பிறை அணி வாள் நுதலாள் உமையாள் அவள் பேழ் கணிக்க நிறை அணி நெஞ்சு அனுங்க(ந்), நீலமால்விடம் உண்டது என்னே? குறை அணி குல்லை, முல்லை, அளைந்து(க்), குளிர் மாதவி மேல் சிறை அணி வண்டுகள் சேர்-திரு நாகேச்சுரத்து அரனே!
|
1
|
சிறகுகளையுடைய அழகிய வண்டுகள், இன்றி யமையாத, அழகிய துளசியிலும், முல்லை மலர்களிலும் மகரந்தத்தை அளைந்து, பின்பு குருக்கத்திக் கொடியின்மேல் சேர்கின்ற திருநாகேச் சரத்தில் எழுந்தருளியிருப்பவனே, நீ பிறைபோலும், அழகிய, ஒளிபொருந்திய நெற்றியை உடையவளாகிய உமையவள் மருளவும், திட்பம் பொருந்திய மனம் கலங்கவும், நீல நிறத்தை உடைய, பெரிய நஞ்சினை உண்டதற்குக் காரணம் யாது? | |
அருந்தவம் மா முனிவர்க்கு அருள் ஆகி, ஓர் ஆல் அதன் கீழ் இருந்து, அறமே புரிதற்கு இயல்பு ஆகியது என்னைகொல் ஆம்!- குருந்து அயலே குரவம்(ம்) அரவின்(ன்) எயிறு ஏற்று அரும்ப, செருந்தி செம்பொன் மலரும்-திரு நாகேச்சுரத்து அரனே!
|
2
|
குருந்த மரத்தின் பக்கத்தில் குராமரம், பாம்பினது பல்லைத் தாங்கினாற்போல அரும்புகளைத் தோற்றுவிக்க, செருந்தி மரம், செம்பொன்போலும் மலரைக் கொண்டு விளங்கும் திருநாகேச் சரத்தில் எழுந்தருளியிருப்பவனே, நீ, அரிய தவத்தையுடைய சிறந்த முனிவர்கள்மேல் கருணை கூர்ந்து, ஓர் ஆலமரத்தின் கீழ் இருந்து அறத்தைச் சொல்ல இசைந்ததற்குக் காரணம் யாது? | |
பாலனது ஆர் உயிர்மேல் பரியாது கைத்து எழுந்த காலனை வீடுவித்து, கருத்து ஆக்கியது என்னைகொல் ஆம்?- கோல மலர்க்குவளை கழுநீர் வயல் சூழ் கிடங்கில், சேலொடு வாளைகள் பாய்-திரு நாகேச்சுரத்து அரனே!
|
3
|
அழகிய குவளை மலர்களையும், செங்கழுநீர் மலர்களையும் உடைய வயல்களைச் சூழ்ந்துள்ள வாய்க்கால்களில், சேல் மீன்களும், வாளை மீன்களும் துள்ளுகின்ற திருநாகேச்சரத்தில் எழுந்தருளியிருப்பவனே, நீ, சிறுவன் ஒருவன்மேல் இரக்கங் கொள்ளாது பகைத்து, அவனது அரிய உயிரைக் கவர வந்த இயமனை அழிவித்து, அச்சிறுவனுக்கு அருளை வழங்கியதற்குக் காரணம் யாது? | |
குன்ற-மலைக்கு மரீ-கொடி ஏர் இடையாள்-வெருவ, வென்றி மதகரியின்(ன்) உரி போர்த்ததும் என்னைகொல் ஆம்?- முன்றில் இளங் கமுகின் முது பாளை மது அளைந்து, தென்றல் புகுந்து உலவும்-திரு நாகேச்சுரத்து அரனே!
