போர் ஆனை ஈர் உரிவைப் போர்வை யானை, புலி அதளே உடை ஆடை போற்றினானை, பாரானை, மதியானை, பகல் ஆனானை, பல் உயிர் ஆய் நெடுவெளி ஆய்ப் பரந்து நின்ற நீரானை, காற்றானை, தீ ஆனானை, நினையாதார் புரம் எரிய நினைந்த தெய்வத்- தேரானை, திரு வீழிமிழலையானை, சேராதார் தீநெறிக்கே சேர்கின்றாரே.
|
1
|
தன்னை எதிர்த்து வந்த யானையின் உதிரப் பசுமை கெடாத தோலை மேலே போர்த்தி , புலித்தோலை ஆடையாக உடுத்தவனாய் , நிலனாய்ச் சந்திரனாய்ச் சூரியனாய் , வானவெளியாய் , நீராய் காற்றாய்த் தீயாய்ப் பல உயிர்களாய் அட்ட மூர்த்தியாய்ப் பரந்து நிற்பவனாய் , பகைவருடைய மும்மதில்களும் எரியுமாறு நினைத்த போது இவர்ந்து சென்ற தெய்வத்தேருடையவனான திருவீழி மிழலைப் பெருமானை அணுகி வழிபடாதவர்கள் தீய வழியிலேயே சென்று கெடுகின்றவர் ஆவார்கள் . | |
சவம் தாங்கு மயானத்துச் சாம்பல் என்பு தலை ஓடு மயிர்க்கயிறு தரித்தான் தன்னை, பவம் தாங்கு பாசு பத வேடத்தானை, பண்டு அமரர் கொண்டு உகந்த வேள்வி எல்லாம் கவர்ந்தானை, கச்சி ஏகம்பன் தன்னை, கழல் அடைந்தான் மேல் கறுத்த காலன் வீழச் சிவந்தானை, திரு வீழிமிழலையானை, சேராதார் தீநெறிக்கே சேர்கின்றாரே.
|
2
|
பிணங்களை உடைய சுடுகாட்டுச் சாம்பல் , எலும்பு மண்டையோடு பஞ்சவடி என்ற இவற்றை அணிந்தவனாய்ப் பிறப்பைத் தடுக்கின்ற பாசுபத மதத்தினர் விரும்பிக் கொள்ளும் வேடத்தைத் தரித்தவனாய்த் தன்னை ஒழிந்த தேவர்களைத் கொண்டு தக்கன் செய்த வேள்வியை அழித்தவனாய்க் கச்சி ஏகம்பனாய்த் தன் திருவடிகளைத் சார்ந்த அடியவனைக் கோபித்து வந்த கூற்றுவனைக் கீழே விழுமாறு அவனைக் கோபித்து உதைத்தவனாய்த் திரு வீழிமிழலையில் உள்ள பெருமானை அடையாதவர் தீ நெறிக்கண் சேர்கின்றவராவர் . | |
அன்று ஆலின் கீழ் இருந்து அங்கு அறம் சொன்னானை, அகத்தியனை உகப்பானை, அயன் மால் தேட நின்றானை, கிடந்த கடல் நஞ்சு உண்டானை, நேரிழையைக் கலந்திருந்தே புலன்கள் ஐந்தும் வென்றானை, மீயச்சூர் மேவினானை, மெல்லியலாள் தவத்தின் நிறை அளக்கல் உற்றுச் சென்றானை, திரு வீழிமிழலையானை, சேராதார் தீநெறிக்கே சேர்கின்றாரே.
|
3
|
ஒரு காலத்தில் கல்லால மரத்தின் கீழிருந்து அறத்தை உபதேசித்தவனாய் , அகத்தியனை அவன் பெருமை தோன்ற உயரச் செய்தவனாய்ப் பிரமனும் திருமாலும் தேடுமாறு அனற் பிழம்பாய் நின்றவனாய் , கடல்விடம் உண்டவனாய்ப் பார்வதியோடு சேர்ந்திருந்தே பொறிவாயில் ஐந்து அவித்தவனாய் , மீயச்சூரை உறைவிடமாக விரும்பியவனாய்ப் பார்வதியின் தவத்தின் திண்மையை அளக்கச் சென்றவனாய்த் திருவீழிமிழலையில் எழுந்தருளியிருக்கும் பெருமானைச் சேராதார் தீ நெறிக்கண் செல்பவராவர் . | |
தூயானை, சுடர்ப் பவளச்சோதியானை, தோன்றிய எவ் உயிர்க்கும் துணை ஆய் நின்ற தாயானை, சக்கரம் மாற்கு ஈந்தான் தன்னை, சங்கரனை, சந்தோக சாமம் ஓதும் வாயானை, மந்திரிப்பார் மனத்து உளானை, வஞ்சனையால் அஞ்சு எழுத்தும் வழுத்துவார்க்குச் சேயானை, திரு வீழிமிழலையானை, சேராதார் தீநெறிக்கே சேர்கின்றாரே.
