சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

7.001   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு

திருவெண்ணெய்நல்லூர் - இந்தளம் லதாங்கி மாயாமாளவகெளளை கீதப்ரியா ராகத்தில் திருமுறை அருள்தரு வேற்கண்மங்கையம்மை உடனுறை அருள்மிகு தடுத்தாட்கொண்டவீசுவரர் திருவடிகள் போற்றி
திருமுனைப்பாடி நாட்டைச் சேர்ந்த திருநாவலூரில், ஆதி சைவர் குலத்தில் சுந்தரர் பிறந்தார். இவரது தந்தையார் சடையனார், தாயார் இசைஞானியார். மணப்பருவம் அடைந்த போது சுந்தரருக்குத் திருமண ஏற்பாடு செய்யப்பட்டது. மணநாளன்று முதியவர் ஒருவர் வடிவில் அங்கு வந்த ஈசன், சுந்தரருடைய பாட்டனார் எழுதிக் கொடுத்ததாகச் சொல்லப்பட்ட ஒரு ஓலையைக் காட்டிச் சுந்தரரும், அவர் வழித்தோன்றல்களும் தனக்கு அடிமை என்றார். அந்த ஓலையை சுந்தரர் கிழித்தெறிந்தார். முதியவர் வழக்கை திருவெண்ணெய்நல்லூருக்கு எடுத்து சென்று வென்றார். அடிமை ஆன சுந்தரர் முதியவரின் வீட்டைக் காண்பிக்க சொல்ல, முதியவர் திருவெண்ணெய்நல்லூர் ஆலயத்திற்கு கூட்டி சென்று மறைந்தார். முதியவராய் வந்து தடுத்தாட் கொண்டருளிய சிவபெரு மான் உமை அம்மையாருடன் இடப வாகனத்தில் எழுந்தருளிக்காட்சி அளித்து `நம்பியாரூரனே! நீ முன்னமே நமக்குத் தொண்டன். பெருமான் அவரை நோக்கி `நம்மிடம் நீ வன்மை பேசினமையால் வன்றொண்டன் என்ற பெயரைப் பெற்றாய். நமக்கு அன்பினாலே சிறந்த அர்ச்சனை பாடல்களே ஆகும். ஆதலால் இவ்வுலகில் நம்மை, செந்தமிழ்ப் பாடல்களால் பாடிப் போற்றுக எனப் பணித்தருளினார். அன்பனே! யான் ஓலைகாட்டி நின்னை ஆட்கொள்ள வந்தபோது நீ என்னைப் பித்தன் என்று கூறினாய். ஆதலால் என்பெயர் பித்தன் என்றே பாடுக` என்று இறைவன் அருளிச்செய்தார். வன்தொண்டர் தம்மை பித்தா பிறைசூடீ என்று தொடங்கும் திருப்பதிகத்தால் பாடியருளினார்.
சிவானந்த முதிர்வு சிவனைத் தவிர வேறு எந்தத் தெய்வத்தையும் போற்றமாட்டேன்
- Hide Meaning   https://www.youtube.com/watch?v=NhxUwxz5RJA  https://www.youtube.com/watch?v=g5cyWyIOPY8   Add audio link Add Audio

பித்தா! பிறைசூடீ! பெருமானே! அருளாளா!
எத்தால் மறவாதே நினைக்கின்றேன்? மனத்து உன்னை
வைத்தாய்; பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருள்-துறையுள்
அத்தா! உனக்கு ஆள் ஆய் இனி அல்லேன் எனல் ஆமே? .

1
பித்தனே, பிறையைக் கண்ணியாகச் சூடியவனே, பெருமை உடையவனே, பெண்ணையாற்றின் தென்பால் உள்ள திருவெண்ணெய்நல்லூரின்கண்ணதாகிய, `அருட்டுறை` என்னும் திருக்கோயிலின்கண் எழுந்தருளியிருக்கும் தலைவனே, எனது நெஞ்சத்துள் உன்னை அகலாது வைத்தருளினாய்; அதனால், எவ்வாற்றானும் உன்னை மறவாமலே நினைந்து, முன்பே உனக்கு அடியவனாகி, இப்பொழுது, `உனக்கு அடியவன் அல்லேன்` என எதிர்வழக்குப் பேசியது பொருந்துமோ!

