சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

6.059   திருநாவுக்கரசர்   தேவாரம்

திருவெண்ணியூர் - திருத்தாண்டகம் அருள்தரு அழகியநாயகியம்மை உடனுறை அருள்மிகு வெண்ணிநாயகர் திருவடிகள் போற்றி

சிவானந்த முதிர்வு சிவனைத் தவிர வேறு எந்தத் தெய்வத்தையும் போற்றமாட்டேன்
- Hide Meaning   https://www.youtube.com/watch?v=exDBQf7Zoj4   Add audio link Add Audio

தொண்டு இலங்கும் அடியவர்க்கு ஓர் நெறியினாரும், தூ நீறு துதைந்து இலங்கும் மார்பினாரும்,
புண்டரிகத்து அயனொடு மால் காணா வண்ணம் பொங்கு தழல் பிழம்பு ஆய புராணனாரும்,
வண்டு அமரும் மலர்க் கொன்றை மாலையாரும், வானவர்க்கா நஞ்சு உண்ட மைந்தனாரும்,
விண்டவர் தம் புரம் மூன்றும் எரி செய்தாரும் வெண்ணி அமர்ந்து உறைகின்ற விகிர்தனாரே.

1
வெண்ணி என்ற திருத்தலத்திலே விரும்பித் தங்கியிருக்கின்ற உலகியலிலிருந்து வேறுபட்டவராகிய சிவபெருமானார் , தொண்டுகளால் விளங்கும் அடியவர்களுக்கு ஒப்பற்ற வழியாய் உள்ளவரும் , திருநீறு அணிந்த மார்பினரும் , தாமரையிலுள்ள பிரமனும் திருமாலும் காணமுடியாதபடி தழற்பிழம்பாய்க் காட்சி வழங்கிய பழம்பொருளானவரும் , வண்டுகள் தங்கும் கொன்றை மாலை அணிந்தவரும் , தேவர்களுக்காக விடத்தை உண்டவலியவரும் , பகைவருடைய மும்மதில்களையும் தீக்கு இரையாக்கியவரும் ஆவார் .

நெருப்பு அனைய மேனிமேல் வெண் நீற்றாரும், நெற்றி மேல் ஒற்றைக்கண் நிறைவித்தாரும்,
பொருப்பு அரையன் மடப்பாவை இடப்பாலரும், பூந்துருத்தி நகர் மேய புராணனாரும்,
மருப்பு அனைய வெண் மதியக் கண்ணியாரும், வளை குளமும் மறைக்காடும் மன்னினாரும்,
விருப்பு உடைய அடியவர் தம் உள்ளத்தாரும் வெண்ணி அமர்ந்து உறைகின்ற விகிர்தனாரே.

2
செம்மேனியில் வெண்ணீறு பூசியவரும் , நெற்றிக் கண்ணரும் , பார்வதி பாகரும் , பூந்துருத்தியில் உறையும் பழைய வரும் , யானைக் கொம்பு போன்ற பிறையை முடிமாலையாச் சூடிய வரும் , வளைகுளம் , மறைக்காடு இவற்றில் தங்கியவரும் , தம்மை விரும்பும் அடியாருடைய உள்ளத்தில் உறைபவரும் , வெண்ணி அமர்ந்து உறைகின்ற விகிர்தர் ஆவார் .

கை உலாம் மூ இலை வேல் ஏந்தினாரும், கரி காட்டில் எரி ஆடும் கடவுளாரும்,
பை உலாம் நாகம் கொண்டு ஆட்டுவாரும், பரவுவார் பாவங்கள் பாற்று வாரும்,
செய் உலாம் கயல் பாய வயல்கள் சூழ்ந்த திருப் புன்கூர் மேவிய செல்வனாரும்,
மெய் எலாம் வெண்நீறு சண்ணித்தாரும் வெண்ணி அமர்ந்து உறைகின்ற விகிர்தனாரே.

3
வெண்ணி அமர்ந்துறையும் விகிர்தனார் , கையில் முத்தலைச் சூலம் ஏந்தினாரும் , சுடுகாட்டு நெருப்பில் கூத்து நிகழ்த்தும் கடவுளும் , படமெடுக்கும் பாம்பினை ஆட்டுபவரும் , தம்மை வழிபடுகின்றவர்களின் பாவத்தை அழிப்பவரும் , கயல் மீன்கள் பாயும் வயல்களை உடைய திருப்புன்கூர் மேவிய செல்வரும் , உடல்முழுதும் வெண்ணீறு பூசியவரும் ஆவர் .

சடை ஏறு புனல் வைத்த சதுரனாரும், தக்கன் தன் பெருவேள்வி தகர்த்திட்டாரும்,
உடை ஏறு புலி அதள் மேல் நாகம் கட்டி உண் பலிக்கு என்று ஊர் ஊரின் உழிதர்வாரும்,
மடை ஏறிக் கயல் பாய வயல்கள் சூழ்ந்த மயிலாடுதுறை உறையும் மணாளனாரும்,
விடை ஏறு வெல் கொடி எம் விமலனாரும்
வெண்ணி அமர்ந்து உறைகின்ற விகிர்தனாரே.