|
4
|
தூயனாய்ப் பவளத்தின் ஒளியை உடையவனாய் , எல்லா உயிர்களுக்கும் துணையாக நின்ற தாயாய்த் திருமாலுக்குச் சக்கரம் ஈந்தவனாய் , எல்லாருக்கும் நன்மை செய்பவனாய்ச் சந்தோக சாமம் ஓதுபவனாய் , மந்திரங்களை எண்ணுபவர் மனத்து உறைபவனாய்த் திருவைந்தெழுத்தின் பயனைத் தெளியாது ஐயுற்று ஓதுபவர்களுக்குத் தொலைவில் உள்ளவனாய் , உள்ள திருவீழிமிழலையானைச் சேராதார் தீ நெறிக்கண் செல்பவராவர் . | |
நல்-தவத்தின் நல்லானை, தீது ஆய் வந்த நஞ்சு அமுது செய்தானை, அமுதம் உண்ட மற்ற(அ)அமரர் உலந்தாலும் உலவாதானை, வருகாலம் செல்காலம் வந்தகாலம் உற்று அவத்தை உணர்ந்தாரும் உணரல் ஆகா ஒரு சுடரை, இரு விசும்பின் ஊர்மூன்று ஒன்றச் செற்றவனை, திரு வீழிமிழலையானை, சேராதார் தீநெறிக்கே சேர்கின்றாரே.
|
5
|
ஞானத்தின் பொருட்டுச் செய்யப்படும் தவத்திற்குப் பயன் அளிக்கும் பெரியவனாய் , தீங்கு செய்வதாய் வந்த விடத்தை அமுதாக உண்டவனாய் , அமுதமுண்ட தேவர்கள் இறந்தாலும் தான் இறவாதவனாய் , முக்காலப் பொருள்களை உணரும் ஞானிகளும் உணரமுடியாத ஒப்பற்ற ஞானப்பிரகாசனாய் , வானத்தின் உலவிய மதில்கள் மூன்றையும் ஒரு சேர அழித்தவனாய் , உள்ள திருவீழிமிழலையானைச் சேராதார் தீ நெறிக்கண் செல்பவர் ஆவர் . | |
| Go to top |
மை வானம் மிடற்றானை, அவ் வான் மின் போல் வளர் சடைமேல் மதியானை, மழை ஆய் எங்கும் பெய்வானை, பிச்சாடல் ஆடுவானை, பிலவாய பேய்க்கணங்கள் ஆர்க்கச் சூல் அம்பு ஒய்வானை, பொய் இலா மெய்யன் தன்னை, பூதலமும் மண்டலமும் பொருந்தும் வாழ்க்கை செய்வானை, திரு வீழிமிழலையானை, சேராதார் தீநெறிக்கே சேர்கின்றாரே.
|
6
|
கரிய மேகம் போன்ற நீலகண்டனாய் , வானத்து மின்னல்போலச் சடையில் ஒளிவீசும் பிறை அணிந்தவனாய் , எங்கும் மழையாய் அருளைப் பொழிவானாய் , எங்கும் சென்று பிச்சை எடுப்பானாய்ப் பள்ளம் போன்ற வாயை உடைய பேய்க் கூட்டங்கள் ஆரவாரிக்க நிறைந்த தூணியிலிருந்து அம்பைச் செலுத்துபவனாய்ப் பொய்கலவாத மெய்யனாய்ப் பூமியிலும் மேலுலகங்களிலும் பொருந்தும் வாழ்க்கையில் உயிர்களைப் பிறக்கச் செய்வானாய் , உள்ள திருவீழிமிழலையானைச் சேராதார் தீ நெறிக்கண் செல்பவராவர் . | |
மிக்கானை, குறைந்து அடைந்தார் மேவலானை, வெவ்வேறு ஆய் இரு மூன்று சமயம் ஆகிப் புக்கானை, எப்பொருட்கும் பொது ஆனானை, பொன்னுலகத்தவர் போற்றும் பொருளுக்கு எல்லாம் தக்கானை, தான் அன்றி வேறு ஒன்று இல்லாத் தத்துவனை, தடவரையை நடுவு செய்த திக்கானை, திரு வீழிமிழலையானை, சேராதார் தீநெறிக்கே சேர்கின்றாரே.
