கச்சி ஏகம்பம் (காஞ்சிபுரம்) - தக்கேசி கரகரப்பிரியா காம்போதி கர்நாடக காபி ராகத்தில் திருமுறை அருள்தரு காமாட்சியம்மை உடனுறை அருள்மிகு ஏகாம்பரநாதர் திருவடிகள் போற்றி வன்றொண்டர், திருக்கச்சிக் காமக்கோட்டத்திலுள்ள காமாட்சி அம்மையைச் சென்று வணங்கினார். பின்னர் திருஎகம்பம் சென்று பெருமானைப் பணிந்தார். கண்ணளித்தருளும்படிப் பணிந்து வேண்டிப் பதிகம் பாடினார். தம்மை நினைந்து துதித்த நம்பியாரூரருக்கு இறைவன் இடதுகண் பார்வையினை வழங்கியருளி, தம் திருக்கோலத்தையும் காட்டியருளினான். சுந்தரர் ஆலந்தானுகந்து என்று தொடங்கித் திருப்பதிகம் பாடி ஆனந்தக்கூத்தாடினார். கண்களில் உள்ள கோளாறு நீங்குவதற்கும், பார்வை இழந்த கண்களில் ஒளியைப் பெறுவதற்கும் ஓதவேண்டிய பதிகங்கள் - இடக்கண்ணில் இடர் நீங்குவதற்கு
ஆலம் தான் உகந்து அமுது செய்தானை, ஆதியை, அமரர் தொழுது ஏத்தும் சீலம் தான் பெரிதும்(ம்) உடையானை, சிந்திப்பார் அவர் சிந்தை உளானை, ஏல வார் குழலாள் உமை நங்கை என்றும் ஏத்தி வழிபடப் பெற்ற கால காலனை, கம்பன் எம்மானை, காணக் கண் அடியேன் பெற்ற ஆறே! .
நஞ்சினைத் தான் விரும்பி உண்டு , அமுதத்தைத் தேவர்களுக்கு உரியதாக்கியவனும் , யாவர்க்கும் , முதல்வனும் , தேவர்கள் வணங்கித் துதிக்கின்ற பெருமையை மிக உடையவனும் , தன்னை நினைப்பவரது நினைவில் விளங்குபவனும் , மயிர்ச்சாந்து அணிந்த நீண்ட கூந்தலையுடையவளாகிய , ` உமை ` என்னும் நங்கை , தான் எந்நாளும் துதித்து வழிபடுதலைப் பெற்றமைக்கு முதல்வனும் , காலகாலனும் ஆகிய , திருவேகம்பத்தில் உள்ள எம் பெருமானைக் காணுதற்கு அடியேன் , கண் பெற்றவாறு , வியப்பு !
உற்றவர்க்கு உதவும் பெருமானை, ஊர்வது ஒன்று உடையான், உம்பர் கோனை, பற்றினார்க்கு என்றும் பற்றவன் தன்னை, பாவிப்பார் மனம் பாவிக் கொண்டானை, அற்றம் இல் புகழாள் உமை நங்கை ஆதரித்து வழிபடப் பெற்ற கற்றை வார் சடைக் கம்பன் எம்மானை, காணக் கண் அடியேன் பெற்ற ஆறே! .
தன்னைப் புகலிடமாக அடைந்தவர்க்கு நலம் செய் கின்ற பெருமானும் , ஊர்தி எருதாகிய ஒன்றை உடையவனும் , தேவர் கட்குத் தலைவனும் , தன்னை விடாது பற்றினவர்க்கு , பெரிய பற்றுக் கோடாய் நிற்பவனும் , தன்னை நினைப்பவரது மனத்தில் பரவி நின்று , அதனைத் தன் இடமாகக் கொண்டவனும் ஆகிய , அழிவில்லாத புகழையுடையவளாகிய , ` உமை ` என்னும் நங்கை விரும்பி வழிபடப் பெற்ற , கற்றையான நீண்ட சடையையுடைய , திருவேகம்பத்தில் உள்ள எம் பெருமானைக் காணுதற்கு , அடியேன் , கண் பெற்றவாறு , வியப்பு .
திரியும் முப்புரம் தீப்பிழம்பு ஆகச் செங்கண் மால் விடைமேல்-திகழ்வானை, கரியின் ஈர் உரி போர்த்து உகந்தானை, காமனைக் கனலா விழித்தானை, வரி கொள் வெள்வளையாள் உமை நங்கை மருவி ஏத்தி வழிபடப் பெற்ற பெரிய கம்பனை, எங்கள் பிரானை, காணக் கண் அடியேன் பெற்ற ஆறே! .
