சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

7.005   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு

திருஓணகாந்தன்தளி - இந்தளம் லதாங்கி மாயாமாளவகெளளை கீதப்ரியா ராகத்தில் திருமுறை அருள்தரு காமாட்சியம்மை உடனுறை அருள்மிகு ஓணகாந்தீசுவரர் திருவடிகள் போற்றி
கச்சூரிலிருந்து புறப்பட்டுக் காஞ்சிபுரத்தை யணைந்து, திரு வேகம்பத்தை யடைந்து ஏகாம்பரநாதரைப் போற்றினார். தொண்டர் குழாங்களோடு சிலநாள் அங்குத் தங்கினார். காஞ்சியில் காமகோட்டம், திருமேற்றளி ஆகிய இடங்களையும் சென்று தரிசித்தார். திருவோணகாந்தன்தளி இறைவனை வணங்கி நெய்யும் பாலும் என்று தொடங்கித் திருப்பதிகம் பாடிப் பொன் பெற்றார்.
பொன் பெற
- Hide Meaning   https://www.youtube.com/watch?v=TzdBCOhKDC4   Add audio link Add Audio

நெய்யும் பாலும் தயிரும் கொண்டு நித்தல் பூசை செய்யல் உற்றார்;
கையில் ஒன்றும் காணம் இல்லை, கழல் அடீ தொழுது உய்யின் அல்லால்;
ஐவர் கொண்டு இங்கு ஆட்ட ஆடி, ஆழ் குழிப்பட்டு அழுந்துவேனுக்கு,
உய்யும் ஆறு ஒன்று அருளிச் செய்யீர் ஓணகாந்தன் தளி உளீரே!.

1
` திருவோணகாந்தன்தளி ` என்னும் திருக்கோயிலில் வாழும் பெருமானிரே , ` நெய் , பால் , தயிர் முதலியவற்றால் உம்மை நாள்தோறும் வழிபடுவாரது கையில்காசு ஒன்றும் காணப்படுகின்ற தில்லை . அவ்வாறே , உமது கழலணிந்த பாதத்தைக் கும்பிட்டு ஏதேனும் பெற்றாலன்றி , இவ்வுலகத்தில் , புலன்களாகிய ஐவர் தண்டலாளர் ஐந்து பக்கம் பற்றி ஈர்த்துச் சுழற்றச் சுழன்று , அச்சுழற்சி யாலாகிய துன்பம் என்னும் ஆழ்ந்த குழியில் அகப்பட்டு ஏறமாட்டாது அழுந்திப் போவேனாகிய அடியேனுக்கு , அதனினின்றும் கரையேறும் வழியொன்றனைச் சொல்லியருளீர் .

திங்கள் தங்கு சடையின் மேல் ஓர் திரைகள் வந்து புரள வீசும்
கங்கையாளேல், வாய் திற(வ்)வாள்; கணபதி(ய்)யேல், வயிறு தாரி;
அம் கை வேலோன் குமரன், பிள்ளை; தேவியார் கோற்று அடியாளால்;
உங்களுக்கு ஆட் செய்ய மாட்டோம் ஓணகாந்தன் தளி உளீரே! .

2
` திருவோணகாந்தன்தளி ` என்னும் திருக்கோயிலில் வாழும் பெருமானிரே , பிறை தங்குமாறு சேர்த்துக் கட்டியுள்ள உமது சடையின் மேலும் , ஒப்பற்ற அலைகள் தோன்றிப் புரளுமாறு வீசுகின்ற , ` கங்கை ` என்னும் தேவியோவெனில் , உமது பக்கத்தில் எஞ் ஞான்றும் உள்ள உமாதேவியார்க்கு அஞ்சி ஒருஞான்றும் வாய் திறத்தலே இல்லை ; உம் மூத்த மகனாகிய விநாயகனோவெனில் , வயிறு ஒன்றையே முதன்மையாக உடையவன் ; ( பிறிதொன்றையும் அறியான் ). இளைய மகனாகிய , அகங்கையில் வேற்படையை யுடைய முருகனோவெனில் , விளையாட்டுப் பிள்ளை ; ( யாதொன்றையும் பேணான் ). தேவியாராகிய உமையம்மையாரோவெனில் , உம்மை ஒழிந்து அடியவரை ஆளுவாரல்லர் ; ( நீரோ அடியவர் குறை நோக்கி யாதும் செய்யீர் ) ஆதலின் , உம் குடிக்கு யாங்கள் அடிமை செய்ய மாட்டேமாகின்றேம் .

