முற்பட்டு வருகின்ற பழையனவாகிய வலிய வினைவந்து சூழும் முன்னே , என் தந்தைக்கும் தலைவராய் உள்ள இறைவரை , அடியேன் , இரவும் பகலும் திருவைந்தெழுத்தை ஓதும் முறையில் சித்தத்தால் சிந்தித்துக்கொண்டு , அழகிய திருவாரூரினுட் சென்று தலைக்கூடப் பெறுவது எந்நாளோ !
நின்ற வினைக் கொடுமை நீங்க இருபொழுதும் துன்று மலர் இட்டு, சூழும் வலம் செய்து, தென்றல் மணம் கமழும் தென்திரு ஆரூர் புக்கு, என் தன் மனம் குளிர என்றுகொல் எய்துவதே?
செய்யப்பட்டு நிற்கின்ற வினைகளது கொடுமை களெல்லாம் நீங்குமாறு , காலை மாலை இருபொழுதினும் , நெருங்கிய மலர்களைத் தூவி , சுற்றிலும் வலமாக வந்து எனது மனம் குளிர்தற்கு , தென்றற் காற்று நறுமணங் கமழ வருகின்ற அழகிய திருவாரூரினுட் சென்று எந்தை பிரானாரை , அடியேன் தலைக்கூடப் பெறுவது எந் நாளோ !
முன்னை முதல் பிறவி மூதறியாமையினால் பின்னை நினைந்தனவும் பேதுறவும்(ம்) ஒழிய, செந்நெல் வயல்-கழனித் தென்திரு ஆரூர் புக்கு, என் உயிர்க்கு இன்னமுதை என்றுகொல் எய்துவதே?
தொன்று தொட்டு வருகின்ற பிறவிகளில் , பெரிய அறியாமை காரணமாக , வருங்காலத்திற் பெற நினைத்த நினைவு களும் , அவற்றால் விளைகின்ற துன்பங்களும் ஒழியுமாறு , செந்நெற் களை விளைவிக்கின்ற , நல்ல வயல்களாகிய கழனிகளையுடைய , அழகிய திருவாரூரினுட் சென்று , எனது உயிருக்கு இனிய அமுதம் போல்பவனை , யான் தலைக்கூடப் பெறுவது எந்நாளோ !
நல்ல நினைப்பு ஒழிய நாள்களில் ஆர் உயிரைக் கொல்ல நினைப்பனவும் குற்றமும் அற்று ஒழிய, செல்வ வயல்-கழனித் தென்திரு ஆரூர் புக்கு, எல்லை மிதித்து, அடியேன் என்றுகொல் எய்துவதே?
நல்ல எண்ணம் நீங்குதலால் , அரிய உயிர்களை அவை உடம்போடு கூடி வாழும் நாட்களிலே கொல்லுதற்கு எண்ணு கின்ற எண்ணங்களும் , மற்றும் பல குற்றங்களும் அடியோடு அகன் றொழியுமாறு , உயர்ந்த நெல்விளைகின்ற வயல்களையுடைய அழகிய திருவாரூரின் எல்லையை மிதித்து , அந்நகரினுட் சென்று , எனது உயிர்க்கு இனிய அமுதம் போல்பவனாகிய இறைவனை , அடியேன் தலைக்கூடப் பெறுவது எந்நாளோ !
கடு வரி மாக் கடலுள் காய்ந்தவன் தாதையை, முன்; சுடுபொடி மெய்க்கு அணிந்த சோதியை; வன்தலை வாய் அடு புலி ஆடையனை; ஆதியை;-ஆரூர் புக்கு- இடு பலி கொள்ளியை; நான் என்றுகொல் எய்துவதே?
நஞ்சு போலும் நிறத்தையுடைய மாமரத்தைக் கடலின் நடுவண் அழித்தவனாகிய முருகனுக்குத் தந்தையும் , எல்லா வற்றினும் முன்னதாக , சுடப்பட்ட சாம்பலை உடம்பின்கண் பூசிய ஒளிவடிவினனும் , கொல்லும் தன்மை வாய்ந்த புலியினது தோலாகிய உடையை உடுத்தவனும் , உலகிற்கு முதல்வனும் , வலிய தலை ஓட்டின் கண் , மகளிர் இடுகின்ற பிச்சையை ஏற்பவனும் ஆகிய எம் பெரு மானை , திருவாரூரினுட் சென்று , அடியேன் தலைக்கூடப் பெறுவது எந்நாளோ !