4
சடையில் கங்கை வெள்ளத்தைச் சூடிய திறலுடைய வரும் , தக்கனுடைய பெரிய வேள்வி நிறைவேறாமல் தடுத்தவரும் , உடையாக அணிந்த புலித்தோல் மீது பாம்பினை இறுக்கிக் கட்டிப் பிச்சைக்காக ஊர் ஊராகத் திரிபவரும் , நீர்மடையில் ஏறிக் கயல்பாயுமாறு நீர்வளம் மிக்க வயல்களால் சூழப்பட்ட மயிலாடுதுறையின் தலைவரும் , காளை எழுதிய கொடியை உயர்த்திய எம் புனிதரும் , வெண்ணி அமர்ந்துறைகின்ற விகிர்தனாரே .

மண், இலங்கு நீர், அனல், கால், வானும், ஆகி மற்று அவற்றின் குணம் எலாம் ஆய் நின்றாரும்;
பண் இலங்கு பாடலோடு ஆடலாரும்; பருப்பதமும் பாசூரும் மன்னினாரும்;
கண் இலங்கு நுதலாரும்; கபாலம் ஏந்திக் கடை   தோறும் பலி கொள்ளும் காட்சியாரும்;
விண் இலங்கு வெண் மதியக் கண்ணியாரும் வெண்ணி அமர்ந்து உறைகின்ற விகிர்தனாரே.

5
ஐம்பூதங்களும் , அவற்றின் பண்புகளுமாய் நிலைபெற்றவரும் , பண்ணோடு கூடிய பாடலும் கூத்தும் நிகழும் சீசைலம் , பாசூர் இவற்றில் உறைபவரும் , நெற்றிக்கண்ணினரும் , மண்டையோட்டினை ஏந்தி வீட்டு வாயில்தோறும் பிச்சை ஏற்கும் செயலை உடையவரும் , பிறையை முடிமாலையாக உடையவரும் , வெண்ணியமர்ந்து உறைகின்ற விகிர்தனாரே .
Go to top

வீடுதனை மெய் அடியார்க்கு அருள் செய்வாரும், வேலை விடம் உண்டு இருண்ட கண்டத்தாரும்,
கூடலர் தம் மூ எயிலும் எரிசெய்தாரும், குரை கழலால் கூற்றுவனைக் குமை செய்தாரும்,
ஆடும் அரவு அரைக்கு அசைத்து அங்கு ஆடுவாரும், ஆலமர நீழல் இருந்து அறம் சொன்னாரும்,
வேடுவனாய் மேல் விசயற்கு அருள் செய்தாரும் வெண்ணி அமர்ந்து உறைகின்ற விகிர்தனாரே.

6
அடியவருக்கு வீட்டுலகம் நல்குபவரும் , விடமுண்ட நீலகண்டரும் , பகைவருடைய மும்மதில்களையும் எரித்த வரும் , திருவடியால் கூற்றுவனை உதைத்தவரும் , படமெடுத்தாடும் பாம்பினை இடையில் இறுகக்கட்டிக்கொண்டு கூத்து நிகழ்த்துபவரும் , கல்லால மர நிழலிலிருந்து அறத்தை உபதேசித்தவரும் , வேடராய் முன்னொரு காலத்தில் அருச்சுனனுக்கு அருளியவரும் , வெண்ணி அமர்ந்து உறைகின்ற விகிர்தனாரே .

மட்டு இலங்கு கொன்றை அம்தார்-மாலை சூடி, மடவாள் அவளோடு, மான் ஒன்று ஏந்தி,
சிட்டு இலங்கு வேடத்தார் ஆகி, நாளும் சில்பலிக்கு என்று ஊர் ஊரின் திரிதர்வாரும்;
கட்டு இலங்கு பாசத்தால் வீச வந்த காலன்   தன் காலம் அறுப்பார் தாமும்;
விட்டு இலங்கு வெண்குழை சேர் காதினாரும் வெண்ணி அமர்ந்து உறைகின்ற விகிர்தனாரே.

7
தேன்பொருந்திய கொன்றைமாலை சூடி மான் ஒன்றைக் கையில் ஏந்திப் பார்வதியோடு ஞானம் புலப்படும் வேடத்தோடும் சிலவாகிய பிச்சைக்காக ஊர் ஊராகத் திரிபவரும் , உறுதியான பாசத்தால் மார்க்கண்டேயனைக் கட்டவந்த கூற்றுவனுடைய வாழ் நாளைப் போக்கியவரும் , ஒளிவீசும் வெள்ளிய காதணி சேரும் காதுகளை உடையவரும் , வெண்ணி அமர்ந்து உறைகின்ற விகிர்தனாரே .