பெற்றபோழ்தும் பெறாத போழ்தும், பேணி உன் கழல் ஏத்துவார்கள்
மற்று ஓர் பற்று இலர் என்று இரங்கி, மதி உடையவர் செய்கை செய்யீர்;
அற்ற போழ்தும் அலந்த போழ்தும், ஆபற் காலத்து, அடிகேள்! உம்மை
ஒற்றி வைத்து இங்கு உண்ணல் ஆமோ? ஓணகாந்தன் தளி உளீரே! .

3
தலைவரே , ` திருவோணகாந்தன்தளி ` என்னும் திருக்கோயிலில் வாழும் பெருமானிரே , உம்மால் யாதானும் ஒன்றை அடையினும் , அடையாதொழியினும் அவ்வாற்றான் வேறுபடுதல் இன்றி எஞ்ஞான்றும் ஒருபெற்றியே உம் திருவடியைப் பற்றிநின்று துதிக்கும் அடியவர் , ` நம்மையன்றி வேறொரு துணையும் இல்லாதவர் ` என்று நினைத்து , அறிவுடையவர்க்கு உரிய செய்கை ஒன்றும் நீர் செய்கின்றிலீர் ; அதனால் , உம் அடியவர் தங்கள் கையிற் பொருள் இல்லாதொழிந்த காலத்தும் , அது காரணமாக வழியொன்றும் காணாது அலைந்த காலத்தும் , உம்மைப் பிறருக்கு ஒற்றியாகவைத்துப் பிழைத்தல்தான் செயற்பாலதோ ? ( சொல்லீர் )

வல்லது எல்லாம் சொல்லி உம்மை வாழ்த்தினாலும், வாய் திறந்து ஒன்று
இல்லை என்னீர்; உண்டும் என்னீர்; எம்மை ஆள்வான் இருப்பது என், நீர்?
பல்லை உக்க படுதலையில் பகல் எலாம் போய்ப் பலி திரிந்து இங்கு
ஒல்லை வாழ்க்கை ஒழிய மாட்டீர் ஓணகாந்தன் தளி உளீரே! .

4
` திருவோணகாந்தன்தளி ` என்னும் திருக்கோயிலில் வாழும் பெருமானிரே , யாம் வல்ல கருத்துக்கள் பலவும் சொல்லி உம்மை வாழ்த்தியபோதும் , நீர் வாய்திறந்து , எமக்கு ஈய யாதேனும் ஒருபொருளை , ` இல்லை ` என்றும் சொல்கின்றிலீர் ; ` உண்டு ` என்றும் சொல்கின்றிலீர் ; நீர் எம்மைப் பணிகொள்ள இருத்தல் எவ்வாறு ? நாள் தோறும் சென்று , பல் நீங்கிய , இறந்தாரது தலையில் இவ்வுலகில் பிச்சை ஏற்கத் திரிந்தும் , இல்வாழ்க்கையை விரைவில் விட்டொழிய மாட்டீர் .

கூடிக்கூடித் தொண்டர் தங்கள் கொண்ட பாணி குறைபடாமே,
ஆடிப் பாடி, அழுது, நெக்கு, அங்கு அன்பு உடையவர்க்கு இன்பம் ஓரீர்;
தேடித்தேடித் திரிந்து எய்த்தாலும் சித்தம் என்பால் வைக்க மாட்டீர்;
ஓடிப் போகீர்; பற்றும் தாரீர் ஓணகாந்தன் தளி உளீரே!

