அழுக்கு மெய் கொடு உன் திருவடி அடைந்தேன்; அதுவும் நான் படப் பாலது ஒன்று ஆனால், பிழுக்கை வாரியும் பால் கொள்வர்; அடிகேள்! பிழைப்பன் ஆகிலும் திருவடிப் பிழையேன்! வழுக்கி வீழினும் திருப் பெயர் அல்லால், மற்று நான் அறியேன், மறு மாற்றம்; ஒழுக்க என் கணுக்கு ஒரு மருந்து உரையாய் ஒற்றியூர் எனும் ஊர் உறைவானே! .
|
1
|
தலைவனே , ` ஒற்றியூர் ` என்று பெயர் சொல்லப் படுகின்ற ஊரின்கண் எழுந்தருளியிருப்பவனே , அடியேன் , உன் திருவடியை இடையீடின்றி யடையமாட்டாது , மாசுடைய உடம்பு கொண்டே அடைவேனாயினேன் ; அவ் விழி நிலைதானும் நான் அடையத்தக்க தொன்றாகியேவிடுமாயின் , ஒளியிழந்த என் கண்ணுக்கு ஊற்றத்தக்கதொரு மருந்தையேனும் , என் வேண்டு கோளுக்கு விடையாக நீ சொல்லியருள் ; ஏனெனில் , பசு முதலிய வற்றினிடத்திற் பாலை விரும்புவோர் , அவை இடுகின்ற சாணத்தை எடுத்தற் றொழிலைச் செய்தாயினும் அதனைக் கொள்வர் ; அதுபோல , நீ என் குற்றங்களை நோக்கி , இகழாது , உயிர்களிடத்து நீ விரும்புவ தாகிய குணம் என்னிடத்து இருத்தலை நோக்கி என்னை ஏற்றருளுதல் வேண்டும் . அக் குணமாவது ; யான் எப் பிழைசெய்வேனாயினும் , உன் திருவடிக்குப் பிழையைச் செய்யேன் ; வழுக்கிவிழும் பொழுதும் உன் திருப்பெயரைச் சொல்லுதலன்றி , வேறொன்றை அறியேன் . | |
கட்டனேன் பிறந்தேன், உனக்கு ஆள் ஆய்; காதல் சங்கிலி காரணம் ஆக, எட்டினால்-திகழும் திருமூர்த்தி! என் செய்வான், அடியேன் எடுத்து உரைக்கேன்? பெட்டன் ஆகிலும், திருவடி, பிழையேன், பிழைப்பன் ஆகிலும் திருவடிக்கு அடிமை; ஒட்டினேன், எனை நீ செய்வது எல்லாம்; ஒற்றியூர் எனும் ஊர் உறைவானே! .
|
2
|
` எட்டு ` என்னும் எண்ணின் வகையினால் விளங்குகின்ற சிறந்த வடிவங்களையுடையவனே , ` ஒற்றியூர் ` என்று பெயர்சொல்லப் படுகின்ற ஊரின்கண் எழுந்தருளியிருப்பவனே , துன்பத்தைத் தரும் வினையையுடையேனாகிய யான் , அவ்வினை காரணமாக , இம் மண்ணுலகிற் பிறந்தேன் ; பிறந்து உனக்கு ஆளாகி , இடையே மாதரை விரும்பி மணந்தேனாயினும் , உன் திருவடியை மறந்திலேன் ; பிறவற்றைச் செய்யத் தவறினேனாயினும் , திருவடிக்குச் செய்யும் அடிமையில் இடைவிடாது நின்றேன் ; என்ன செய்தற் பொருட்டு அவற்றை நான் இப்பொழுது எடுத்துரைப்பேன் ! இத் துன்பமெல்லாம் , என்காதலுக்கு இடமாய் நின்ற சங்கிலி காரணமாக நீ செய்வனவேயாகும் | |
கங்கை தங்கிய சடை உடைக் கரும்பே! கட்டியே! பலர்க்கும் களை கண்ணே! அங்கை நெல்லியின் பழத்து இடை அமுதே! அத்த! என் இடர் ஆர்க்கு எடுத்து உரைக்கேன்? சங்கும் இப்பியும் சலஞ்சலம் முரல, வயிரம் முத்தொடு பொன் மணி வரன்றி, ஒங்கும் மா கடல் ஓதம் வந்து உலவும் ஒற்றியூர் எனும் ஊர் உறைவானே!.
