ஆதியன்; ஆதிரையன்(ன்) அயன் மால் அறிதற்கு அரிய சோதியன்; சொல்பொருள் ஆய்; சுருங்கா மறை நான்கினையும் ஓதியன்; உமபர்தம் கோன்; உலகத்தினுள் எவ் உயிர்க்கும் நாதியன்; நம்பெருமான்; நண்ணும் ஊர்-நனிபள்ளி அதே.
|
1
|
எப்பொருட்கும் முதலானவனும் , ஆதிரை நாண் மீனைத் தனக்கு உரியதாகக் கொண்டவனும் , பிரமனும் திருமாலும் அறிதற்கரிய ஒளிவடிவானவனும் , சொல்லும் சொற்பொருளுமாய் நின்று , சுருங்குதல் இல்லாத வேதங்கள் நான்கினையும் ஓதியவனும் , தேவர்களுக்குத் தலைவனும் , உலகில் உள்ள எல்லா உயிர்கட்கும் தந்தையும் ஆகிய இறைவன் பொருந்தியிருக்கின்ற ஊர் , திருநனி பள்ளியே . | |
உறவு இலி; ஊனம் இலி; உணரார் புரம் மூன்று எரியச் செறி வி(ல்)லி; தன் நினைவார் வினை ஆயின தேய்ந்து அழிய அற இலகும்(ம்) அருளான்; மருள் ஆர் பொழில், வண்டு அறையும், நற விரி கொன்றையினான்; நண்ணும் ஊர்-நனிபள்ளி அதே.
|
2
|
உறவுத் தொடக்கு இல்லாதவனும் , குறைவில்லாத வனும் , தன்னை மதியாதவரது மூன்று ஊர்களும் எரிந்தொழியும்படி அழித்த வில்லை உடையவனும் , தன்னை நினைபவரது வினை யெல்லாம் வலிமை குன்றி அழியும்படி , மிகவும் விளங்குகின்ற திரு வருளை உடையவனும் , தேனோடு மலர்கின்ற கொன்றை மலர் மாலையை அணிந்தவனும் ஆகிய இறைவன் பொருந்தியிருக்கின்ற ஊர் , மயக்கத்தைத் தருகின்ற சோலைகளில் வண்டுகள் ஒலிக்கின்ற திருநனிபள்ளியே . | |
வான் உடையான்; பெரியான்; மனத்தாலும் நினைப்பு அரியான்; ஆன் இடை ஐந்து அமர்ந்தான்; அணு ஆகி, ஓர் தீ உருக் கொண்டு ஊன் உடை இவ் உடலம்(ம்) ஒடுங்கிப் புகுந்தான்; பரந்தான்; நான் உடை மாடு; எம்பிரான்; நண்ணும் ஊர்-நனிபள்ளி அதே.
|
3
|
விண்ணுலகத்தைத் தனதாக உடையவனும் , யாவரினும் பெரியோனும் , மனத்தாலும் நினைத்தற்கரியவனும் , பசுவினிடத்துத் தோன்றுகின்ற ஐந்து பொருள்களை விரும்புபவனும் , நுண்ணிய பொருளாகி , சுடர் வடிவத்தைக்கொண்டு , ஊனையுடைய தாகிய இவ்வுடம்பினுள் அடங்கிப் புகுந்தவனும் , உலகம் எல்லாம் தன்னுள் அடங்க விரிந்தவனும் , நான் உடைய செல்வமாய் இருப் பவனும் ஆகிய எம்பெருமான் பொருந்தியிருக்கின்ற ஊர் திருநனி பள்ளியே . | |
ஓடு உடையன், கலனா; உடை கோவணவன்(ன்); உமை ஓர்- பாடு உடையன்; பலி தேர்ந்து உண்ணும் பண்பு உடையன்; பயிலக் காடு உடையன்(ன்), இடமா; மலை ஏழும், கருங்கடல் சூழ் நாடு, உடை நம்பெருமான் நண்ணும் ஊர்-நனிபள்ளி அதே.
|
4
|
ஓட்டினை உண்கலமாகவும் , கோவணத்தை உடை யாகவும் உடையவனும் , ஒரு பக்கத்தில் உமையை உடையவனும் , பிச்சை எடுத்து உண்ணும் தன்மையை உடையவனும் , வாழ்வதற்குரிய இடமாகக் காட்டை உடையவனும் , ஏழு மலைகளையும் , கரிய கடல் சூழ்ந்த ஏழு நாடுகளையும் உடையவனும் ஆகிய நம்பெருமான் பொருந்தியிருக்கின்ற ஊர் , திருநனிபள்ளியே . | |
பண்ணற்கு அரியது ஒரு படை ஆழிதனைப் படைத்துக் கண்ணற்கு அருள்புரிந்தான்; கருதாதவர் வேள்வி அவி உண்ணற்கு இமையவரை உருண்டு ஓட உதைத்து, உகந்து, நண்ணற்கு அரிய பிரான்; நண்ணும் ஊர்-நனிபள்ளி அதே.
