சிவய.திருக்கூட்டம்
sivaya.org



This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

6.020   திருநாவுக்கரசர்   தேவாரம்

திருநள்ளாறு - திருத்தாண்டகம் அருள்தரு போகமார்த்தபூண்முலையம்மை உடனுறை அருள்மிகு தெர்ப்பாரணியர் திருவடிகள் போற்றி
- Hide Meaning   https://www.youtube.com/watch?v=HpYN_BrOtTU   Add audio link Add Audio

ஆதிக்கண்ணான் முகத்தில் ஒன்று சென்று(வ்) அல்லாத   சொல் உரைக்கத் தன் கை வாளால்
சேதித்த திருவடியை, செல்ல நல்ல சிவலோக நெறி வகுத்துக் காட்டுவானை,
மா மதியை, மாது ஓர் கூறு ஆயினானை, மா மலர்மேல்   அயனோடு மாலும் காணா
நாதியை, நம்பியை, நள்ளாற்றானை, -நான் அடியேன் நினைக்கப் பெற்று உய்ந்த ஆறே!.

1
ஆதி அந்தணன் எனப்படும் பிரமனுடைய முகங்களில் ஒன்று உண்மை அல்லாத சொல்லினைக் கூற அம்முகத்தைத் தன் கையையே வாளாகக் கொண்டு போக்கிய வயிரவனாய் , அடியார்கள் அடைவதற்கு மேம்பட்ட சிவலோகம் அடையும் வழியைக் காட்டுவானாய் , விரும்பத்தக்க பார்வதி பாகனாய் , தாமரை மலர் மேல் உள்ள பிரமனும் , திருமாலும் காண முடியாத தலைவனாய்க் குண பூரணனாய்த் திருநள்ளாற்றில் உகந் தருளியிருக்கும் பெருமானை அடியேனாகிய நான் தியானம் செய்து துன்பங்களிலிருந்து நீங்கிய செயல் மேம்பட்டதாகும் .

படையானை, பாசுபத வேடத்தானை, பண்டு அனங்கற் பார்த்தானை, பாவம் எல்லாம்
அடையாமைக் காப்பானை, அடியார் தங்கள் அரு மருந்தை, ஆவா! என்று அருள் செய்வானை,
சடையானை, சந்திரனைத் தரித்தான் தன்னை, சங்கத்த முத்து அனைய வெள்ளை ஏற்றின்
நடையானை, நம்பியை, நள்ளாற்றானை, -நான் அடியேன் நினைக்கப் பெற்று உய்ந்த ஆறே!.

2
பலபடைக்கலங்களை உடையவனாய்ப் பாசுபதமதத்தில் கூறப்படும் வேடத்தனாய் , முற்காலத்தில் மன்மதன் சாம்பலாகுமாறு அவனை நெற்றிக்கண்ணால் நோக்கியவனாய் , அடியவர்களுக்கு அமுதமாய் அவர்கள் நிலைக்கு ஐயோ என்று இரங்கி அருள் செய்பவனாய்ச் சடையை உடையவனாய் , காளையில் செல்பவனாய்க் குண பூரணனாய் உள்ள நள்ளாற்றானை நான் அடியேன் நினைக்கப்பெற்று உய்ந்தவாறே .

பட அரவம் ஒன்று கொண்டு அரையில் ஆர்த்த பராபரனை, பைஞ்ஞீலி மேவினானை,
அடல் அரவம் பற்றிக் கடைந்த நஞ்சை அமுது ஆக உண்டானை, ஆதியானை,
மடல் அரவம் மன்னு பூங்கொன்றையானை, மாமணியை, மாணிக்குஆய்க் காலன் தன்னை
நடல் அரவம் செய்தானை, நள்ளாற்றானை,-நான் அடியேன் நினைக்கப் பெற்று உய்ந்த ஆறே!.

