நீள நினைந்து அடியேன் உமை நித்தலும் கை தொழுவேன்; வாள் அன கண் மடவாள் அவள் வாடி வருந்தாமே, கோளிலி எம்பெருமான்! குண்டையூர்ச் சில நெல்லுப் பெற்றேன்; ஆள் இலை; எம்பெருமான், அவை அட்டித்தரப் பணியே! .
|
1
|
திருக்கோளிலியில் எழுந்தருளியிருக்கும் எம் பெருமானே , வாள்போலுங் கண்களை யுடைய மடவாளாகிய என் இல்லாள் தனது வாழ்க்கையை நடத்த இயலாமை கருதிமெலிந்து வருந்தாதபடி குண்டையூரிலே சில நெல்லுப் பெற்றேன் . அவைகளை அவள்பாற் சேர்ப்பிக்க எனக்கு ஆளில்லை ; அடியேன் , எஞ்ஞான்றும் உன்னையே நினைத்து நாள்தோறும் வணங்குந் தொழிலை உடையேன் ; வேறு யாரை வேண்டுவேன் ! அவைகளை அங்குச் சேர்ப்பித்து உதவ , நீ , எவர்க்கேனும் கட்டளையிட்டருள் . | |
வண்டு அமரும் குழலாள் உமை நங்கை ஓர் பங்கு உடையாய்! விண்டவர் தம் புரம் மூன்று எரி செய்த எம் வேதியனே! தெண்திரை நீர் வயல் சூழ் திருக்கோளிலி எம்பெருமான்! அண்டம் அது ஆயவனே, அவை அட்டித்தரப் பணியே! .
|
2
|
வண்டுகள் விரும்பும் கூந்தலையுடையவளாகி , ` உமை ` என்னும் நங்கையை ஒருபாகத்தில் உடையவனே , பகைமை கொண்டவர்களது முப்புரத்தை எரித்த எங்கள் அந்தணனே , தெளிந்த அலைகளையுடைய நீரையுடைய வயல்கள் சூழ்ந்த திருக்கோளிலியில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமானே , உலகெலாம் ஆகியவனே , அடியேன் குண்டையூரிலே சில நெல்லுப் பெற்றேன் ; அவைகளை என் இல்லத்தில் சேர்ப்பிக்க எனக்கு ஆள் இல்லை ; ஆதலின் , அவைகளை அங்குச் சேர்ப்பித்து உதவ , நீ , எவர்க்கேனும் கட்டளை யிட்டருள் . | |
பாதி ஓர் பெண்ணை வைத்தாய்; படரும் சடைக் கங்கை வைத்தாய்; மாதர் நல்லார் வருத்தம்(ம்) அது நீயும் அறிதி அன்றே! கோது இல் பொழில் புடை சூழ் குண்டையூர்ச் சில நெல்லுப் பெற்றேன்; ஆதியே, அற்புதனே, அவை அட்டித்தரப் பணியே! .
|
3
|
திருக்கோளிலியில் எழுந்தருளியிருக்கின்ற எம் பெருமானே , எல்லார்க்கும் முன்னவனே , யாவர்க்கும் மருட்கையைத் தரத்தக்க செயல்களைச் செய்ய வல்லவனே , நீ , உன் திருமேனியில் பாதியிற்றானே , ` உமை ` என்னும் ஒரு மாதராளை வைத்தாய் ; அது வன்றி , விரிந்த சடையின்கண் , ` கங்கை ` என்னும் மற்றொரு மாத ராளையும் வைத்தாய் ; ஆதலின் , நீயும் நற்பண்புடைய பெண்டிர் தம் வாழ்க்கை முட்டுற்றவிடத்து அடையும் வருத்தத்தினது தன்மையை நன்குணர்வாயன்றே ? அதனால் உன்னை வேண்டுகின்றேன் ; அடியேன் குற்றம் இல்லாத சோலைகள் புடைசூழ்ந்த குண்டையூரிற் சில நெல்லுப் பெற்றேன் ; அவைகளை என் இல்லத்திற் சேர்ப்பிக்க எனக்கு ஆள் இல்லை ; அவைகளை அங்குச் சேர்ப்பித்து உதவ , நீ எவர்க்கேனும் கட்டளையிட்டருள் . | |
சொல்லுவது என், உனை நான்? தொண்டை வாய் உமை நங்கையை நீ புல்கி இடத்தில் வைத்தாய்க்கு ஒரு பூசல் செய்தார் உளரோ? கொல்லை வளம் புறவில்-குண்டையூர்ச் சில நெல்லுப் பெற்றேன அல்லல் களைந்து அடியேற்கு அவை அட்டித்தரப் பணியே! .