|
4
|
இல்லங்களின் முன்னுள்ள இளைய கமுகமரத்தின் பெரிய பாளைகளில் கட்டப்பட்ட தேன் கூடுகளில் உள்ள தேனை, தென்றற் காற்றுத் துழாவி, தெருக்களில் வந்து உலவுகின்ற திருநாகேச் சரத்தில் எழுந்தருளியிருப்பவனே, நீ, பல குன்றுகளையுடைய இமய மலையின் மகளாகிய, கொடிபோலும் இடையையுடைய உமை அஞ்சும்படி, வெற்றியையும், மதத்தையும் உடைய யானையின் தோலை உரித்ததே யன்றி, அதனைப் போர்வையாகப் போர்த்துக் கொண்டதற்குக் காரணம் யாது? | |
அரை விரி கோவணத்தோடு அரவு ஆர்த்து, ஒரு நால்மறை நூல் உரை பெருக(வ்) உரைத்து, அன்று உகந்து(வ்), அருள்செய்தது என்னே?- வரை தரு மா மணியும், வரைச் சந்து, அகிலோடும், உந்தித் திரை பொரு தண்பழன-திரு நாகேச்சுரத்து அரனே!
|
5
|
மலைகள் தந்த சிறந்த மாணிக்கங்களையும், அவற்றில் உள்ள சந்தனக்கட்டை, அகிற்கட்டை என்பவைகளுடன் தள்ளிக்கொண்டு வந்து, அலைகள் மோதுகின்ற, குளிர்ந்த வயல்களை யுடைய திருநாகேச்சரத்தில் எழுந்தருளியிருக்கின்ற பெருமானே, நீ, அரையின்கண், அகன்ற கோவணத்தோடு பாம்பைக் கட்டிக்கொண்டு, ஒப்பற்ற நான்கு வேதங்களின் பொருளை, அன்று விரிவாகச் சொல்லி, அதனைக் கேட்டோரை விரும்பி, அவருக்கு அருள் செய்தற்குக் காரணம் யாது? | |
| Go to top |
தங்கிய மா தவத்தின் தழல் வேள்வியின் நின்று எழுந்த சிங்கமும் நீள் புலியும் செழு மால்கரியோடு அலறப் பொங்கிய போர் புரிந்து(ப்), பிளந்து, ஈர் உரி போர்த்தது என்னே?- செங்கயல் பாய் கழனி-திரு நாகேச்சுரத்து அரனே!
|
6
|
செவ்விய கயல்மீன்கள் துள்ளுகின்ற வயல்களை யுடைய திருநாகேச்சரத்தில் எழுந்தருளியிருப்பவனே, நீ, நிலைபெற்ற பெரிய தவத்தினால், வேள்வித்தீயினின்றும் தோன்றிய சிங்கமும், நீண்ட புலியும், பருத்த பெரிய யானையோடே கதறி அழியும்படி மிக்க போரைச் செய்து கிழித்து, அவற்றினின்றும் உரித்த தோலைப் போர்த்த தற்குக் காரணம் யாது? | |
நின்ற இம் மா தவத்தை ஒழிப்பான் சென்று, அணைந்து, மிகப் பொங்கிய பூங்கணை வேள் பொடி ஆக விழித்தல் என்னே?- பங்கய மா மலர்மேல் மது உண்டு, வண் தேன் முரல, செங்கயல் பாய் வயல் சூழ்-திரு நாகேச்சுரத்து அரனே!
|
7
|
இப்பாடல், ஏடெழுதினோராற் பிழைபட்டதும் மிகையாகப் பிரதிகளில் சேர்ந்தது போலும்! இதனை, ஒன்பதாந் திருப்பாடல் கொண்டு உணர்க.) | |
வரி அர நாண் அது(வ்) ஆக, மாமேரு வில் அது(வ்) ஆக, அரியன முப்புரங்கள்(ள்) அவை ஆர் அழல் மூட்டல் என்னே?- விரிதரு மல்லிகையும், மலர்ச் சண்பகமும்(ம்), அளைந்து திரிதரு வண்டு பண்செய்-திரு நாகேச்சுரத்து அரனே!