சூழ் ஒளி, நீர், நிலம், தீ, தாழ் வளி, ஆகாசம், வான் உயர் வெங்கதிரோன், வண்தமிழ் வல்லவர்கள் ஏழ் இசை, ஏழ் நரம்பின் ஓசையை;-ஆரூர் புக்கு- ஏழ் உலகு ஆளியை; நான் என்றுகொல் எய்துவதே;
பல உயிர்களும் வாழ்கின்ற நிலமும் , தாழ வீழும் நீரும் , ஒளியையுடைய தீயும் , யாண்டும் இயங்கும் காற்றும் , உயர்ந் துள்ள ஆகாயமும் , வெவ்விய கதிர்களை யுடையோனாகிய பகலவ னும் , வளவிய தமிழில் வல்லவர்கள் வகுத்த ஏழிசையாகிய ஏழுநரம் பின் ஓசையும் என்னும் இவை எல்லாமாய் நிற்பவனும் , ஏழுலகமாகிய இவைகளைத் தன் வழிப் படுத்து ஆள்பவனும் ஆகிய எம் பெரு மானை , திருவாரூரினுட் சென்று , அடியேன் தலைக்கூடப் பெறுவது எந்நாளோ !
இளங்கொம்புபோலும் நுண்ணிய இடையினை யுடைய உமையது கூற்றினை யுடையவனும் , திரு நீறாகிய நறுமணப் பூச்சினை அணிந்தவனும் , எல்லா உயிர்கட்கும் சேமநிதிபோல் பவனும் தன்னோடு ஒப்புமையுடைய தேவர்கட்குச் செம்பொன்னும் , நவமணியும் போல்பவனும் எனக்கு உரிய பொன்னும் மணியுமாய் இருப்பவனும் ஆகிய எம் பெருமானை , அழகிய திருவாரூரினுட் சென்று , அடியேன் தலைக்கூடப் பெறுவது எந்நாளோ !
ஆறு அணி நீள் முடிமேல் ஆடு அரவம் சூடிப் பாறு அணி வெண்தலையில் பிச்சை கொள் நச்சு அரவன்,- சேறு அணி தண்கழனித் தென்திரு ஆரூர் புக்கு- ஏறு அணி எம் இறையை, என்றுகொல் எய்துவதே?
கங்கையைத் தாங்கிய நீண்ட சடையின் மேல் , பட மெடுத்து ஆடுகின்ற பாம்பைச் சூடுகின்றவனும் பருந்து சூழும் வெள்ளிய தலை ஓட்டில் பிச்சை ஏற்பவனும் , நஞ்சினையுடைய பாம்பை அணிபவனும் ஆகிய இடபக் கொடியைக் கொண்ட எம் பெரு மானை , சேற்றைக் கொண்ட குளிர்ந்த கழனிகளையுடைய அழகிய திருவாரூரினுட் சென்று , அடியேன் தலைக்கூடப் பெறுவது எந்நாளோ !
மண்ணுலகத்தை உண்டு உமிழ்ந்த திருமாலும் , சிறந்த தாமரை மலர்மேல் இருக்கும் தலைவனாகிய பிரமனும் அணுகுதற்கரிய இறைவனை , இறைவியோடும் மறவாது நினைக்கு மாறும் கண்டு கண் குளிருமாறும் , திண்ணிய , பெரிய மதில் சூழ்ந்த , அழகிய திருவாரூரினுட் சென்று , அடியேன் தலைக்கூடப் பெறுவது எந்நாளோ !
மின் நெடுஞ்செஞ்சடையன் மேவிய ஆரூரை நன்நெடுங் காதன்மையால் நாவலர்கோன் ஊரன் பல்-நெடுஞ் சொல்மலர்கொண்டு இட்டன பத்தும் வல்லார் பொன் உடை விண்ணுலகம் நண்ணுவர்; புண்ணியரே.
மின்னல்போலும் , நீண்ட சிவந்த சடையையுடைய இறைவன் விரும்பி எழுந்தருளியிருக்கின்ற திருவாரூரை , திரு நாவலூரில் உள்ளார்க்குத் தலைவனாகிய நம்பி யாரூரன் , நல்ல , நெடிய பேரன்பினால் , பல , சிறந்த சொற்களாகிய மலர்களால் அணிசெய்து சாத்திய பாமாலைகள் பத்தினையும் அங்ஙனமே சாத்த வல்லவர்கள் புண்ணியம் உடையவர்களாய் , பொன்னை முதற் கருவியாக உடைய விண்ணுலகத்தை அடைவார்கள் .