|
4
|
திருக்கோளிலியில் எழுந்தருளியிருக்கின்ற எம் பெருமானே , உன்னிடம் நான் எடுத்துச் சொல்ல வேண்டுவது என் உளது ? நீ , கொவ்வைக்கனிபோலும் வாயினையுடைய , ` உமை ` என்னும் நங்கையை முன்பு மணந்து , பின்பு இடப்பாகத்திலே வைத்தாய் ; அது காரணமாக உன்னை ஒரு தூற்றுதல் செய்தார் எவரேனும் உளரோ ? இல்லை ஆதலின் , எனக்கு நீ என் இல்வாழ்க்கைக்கு உரியதனைச் செய்தாலும் உன்னைத் தூற்றுவார் ஒருவரும் இல்லை . அடியேன் , சில நெற்களை , கொல்லையின் வளங்களையுடைய முல்லை நிலம் சூழ்ந்த குண்டையூரிற் பெற்றேன் ; அவைகளை என் இல்லத்திற் சேர்ப்பிக்க எனக்கு ஆள் இல்லை ; அடியேனுக்கு அந்த அல்லலை நீக்கி , அவற்றை அங்குச் சேர்த்து உதவ , நீ , எவர்க்கேனும் கட்டளையிட்டருள் . | |
முல்லை முறுவல் உமை ஒரு பங்கு உடை முக்கணனே! பல் அயர் வெண்தலையில் பலி கொண்டு உழல் பாசுபதா! கொல்லை வளம் புறவில்-திருக்கோளிலி எம்பெருமான்! அல்லல் களைந்து, அடியேற்கு அவை அட்டித்தரப் பணியே! .
|
5
|
முல்லையரும்புபோலும் பற்களையுடைய உமையவளை ஒரு பாகத்தில் உடைய முக்கட் கடவுளே , சிரிப்பது போலத் தோன்றும் வெள்ளிய தலையில் பிச்சை யேற்றுத் திரிகின்ற பாசுபத வேடத்தையுடையவனே , கொல்லையின் வளங்களையுடைய முல்லை நிலத்தையுடைய திருக்கோளிலியில் எழுந்தருளியிருக்கின்ற எம் பெருமானே , அடியேன் , குண்டையூரிற் சில நெல்லுப் பெற்றேன் ; அவைகளை என் இல்லத்திற் சேர்ப்பிக்க எனக்கு ஆள் இல்லை . ஆதலின் , அடியேனுக்கு அத்துன்பத்தை நீக்கி , அவற்றை அங்குச் சேர்ப்பித்து உதவ , நீ , எவர்க்கேனும் கட்டளையிட்டருள் . | |
| Go to top |
குரவு அமரும் குழலாள் உமை நங்கை ஒர் பங்கு உடையாய்! பரவை பசி வருத்தம்(ம்) அது நீயும் அறிதி அன்றே! குரவு அமரும் பொழில் சூழ் குண்டையூர்ச் சில நெல்லுப் பெற்றேன்; அரவம் அசைத்தவனே, அவை அட்டித்தரப் பணியே! .
|
6
|
குராமலர் பொருந்தியுள்ள கூந்தலையுடைய , ` உமை ` என்னும் நங்கையை ஒரு பாகத்தில் உடையவனே , பாம்பைக் கட்டியுள்ளவனே , திருக்கோளிலியில் எழுந்தருளியிருக்கின்ற எம் பெருமானே , நீ எல்லாவற்றையும் பிறர் அறிவிக்கவேண்டாது அறிபவனாகலின் பரவையது பசித்துன்பத்தையும் அறிவாயன்றே ? அவள் பொருட்டு , அடியேன் , குராமரம் பொருந்தியுள்ள சோலைகள் சூழ்ந்த குண்டையூரிற் சில நெல்லுப் பெற்றேன் ; அவைகளை அவள் பாற் சேர்ப்பிக்க எனக்கு ஆள் இல்லை ; அவற்றை அங்குச் சேர்ப்பித்து உதவ , நீ எவர்க்கேனும் கட்டளையிட்டருள் . | |
எம்பெருமான்! நுனையே நினைந்து ஏத்துவன், எப்பொழுதும்; வம்பு அமரும் குழலாள் ஒரு பாகம் அமர்ந்தவனே! செம்பொனின் மாளிகை சூழ் திருக்கோளிலி எம்பெருமான்! அன்பு அது(வ்) ஆய் அடியேற்கு அவை அட்டித்தரப் பணியே! .
