விடை ஆரும் கொடியாய்! வெறி ஆர் மலர்க் கொன்றையினாய்! படை ஆர் வெண்மழுவா! பரம் ஆய பரம்பரனே! கடி ஆர் பூம்பொழில் சூழ் திருக்கற்குடி மன்னி நின்ற அடிகேள்! எம்பெருமான்! அடியேனையும், அஞ்சல்! என்னே!.
|
1
|
இடபம் எழுதப்பெற்ற கொடியை உடையவனே , நறுமணம் பொருந்திய கொன்றை மாலையை அணிந்தவனே , படைக் கலமாகப் பொருந்திய கூரிய மழுவை ஏந்தியவனே , மேலார்க்கும் மேலானவனே , மணம் நிறைந்த பூஞ்சோலைகள் சூழ்ந்த திருக்கற்குடியில் நிலையாக எழுந்தருளியிருக்கும் தலைவனே , எங்கள் கடவுளே , அடியேனையும் , ` அஞ்சாதி ` எனச் சொல்லி உய்யக் கொண்டருள் . | |
மறையோர் வானவரும் தொழுது ஏத்தி வணங்க நின்ற இறைவா! எம்பெருமான்! எனக்கு இன் அமுது ஆயவனே! கறை ஆர் சோலைகள் சூழ் திருக்கற்குடி மன்னி நின்ற அறவா! அங்கணனே! அடியேனையும், அஞ்சல்! என்னே!.
|
2
|
அந்தணரும் , அமரரும் கைகூப்பித் தொழுது அடி பணிய நிற்கும் இறைவனே , எம்பெருமானே . எனக்கு இனிய அமுதமாய் உள்ளவனே , இருள் நிறைந்த சோலைகள் சூழ்ந்த திருக்கற் குடியில் நிலையாக எழுந்தருளியிருக்கின்ற அறவடிவினனே , அழகிய கண்களை யுடையவனே , அடியேனையும் , ` அஞ்சாதி ` எனச் சொல்லி உய்யக்கொண்டருள் . | |
சிலையால் முப்புரங்கள் பொடி ஆகச் சிதைத்தவனே! மலை மேல் மா மருந்தே! மட மாது இடம் கொண்டவனே! கலை சேர் கையினனே! திருக்கற்குடி மன்னி நின்ற அலை சேர் செஞ்சடையாய்! அடியேனையும், அஞ்சல்! என்னே!.
|
3
|
வில்லால் , திரிபுரங்கள் சாம்பலாகும்படி அழித்தவனே , மலைமேல் உள்ள அரிய மருந்து போல்பவனே , இளமை பொருந்திய மாது ஒருத்தியை இடப்பாகத்திற் கொண்டவனே , மான் பொருந்திய கையை உடையவனே , திருக்கற்குடியில் நிலையாக எழுந்தருளியிருக்கின்ற , நீர் பொருந்திய சிவந்த சடையை உடையவனே , அடியேனையும் , ` அஞ்சாதி ` என்று சொல்லி உய்யக் கொண்டருள் . | |
செய்யார் மேனியனே! திரு நீல மிடற்றினனே! மை ஆர் கண்ணி பங்கா! மதயானை உரித்தவனே! கை ஆர் சூலத்தினாய் திருக்கற்குடி மன்னி நின்ற ஐயா! எம்பெருமான்! அடியேனையும், அஞ்சல்! என்னே! .
|
4
|
செம்மை நிறம் பொருந்திய திருமேனியை உடையவனே , அழகிய நீல நிறமான கண்டத்தை உடையவனே , மை பொருந்திய கண்களை உடைய மங்கையது ஒருபாகத்தை விரும்பிக் கொண்டவனே , மதம் பொருந்திய யானையை உரித்தவனே , கையில் பொருந்திய சூலத்தை உடையவனே , திருக்கற்குடியில் நிலையாக எழுந்தருளியிருக்கின்ற தலைவனே , எங்கள் கடவுளே , அடியேனையும் , ` அஞ்சாதி ` என்று சொல்லி உய்யக்கொண்டருள் . | |
சந்து ஆர் வெண்குழையாய்! சரி கோவண ஆடையனே! பந்து ஆரும் விரலாள் ஒரு பாகம் அமர்ந்தவனே! கந்து ஆர் சோலைகள் சூழ் திருக்கற்குடி மன்னி நின்ற எந்தாய்! எம்பெருமான்! அடியேனையும் ஏன்று கொள்ளே!.
|
5
|
அழகு நிறைந்த வெள்ளிய குழையை அணிந் தவனே , சரிந்த கோவணமாக உடுக்கப்பட்ட ஆடையை உடையவனே , பந்தின்கண் பொருந்திய விரல்களையுடைய உமையை ஒருபாகத்தில் விரும்பிக் கொண்டவனே , நறுமணம் நிறைந்த சோலைகள் சூழ்ந்த திருக்கற்குடியில் நிலையாக எழுந்தருளியிருக்கின்ற என் தந்தையே , எங்கள் கடவுளே , அடியேனையும் ஏன்று உய்யக்கொண்டருள் . | |
| Go to top |
அரை ஆர் கீளொடு கோவணமும்(ம்) அரவும்(ம்) அசைத்து விரை ஆர் கொன்றை உடன் விளங்கும் பிறை மேல் உடையாய்! கரை ஆரும் வயல் சூழ் திருக்கற்குடி மன்னி நின்ற அரையா! எம்பெருமான்! அடியேனையும் அஞ்சல்! என்னே!.