நாயேன் பல நாளும் நினைப்பு இன்றி, மனத்து உன்னை,
பேய் ஆய்த் திரிந்து எய்த்தேன்; பெறல் ஆகா அருள் பெற்றேன்;
வேய் ஆர் பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருள்-துறையுள்
ஆயா! உனக்கு ஆள் ஆய் இனி அல்லேன் எனல் ஆமே? .

2
மூங்கில்கள் நிறைந்து வரும் பெண்ணையாற்றின் தென்பால் உள்ள திருவெண்ணெய்நல்லூரின் கண்ணதாகிய அருட்டுறைத் திருக்கோயிலின்கண் எழுந்தருளியிருக்கும் தலைவனே, நாய் போலும் கீழ்மையுடையேனாகிய யான் உன்னை எனது இளைய நாள்கள் பலவற்றினும் மனத்தால் நினைத்தல் இன்றிப் பேய்போல அலைந்து இளைத்தேன்; ஆயினும், இதுபோழ்து, பெறுதற்கு அரிய உனது திருவருளை நான் பெற்றேன். இப்பேற்றை எனக்கு அளிக்க வந்த உனக்கு, முன்பே நான் அடியவனாகி, இப்பொழுது, `அடியவன் அல்லேன்` என எதிர்வழக்குப் பேசியது பொருந்துமோ!

மன்னே! மறவாதே நினைக்கின்றேன், மனத்து உன்னை;
பொன்னே, மணிதானே, வயிர(ம்)மே, பொருது உந்தி
மின் ஆர் பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருள்-துறையுள்
அன்னே! உனக்கு ஆள் ஆய் இனி அல்லேன் எனல் ஆமே? .

3
தலைவனே, கரையை மோதி, பொன்னும் மணியும், வயிரமும் ஆகிய இவற்றைத் தள்ளிக்கொண்டு, ஒளிமிக்கு வருகின்ற பெண்ணையாற்றின் தென்பால் உள்ள திருவெண்ணெய்நல்லூரின் கண்ணதாகிய அருட்டுறைத் திருக்கோயிலின்கண் எழுந்தருளியுள்ள தாய் போன்றவனே, உனக்கு நான் முன்பே அடியவனாகி, இப்பொழுது, `அடியவன் அல்லேன்` என்று எதிர்வழக்குப் பேசியது பொருந்துமோ! இனிமேல், உன்னை என் மனத்தில் ஒருபோதும் மறவாமலே நினைப்பேன்.

முடியேன்; இனிப் பிறவேன்; பெறின் மூவேன்; பெற்றம் ஊர்தீ!
கொடியேன் பல பொய்யே உரைப்பேனைக் குறிக்கொள், நீ!
செடிஆர் பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருள்-துறையுள்
அடிகேள்! உனக்கு ஆள் ஆய் இனி அல்லேன் எனல் ஆமே? .

4
இடபத்தை ஊர்பவனே, ஒளி நிறைந்த பெண்ணை யாற்றின் தென்பால் உள்ள திருவெண்ணெய்நல்லூரின் கண்ணதாகிய அருட்டுறைத் திருக்கோயிலின்கண் எழுந்தருளியிருக்கும் தலைவனே, உனக்கு நான் முன்பே அடியவனாகி, இப்பொழுது, `அடியவன் அல்லேன்` என எதிர்வழக்குப் பேசியது பொருந்துமோ! அப்பொருந்தாமையை அகற்றி என்னை நீ தெளிவித் தருளினமையால், இனி நான் இறக்கவும், மீளப் பிறக்கவும், இவ்வுலகில் வாழப் பெறின் மூப் படைந்து வருந்தவும் ஆற்றேனாகின்றேன். நெறிகோடினேனாகிப் பொய்ம்மைகள் பலவற்றையே பேசுவேனாகிய என்னை நீ வெறாது ஏற்றருள்.