செஞ்சடைக்கு ஓர் வெண்திங்கள் சூடினாரும், திரு ஆலவாய் உறையும் செல்வனாரும்,
அஞ்சனக் கண் அரிவை ஒருபாகத்தாரும், ஆறு அங்கம் நால் வேதம் ஆய் நின்றாரும்,
மஞ்சு அடுத்த நீள் சோலை மாட வீதி மதில் ஆரூர் புக்கு அங்கே மன்னினாரும்,
வெஞ்சினத்த வேழம் அது உரி செய்தாரும் வெண்ணி அமர்ந்து உறைகின்ற விகிர்தனாரே.

8
செஞ்சடையில் வெண்பிறை சூடியவரும் , திருவாலவாய் உறையும் செல்வரும் , மைதீட்டிய கண்களை உடைய பார்வதி பாகரும் , நான்கு வேதங்களும் ஆறு அங்கங்களுமாகி இருப்பவரும் , மேகத்தை அளாவிய நீண்ட சோலைகளையும் மாட வீதிகளையும் மதிலையும் உடைய ஆரூரில் புகுந்து அங்கே நிலையாகத் தங்கிய வரும் , மிக்க கோபத்தை உடைய யானையின் தோலை உரித்தவரும் , வெண்ணி அமர்ந்து உறைகின்ற விகிர்தனாரே .

வளம் கிளர் மா மதி சூடும் வேணியாரும், வானவர்க்கா நஞ்சு உண்ட மைந்தனாரும்,
களம் கொள என் சிந்தையுள்ளே மன்னினாரும், கச்சி ஏகம்பத்து எம் கடவுளாரும்,
உளம் குளிர அமுது ஊறி அண்ணிப்பாரும்,   உத்தமராய் எத்திசையும் மன்னினாரும்,
விளங்(கு)கிளரும் வெண்மழு ஒன்று ஏந்தினாரும் வெண்ணி அமர்ந்து உறைகின்ற விகிர்தனாரே.

9
வளமான பிறைசூடும் சடையினரும் , தேவர்களுக்காக விடத்தை உண்ட வலியவரும் , என் உள்ளத்தை உறைவிடமாகக் கொண்டு தங்கியவரும் கச்சி ஏகம்பத்து உறைபவரும் , என் உள்ளம் குளிருமாறு அமுதமாக ஊற்றெடுத்து இனிப்பவரும் , மேம்பட்டவராய் எல்லாத் திசைகளிலும் நிலைபெற்றிருப்பவரும் , ஒளிவீசும் வெள்ளிய மழுப்படையை ஏந்தியவரும் வெண்ணி அமர்ந்து உறைகின்ற விகிர்தனாரே .

பொன் இலங்கு கொன்றை அம்தார்-மாலை சூடிப்   புகலூரும் பூவணமும் பொருந்தினாரும்,
கொன் இலங்கு மூ இலை வேல் ஏந்தினாரும், குளிர் ஆர்ந்த செஞ்சடை எம் குழகனாரும்,
தென் இலங்கை மன்னவர் கோன் சிரங்கள் பத்தும் திரு விரலால் அடர்த்து அவனுக்கு அருள் செய்தாரும்,
மின் இலங்கு நுண் இடையாள் பாகத்தாரும் வெண்ணி அமர்ந்து உறைகின்ற விகிர்தனாரே.

10
பொன்போல் விளங்கும் கொன்றை மாலை சூடிப் புகலூரிலும் பூவணத்திலும் உறைபவரும் , அச்சம் தரும் முத்தலைச் சூலம் ஏந்தியவரும் , குளிர்ச்சி தரும் கங்கைபொருந்திய செஞ்சடையை உடைய இளையரும் , இராவணனுடைய பத்துத்தலைகளையும் தம் காலின் அழகிய விரலால் வருத்திப் பின் அவனுக்கு அருள் செய்தவரும் , மின்னல்போன்ற நுண்ணிய இடையை உடைய பார்வதி பாகரும் , வெண்ணி அமர்ந்து உறைகின்ற விகிர்தனாரே .
Go to top

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருவெண்ணியூர்
2.014   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   சடையானை, சந்திரனோடு செங்கண் அரா உடையானை,
Tune - இந்தளம்   (திருவெண்ணியூர் வெண்ணிநாயகர் அழகியநாயகியம்மை)
5.017   திருநாவுக்கரசர்   தேவாரம்   முத்தினை, பவளத்தை, முளைத்த எம்
Tune - திருக்குறுந்தொகை   (திருவெண்ணியூர் வெண்ணிநாயகர் அழகியநாயகியம்மை)
6.059   திருநாவுக்கரசர்   தேவாரம்   தொண்டு இலங்கும் அடியவர்க்கு ஓர்
Tune - திருத்தாண்டகம்   (திருவெண்ணியூர் வெண்ணிநாயகர் அழகியநாயகியம்மை)
     
send corrections and suggestions to admin-at-sivaya.org

This page was last modified on Sun, 01 Mar 2026 07:27:15 +0000