சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

7.078   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு

திருக்கேதாரம் - நட்டபாடை சலநாட்டை கம்பீரநாட்டை ராகத்தில் திருமுறை அருள்தரு கேதாரேசுவரியம்மை உடனுறை அருள்மிகு கேதாரேசுவரர் திருவடிகள் போற்றி
- Hide Meaning   https://www.youtube.com/watch?v=2pgUwFPemjk   Add audio link Add Audio

வாழ்வு ஆவது மாயம்(ம்); இது மண் ஆவது திண்ணம்;
பாழ் போவது பிறவிக் கடல்; பசி, நோய், செய்த பறி தான்;
தாழாது அறம் செய்ம்மின்! தடங்கண்ணான் மலரோனும்
கீழ் மேல் உற நின்றான் திருக்கேதாரம் எனீரே!

1
உலகீர் , பசிநோயை உண்டாக்குகின்ற உடம்பு நிலைத்திருத்தல் என்பது பொய் ; இது மண்ணாய் மறைந்தொழிவதே மெய் ; ஆதலின் , இல்லாது ஒழிய வேண்டுவது பிறவியாகிய கடலே ; அதன் பொருட்டு , நீவிர் நீட்டியாது விரைந்து அறத்தைச் செய்ம்மின்கள் ; பெரிய கண்களையுடையவனாகிய திருமாலும் , மலரில் இருப்பவனாகிய பிரமனும் நிலத்தின் கீழும் , வானின்மேலும் சென்று தேடுமாறு நின்றவனாகிய இறைவன் எழுந்தருளியிருக்கின்ற , ` திருக்கேதாரம் ` என்று சொல்லுமின்கள் .

பறியே சுமந்து உழல்வீர்; பறி நரி கீறுவது அறியீர்;
குறி கூவிய கூற்றம் கொளும் நாளால் அறம் உளவே?
அறிவானிலும் அறிவான்-நல நறுநீரொடு, சோறு,
கிறி பேசி நின்று இடுவார் தொழு கேதாரம் எனீரே!

2
வேறொன்றும் செய்யாது உடம்பைச் சுமந்தே திரிகின்றவர்களே , இவ்வுடம்பு நரிகளால் கிழித்து உண்ணப்படுவ தாதலை அறிகின்றிலீர் ; குறித்த நாளில் உம்மை அழைத்தற்குக் கூற்று வன் நினைக்கின்ற நாளில் உமக்கு அறங்கள் உளவாகுமோ ? ஆகா வாகலின் , இப்பொழுதே , அறிய வேண்டுவனவற்றை அறியும் வானுலகத்தவரினும் மேலான அறிவுடன் , நல்ல நறுமணத்தையுடைய நீரையும் , சோற்றையும் விருந்தினருக்கு , இன்சொற் பேசி இடுகின்றவர் கள் வணங்குகின்ற , ` திருக்கேதாரம் ` என்று சொல்லுமின்கள் .

கொம்பைப் பிடித்து ஒருக்(கு)காலர்கள் இருக்கால் மலர் தூவி,
நம்பன் நமை ஆள்வான் என்று, நடுநாளையும் பகலும்;
கம்பக் களிற்று இனம் ஆய் நின்று, சுனை நீர்களைத் தூவி,
செம்பொன் பொடி சிந்தும் திருக்கேதாரம் எனீரே!

3
உலகீர் , யோகதண்டத்தை ஊன்றி , ஒருவழிப் படுத்துகின்ற உயிர்ப்பினை உடைய யோகிகள் , ` இவனே நம்மை ஆள்பவன் ` என்று , நள்ளிரவிலும் , பகலிலும் மந்திர ஒலியோடு மலர்களைத் தூவி விரும்பப்படுகின்ற இறைவனது , அசைதலை யுடைய ஆண் யானையின் கூட்டம் தொடர்ந்துவந்து நின்று , பல சுனை களின் நீரை இறைத்து , செம்பொன்னினது பொடியை உதிர்க்கின்ற , ` திருக்கேதாரம் ` என்று சொல்லுமின்கள் .

உழக்கே உண்டு, படைத்து ஈட்டி வைத்து, இழப்பார்களும், சிலர்கள்;
வழக்கே? எனில், பிழைக்கேம் என்பர், மதி மாந்திய மாந்தர்;
சழக்கே பறி நிறைப்பாரொடு தவம் ஆவது செயன்மின்!
கிழக்கே சலம் இடுவார் தொழு கேதாரம் எனீரே!