|
5
|
ஆக்குதற்கு அரிதாகிய சக்கரப்படை ஒன்றை ஆக்கி , அதனைத் திருமாலுக்கு அளித்தவனும் , தன்னை மதியாத வனாகிய தக்கனது வேள்வியில் அவிசை உண்ணச் சென்ற தேவர் அனைவரையும் சிதறி ஓடும்படி தாக்கிப்பின் அவர்கட்கு அருள் செய்து , ஒருவராலும் அணுகுதற்கரிய தலைவனாகியவனும் ஆகிய இறைவன் பொருந்தியிருக்கும் ஊர் , திருநனிபள்ளியே . | |
| Go to top |
மல்கிய செஞ்சடைமேல் மதியும்(ம்) அரவும்(ம்) உடனே,- புல்கிய ஆரணன், எம் புனிதன், புரிநூல் விகிர்தன், மெல்கிய வில்-தொழிலான், விருப்பன், பெரும் பார்த்தனுக்கு நல்கிய நம்பெருமான், நண்ணும் ஊர் நன்பள்ளி அதே.
|
6
|
நிறைந்த , சிவந்த சடையின்மேல் , சந்திரனும் பாம்பும் ஒருங்கியைந்து பொருந்திய திருமேனியனாகிய வேத முதல்வனும் , எங்கள் தூயோனும் , முப்புரி நூலையணிந்த , வேறுபட்ட தன்மையை உடையவனும் , தன்மேல் அன்புடையவனாகிய மிக்க தவத்தையுடைய அருச்சுனனுக்கு , மெல்லிய வில்தொழிலினால் அருள்பண்ணினவனும் ஆகிய இறைவன் பொருந்தியிருக்கும் ஊர் , திருநனிபள்ளியே . | |
அங்கம் ஓர் ஆறு அவையும்(ம்), அருமாமறை, வேள்விகளும், எங்கும் இருந்து அந்தணர் எரிமூன்று அவை, ஓம்பும் இடம்; பங்கயமா முகத்தாள் உமை பங்கன் உறை கோயில்; செங்கயல் பாயும் வயல்-திரு ஊர்-நனிபள்ளி அதே.
|
7
|
தாமரை மலர்போலும் முகத்தையுடைய உமா தேவியைப் பாகத்தில் உடையவனாகிய இறைவன் எழுந்தருளி யிருக்கின்ற இடம் , அந்தணர்கள் மூன்று எரிகளோடே , ஆறு அங்கங்களையும் , அரிய வேதங்களையும் , வேள்விகளையும் எவ்விடத்தும் இருந்து வளர்க்கின்ற இடமாகிய , செவ்விய கயல் மீன்கள் துள்ளுகின்ற வயல்களையுடைய அழகிய ஊரான திருநனி பள்ளியே . | |
திங்கள் குறுந்தெரியல்-திகழ் கண்ணியன்-; நுண்ணியனாய், நம் கண் பிணி களைவான்; அரு மா மருந்து, ஏழ் பிறப்பும்; மங்கத் திருவிரலால் அடர்த்தான், வல் அரக்கனையும்; நங்கட்கு அருளும் பிரான்; நண்ணும் ஊர்-நனிபள்ளி அதே.
|
8
|
சிறிய பிறையாகிய , விளக்கம் அமைந்த கண்ணிமாலையைச் சூடியவனும் , நுண்ணியனாய் நின்று , எழுவகைப் பிறப்புக்களும் கெடும்படி , நம்மிடத்து உள்ள வினையாகிய நோயை நீக்குகின்ற , உயர்ந்த , அரிய பெரிய மருந்தாய் உள்ளவனும் , வலிய அரக்கனாகிய இராவணனையும் , அழகிய ஒரு விரலால் நெரித்தவனும் ஆகிய , நமக்கு அருள்செய்யும் பெருமான் பொருந்தியிருக்கின்ற ஊர் , திருநனிபள்ளியே . | |
ஏன மருப்பினொடும்(ம்) எழில் ஆமையும் பூண்டு, உகந்து, வான மதிள் அரணம் மலையே சிலையா வளைத்தான்; ஊனம் இல் காழி தன்னுள்(ள்) உயர் ஞானசம்பந்தற்கு அன்று ஞானம் அருள்புரிந்தான்; நண்ணும் ஊர்-நனிபள்ளி அதே.
|
9
|
பன்றியின் கொம்பையும் , அழகிய ஆமை யோட்டையும் விரும்பியணிந்து , வானத்திற்செல்லும் மதிலாகிய அரணின்முன் , மலையையே வில்லாக வளைத்து நின்றவனும் , குறையில்லாத சீகாழிப்பதியுள் உயர்ந்தோராகிய ஞானசம்பந்தர்க்கு ஞானத்தை அருள்செய்தவனும் ஆகிய இறைவன் பொருந்தியிருக்கும் ஊர் , திருநனிபள்ளியே . | |
காலமும் நாழிகையும் நனிபள்ளி மனத்தின் உள்கி, கோலம் அது ஆயவனைக் குளிர் நாவல ஊரன் சொன்ன மாலை மதித்து உரைப்பார், மண் மறந்து வானோர் உலகில் சால நல் இன்பம் எய்தி, தவலோகத்து இருப்பவரே.
|
10
|
காலமும் நாள்தோறும் கழியாநிற்கும் , அதனால் , குளிர்ந்த திருநாவலூரனாகிய நம்பியாரூரன் , கருணையால் திருவுருக்கொண்ட இறைவனைத் திருநனிபள்ளியுள் வைத்து மனத்தில் நினைத்துப் பாடிய இப்பாமாலையின் பெருமையை உணர்ந்து பாடு வோர் , தேவருலகில் மிக்க இன்பத்தைத் துய்த்து , பின்பு மண்ணுலகத்தில் வருதலை மறந்து , சிவலோகத்தில் இருப்பவரே யாவர் . | |
| Go to top |