வடிவு உடை மழு ஏந்தி, மதகரி உரி போர்த்து, பொடி அணி திருமேனிப் புரிகுழல் உமையோடும், கொடி அணி நெடுமாடக் கூடலையாற்றூரில் அடிகள் இவ் வழி போந்த அதிசயம் அறியேனே!
|
1
|
கூர்மையையுடைய மழுப்படையை ஏந்தி , மதத்தை யுடைய யானையினது தோலைப் போர்த்துக்கொண்டு , பின்னிய கூந்தலையுடைய உமாதேவியோடும் , கொடிகள் நாட்டிய உயர்ந்த மாடங்களையுடைய திருக்கூடலையாற்றூரில் எழுந்தருளியிருக்கின்ற , திருநீற்றை யணிந்த பெருமான் , இவ்வழியிடை என்முன் வந்த வியத்தகு செயலை , அடியேன் அறியாதேயொழிந்தேன் ; இஃதே என் ஏழைமை இருந்தவாறு ! | |
வையகம் முழுது உண்ட மாலொடு, நான்முகனும், பை அரவு இள அல்குல் பாவையொடும்(ம்), உடனே, கொய் அணி மலர்ச் சோலைக் கூடலையாற்றூரில் ஐயன் இவ் வழி போந்த அதிசயம் அறியேனே!
|
2
|
உலகம் முழுதையும் உண்ட திருமாலோடும் . பிரம தேவனோடும் , அரவப் படம்போலும் அல்குலையுடைய , இளைய , பாவைபோலும் உமாதேவியோடும் உடனாகி , கொய்யப்படுகின்ற அழகிய பூக்களையுடைய சோலைகளையுடைய திருக்கூடலை யாற்றூரில் எழுந்தருளியிருக்கின்ற தலைவன் , இவ்வழியிடை என் முன் வந்த வியத்தகு செயலை , அடியேன் அறியாதேயொழிந்தேன் ; இஃதே என் ஏழைமை இருந்தவாறு ! | |
ஊர்தொறும் வெண் தலை கொண்டு, உண் பலி இடும்! என்று, வார் தரு மென்முலையாள் மங்கையொடும்(ம்) உடனே, கூர் நுனை மழு ஏந்தி, கூடலையாற்றூரில் ஆர்வன் இவ் வழி போந்த அதிசயம் அறியேனே!
|
3
|
ஊர்தோறும் சென்று , வெள்ளிய தலையோட்டை ஏந்தி , ` பிச்சை இடுமின் ` என்று இரந்துண்டு . கச்சணிந்த , மெல்லிய தனங்களையுடையவளாகிய உமாதேவியோடும் உடனாய் , கூரிய முனையையுடைய மழுவை ஏந்திக் கொண்டு , திருக்கூடலையாற்றூரில் எழுந்தருளியிருக்கின்ற , பேரன்புடையனாகிய பெருமான் , இவ்வழி யிடை என்முன் வந்த வியத்தகு செயலை , அடியேன் அறியாதே யொழிந்தேன் ; இஃதே என் ஏழைமை இருந்தவாறு ! | |
சந்து அணவும் புனலும் தாங்கிய தாழ்சடையன் பந்து அணவும் விரலாள் பாவையொடும்(ம்) உடனே, கொந்து அணவும் பொழில் சூழ் கூடலையாற்றூரில் அந்தணன் வழி போந்த அதிசயம் அறியேனே!
|
4
|
பிறை முதலிய பிறவற்றோடு அழகு பொருந்திய நீரையும் தாங்கியிருக்கின்ற , நீண்ட சடைமுடியையுடையவனாய் , பந்தின்கண் பொருந்திய விரலை யுடையாளாகிய , பாவைபோலும் உமையோடும் உடனாகி , பூங்கொத்துக்கள் பொருந்திய சோலை சூழ்ந்த திருக்கூடலையாற்றூரில் எழுந்தருளியிருக்கின்ற , அழகிய கருணையை யுடையவனாகிய பெருமான் , இவ்வழியிடை என்முன் போந்த வியத்தகு செயலை , அடியேன் அறியாதே யொழிந்தேன் ; இஃதே என் ஏழைமை இருந்தவாறு ! | |
வேதியர் விண்ணவரும் மண்ணவரும் தொழ, நல் சோதி அது உரு ஆகி, சுரிகுழல் உமையோடும், கோதிய வண்டு அறையும் கூடலையாற்றூரில் ஆதி இவ் வழி போந்த அதிசயம் அறியேனே!
|
5
|
அந்தணரும் , தேவரும் , மக்களும் வணங்கி நிற்க , நல்ல ஒளியுருவமாய் , சுரிந்த கூந்தலையுடைய உமாதேவியோடும் , பூக்களில் மகரந்தத்தைக்கிண்டிய வண்டுகள் ஓசையைச் செய்கின்ற திருக்கூடலையாற்றூரில் எழுந்தருளியிருக்கின்ற முதல்வன் , இவ்வழி யிடை என்முன் வந்த வியத்தகு செயலை , அடியேன் அறியாதே யொழிந்தேன் ; இஃதே என் ஏழைமை இருந்தவாறு ! | |
| Go to top |
வித்தக வீணையொடும், வெண்புரிநூல் பூண்டு, முத்து அன வெண் முறுவல் மங்கையொடும்(ம்) உடனே, கொத்து அலரும் பொழில் சூழ் கூடலையாற்றூரில் அத்தன் இவ் வழி போந்த அதிசயம் அறியேனே!