4
அறிவை அழித்துக்கொண்ட மாந்தர்களே , பொருளைத்தேடி , உழக்கரிசியை அட்டு உண்ணுதல் ஒன்றைச் செய்து விட்டு , எஞ்சியவற்றைத் தொகுத்துவைத்துப் பின் இழந்து போவாரும் சிலர் இவ்வுலகில் உளர் ; அவர்கள் , ` அறம் ` என்றாலோ , ` அஃது எமக்கு வேண்டா ; யாம் உண்டு உயிர் வாழ்வேம் ` என்று போவர் . வஞ்சனையால் தம் வயிற்றை மட்டுமே நிரப்பிக்கொள்கின்ற அவர் களோடு கூடி , அவர்களது நோன்பாகிய அச்செயலை நீவிர் செய்யன் மின் ; விடியற்காலையில் பகலவன் வருகையை எதிர்நோக்கி நின்று , மந்திர நீரை இறைத்துக் காலைச் சந்தியை முடிக்கின்றவர்கள் வணங்கு கின்ற , ` திருக்கேதாரம் ` என்று சொல்லுமின்கள் .

வாள் ஓடிய தடங்கண்ணியர் வலையில்(ல்) அழுந்தாதே,
நாள் ஓடிய நமனார் தமர் நணுகாமுனம் நணுகி,
ஆள் ஆய் உய்ம்மின்! அடிகட்கு இடம் அதுவே எனில் இதுவே;
கீளோடு அரவு அசைத்தான் இடம் கேதாரம் எனீரே!

5
உலகீர் , நாட்கள் ஓடிவிட்டன ; ஆதலின் , இயமன் தூதுவர் வருதற்கு முன்பு , வாள்போல இருபக்கமும் ஓடுகின்ற , அகன்ற கண்களையுடைய மகளிரது ஆசையாகிய வலையிற் சிக்காமல் , இப்பொழுதே இறைவனை அடைந்து அவனுக்கு ஆளாகிப் பிழை மின்கள் ; அங்ஙனம் பிழைத்தற்கு அவனுக்கு இடமாவதுதான் யாது எனில் , இங்குச் சொல்லப்பட்டு வரும் இத்திருக்கேதாரமே . அரையில் கீளுடன் பாம்பைக் கட்டியுள்ள அவனது இடம் ; ஆதலின் , இதனைத் துதிமின்கள் .
Go to top

தளி சாலைகள் தவம் ஆவது, தம்மைப் பெறில் அன்றே?
குளியீர், உளம்! குருக்கேத்திரம் கோதாவிரி, குமரி,
தெளியீர் உளம்! சீ பர்ப்பதம்; தெற்கு(வ்) வடக்கு ஆக
கிளி வாழை ஒண்கனி கீறி உண் கேதாரம் எனீரே!

6
உலகீர் , தேவகோட்டங்கள் தவச்சாலைகளாய் நின்று பயன் தருவது , மக்கள் அவ்விடங்களை அடைந்தாலன்றோ ? இதனை மனத்துட் கொண்மின்கள் ; கொண்டு , தெற்கென்னும் திசை கிடைக்க , ` கோதாவரி , குமரி ` என்னும் தீர்த்தங்களிலும் , வடக் கென்னும் திசைகிடைக்க , அழகிய குருக்கேத்திரத்தில் உள்ள தீர்த்தத் திலும் சென்று முழுகுமின்கள் ; அவ்வாறே தெற்கில் சீபர்ப்பதத்தையும் , வடக்கில் கிளிகள் , பழத்தைக் கீறி உண்ணுகின்ற திருக்கேதாரத்தையும் சென்று வணங்கித் துதிமின்கள் .

பண்ணின் தமிழ் இசை பாடலின், பழ வேய் முழவு அதிர,
கண்ணின்(ன்) ஒளி கனகச்சுனை வயிரம்(ம்) அவை சொரிய,
மண் நின்றன மதவேழங்கள் மணி வாரிக் கொண்டு எறிய,
கிண்ணென்று இசை முரலும் திருக்கேதாரம் எனீரே!