|
7
|
மணம் பொருந்திய கூந்தலையுடைய உமையவளை ஒருபாகத்தில் விரும்பி வைத்துள்ளவனே , செம்பொன்னாலியன்ற மாளிகைகள் நிறைந்த திருக்கோளிலியில் எழுந்தருளியிருக்கின்ற எம்பெருமானே , அடியேன் குண்டையூரிற் சில நெல்லுப் பெற்றேன் ; அவைகளை என் இல்லத்திற்சேர்ப்பிக்க எனக்கு ஆள் இல்லை . எம் தலைவனாகிய உன்னையே எப்பொழுதும் நினைந்து துதிக்கும் தொழிலுடையேன் யான் ; வேறுயாரை வேண்டுவேன் ! என்னிடத்து அன்புடையையாய் , அவற்றை அங்குச் சேர்த்து உதவ . நீ , எவர்க்கேனும் கட்டளையிட்டருள் . | |
அரக்கன் முடி கரங்கள்(ள்) அடர்த்திட்ட எம் ஆதிப்பிரான்! பரக்கும் அரவு அல்குலாள் பரவை அவள் வாடுகின்றாள்; குரக்கு இனங்கள் குதி கொள் குண்டையூர்ச் சில நெல்லுப் பெற்றேன்; இரக்கம் அது ஆய் அடியேற்கு அவை அட்டித்தரப் பணியே! .
|
8
|
இராவணனது தலைகளையும் , கைகளையும் நெரித் திட்ட எங்கள் முதற்கடவுளே , திருக்கோளிலியில் எழுந்தருளியிருக்கின்ற எம்பெருமானே . அகன்ற அல்குலையுடையாளாகிய என் இல்லாள் பரவை தன் வாழ்க்கையை நடத்தமாட்டாது மெலிகின்றாள் ; அவள் பொருட்டு , அடியேன் , சோலைகளில் குரங்குக் கூட்டங்கள் குதித்து விளையாடுகின்ற குண்டையூரிற் சில நெல்லுப் பெற்றேன் ; அவைகளை அவள்பால் சேர்ப்பிக்க எனக்கு ஆள் இல்லை ; நீ இரக்க முடையையாய் , அடியேன் பொருட்டு அவற்றை அங்குச் சேர்த்து உதவ , எவர்க்கேனும் கட்டளையிட்டருள் . | |
பண்டைய மால், பிரமன், பறந்தும்(ம்) இடந்தும்(ம்) அயர்ந்தும் கண்டிலராய், அவர்கள் கழல் காண்பு அரிது ஆய பிரான்! தெண்திரை நீர் வயல் சூழ் திருக்கோளிலி எம்பெருமான்! அண்டம் அது ஆயவனே, அவை அட்டித்தரப் பணியே! .
|
9
|
முற்காலத்திலே உன் அளவைக்காணப் புகுந்த திருமாலும் பிரமனும் அன்னமாய் விண்ணிற்பறந்து ஓடியும் , ஏனமாய் மண்ணைப் பிளந்து நுழைந்தும் தங்களால் ஆமளவும் முயன்றும் அதனைக் காணாதவர்களேயாக , இன்றும் நின் திருவடி அவர்களால் காணுதற்கு அரிதேயாய கடவுளே , தெளிந்த அலைகளையுடைய நீரை யுடைய வயல்கள் சூழ்ந்த திருக்கோளிலியில் எழுந்தருளி யிருக்கின்ற எம்பெருமானே , எல்லா உலகமும் ஆனவனே , அடியேன் , குண்டையூரிலே சில நெல்லுப் பெற்றேன் ; அவைகளை என் இல்லத்திற் சேர்ப்பிக்க எனக்கு ஆள் இல்லை ; அவற்றை அங்குச் சேர்த்து உதவ , நீ , எவர்க்கேனும் கட்டளையிட்டருள் . | |
கொல்லை வளம் புறவில்-திருக்கோளிலி மேயவனை நல்லவர் தாம் பரவும் திரு நாவல ஊரன் அவன் நெல் இட ஆட்கள் வேண்டி(ந்) நினைந்து ஏத்திய பத்தும் வல்லார், அல்லல் களைந்து உலகின்(ன்), அண்டர் வான் உலகு ஆள்பவரே .
|
10
|
கொல்லையினது வளங்களையுடைய முல்லை நிலத்தையுடைய திருக்கோளிலியில் விரும்பியிருக்கின்ற பெருமானை , நல்லவர்கள் துதிக்கின்ற திருநாவலூரான் , தனக்கு நெல் எடுக்க ஆட்களைத் தருமாறு வேண்டி , மனம் பொருந்திப் பாடிய இப் பத்துப் பாடல்களையும் பாடவல்லவர் , இம்மையில் தங்கட்கு உள்ள இடர்களை நீக்கி , அம்மையிலும் தேவர்கட்கு மேலாய மேலுலகத்தை ஆள்வார்கள் . | |
| Go to top |