தாம்
நாதனை நேரே காணும்
அந்நெறி தலைநின் றான்என்
றரசனை விரும்பித் தாமும்
மின்னெறித் தனைய வேணி
விகிர்தனை வணங்க வந்தார்.
24

மழுவுடைச் செய்ய கையர்
கோயில்கள் மருங்கு சென்று
தொழுதுபோந் தன்பி னோடும்
தொன்மறை நெறிவ ழாமை
முழுதுல கினையும் போற்ற
மூன்றெரி புரப்போர் வாழும்
செழுமலர்ச் சோலை வேலித்
திருப்பனந் தாளிற் சேர்ந்தார்.
25
Go to top

காதலால் அரசன் உற்ற
வருத்தமுங் களிற்றி னோடும்
தீதிலாச் சேனை செய்யும்
திருப்பணி நேர்ப டாமை
மேதினி மிசையே எய்த்து
வீழ்ந்திளைப் பதுவும் நோக்கி
மாதவக் கலயர் தாமும்
மனத்தினில் வருத்தம் எய்தி.
26

சேனையும் ஆனை பூண்ட
திரளுமெய்த் தெழாமை நோக்கி
யானுமிவ் விளைப்புற் றெய்க்கும்
இதுபெற வேண்டு மென்று
தேனலர் கொன்றை யார்தம்
திருமேனிப் பூங்கச் சேய்ந்த
மானவன் கயிறு பூண்டு
கழுத்தினால் வருந்த லுற்றார்.
27

நண்ணிய ஒருமை யன்பின்
நாருறு பாசத் தாலே
திண்ணிய தொண்டர் பூட்டி
இளைத்தபின் திறம்பி நிற்க
ஒண்ணுமோ கலய னார்தம்
ஒருப்பாடு கண்ட போதே
அண்ணலார் நேரே நின்றார்
அமரரும் விசும்பில் ஆர்த்தார்.
28

பார்மிசை நெருங்க எங்கும்
பரப்பினர் பயில்பூ மாரி
தேர்மலி தானை மன்னன்
சேனையும் களிறும் எல்லாம்
கார்பெறு கானம் போலக்
களித்தன கைகள் கூப்பி
வார்கழல் வேந்தன் தொண்டர்
மலரடி தலைமேல் வைத்து
29

விண்பயில் புரங்கள் வேவ
வைதிகத் தேரின் மேருத்
திண்சிலை குனிய நின்றார்
செந்நிலை காணச் செய்தீர்
மண்பகிர்ந் தவனுங் காணா
மலரடி யிரண்டும் யாரே
பண்புடை யடியார் அல்லால்
பரிந்துநேர் காண வல்லார்.
30
Go to top

என்றுமெய்த் தொண்டர் தம்மை
ஏத்தியங் கெம்பி ரானுக்
கொன்றிய பணிகள் மற்றும்
உள்ளன பலவும் செய்து
நின்றவெண் கவிகை மன்னன்
நீங்கவும் நிகரில் அன்பர்
மன்றிடை யாடல் செய்யும்
மலர்க்கழல் வாழ்த்தி வைகி.
31

சிலபகல் கழிந்த பின்பு
திருக்கட வூரில் நண்ணி
நிலவுதம் பணியில் தங்கி
நிகழுநாள் நிகரில் காழித்
தலைவராம் பிள்ளை யாரும்
தாண்டகச் சதுர ராகும்
அலர்புகழ் அரசும் கூட
அங்கெழுந் தருளக் கண்டு.
32

மாறிலா மகிழ்ச்சி பொங்க
எதிர்கொண்டு மனையில் எய்தி
ஈறிலா அன்பின் மிக்கார்க்
கின்னமு தேற்கும் ஆற்றால்
ஆறுநற் சுவைகள் ஓங்க
அமைத்தவர் அருளே அன்றி
நாறுபூங் கொன்றை வேணி
நம்பர்தம் அருளும் பெற்றார்.
33

கருப்புவில் லோனைக் கூற்றைக்
காய்ந்தவர் கடவூர் மன்னி
விருப்புறும் அன்பு மேன்மேல்
மிக்கெழும் வேட்கை கூர
ஒருப்படும் உள்ளத் தன்மை
உண்மையால் தமக்கு நேர்ந்த
திருப்பணி பலவும் செய்து
சிவபத நிழலில் சேர்ந்தார்.
34

தேனக்க கோதை மாதர்
திருநெடுந் தாலி மாறிக்
கூனல்தண் பிறையி னார்க்குக்
குங்குலி யங்கொண் டுய்த்த
பான்மைத்திண் கலய னாரைப்
பணிந்தவர் அருளி னாலே
மானக்கஞ் சாறர் மிக்க
வண்புகழ் வழுத்த லுற்றேன்.
35
Go to top

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location:
     
send corrections and suggestions to admin-at-sivaya.org

This page was last modified on Tue, 27 Jan 2026 00:59:47 +0000