|
6
|
தான் வல்லதாகிய வீணையோடும் , வெள்ளிய முப்புரி நூலை அணிந்து , முத்துப்போலும் வெள்ளிய நகையினை யுடைய உமாதேவியோடும் உடனாகி , பூக்கள் கொத்தின்கண் மலர்கின்ற சோலைகள் சூழ்ந்த திருக்கூடலையாற்றூரில் எழுந்தருளி யிருக்கின்ற எந்தை , இவ்வழியிடை என்முன் வந்த வியத்தகு செயலை , அடியேன் அறியாதேயொழிந்தேன் ; இஃதே என் ஏழைமை இருந்த வாறு ! | |
மழை நுழை மதியமொடு வாள் அரவம் சடைமேல இழை நுழை துகில் அல்குல் ஏந்திழையாளோடும குழை அணி திகழ் சோலைக் கூடலையாற்றூரில் அழகன் இவ் வழி போந்த அதிசயம் அறியேனே!
|
7
|
மேகத்தில் நுழைகின்ற சந்திரனையும் , கொடிய பாம்பையும் சடைக்கண்வைத்து , நுண்ணிய இழைபொருந்திய உயர்ந்த உடையை அணிந்த அல்குலையும் , தாங்கிய அணிகலங் களையும் உடைய உமாதேவியோடும் உடனாகி , தளிர்களது அழகு விளங்குகின்ற சோலைகளையுடைய திருக்கூடலையாற்றூரில் எழுந் தருளியிருக்கின்ற அழகன் , இவ்வழியிடை என்முன் வந்த வியத்தகு செயலை , அடியேன் அறியாதே யொழிந்தேன் ; இஃதே என் ஏழைமை இருந்தவாறு ! | |
மறை முதல் வானவரும், மால், அயன், இந்திரனும், பிறை நுதல் மங்கையொடும், பேய்க்கணமும், சூழ, குறள்படை அதனோடும், கூடலையாற்றூரில் அறவன் இவ் வழி போந்த அதிசயம் அறியேனே!
|
8
|
வேதத்திற் சொல்லப்பட்ட தலைமைகளையுடைய பலராகிய தேவரும் , அத்தேவர்க்கெல்லாம் தலைவனாகிய இந்திரனும் , பேய்க்கூட்டமும் சூழ்ந்திருக்க , பிறைபோலும் நெற்றியை யுடைய உமாதேவியோடும் , பூதப் படையோடும் , திருக்கூடலை யாற்றூரில் எழுந்தருளியிருக்கின்ற புண்ணியனாகிய பெருமான் , இவ்வழியிடை என்முன் வந்த வியத்தகு செயலை , அடியேன் அறியாதேயொழிந்தேன் ; இஃதே என் அறியாமை இருந்தவாறு ! | |
வேலையின் நஞ்சு உண்டு, விடை அது தான் ஏறி, பால் அன மென்மொழியாள் பாவையொடும்(ம்) உடனே, கோலம் அது உரு ஆகி, கூடலையாற்றூரில் ஆலன் இவ் வழி போந்த அதிசயம் அறியேனே!
|
9
|
கடலின்கண் எழுந்த நஞ்சினை உண்டு விடையை ஊர்ந்து , பால்போலும் இனிய மொழியை உடையவளாகிய உமா தேவியோடும் உடனாய கோலமே தனது உருவமாகக் கொண்டு , திருக் கூடலையாற்றூரில் எழுந்தருளியிருக்கின்ற ஆல்நிழற்பெருமான் , இவ் வழியிடை என்முன் வந்த வியத்தகு செயலை , அடியேன் அறியாதே யொழிந்தேன் ; இஃதே என் அறியாமை இருந்தவாறு ! | |
கூடலையாற்றூரில் கொடி இடையவளோடும் ஆடல் உகந்தானை, அதிசயம் இது என்று நாடிய இன்தமிழால் நாவல ஊரன் சொல் பாடல்கள் பத்தும் வல்லார் தம் வினை பற்று அறுமே.
|
10
|
திருக்கூடலையாற்றூரில் , கொடிபோலும் இடையினையுடையவளாகிய உமாதேவியோடும் , அருள் விளை யாட்டை விரும்பி எழுந்தருளியிருக்கின்ற பெருமானை , ` அவன் செய்த இச்செயல் அதிசயம் ` என்று சொல்லி , ஆராய்ந்த இனிய தமிழால் , திருநாவலூரனாகிய நம்பியாரூரன் பாடிய இப்பாடல்கள் பத்தினையும் பாட வல்லவர்களது வினை , பற்றறக் கெடுதல் திண்ணம் . | |
| Go to top |