குண்டலம் விளங்குகின்ற காதினையுடையவனும் , கூற்றுவனை உதைத்துக் கொன்ற கொடுமையான தொழிலை உடையவனும் , வண்டுகள் ஒலிக்கின்ற கொன்றை மலர் மாலையை அணிந்தவனும் , கொலைத் தொழிலையுடைய பாம்பு பிறையைச் சேர்ந்து வாழும் சடையை உடையவனும் ஆகிய , கெண்டைமீன் போலும் பெரிய கண்களையுடைய , ` உமை ` என்னும் நங்கை அணுகி நின்று , துதித்து வழிபடப் பெற்ற , கண்டத்தில் நஞ்சினையுடைய , திருவேகம்பத்தில் உள்ள எம்பெருமானைக் காணுதற்கு , அடியேன் , கண் பெற்றவாறு , வியப்பு .
வெல்லும் வெண்மழு ஒன்று உடையானை, வேலை நஞ்சு உண்ட வித்தகன் தன்னை, அல்லல் தீர்த்து அருள்செய்ய வல்லானை, அருமறை அவை அங்கம் வல்லானை, எல்லை இல் புகழாள் உமை நங்கை என்று ஏத்தி வழிபடப் பெற்ற நல்ல கம்பனை, எங்கள் பிரானை, காணக் கண் அடியேன் பெற்ற ஆறே! .
திங்கள் தங்கிய சடை உடையானை, தேவதேவனை, செழுங் கடல் வளரும் சங்க வெண்குழைக் காது உடையானை, சாம வேதம் பெரிது உகப்பானை, மங்கை நங்கை மலை மகள் கண்டு மருவி ஏத்தி வழிபடப் பெற்ற கங்கையாளனை, கம்பன் எம்மானை, காணக் கண் அடியேன் பெற்ற ஆறே! .
பிறை தங்கியுள்ள சடையையுடையவனும் , தேவர்க்குத் தேவனும் , வளவிய கடலில் வளர்கின்ற சங்கினால் இயன்ற , ` வெள்ளிய குழையை யணிந்த காதினையுடையவனும் , சாம வேதத்தை மிக விரும்புபவனும் ஆகிய , என்றும் மங்கைப் பருவம் உடைய நங்கையாகிய மலைமகள் தவத்தாற் கண்டு அணுகி , துதித்து வழிபடப்பெற்ற , கங்கையை யணிந்த , திருவேகம்பத்தில் உள்ள எம் பெருமானைக் காணுதற்கு , அடியேன் , கண் பெற்றவாறு , வியப்பு .
விண்ணவர் தொழுது ஏத்த நின்றானை, வேதம் தான் விரித்து ஓத வல்லானை, நண்ணினார்க்கு என்றும் நல்லவன் தன்னை, நாளும் நாம் உகக்கின்ற பிரானை, எண் இல் தொல் புகழாள் உமை நங்கை என்றும் ஏத்தி வழிபடப் பெற்ற கண்ணும் மூன்று உடைக் கம்பன் எம்மானை, காணக் கண் அடியேன் பெற்ற ஆறே! .
தேவர்கள் தொழுது துதிக்க இருப்பவனும் , வேதங்களை விரித்துச் செய்ய வல்லவனும் , தன்னை அடைந்தவர் கட்கு எந்நாளும் நலத்தையே செய்பவனும் , நாள்தோறும் நாம் விரும்புகின்ற தலைவனும் ஆகிய , எண்ணில்லாத பழையவான புகழை யுடையவளாகிய , ` உமை ` என்னும் நங்கை , எந்நாளும் துதித்து வழிபடப் பெற்ற , கண்களும் மூன்று உடைய , திருவேகம்பத்தில் உள்ள எம் பெருமானைக் காணுதற்கு , அடியேன் , கண் பெற்றவாறு , வியப்பு .
சிந்தித்து என்றும் நினைந்து எழுவார்கள் சிந்தையில்-திகழும் சிவன் தன்னை, பந்தித்த(வ்) வினைப்பற்று அறுப்பானை, பாலொடு ஆன் அஞ்சும் ஆட்டு உகந்தானை, அந்தம் இல் புகழாள் உமை நங்கை ஆதரித்து வழிபடப் பெற்ற கந்த வார்சடைக் கம்பன் எம்மானை, காணக் கண் அடியேன் பெற்ற ஆறே! .
நாள்தோறும் தன்னையே சிந்தித்து , துயிலெழுங் காலத்துத் தன்னையே நினைத்து எழுவார்களது உள்ளத்தில் விளங்கு கின்ற மங்கலப் பொருளானவனும் , உயிர்களைப் பிணித்துள்ள வினைத் தொடக்கை அறுப்பவனும் , பால் முதலிய ஆனஞ்சும் ஆடுதலை விரும்பியவனும் ஆகிய , முடிவில்லாத புகழையுடையவளாகிய , ` உமை ` என்னும் நங்கை விரும்பி வழிபடப்பெற்ற , கொன்றை முதலிய பூக்களின் மணத்தையுடைய , நீண்ட சடையையுடைய , திருவேகம் பத்தில் உள்ள எம் பெருமானைக்காணுதற்கு , அடியேன் , கண் பெற்ற வாறு , வியப்பு !