3
படமெடுக்கும் பாம்பு ஒன்றனை இடையில் இறுகக்கட்டிய , மேலும் கீழுமாய் நிற்பவனை , பைஞ்ஞீலி என்ற தலத்தை உகந்தருளியவனை , வலிய பாம்பினைக்கொண்டு கடைந்த போது தோன்றிய விடத்தை அமுதம்போல் உண்டவனை , எல்லோருக்கும் முற்பட்டவனை , இதழ்களிலே வண்டுகளின் ஒலி நிறைந்த கொன்றைப் பூவினை அணிந்தவனை , சிறந்த இரத்தினம் போன்று கண்ணுக்கு இனியவனை . மார்க்கண்டேயன் என்ற பிரமசாரியைக் காத்தற்பொருட்டுக் காலனைத் துன்புறுத்தத் தன் கால் சிலம்பு ஒலிக்க அவனை உதைத்தவனை , நள்ளாற்றில் உகந்தருளி யிருப்பவனை நான் அடியேன் நினைக்கப்பெற்று உய்ந்தவாறே .

கட்டங்கம் ஒன்று தம் கையில் ஏந்தி, கங்கணமும் காதில் விடு தோடும் இட்டு,
சுட்ட(அ)ங்கம் கொண்டு துதையப் பூசி, சுந்தரனாய்ச் சூலம் கை ஏந்தினானை;
பட்ட(அ)ங்கமாலை நிறையச் சூடி, பல்கணமும் தாமும் பரந்த காட்டில்
நட்டங்கம் ஆடியை, நள்ளாற்றானை,-நான் அடியேன் நினைக்கப் பெற்று உய்ந்த ஆறே!.

4
கட்டங்கம் என்ற படையைக் கையில் ஏந்திக் கங்கணம் அணிந்து , காதில் தோடு அணிந்து , உடம்பை எரித்த சாம்பலைத் தன் திருமேனியில் நிறையப் பூசி அழகனாய்த்தன் கையில் சூலம் ஏந்தி எலும்பு மாலையை நிறையச் சூடிப் பூதக்கூட்டமும் தானுமாய்ப் பரந்து சுடுகாட்டில் கூத்து நிகழ்த்தும் நள்ளாற்றானை நான் அடியேன் நினைக்கப்பெற்று உய்ந்தவாறே .

உலந்தார் தம் அங்கம் கொண்டு உலகம் எல்லாம் ஒரு நொடியில் உழல்வானை, உலப்பு இல் செல்வம்
சிலந்தி தனக்கு அருள் செய்த தேவதேவை, திருச் சிராப்பள்ளி எம் சிவலோக(ன்)னை,
கலந்தார் தம் மனத்து என்றும் காதலானை, கச்சி ஏகம்பனை, கமழ் பூங்கொன்றை
நலம் தாங்கும் நம்பியை, நள்ளாற்றானை,-நான் அடியேன் நினைக்கப் பெற்று உய்ந்தஆறே!.

5
இறந்தவர்களுடைய எலும்பு மாலையை அணிந்து உலகமெல்லாம் ஒரு நொடிநேரத்தில் சுற்றிவருகின்றவனாய் , அழிவில்லாத பெருஞ்செல்வத்தைச் சிலந்திப் பூச்சிக்கு அருளிய தேவதேவனாய்ச் சிராப்பள்ளியில் உகந்தருளியிருக்கும் சிவலோகனாய்த் தன்னைக் கூடிய அடியவருடைய உள்ளத்தைத் தான் என்றும் விரும்புபவனாய்க் காஞ்சியில் ஏகம்பத்து உறைவானாய் , நறுமணம் கமழும் கொன்றைப் பூவினால் செயற்கை அழகு கொண்ட குண பூரணனாய் உள்ள நள்ளாற்றானை நான் அடியேன் நினைக்கப்பெற்று உய்ந்தவாறே .
Go to top

குலம் கொடுத்துக் கோள் நீக்க வல்லான் தன்னை, குலவரையின் மடப்பாவை இடப்பாலானை,
மலம் கெடுத்து மா தீர்த்தம் ஆட்டிக் கொண்ட மறையவனை, பிறை தவழ் செஞ்சடையினானை
சலம் கெடுத்துத் தயா மூல தன்மம் என்னும்
தத்துவத்தின் வழி நின்று தாழ்ந்தோர்க்கு எல்லாம்
நலம் கொடுக்கும் நம்பியை, நள்ளாற்றானை,-நான் அடியேன் நினைக்கப் பெற்று உய்ந்த ஆறே!.