பாதம் பணிவார்கள் பெறும் பண்டம்(ம்) அது பணியாய்!
ஆதன் பொருள் ஆனேன்; அறிவு இல்லேன்; அருளாளா!
தாது ஆர் பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருள்-துறையுள்
ஆதீ! உனக்கு ஆள் ஆய் இனி அல்லேன் எனல் ஆமே? .

5
அருளாளனே, பூக்களின் மகரந்தம் நிறைந்த பெண்ணையாற்றின் தென்பால் உள்ள திருவெண்ணெய் நல்லூரின் கண்ணதாகிய அருட்டுறைத் திருக்கோயிலின்கண் எழுந்தருளியுள்ள முதல்வனே, உனக்கு நான் முன்பே அடியவனாகி, இப்பொழுது, `அடியவன் அல்லேன்` என எதிர் வழக்குப் பேசியது பொருந்துமோ! அப்பொருந்தாச் செய்கையைச் செய்தமையால் அறிவில்லேனாயினேன்; அதனால், `ஆதன்` என்னும் சொற்குப் பொருளாயினேன்; ஆயினும், என்னை இகழாது உன் திருவடியை வணங்கி வாழ்கின்ற அறிவர் பெறும் பேற்றை அளித்தருள்.
Go to top

தண் ஆர் மதிசூடீ! தழல் போலும் திருமேனீ!
எண்ணார் புரம் மூன்றும் எரியுண்ண(ந்) நகை செய்தாய்!
மண் ஆர் பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருள்-துறையுள்
அண்ணா! உனக்கு ஆள் ஆய் இனி அல்லேன் எனல் ஆமே? .

6
தட்பம் நிறைந்த திங்களைச் சூடியவனே, நெருப்புப் போலும் திருமேனியை உடையவனே, உன்னை மதியாதவரது அரண்கள் மூன்றையும் தீ உண்ணும்படி சிரித்தவனே, மூழ்குவோரது பாவத்தைக் கழுவுதல் பொருந்திய பெண்ணையாற்றின் தென்பால் உள்ள திருவெண்ணெய்நல்லூரின்கண்ணதாகிய அருட்டுறைத் திருக்கோயிலின்கண் எழுந்தருளியிருக்கும் தலைவனே, உனக்கு நான் முன்பே அடியவனாகி, இப்பொழுது, `அடியவன் அல்லேன்` என எதிர்வழக்குப் பேசியது பொருந்துமோ!

ஊன் ஆய், உயிர் ஆனாய்; உடல் ஆனாய்; உலகு ஆனாய்;
வான் ஆய், நிலன் ஆனாய்; கடல் ஆனாய்; மலை ஆனாய்;
தேன் ஆர் பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருள்-துறையுள்
ஆனாய்! உனக்கு ஆள் ஆய் இனி அல்லேன் எனல் ஆமே? .

7
பூக்களின் தேன் நிறைந்த பெண்ணையாற்றின் தென்பால் உள்ள திருவெண்ணெய்நல்லூரின்கண்ணதாகிய அருட்டுறைத் திருக்கோயிலின்கண் நீங்காது எழுந்தருளியிருப்பவனே, நீ உடலிடத்து நின்று பொருள்களை உணர்ந்து வருகின்ற உயிர்கள் ஆகியும், அவைகள் நிற்கின்ற அவ்வுடல்களாகியும், வானாகியும், நிலமாகியும், கடலாகியும், மலையாகியும் நிற்கின்றாய்; இப்பெற்றியன் ஆகிய உனக்கு நான் முன்பே அடியவனாகி, இப்பொழுது, `அடியவன் அல்லேன்` என எதிர்வழக்குப் பேசியது பொருந்துமோ!