|
7
|
எல்லோருக்கும் மேலானவனாய்க் குறையிரந்து வருபவர்களை விரும்பிக் குறைமுடிப்பவனாய் , அறுவகை வைதிக சமயங்களாகவும் ஆகியவனாய் , எல்லாப் பொருள்களுக்கும் பொதுவானவனாய்த் தேவர்களும் போற்றத்தக்கானாய்த் தன்னைத் தவிர வேறு மெய்ப்பொருள் இல்லாதவனாய் , மேருமலையை நடுவாக வைத்துத் திசைகளைப் பகுக்கச் செய்தவனாய் , உள்ள திருவீழி மிழலையானைச் சேராதார் தீ நெறிக்கண் செல்பவராவர் . | |
வானவர் கோன் தோள் இறுத்த மைந்தன் தன்னை, வளை குளமும் மறைக்காடும் மன்னினானை, ஊனவனை, உயிரவனை, ஒரு நாள் பார்த்தன் உயர் தவத்தின் நிலை அறியல் உற்றுச் சென்ற கானவனை, கயிலாயம் மேவினானை, கங்கை சேர் சடையானை, கலந்தார்க்கு என்றும் தேனவனை, திரு வீழிமிழலையானை, சேராதார் தீநெறிக்கே சேர்கின்றாரே.
|
8
|
இந்திரனுடைய தோள்களை நீக்கிய வலிமை உடையவனாய் , வளைகுளம் மறைக்காடு என்ற தலங்களில் உறைபவனாய் , உடலாகவும் உயிராகவும் இருப்பவனாய் , ஒரு காலத்தில் அருச்சுனனுடைய தவத்தின் உறுதி நிலையை அறியச் சென்ற வேடுவனாய்க் கயிலாயத்தை விரும்பி உறைபவனாய்க் கங்கை தங்கிய சடையினனாய்த் தன்னைச் சேர்ந்தவர்களுக்குத் தேன் போல இனியவனாய் , உள்ள திருவீழிமிழலையானைச் சேராதார் தீ நெறிக் கண் செல்பவராவர் . | |
பரத்தானை; இப் பக்கம் பல ஆனானை; பசுபதியை; பத்தர்க்கு முத்தி காட்டும் வரத்தானை; வணங்குவார் மனத்து உளானை; மாருதம், மால், எரி, மூன்றும் வாய் அம்பு ஈர்க்கு ஆம் சரத்தானை; சரத்தையும் தன் தாள்கீழ் வைத்த தபோதனனை; சடாமகுடத்து அணிந்த பைங்கண் சிரத்தானை; திரு வீழிமிழலையானை; சேராதார் தீநெறிக்கே சேர்கின்றாரே.
|
9
|
மாயைக்கு அப்பாற்பட்ட நிலையில் உள்ளவனாய் , மாயைக்கு இப்பால் அளவற்ற வடிவங்களும் உடையவனாய் , ஆன்மாக்களுக்குத் தலைவனாய் , அடியவர்களுக்கு முத்தி நிலையைக் காட்டும் மேம்பட்டவனாய்த் தன்னை வணங்குபவர் மனத்து இருப்பவனாய் , வாயுதேவன் திருமால் அக்கினி தேவன் இம்மூவரையும் முறையே அம்பின் சிறகாகவும் அம்பாகவும் அம்பின் கூரிய நுனியாகவும் கொண்டவனாய் , அந்த அம்பையும் பயன் படுத்தாது விடுத்த தவச்செல்வனாய்த் தாருகவனத்து முனிவர் விடுத்த வெண்தலையைச் சடைமுடியில் அணிந்தவனாய்த் திருவீழிமிழலையில் உள்ள பெருமானைச் சேராதார் தீ நெறிக்கண் செல்பவர் ஆவர் . | |
அறுத்தானை, அயன் தலைகள் அஞ்சில் ஒன்றை; அஞ்சாதே வரை எடுத்த அரக்கன் தோள்கள் இறுத்தானை; எழு நரம்பின் இசை கேட்டானை; இந்து வினைத் தேய்த்தானை; இரவிதன் பல் பறித்தானை; பகீரதற்கா வானோர் வேண்டப் பரந்து இழியும் புனல் கங்கை பனி போல் ஆகச் செறித்தானை; திரு வீழிமிழலையானை; சேராதார் தீநெறிக்கே சேர்கின்றாரே.
|
10
|
பிரமனுடைய ஐந்தலைகளுள் ஒன்றனை அறுத்தானாய் , அஞ்சாமல் கயிலை மலையைப் பெயர்க்க முற்பட்ட இராவணன் தோள்களை முரித்து அவன் இசைத்த நரம்பின் ஒலியைக் கேட்டவனாய்த் தக்கன் வேள்வியில் சந்திரனைக் காலால் தேய்த்தவனாய் , சூரியன் ஒருவனுடைய பற்களை உடைத்தவனாய்ப் பகீரதனுக்காகவும் தேவர்கள் வேண்டியதற்காகவும் பரவலாக இறங்கிவந்த கங்கையைப் பனித்துளி போலத் தன் சடையில் அடக்கியவனாய் , உள்ள திருவீழிமிழலைப் பெருமானைச் சேராதார் தீ நெறிக் கண் செல்பவராவர் . | |
| Go to top |