|
3
|
கங்கை பொருந்தியுள்ள சடையையுடையவனே , அடியார்கட்குக் கரும்பும் , கட்டியும் , அகங்கையிற்கிடைத்த நெல்லிக் கனியில் உள்ள அமுதமும்போல இனிமையைத் தருகின்றவனே , அனைவர்க்கும் பற்றுக்கோடாய் உள்ளவனே , தந்தையே , சங்குகளும் , சிப்பிகளும் , சலஞ்சலம் என்னும் சங்குகளும் ஒலிக்க , ` வயிரம் , முத்து , பிற மணிகள் , பொன் ` என்பவற்றை வாரிக்கொண்டு , பெரிய கடலின் கண் உயர எழுகின்ற அலைகள் வந்து உலவுகின்ற , ` ஒற்றியூர் ` என்று பெயர் சொல்லப்படுகின்ற ஊரின்கண் எழுந்தருளியிருப்பவனே , நீயே எனக்குத் துன்பஞ் செய்வையாயின் , அதனை நான் யாரிடம் நீக்குமாறு எடுத்துச்சொல்வேன் ! | |
ஈன்று கொண்டது ஓர் சுற்றம் ஒன்று அன்றால்; யாவர் ஆகில் என், அன்பு உடையார்கள்? தோன்ற நின்று அருள் செய்து அளித்திட்டால் சொல்லுவாரை அல்லாதன சொல்லாய்; மூன்று கண் உடையாய்! அடியேன் கண் கொள்வதே கணக்கு வழக்கு ஆகில், ஊன்று கோல் எனக்கு ஆவது ஒன்று அருளாய் ஒற்றியூர் எலும் ஊர் உறைவானே!.
|
4
|
` ஒற்றியூர் ` என்று பெயர் சொல்லப் படுகின்ற ஊரின்கண் எழுந்தருளியிருப்பவனே . ` தாய் பெற்றதனால் கொள்ளப் பட்டதொரு சுற்றம் என்பது ஒருபொருளன்று ; அன்புடையவர்கள் யாராய் இருப்பினும் என் என்கின்ற இம்முறைமை பற்றி . நீ உன் னிடத்து அன்புசெய்பவரை , உனது இயற்கை வடிவம் அவர்கட்குப் புலனாகுமாறு வெளிநின்று ஆட்கொண்டுவிட்டால் , அதன்பின் உன் பெயரையே சொல்லிக் கொண்டிருப்பவரை , நீ ஒரு ஞான்றும் கடுஞ்சொற்சொல்லுவாயல்லை ; அங்ஙனமாகவும் , மூன்று கண்களை யுடையையாகிய நீ உன் அடியேனது இரண்டு கண்களைப் பறித்துக் கொள்வது , யான் செய்த குற்றங் காரணமாக நீதி நூல்களில் உள்ள முறைமையே யாகில் , எனக்கு உதவியாய் நிற்பதோர் , ஊன்று கோலையேனும் அளித்தருள் . | |
வழித்தலைப் படுவான் முயல்கின்றேன்; உன்னைப் போல் என்னைப் பாவிக்க மாட்டேன்; சுழித்தலைப் பட்ட நீர் அது போலச் சுழல்கின்றேன்; சுழல்கின்றது, என் உள்ளம்; கழித்தலைப் பட்ட நாய் அது போல ஒருவன் கோல் பற்றிக் கறகற இழுக்கை ஒழித்து, நீ அருள் ஆயின செய்யாய் ஒற்றியூர் எனும் ஊர் உறைவானே!.