|
8
|
சோலைகளில் திரிகின்ற வண்டுகள், மலரும் நிலையில் உள்ள மல்லிகை மலரிலும், சண்பக மலரிலும் மகரந்தத்தை அளைந்து, இசையைப் பாடுகின்ற திருநாகேச்சரத்தில் எழுந்தருளி யிருப்பவனே, நீ, கீற்றுப் பொருந்திய பாம்பே நாணியாகவும், மாமேரு மலையே வில்லாகவும் கொண்டு, அரியவான மூன்று ஊர்களை, அரிய தீ உண்ணும்படி செய்ததற்குக் காரணம் யாது? | |
அங்கு இயல் யோகு தன்னை அழிப்பான் சென்று அணைந்து மிகப் பொங்கிய பூங்கணை வேள் பொடி ஆக விழித்தல் என்னே?- பங்கய மா மலர்மேல் மது உண்டு, பண் வண்டு அறைய, செங்கயல் நின்று உகளும்-திரு நாகேச்சுரத்து அரனே!
|
9
|
குளங்களில், தாமரை மலர்களின் மேல் வண்டுகள் தேனை உண்டு இசையைப்பாட, செவ்விய கயல்மீன்கள், நிலைபெற்று நின்று துள்ளுகின்ற திருநாகேச்சரத்தில் எழுந்தருளியிருப்பவனே, நீ, கயிலையின்கண் செய்த யோகத்தைக் கெடுத்தற்குச் சென்று சேர்ந்து, பெரிதும் சினங்கொண்ட, மலர்க்கணையை உடைய மன்மதன் சாம்பராகும்படி ஒரு கண்ணைத் திறந்ததற்குக் காரணம் யாது? | |
குண்டரை, கூறை இன்றித் திரியும் சமண்சாக்கியப்பேய்- மிண்டரை, கண்ட தன்மை விரவு ஆகியது என்னைகொலோ? தொண்டு இரைத்து(வ்), வணங்கி, தொழில் பூண்டு, அடியார் பரவும் தெண்திரைத் தண்வயல் சூழ் திரு நாகேச்சுரத்து அரனே!
|
10
|
அடியார்கள், அடிமைத்தொழில் பூண்டு, ஆர வாரித்து வணங்கித் துதிக்கின்ற, தெளிந்த அலைகளையுடைய, குளிர்ந்த வயல்கள் சூழ்ந்த திருநாகேச்சரத்தில் எழுந்தருளியிருப் பவனே, மூர்க்கரும், மனவலியுடையவரும் ஆகிய, உடையின்றித் திரியும் சமணரும், புத்தரும் என்னும் பேய்போல்வாரை, அவர் கண்டதே கண்ட தன்மையைப் பொருந்தச் செய்ததற்குக் காரணம் யாது? | |
| Go to top |
கொங்கு அணை வண்டு அரற்ற, குயிலும் மயிலும் பயிலும் தெங்கு அணை பூம்பொழில் சூழ் திரு நாகேச்சுரத்து அரனை, வங்கம் மலி கடல் சூழ் வயல் நாவல் ஆரூரன், சொன்ன பங்கம் இல் பாடல் வல்லார் அவர்தம் வினை பற்று அறுமே.
|
11
|
மகரந்தத்தை அடைந்த வண்டுகள் ஒலிக்க, குயிலும், மயிலும் பாடுதலையும், ஆடுதலையும் செய்கின்ற, தேனினது மணங் கமழ்கின்ற பூஞ்சோலைகள் சூழ்ந்த திருநாகேச்சரத்தில் எழுந் தருளியிருக்கின்ற இறைவனை, மரக்கலங்கள் நிறைந்த கடல்போலச் சூழ்ந்துள்ள வயல்களையுடைய திருநாவலூரானாகிய நம்பியாரூரன் பாடிய, குறையில்லாத இப்பாடல்களைப் பாட வல்லவர்களது வினை பற்றறக் கழியும். | |