7
உலகீர் , பண்ணாகிய , தமிழ்ப்பாடலினது இசையைப் பாடுமிடத்து , அதற்கியையப் பழைதாகிய வேய்ங்குழலும் , மத்தளமும் ஒலித்தலினாலும் , கண்ணுக்கு இனிதாகிய ஒளியையுடைய பொன் வண்ணமான சுனைகள் வயிரங்களை அலைகளால் எடுத்து வீசுதலினாலும் , நிலத்தில் நிற்கின்ற மத யானைகள் , மாணிக்கங்களை வாரி இறைத்தலினாலும் , ` கிண் ` என்கின்ற ஓசை இடையறாது ஒலிக் கின்ற , ` திருக்கேதாரம் ` என்று சொல்லுமின்கள் .

முளைக்கைப் பிடி முகமன் சொலி, முது வேய்களை இறுத்து,
துளைக்கைக் களிற்று இனம் ஆய் நின்று சுனை நீர்களைத் தூவி,
வளைக்கைப் பொழி மழை கூர்தர, மயில் மான்பிணை நிலத்தைக்
கிளைக்க(ம்) மணி சிந்தும் திருக்கேதாரம் எனீரே!

8
உலகீர் , சிறிய கையை உடைய பெண்யானைகள் , துளையையுடைய கையையுடைய ஆண் யானைகட்கு உறவாய் நின்று , முகமன்கூறி , பெரிய மூங்கில்களை ஒடித்துக் கொடுத்து , சுனைகளின் நீரைத் தெளித்தலால் , அவற்றின் வளைவையுடைய கையினின்றும் பொழிகின்ற மழை மிகுதியாக , மயிலும் , பெண்மானும் நிலத்தைக் கிண்டுதலால் மாணிக்கங்கள் தெறிக்கின்ற , ` திருக்கேதாரம் ` என்று சொல்லுமின்கள் .

பொதியே சுமந்து உழல்வீர்; பொதி அவம் ஆவதும் அறியீர்;
மதி மாந்திய வழியே சென்று குழி வீழ்வதும், வினையால்;
கதி சூழ் கடல் இலங்கைக்கு இறை மலங்க(வ்) வரை அடர்த்துக்
கெதி பேறு செய்து இருந்தான் இடம் கேதாரம் எனீரே!

9
உலகீர் , நீவிர் , இறைச்சிப் பொதியாகிய உடம்பைச் சுமந்து திரிதல் ஒன்றையே செய்வீர் ; அப்பொதிதான் பயனற்று ஒழிவதை அறியமாட்டீர் ; அறிவை இழந்த வழியிலே சென்று நீவிர் குழியில் வீழ்வதும் , நும் வினைப்பயனேயாம் . இதனை விடுத்து , முழுதும் கடலாற் சூழப்பட்ட இலங்கைக்கு அரசனாகிய இராவணன் மெலிவடையும் படி அவனை மலையால் முன்பு நெருக்கிப் பின்பு நன்னிலையைப் பெறச்செய்து தான் அம்மலைமேல் இனிதிருந்த வனாகிய சிவ பெருமானது இடம் திருக்கேதாரமே ; அதனைத் துதி மின்கள் .

நாவின் மிசை அரைய(ன்)னொடு, தமிழ் ஞானசம்பந்தன்,
யாவர் சிவன் அடியார்களுக்கு, அடியான் அடித்தொண்டன்,
தேவன் திருக்கேதாரத்தை ஊரன்(ன்) உரை செய்த
பாவின் தமிழ் வல்லார், பரலோகத்து இருப்பாரே.

10
தமிழ்ப்பாடலைப் பாடிய திருநாவுக்கரசரும் , திரு ஞானசம்பந்தரும் , மற்றும் எவராயினும் , சிவனடியார்களுக்கு அடிய னாகி , அவர்கட்கு அடித்தொண்டு செய்பவனாகிய நம்பியாரூரன் , இறைவனது திருக்கேதாரத்தைப் பாடிய , இனிய தமிழ்ப் பாடலைப் பாட வல்லவர்கள் , எல்லாவற்றிற்கும் மேலுள்ள உலகமாகிய சிவ லோகத்தில் இருப்பவராவர் .
Go to top

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருக்கேதாரம்
2.114   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   தொண்டர் அஞ்சுகளிறும்(ம்) அடக்கி, சுரும்பு
Tune - செவ்வழி   (திருக்கேதாரம் கேதாரேசுவரர் கௌரியம்மை)
7.078   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   வாழ்வு ஆவது மாயம்(ம்); இது
Tune - நட்டபாடை   (திருக்கேதாரம் கேதாரேசுவரர் கேதாரேசுவரியம்மை)
     
send corrections and suggestions to admin-at-sivaya.org

This page was last modified on Tue, 30 Dec 2025 15:21:40 +0000