6
அடியவர் குடி என்ற பெருமையைக் கொடுத்துத் துன்பத்தை நீக்க வல்லவனாய் , பார்வதியை இடப்பாகனாய் , உயிர்களைப் பற்றியுள்ள அழுக்குக்களை நீக்கித் தன் திருவருளாகிய புனித நீரில் அவற்றை மூழ்குவிப்பவனாய் , வேதத்தை ஓதுபவனாய் , பிறை சூடிய சடையினனாய் , நடுக்கத்தைப் போக்கி இரக்கத்தையே அடிப்படையாகக் கொண்டு அறம் என்னும் உண்மைப்பொருளின் வழியில் வாழ்ந்து தன்னை வழிபடுபவருக்கெல்லாம் நன்மையை நல்கும் குணபூரணனாய் உள்ள நள்ளாற்றானை நான் அடியேன் நினைக்கப்பெற்று உய்ந்தவாறே .

பூ விரியும் மலர்க் கொன்றைச் சடையினானை,   புறம்பயத்து எம்பெருமானை, புகலூரானை,
மா இரியக் களிறு உரித்த மைந்தன் தன்னை,   மறைக்காடும் வலி வலமும் மன்னினானை,
தே இரியத் திகழ் தக்கன் வேள்வி எல்லாம் சிதைத்தானை,   உதைத்து அவன் தன் சிரம் கொண்டானை,
நா விரிய மறை நவின்ற நள்ளாற்றானை,-நான் அடியேன் நினைக்கப் பெற்று உய்ந்த ஆறே!.

7
பூவாய் விரியும் கொன்றை மலரைச் சூடிய சடையினனாய்ப் புறம்பயம் , புகலூர் , மறைக்காடு , வலிவலம் என்ற திருத்தலங்களை உகந்தருளிய பெருமானாய் , மற்றைய விலங்குகள் அஞ்சி ஓடுதற்குக் காரணமான வலிமையை உடைய களிற்றின் தோலை உரித்த வலிமையை உடையவனாய் , ஏனைய தேவர்களும் அஞ்சி ஓடுமாறு தக்கனுடைய வேள்வி முழுதையும் அழித்தவனாய் , அவனை ஒறுத்து அவன் தலையை நீக்கினவனாய் , நாவினின்றும் வெளிப்படுமாறு வேதத்தை ஓதுபவனாய் உள்ள நள்ளாற்றானை நான் அடியேன் நினைக்கப்பெற்று உய்ந்தவாறே .

சொல்லானை, சுடர்ப் பவளச் சோதியானை, தொல் அவுணர் புரம் மூன்றும் எரியச் செற்ற
வில்லானை, எல்லார்க்கும் மேல் ஆனானை, மெல்லியலாள் பாகனை, வேதம் நான்கும்
கல்லாலின் நீழல் கீழ் அறம் கண்டானை, காளத்தியானை, கயிலை மேய
நல்லானை, நம்பியை, நள்ளாற்றானை,-நான் அடியேன் நினைக்கப் பெற்று உய்ந்த ஆறே!.