ஏற்றார் புரம் மூன்றும் எரியுண்ணச் சிலை தொட்டாய்!
தேற்றாதன சொல்லித் திரிவேனோ? செக்கர் வான் நீர்
ஏற்றாய்! பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருள்-துறையுள்
ஆற்றாய்! உனக்கு ஆள் ஆய் இனி அல்லேன் எனல் ஆமே? .

8
பெண்ணையாற்றின் தென்பால் உள்ள திரு வெண்ணெய்நல்லூரின்கண்ணதாகிய அருட்டுறைத் திருக் கோயிலின் கண் எழுந்தருளியிருக்கும் நன்னெறியானவனே, நீ உனக்குப் பகையாய் எதிர்ந்தவர்களது அரண்கள் மூன்றையும் தீ உண்ணும்படி, போர் செய்து அழித்தாய். சிவந்த சடையிடத்து ஆகாய கங்கையைத் தாங்கினாய். அப்பெருமைகளை அறியாமை காரணமாகத் தோன்றும் சொற்களைச் சொல்லி நான் வீணே உழல்வேனோ! அங்ஙனம் உழலும் நெறியானே, முன்பு உனக்கு அடியவனாயதற்கு மாறாக இப்பொழுது, `அடியவன் அல்லேன்` என எதிர்வழக்குப் பேசியது பொருந்துமோ!

மழுவாள் வலன் ஏந்தீ! மறை ஓதீ! மங்கை பங்கா!
தொழுவார் அவர் துயர் ஆயின தீர்த்தல் உன தொழிலே;
செழு வார் பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருள்-துறையுள்
அழகா! உனக்கு ஆள் ஆய் இனி அல்லேன் எனல் ஆமே? .

9
மழுப்படையை வலப்பக்கத்தில் ஏந்தியவனே, வேதத்தை ஓதுபவனே, உமையை ஒரு பாகத்தில் உடையவனே, செழுமை வாய்ந்து இடையறாது ஒழுகுகின்ற பெண்ணையாற்றின் தென் பால் உள்ள திருவெண்ணெய்நல்லூரில் உள்ள அருட்டுறைத் திருக் கோயிலில் எழுந்தருளியிருக்கும் அழகேன, உன்னை வணங்குவாரது துன்பங்களை நீக்குதல் உனது தொழில் என்பதனால், என்னை வலிந்து ஆட்கொள்ள வந்தாய். அதனை அறியாது, முன்பே உனக்கு அடியவனாகியதனை மறுத்து, இப்பொழுது, `அடியவன் அல்லேன்` என எதிர்வழக்குப் பேசியது பொருந்துமோ!

கார் ஊர் புனல் எய்தி, கரை கல்லித் திரைக் கையால்
பார் ஊர் புகழ் எய்தி, திகழ் பல் மா மணி உந்தி,
சீர் ஊர் பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருள்-துறையுள்
ஆரூரன் எம்பெருமாற்கு ஆள் அல்லேன் எனல் ஆமே? .

10
மேகத்தினின்றும் ஒழுகும் தன்மையை உடைய நீர் திரண்டு பொருந்தி, அலைகளாகிய கைகளால் கரையைக் குத்தி, நிலம் முழுதும் பரவிய புகழைப்பெற்று, ஒளி விளங்குகின்ற பல சிறந்த மணிகளைத் தள்ளிவந்து, அழகு மிகுகின்ற பெண்ணையாற்றின் தென் பால் உள்ள திருவெண்ணெய்நல்லூரில் உள்ள அருட்டுறைத் திருக் கோயிலில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமானுக்கு, ஆரூரன் `அடியவனல்லேன்` என எதிர்வழக்குப் பேசியது பொருந்துமோ!
Go to top

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருவெண்ணெய்நல்லூர்
7.001   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   பித்தா! பிறைசூடீ! பெருமானே! அருளாளா! எத்தால்
Tune - இந்தளம்   (திருவெண்ணெய்நல்லூர் தடுத்தாட்கொண்டவீசுவரர் வேற்கண்மங்கையம்மை)
     
send corrections and suggestions to admin-at-sivaya.org

This page was last modified on Sun, 01 Mar 2026 07:27:15 +0000