பொன் செய்த மேனியினீர்; புலித்தோலை அரைக்கு அசைத்தீர்; முன் செய்த மூ எயிலும்(ம்) எரித்தீர்; முதுகுன்று அமர்ந்தீர்; மின் செய்த நுண் இடையாள் பரவை இவள் தன் முகப்பே, என் செய்த ஆறு, அடிகேள்! அடியேன் இட்டளம் கெடவே?.
|
1
|
பொன்னைப்போலும் திருமேனியை உடையவரே , புலியினது தோலை அரையில் உடுத்தவரே , நன்கு செய்யப்பட்ட மூன்று மதில்களையும் முன்பு எரித்தவரே , திருமுதுகுன்றத்தில் விரும்பி இருப்பவரே , அடிகளே , மின்னல் போலும் நுண்ணிய இடையை யுடையவளும் , ` பரவை ` என்னும் பெயரினளுமாகிய இவள் முன்னே , அடியேனது துன்பங் கெடுதற்கு நீவிர் என் செய்தவாறு ! | |
உம்பரும் வானவரும்(ம்) உடனே நிற்கவே, எனக்குச் செம்பொனைத் தந்து அருளி, திகழும் முதுகுன்று அமர்ந்தீர்; வம்பு அமரும் குழலாள் பரவை இவள் வாடுகின்றாள்; எம்பெருமான்! அருளீர், அடியேன் இட்டளம் கெடவே! .
|
2
|
எம் பெருமானிரே , நீர் , முன்பு , வானத்தில் உள்ள தேவர்களும் , அவர்கட்குமேல் உள்ள ` அயன் , மால் ` என்பவர்களும் கண்டுநிற்க எனக்குச் செம்பொன்னைக் கொடுத்து , விளங்குகின்ற திரு முதுகுன்றத்தில் எனக்குத் துணையாய் இருந்தீர் ; இப்பொழுது , மணம் பொருந்திய கூந்தலையுடையவளும் , ` பரவை ` என்னும் பெயரினளும் ஆகிய இவள் பொருள் முட்டுப்பாட்டினால் மெலிகின்றாள் ; அது பற்றிய அடியேனது துன்பங் கெடுமாறு அருள்செய்தல் வேண்டும் . | |
பத்தா! பத்தர்களுக்கு அருள் செய்யும் பரம்பரனே! முத்தா! முக்கணனே! முதுகுன்றம் அமர்ந்தவனே! மைத்து ஆரும் தடங்கண் பரவை இவள் வாடாமே, அத்தா! தந்தருளாய், அடியேன் இட்டளம் கெடவே! .
|
3
|
எப்பொருட்கும் பற்றுக்கோடானவனே , அடியார்களுக்கு அருள் பண்ணுகின்ற மேலான பொருட்கும் மேலானவனே , இயல்பாகவே பாசத்தின் நீங்கினவனே , மூன்று கண்களையுடையவனே , திருமுதுகுன்றத்தில் விரும்பி இருப்பவனே , என் அப்பனே , மை தீட்டப்பட்டு அழகு நிறைந்த பெரிய கண்களையுடைய . ` பரவை ` என்னும் பெயரினளாகிய இவள் , பொருள் முட்டுப்பாட்டினால் வருந்தாதபடி , அடியேனது துன்பங்கெடுமாறு செம்பொன்னைத் தந்தருள் . | |
மங்கை ஓர் கூறு அமர்ந்தீர்; மறை நான்கும் விரித்து உகந்தீர்; திங்கள் சடைக்கு அணிந்தீர்; திகழும் முதுகுன்று அமர்ந்தீர்; கொங்கை நல்லாள் பரவை குணம் கொண்டு இருந்தாள் முகப்பே, அங்கணனே! அருளாய், அடியேன் இட்டளம் கெடவே! .
|
4
|
உமையை ஒரு பாகத்தில் விரும்பி வைத்தவரே , வேதங்கள் நான்கினையும் விரித்து அருளிச்செய்து அதனை அறநூலாக விரும்பியவரே , சடையின்கண் சந்திரனை அணிந்தவரே , விளங்குகின்ற திருமுதுகுன்றத்தில் விரும்பி இருப்பவரே , கண்ணோட்டம் உடையவரே , தனங்கள் அழகியாளும் , யான் சொல்லியதைச் சொல்லியவாறே கருதும் தன்மை உடையவளும் , ` பரவை ` என்னும் பெயரினளுமாகிய இவள் முன்னே , அடியேனது துன்பங் கெடுமாறு அருள்புரிதல் வேண்டும் . | |
மை ஆரும் மிடற்றாய்! மருவார் புரம் மூன்று எரித்த செய்யார் மேனியனே! திகழும் முதுகுன்று அமர்ந்தாய்! பை ஆரும்(ம்) அரவு ஏர் அல்குலாள் இவள் வாடுகின்றாள்; ஐயா! தந்தருளாய், அடியேன் இட்டளம் கெடவே! .