5
` திருவோணகாந்தன்தளி ` என்னும் திருக்கோயிலில் வாழும் பெருமானிரே , நீர் , தம்மிற் பலகாலும் கூடி , அடியவர்க்கு உரிய , பொருந்திய தாளத்தொடுபட்ட பாட்டுக்களைக் குற்றம் உண்டாகாமலே பாடியும் , ஆடியும் , மனம்நெகிழ்ந்து அழுதும் , மற்றும் அவ்வாற்றால் அன்புடையராய் இருப்பவர்க்கு நன்மை செய்யு மாற்றினை நினைக்கின்றிலீர் ; உம்மைக் காண வந்து பலவிடத்திலும் தேடித் தேடித் திரிந்தாலும் , என்னிடத்தில் இரக்கம் வைத்துக் காட்சி யளிக்கமாட்டீர் ; கோயிலைவிட்டுப் போகவும் மாட்டீர் ; கோயிலில் வந்து பாடுகின்ற எனக்குப் பற்றுக்கோடும் தரமாட்டீர் ; ( என் செய்வேன் !)
Go to top

வார் இருங்குழல், வாள் நெடுங்கண், மலைமகள் மது விம்மு கொன்றைத்-
தார் இருந் தடமார்பு நீங்காத் தையலாள் உலகு உய்ய வைத்த,
கார் இரும் பொழில், கச்சி மூதூர்க் காமக்கோட்டம் உண்டாக, நீர் போய்
ஊர் இடும் பிச்சை கொள்வது என்னே? ஓணகாந்தன் தளி உளீரே!

6
` திருவோணகாந்தன்தளி ` என்னும் திருக்கோயிலில் வாழும் பெருமானிரே . தேன் ததும்புங்கொன்றை மாலையை உடைய உமது பெரிய அகன்ற மார்பினின்றும் நீங்காத , நீண்ட கரிய கூந்தலையும் , வாள்போலும் நெடிய கண்களையும் உடைய மலைமகளாகிய தேவி . உலக மெல்லாம் துன்பமின்றி வாழ்தற் பொருட்டு வைத்துள்ள சிறந்த அறச்சாலையாகிய , மேகம் தவழும் பெரிய சோலையை யுடைய , ` கச்சி ` என்னும் பழைய ஊரின்கண் உள்ள திருக்காமக் கோட்டம் இருக்க , நீர் சென்று , ஊரவர் இடும் பிச்சையை ஏற்பது ஏன் ?

பொய்ம்மையாலே போது போக்கிப் புறத்தும் இல்லை; அகத்தும் இல்லை;
மெய்ம்மை சொல்லி ஆளமாட்டீர்; மேலை நாள் ஒன்று இடவும் கில்லீர்;
எம்மைப் பெற்றால் ஏதும் வேண்டீர்; ஏதும் தாரீர்; ஏதும் ஓதீர்;
உம்மை அன்றே, எம்பெருமான்? ஓணகாந்தன் தளி உளீரே!

7
` திருவோணகாந்தன்தளி ` என்னும் திருக்கோயிலில் வாழும் பெருமானிரே . நீர் பொய்ச்சொல்லினாலே காலங் கழித்து , திருக்கோயிலின் புறத்தும் காணப்படீர் ; அகத்தும் காணப்படீர் . ஆகவே நீர் நும் அடியவரை மெய்சொல்லி ஆளமாட்டீர்போலும் ! இனி , பின்வரும் நாள்களிலும் ஒன்றும் தரமாட்டீரேயாம் ; ஏனெனில் , எம்மை ஆளாகப் பெறுமளவும் விடாது வழக்காடுதல் அல்லது , பெற்றுவிட்டால் பின்பு எம்பால் ஒரு பணியையும் விரும்புகின்றிலீர் . எவ்வாற்றான் நோக்கினும் , நீர் எமக்கு யாதும் ஈகின்றவராயோ , யாதும் சொல்கின்றவராயோ தோன்றவில்லை . இந்நிலையில் நீர் எமக்குத் தலைவராய் இருத்தல் , இப்பிறப்பு வந்தபின்னன்று ; முற் பிறப்புத் தொட்டேயாம் .

வலையம் வைத்த கூற்றம் ஈவான் வந்து நின்ற வார்த்தை கேட்டு,
சிலை அமைத்த சிந்தையாலே திருவடி தொழுது உய்யின் அல்லால்,
கலை அமைத்த காமச் செற்றக் குரோத லோப மதவர் ஊடு ஐ-
உலை அமைத்து இங்கு ஒன்ற மாட்டேன்-ஓணகாந்தன் தளி உளீரே!