|
5
|
` ஒற்றியூர் ` என்று பெயர்சொல்லப் படுகின்ற ஊரின்கண் எழுந்தருளியிருப்பவனே , யான் நன்னெறியைத் தலைப் படவே முயல்கின்றேன் ; ஒருஞான்றும் என்னை உன்னைப்போல ஒன்றாலும் தாக்குண்ணாத பெருமையேனாக நினைக்கின்றிலேன் ; அங்ஙனமாகவும் , நீ என் கண்ணைப் பறித்துக் கொண்டதனால் , வழிதெரியாது , சுழியிடத்துப்பட்ட நீர் போலச் சுழலாநின்றேன் . என் உள்ளமும் ஒன்றும் அறியாது சுழல்கின்றது ; இவற்றையும் , கழியிற் பொருந்திய நாயைப் போல ஒருவன் தரும் கோலை விடாதுபற்றி நின்று , அவனால் , ` கறகற ` என்று இழுக்கப்படுதலையும் ஒழித்து , நீ உனது திருவருள்களை எனக்கு அளித்தருள் . | |
| Go to top |
மானை நோக்கியர் கண் வலைப் பட்டு, வருந்தி, யான் உற்ற வல்வினைக்கு அஞ்சி, தேனை ஆடிய கொன்றையினாய்! உன் சீலமும் குணமும் சிந்தியாதே நானும் இத்தனை வேண்டுவது; அடியேன் உயிரொடும் நரகத்து அழுந்தாமை, ஊனம் உள்ளன தீர்த்து, அருள் செய்யாய் ஒற்றியூர் எனும் ஊர் உறைவானே!.
|
6
|
தேன் நிறைந்த கொன்றை மாலையை அணிந்தவனே , ` ஒற்றியூர் ` என்று பெயர் சொல்லப்படுகின்ற ஊரின் கண் எழுந்தருளியிருப்பவனே , யான் மான்போலும் பார்வையினை யுடைய மாதரது கண்ணோக்காகிய வலையில் அகப்பட்டு , உனது செயல்முறையையும் , குணத்தையும் நினையாமலே செய்துவிட்ட பெரிய குற்றத்திற்கு அஞ்சியே , நானும் பிறர் போல உன்னை இத் துணை இரந்துவேண்டுவதாயிற்று ; அதனால் , என்றும் உன் அடி யேனாகிய யான் உயிரோடே நரகத்தில் மூழ்காதபடி , எனக்கு உண்டாகிய குறையினை நீக்கி அருள் செய்யாய் . | |
மற்றுத் தேவரை நினைந்து உனை மறவேன்; நெஞ்சினாரொடு வாழவும் மாட்டேன்; பெற்றிருந்து பெறா தொழிகின்ற பேதையேன் பிழைத்திட்டதை அறியேன்; முற்றும் நீ எனை முனிந்திட அடியேன் கடவது என்? உனை நான் மறவேனேல், உற்ற நோய் உறு பிணி தவிர்த்து அருளாய் ஒற்றியூர் எனும் ஊர் உறைவானே! .
|
7
|
` ஒற்றியூர் ` என்று பெயர்சொல்லப் படுகின்ற ஊரின் கண் எழுந்தருளியிருப்பவனே , நான் பிறர் ஒருவர் தேவரை நினைந்து உன்னை மறந்தேனில்லை ; அத்தன்மையான நெஞ்சை யுடையவருடன் சேர்ந்திருக்கவும் மாட்டேன் ; அங்ஙனமாக , நீ என்னை முற்றும் வெகுளுமாறு , உன்னை இனிதே பெற்றிருந்தும் பெறாதொழிகின்ற பேதையேனாகிய யான் செய்த பிழைதான் இன்னதென்று அறிகின்றிலேன் ; நான் உன்னை ஓர் இமைப்பொழுதும் மறவேனாயினேன் , இதன்மேல் , உன் அடியேனாகிய யான் செய்யக் கடவதாய் எஞ்சி நிற்பதொரு கடமை யாது ! ஒன்றுமில்லையாதலின் , யான் உற்ற துன்பத்தையும் , மிக்க பிணியையும் நீக்கியருள் . | |
கூடினாய், மலை மங்கையை; நினையாய்; கங்கை ஆயிரமுகம் உடையாளை சூடினாய் என்று சொல்லிய புக்கால், தொழும்பனேனுக்கும் சொல்லலும் ஆமே; வாடி நீ இருந்து என் செய்தி? மனனே! வருந்தி யான் உற்ற வல்வினைக்கு அஞ்சி, ஊடினால், இனி ஆவது ஒன்று உண்டே? ஒற்றியூர் எனும் ஊர் உறைவானே!.