|
5
|
மைபோலப் பொருந்திய கண்டத்தை யுடையவனே , பகைவரது மூன்று ஊர்களை எரித்த , செவ்விய அழகு நிறைந்த திருமேனியையுடையவனே , விளங்குகின்ற திருமுதுகுன்றத்தில் விரும்பி இருப்பவனே , தலைவனே , பாம்பினிடத்துப் பொருந்தியுள்ள படம்போலும் எழுச்சியையுடைய அல்குலினை யுடைய பரவையாகிய இவள் பொருளின்றி வருந்துகின்றாள் ; ஆதலின் அதுபற்றிய அடியேனது துன்பங்கெடுமாறு , செம்பொன்னைத் தந்தருள் . | |
| Go to top |
நெடியான், நான்முகனும்(ம்), இரவி(ய்)யொடும், இந்திரனும், முடியால் வந்து இறைஞ்ச(ம்) முதுகுன்றம் அமர்ந்தவனே! படி ஆரும்(ம்) இயலாள் பரவை இவள் தன் முகப்பே, அடிகேள்! தந்தருளாய், அடியேன் இட்டளம் கெடவே! .
|
6
|
திருமாலும் , பிரமனும் , சூரியனும் , இந்திரனும் வந்து தலையால் வணங்கும்படி , திருமுதுகுன்றத்தில் விரும்பி இருப்பவனே , தலைவனே , பெண்மைப் பண்புகள் நிறைந்த இயல்பினை உடையவளும் , ` பரவை ` என்னும் பெயரினளுமாகிய இவள் முன்னே , அடியேனது துன்பங் கெடுமாறு செம்பொன்னைத் தந்தருள் . | |
கொந்து அணவும் பொழில் சூழ் குளிர் மா மதில் மாளிகை மேல் வந்து அணவும் மதி சேர், சடை மா முதுகுன்று உடையாய்! பந்து அணவும் விரலாள் பரவை இவள் தன் முகப்பே, அந்தணனே! அருளாய், அடியேன் இட்டளம் கெடவே! .
|
7
|
கொத்துக்கள் பொருந்திய சோலைகள் சூழ்ந்த குளிர்ந்த பெரிய மதில்கள் மேலும் , மாளிகைகள் மேலும் வந்து தவழ்கின்ற சந்திரன் பொருந்திய சடையினை உடைய பெரிய திருமுது குன்றத்தையுடையவனே , அந்தணனே , பந்து பொருந்திய விரலை உடையவளும் , ` பரவை ` என்னும் பெயரினளும் ஆகிய இவள் முன்னே , அடியேனது துன்பங் கெடுமாறு அருள்பண்ணுவாய் . | |
பரசு ஆரும் கரவா! பதினெண் கணமும் சூழ முரசார் வந்து அதிர(ம்), முதுகுன்றம் அமர்ந்தவனே! விரை சேரும் குழலாள் பரவை இவள் தன் முகப்பே, அரசே! தந்தருளாய், அடியேன் இட்டளம் கெடவே! .
|
8
|
மழுப் பொருந்திய கையை யுடையவனே , பதினெண் கணங்களும் புடை சூழவும் , முரசு அணுக வந்து முழங்கவும் திருமுதுகுன்றத்தில் விரும்பி இருப்பவனே , எல்லா உலகிற்கும் அரசனே , நறுமணம் பொருந்திய கூந்தலையுடையவளும் , ` பரவை ` என்னும் பெயரினளும் ஆகிய இவள் முன்னே , அடியேனது துன்பங் கெடுமாறு செம்பொன்னைத் தந்தருள் . | |
ஏத்தாது இருந்து அறியேன்; இமையோர் தனி நாயகனே! மூத்தாய், உலகுக்கு எல்லாம்; முதுகுன்றம் அமர்ந்தவனே! பூத்து ஆரும் குழலாள் பரவை இவள் தன் முகப்பே, கூத்தா! தந்து அருளாய், கொடியேன் இட்டளம் கெடவே! .
|
9
|
தேவர்கட்கு ஒப்பற்ற தலைவனே , எல்லா உயிர் கட்கும் மூத்தவனே , திருமுதுகுன்றத்தில் விரும்பி இருப்பவனே , கூத்துடையானே , உன்னை யான் பாடாமல் இருந்தறியேன் ; ஆதலின் , மலர்கள் மலர்ந்து பொருந்துகின்ற கூந்தலையுடையவளும் , ` பரவை ` என்னும் பெயரினளும் ஆகிய இவள்முன்னே , அடியேனது துன்பங் கெடுமாறு செம்பொன்னைத் தந்தருள் . | |
பிறை ஆரும் சடை எம்பெருமான்! அருளாய் என்று, முறையால் வந்து அமரர் வணங்கும் முதுகுன்றர் தம்மை மறையார் தம் குரிசில் வயல் நாவல் ஆரூரன்-சொன்ன இறை ஆர் பாடல் வல்லார்க்கு எளிது ஆம், சிவலோகம் அதே .
|
10
|
தேவர்கள் பலரும் தம் வரிசைக்கேற்ப முறையாக வந்து வணங்கும் திருமுதுகுன்றரை , அந்தணர் தலைவனும் , வயல் களையுடைய திருநாவலூரினனும் ஆகிய நம்பியாரூரன் , ` பிறை பொருந்திய சடையினையுடைய எம்பெருமானே அருள்புரியாய் ` என்று வேண்டிப்பாடிய , இறைவனது திருவருள் நிறைந்த இப் பாடல்களை நன்கு பாட வல்லவர்க்குச் சிவலோகம் எளிய பொருளாய் விடும் . | |
| Go to top |