|
6
|
அரை வெறுவிதாகாது நிரம்புதற்குரிய கீளையுங் கோவணத்தையும் அரையின்கண் கட்டி , நறுமணம் பொருந்திய கொன்றை மாலையோடு , ஒளி விளங்குகின்ற பிறையையும் சடையிடத்து உடையவனே , வரம்புகள் நீரால் நிறையும் வயல்கள் சூழ்ந்த திருக்கற்குடியில் நிலையாக எழுந்தருளியிருக்கின்ற அரசனே , எங்கள் இறைவனே , அடியேனையும் , ` அஞ்சாதி ` என்று சொல்லி உய்யக் கொண்டருள் . | |
பாரார் விண்ணவரும் பரவிப் பணிந்து ஏத்த நின்ற சீர் ஆர் மேனியனே! திகழ் நீல மிடற்றினனே! கார் ஆர் பூம்பொழில் சூழ் திருக்கற்குடி மன்னி நின்ற ஆரா இன்னமுதே! அடியேனையும், அஞ்சல்! என்னே! .
|
7
|
மண்ணுலகத்தவரும் , விண்ணுலகத்தவரும் பணிந்து முன்னிலையாகப் பரவவும் , படர்க்கையாகப் புகழவும் நிற்கின்ற , அழகு பொருந்திய உருவத் திருமேனியை உடையவனே , விளங்குகின்ற நீல நிறத்தையுடைய கண்டத்தையுடையவனே , மேகங்கள் தவழும் பூஞ்சோலைகள் சூழ்ந்த திருக்கற்குடியில் நிலையாக எழுந்தருளியிருக்கின்ற , தெவிட்டாத அமுதமாய் உள்ளவனே , அடியேனையும் , ` அஞ்சாதி ` என்று சொல்லி உய்யக்கொண்டருள் . | |
நிலனே, நீர், வளி, தீ, நெடுவானகம், ஆகி நின்ற புலனே! புண்டரிகத்து அயன், மாலவன், போற்றி செய்யும் கனலே! கற்பகமே! திருக்கற்குடி மன்னி நின்ற அனல் சேர் கையினனே! அடியேனையும், அஞ்சல்! என்னே!.
|
8
|
நிலமே , நீரே , தீயே , காற்றே , நீண்டவானமே என்னும் ஐந்துமாகிநிற்கும் பெரும்பொருளாய் உள்ளவனே , தாமரை மலரில் உள்ள பிரமன் , மாயோன் இருவரும் போற்றிநின்ற நெருப்பாகிய தோற்றத்தை உடையவனே , கற்பகத் தருப்போல்பவனே , திருக் கற்குடியில் நிலையாக எழுந்தருளியிருக்கின்ற , தீ யேந்திய கையை உடையவனே , அடியேனையும் , ` அஞ்சாதி ` என்று சொல்லி உய்யக் கொண்டருள் . | |
வரும் காலன்(ன்) உயிரை மடியத் திரு மெல்விரலால் பெரும் பாலன் தனக்கு ஆய்ப் பிரிவித்த பெருந்தகையே! கரும்பு ஆரும் வயல் சூழ் திருக்கற்குடி மன்னி நின்ற விரும்பா! எம்பெருமான்! அடியேனையும் வேண்டுதியே! .
|
9
|
பெருமை பொருந்திய சிறுவனுக்குச் சார்பாகி , அவன்மேல் வந்த கூற்றுவன் மடியும்படி , அவனது உயிரைத் திருவடியிலுள்ள மெல்லிய விரல்களால் பிரியும்படி செய்த பெருந்தகை யாளனே , கரும்புகள் நிறைந்த வயல்கள் சூழ்ந்த திருக்கற்குடியில் நிலையாக எழுந்தருளியிருக்கின்ற நம்பனே , எங்கள் இறைவனே , அடியேனையும் நின் அருட்கு உரியவருள் ஒருவனாக விரும்பிக் கொள் . | |
அலை ஆர் தண் புனல் சூழ்ந்து, அழகு ஆகி, விழவு அமரும் கலை ஆர் மா தவர் சேர் திருக்கற்குடிக் கற்பகத்தைச் சிலை ஆர் வாள் நுதலாள் நல்ல சிங்கடி அப்பன் உரை விலை ஆர் மாலை வல்லார் வியல் மூ உலகு ஆள்பவரே .
|
10
|
அலை நிறைந்த தண்ணிய நீரால் சூழப்பட்டு அழகுடையதாகி விழாக்கள் நீங்காதிருக்கின்ற , கலை ஞானங்கள் நிறைந்த பெரிய தவத்தவர் சேர்கின்ற திருக்கற்குடியில் எழுந்தருளி யிருக்கின்ற கற்பகம் போல்பவனை , விற்போலும் ஒளி பொருந்திய நெற்றியையுடைய நல்ல , ` சிங்கடி ` என்பாளுக்குத் தந்தையாகிய நம்பி யாரூரன் பாடிய , விலை மிகுந்த இத்தமிழ்ப் பாமாலையைப் பாட வல்லவர்கள் , அகன்ற மூன்றுலகத்தையும் ஆளுதற்கு உரியவராவர் . | |
| Go to top |