|
8
|
` ஒற்றியூர் ` என்று பெயர் சொல்லப் படுகின்ற ஊரின் கண் எழுந்தருளியிருப்பவனே , ` நீ முதலில் மலைமகளை ஒரு பாகமாகப் பொருந்தினாய் ; பின்பு ஆயிரமுகமுடைய கங்கையாளை முடியில் சூடினாய் ; இதனை நினைகின்றிலையே ` என்று சொல்லப் புகுந்தால் , அஃது அடிமையாகிய எனக்குக் கூடுமோ ! ` மனமே நீ துன்ப முற்று என்ன பெறப்போகின்றாய் ` என்று மனத்தோடே சொல்லிக் கொண்டு . யான்அடைந்த குற்றத்திற்கு அஞ்சி உன்னிடத்திலே பிணங் கினால் , இனி வருவதொன்று உண்டோ ? | |
மகத்தில் புக்கது ஓர் சனி எனக்கு ஆனாய்; மைந்தனே! மணியே! மணவாளா! அகத்தில் பெண்டுகள் நான் ஒன்று சொன்னால், அழையேல், போ, குருடா! எனத் தரியேன்; முகத்தில் கண் இழந்து எங்ஙனம் வாழ்கேன்? முக்கணா! முறையோ? மறை ஓதீ! உகைக்கும் தண் கடல் ஓதம் வந்து உலவும் ஒற்றியூர் எனும் ஊர் உறைவானே! .
|
9
|
வேதத்தை ஓதுபவனே , மணி முதலியவற்றைக் கரையிடத்துக் கொணர்ந்து சேர்க்கும் தண்ணிய கடல் அலைகள் வந்து உலவுகின்ற , ` ஒற்றியூர் ` என்று பெயர் சொல்லப்படுகின்ற ஊரின்கண் எழுந்தருளியிருப்பவனே , எனக்கு வலிமையாய் உள்ளவனே , மணி போல்பவனே , அழகுடையவனே , நீ எனக்கு , ` மகம் ` என்னும் நாண் மீன்கீழ் வந்த , ` சனி ` என்னும் கோள்போல்பவனாயினை ; அகத்தில் உள்ள பெண்டுகள் , நான் , ஆவது ஒரு காரியம் சொன்னால் , ` கண்ணிலியே நீ என் அறிவாய் ; கூவாதே ; போ ` என்று சொல்வதை நான் பொறுக்கமாட்டேன் ; முகத்தில் கண்ணில்லாமல் நான் எவ்வாறு வாழ்வேன் ? மூன்று கண்களையுடையவனே , இது முறையோ ! | |
ஓதம் வந்து உலவும் கரை தன் மேல் ஒற்றியூர் உறை செல்வனை, நாளும் ஞாலம் தான் பரவப்படுகின்ற நால் மறை அங்கம் ஓதிய நாவன்- சீலம் தான் பெரிதும் மிக வல்ல சிறுவன், வன் தொண்டன், ஊரன்-உரைத்த பாடல் பத்து இவை வல்லவர் தாம் போய்ப் பரகதி திண்ணம் நண்ணுவர் தாமே.
|
10
|
கடல் அலைகள் வந்து உலவுகின்ற கரையின்மேல் உள்ள திருவொற்றியூரில் எழுந்தருளியிருக்கின்ற செல்வனை , என்றும் உலகத்தாரால் போற்றப்படுகின்ற நான்கு வேதம் , வேதத்தின் ஆறு அங்கங்கள் இவற்றை ஓதிய நாவையுடையவனும் , ஒழுக்கத்தில் மிகவல்ல இளமையை யுடையவனும் வன்றொண்டனும் ஆகிய நம்பி யாரூரன் பாடிய இப் பத்துப்பாடல்களாகிய இவைகளை வல்லவர்கள் , மேலான கதியைப் போய் அடைவார்கள் ; இது திண்ணம் . | |
| Go to top |