வரங்கள் பெற்று உழல் வாள் அரக்கர் தம் வாலிய(ப்) புரம் மூன்று எரித்தானை, நிரம்பிய தக்கன் தன் பெருவேள்வி நிரந்தரம் செய்த நிர்க்கண்டகனை, பரந்த தொல் புகழாள் உமை நங்கை பரவி ஏத்தி வழிபடப்பெற்ற கரங்கள் எட்டு உடைக் கம்பன் எம்மானை, காணக் கண் அடியேன் பெற்ற ஆறே! .
தவத்தின் பயனாகிய வரங்களைப் பெற்றமையால் , வானத்தில் உலாவும் ஆற்றலைப் பெற்ற கொடிய அசுரர்களது வலிய அரண்கள் மூன்றினை எரித்தவனும் , தேவர் எல்லாரும் நிரம்பிய தக்கனது பெருவேள்வியை அழித்த வன்கண்மையுடையவனும் ஆகிய , பரவிய , பழைய புகழையுடையவளாகிய , ` உமை ` என்னும் நங்கை , முன்னிலையாகவும் , படர்க்கையாகவும் துதித்து வழிபடப் பெற்ற , எட்டுக் கைகளையுடைய , திருவேகம்பத்தில் உள்ள எம் பெரு மானைக் காணுதற்கு , அடியேன் , கண் பெற்றவாறு , வியப்பு !
எள்கல் இன்றி இமையவர் கோனை, ஈசனை, வழிபாடு செய்வாள் போல் உள்ளத்து உள்கி, உகந்து, உமை நங்கை வழிபடச் சென்று நின்றவா கண்டு, வெள்ளம் காட்டி வெருட்டிட, அஞ்சி வெருவி ஓடித் தழுவ வெளிப்பட்ட கள்ளக் கம்பனை, எங்கள் பிரானை, காணக் கண் அடியேன் பெற்ற ஆறே! .
தேவர் பெருமானாகிய சிவபெருமானை , அவனது ஒரு கூறாகிய உமாதேவிதானே , தான் வழிபடவேண்டுவது இல்லை என்று இகழ்தல் செய்யாது வழிபட விரும்பி , ஏனைவழிபாடு செய்வாருள் ஒருத்திபோலவே நின்று , முன்னர் உள்ளத்துள்ளே நினைந்து செய்யும் வழிபாட்டினை முடித்து , பின்பு , புறத்தே வழிபடச் சென்று , அவ்வழிபாட்டில் தலைப்பட்டு நின்ற முறைமையைக் கண்டு , தான் அவ்விடத்துக் கம்பையாற்றின்கண் பெருவெள்ளத்தைத் தோற்று வித்து வெருட்ட , வஞ்சிக்கொடி போல்பவளாகிய அவள் அஞ்சி ஓடித் தன்னைத் தழுவிக்கொள்ள , அதன்பின் அவள்முன் வெளிப்பட்டு நின்ற கள்வனாகிய , திருவேகம்பத்தில் உள்ள எங்கள் பெருமானைக் காணுதற்கு , அடியேன் , கண் பெற்றவாறு , வியப்பு !
பெற்றம் ஏறு உகந்து ஏற வல்லானை, பெரிய எம்பெருமான் என்று எப்போதும் கற்றவர் பரவப்படுவானை, காணக் கண் அடியேன் பெற்றது என்று கொற்றவன், கம்பன், கூத்தன் எம்மானை, குளிர் பொழில்-திரு நாவல் ஆரூரன் நல்-தமிழ் இவை ஈர்-ஐந்தும் வல்லார், நன்நெறி(ய்) உலகு எய்துவர் தாமே .
குளிர்ந்த சோலைகளையுடைய திருநாவலூ ரனாகிய நம்பியாரூரன் , ஆனேற்றை விரும்பி ஏற வல்லவனும் , மெய்ந் நூல்களைக் கற்றவர்கள் , ` இவன் எம் பெரிய பெருமான் ` என்று எப் போதும் மறவாது துதிக்கப்படுபவனும் , யாவர்க்கும் தலைவனும் , கூத்தாடுதலை உடையவனும் ஆகிய , திருவேகம்பத்தில் உள்ள எம்பெருமானைக் காணுதற்கு அடியேன் , கண்பெற்றவாறு வியப்பு என்று சொல்லிப் பாடிய நல்ல தமிழ்ப் பாடலாகிய இவை பத்தினையும் பாட வல்லவர் . நன்னெறியாற்பெறும் உலகத்தைத் திண்ணமாக அடைவர் .