8
` திருவோணகாந்தன்தளி ` என்னும் திருக்கோயிலில் வாழும் பெருமானிரே , எத்தகையோரையும் கொண்டு செல்ல , பாசத்தைக் கையிலே கொண்டுள்ள கூற்றுவன் வந்து வானத்தின்மேல் நின்ற செய்தியைக்கேட்டு , அடியேன் , நீர் கற்போல அமைத்துத் தந்த அம் மனத்தைக் கொண்டே உமது திருவடியைத் தொழுது அக்கூற்றுவனுக்குத் தப்ப நினைக்கின்றேனேயன்றி , விதி அமைத்துத் தந்த ஐம் பொறிகளாகிய ஐந்து உலைக்களக் கூட்டத்தைப் பொருளாக உள்ளத் தமைத்து , ` காமம் , மாற்சரியம் , குரோதம் , உலோபம் , மதம் ` என்ப வரிடைப் பொருந்தி வாழ நினைக்கின்றிலேன் .

வாரம் ஆகித் திருவடிக்குப் பணி செய் தொண்டர் பெறுவது என்னே?
ஆரம் பாம்பு; வாழ்வது ஆரூர்; ஒற்றியூரேல், உ(ம்)மது அன்று;
தாரம் ஆகக் கங்கையாளைச் சடையில் வைத்த அடிகேள்! உந்தம்
ஊரும் காடு(வ்); உடையும் தோலே ஓணகாந்தன் தளி உளீரே!

9
` திருவோணகாந்தன்தளி ` என்னும் திருக்கோயிலில் வாழும் பெருமானிரே , ` கங்கை ` என்பவளைத்தாரமாகக் கொண்டு , இடமின்றிச் சடையில் வைத்துள்ள அடிகளே , நீர் மார்பில் அணியும் ஆரமாவது பாம்பு ; வாழும் ஊர் உமக்கு உரிமையில்லாதது ; ` ஒற்றியூர் உளதே ` எனில் ` ஒற்றி ` யெனவே , அஃது உம்முடையது அன்றாயிற்று . உமக்கு இல்லமாவது சுடுகாடு ; உமது உடையாவது தோல் . இங்ஙன மாதலின் , உம்மிடத்து அன்புடையவராய் உம்திருவடிக்குத் தொண்டு செய்யும் அடியவர் உம்மிடத்தினின்றும் பெறுவது எதனை ?

ஓவணம் மேல் எருது ஒன்று ஏறும் ஓணகாந்தன் தளி உளார் தாம்
ஆவணம் செய்து, ஆளும் கொண்டு(வ்), அரை துகி(ல்)லொடு பட்டு வீக்கி,
கோவணம் மேற்கொண்ட வேடம் கோவை ஆக ஆரூரன் சொன்ன
பாவணத் தமிழ் பத்தும் வல்லார்க்குப் பறையும், தாம் செய்த பாவம் தானே.

10
நீக்கப்படும் தன்மையை ஏற்றுள்ள ஒற்றை எருதை ஊர்தியாகக் கொள்ளும் , திருவோணகாந்தன்தளியில் வாழ்கின்ற இறைவர் , நம்பியாரூரனை , தாமே பத்திரம் எழுதிக் கொண்டுவந்து ஆட்கொண்ட எல்லைக்கண் , துகிலும் பட்டும் உடுத்திருந்து , பின்பு அவர் ஆணைவழியே அவரை அவன் அணுகிப் பாடுதலாகிய தொண்டினைச் செய்யும் எல்லைக் கண் கோவண மட்டிலே உடையவராய் நின்ற கோலத்தின் தன்மைகள் பலவும் நிரல்படத் தோன்றுமாறு அமைத்து அவன்பாடிய , பா வடிவாகிய இத் தமிழ்ச் செய்யுள்கள் பத்தினையும் பொருளுணர்ந்து அன்பு மீதூரப் பண்ணொடு நன்கு பாடவல்லவர்க்கு அவர் செய்த பாவம் விரைந்து நீங்கும் .
Go to top

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருஓணகாந்தன்தளி
7.005   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   நெய்யும் பாலும் தயிரும் கொண்டு
Tune - இந்தளம்   (திருஓணகாந்தன்தளி ஓணகாந்தீசுவரர் காமாட்சியம்மை)
     
send corrections and suggestions to admin-at-sivaya.org

This page was last modified on Tue, 30 Dec 2025 15:21:40 +0000