8
வேதங்களை ஓதுபவனாய் , ஒளி வீசும் பவளம் போன்ற செந்நிறத்தானாய்ப் பழைய அசுரருடைய மூன்று மதில்களையும் எரியச் செய்த வில்லினை ஏந்தியவனாய் , எல்லாருக்கும் மேம்பட்டவனாய்ப் பார்வதி பாகனாய்க் கல்லாலின் கீழே அமர்ந்து நால்வேதங்களின் அறத்தையும் மௌன நிலையில் நால்வருக்கு உபதேசித்தவனாய்க் காளத்தியையும் , கயிலை மலையையும் உகந்தருளிய பெரியவனாய்க் குணபூரணனாய் உள்ள நள்ளாற்றானை நான் அடியேன் நினைக்கப் பெற்று உய்ந்தவாறே .

குன்றாத மா முனிவன் சாபம் நீங்கக் குரை கழலால் கூற்றுவனைக் குமைத்த கோனை,
அன்றாக அவுணர் புரம் மூன்றும் வேவ ஆர் அழல் வாய் ஓட்டி அடர்வித்தானை,
சென்று ஆது வேண்டிற்று ஒன்று ஈவான்தன்னை,
சிவன் எம்பெருமான் என்று இருப்பார்க்கு என்றும்
நன்று ஆகும் நம்பியை, நள்ளாற்றானை,-நான் அடியேன் நினைக்கப்பெற்று உய்ந்த ஆறே!.

9
மேம்பட்ட முனிவனான மார்க்கண்டேயனுடைய குறை வாழ்நாள் ஆகிய சாபம் தீருமாறு திருவடியால் கூற்றுவனை வருத்திய பெருமானாய்ப் பகைமை உண்டாயினமையின் அசுரர் உடைய மும்மதில்களையும் தீயிட்டுக் கொளுத்தி அழித்தவனாய்த் தன்னை அடைந்து வேண்டியவர் வேண்டியதை ஈவானாய்ச் ` சிவ பெருமானே எம் இறைவன் ` என்று அவனையே வழிபட்டுக் கொண்டிருக்கும் அடியவர்களுக்கு எல்லா நலன்களாகவும் விளங்கும் குண பூரணனாகிய நள்ளாற்றானை நான் அடியேன் நினைக்கப் பெற்று உய்ந்தவாறே .

இறவாதே வரம் பெற்றேன் என்று மிக்க இராவணனை இருபது தோள் நெரிய ஊன்றி,
உறவு ஆகி, இன் இசை கேட்டு, இரங்கி, மீண்டே உற்ற பிணி தவிர்த்து, அருள வல்லான் தன்னை;
மறவாதார் மனத்து என்றும் மன்னினானை; மா மதியம், மலர்க் கொன்றை, வன்னி, மத்தம்,
நறவு, ஆர் செஞ்சடையானை; நள்ளாற்றானை;-நான் அடியேன் நினைக்கப் பெற்று உய்ந்த ஆறே!.

10
தான் சாகா வரம் பெற்றானாகச் செருக்கிய இராவணனை அவன் தோள்கள் இருபதும் நசுங்குமாறு திருவடி விரலை ஊன்றியவனாய்ப் பின் அவன் உறவாகி இசைத்த இன்னிசை கேட்டு இரங்கி அவன் துயரைத் துடைத்தவனாய்த் தன்னை மறவாத அடியவர் மனத்து என்றும் நிலைபெற்றிருப்பவனாய்க் கொன்றை , வன்னி , ஊமத்தம் பூ இவற்றின் தேன் நிறைந்த செஞ்சடையில் பிறையைச் சூடியவனாய் உள்ள நள்ளாற்றானை நான் அடியேன் நினைக்கப் பெற்று உய்ந்தவாறே .
Go to top

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருநள்ளாறு
1.049   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   திருநள்ளாறு பச்சைப் பதிகம், போகம் ஆர்த்த பூண் முலையாள்
Tune - பழந்தக்கராகம்   (திருநள்ளாறு தெர்ப்பாரணியர் போகமார்த்தபூண்முலையம்மை)
2.033   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   ஏடு மலி கொன்றை, அரவு,
Tune - இந்தளம்   (திருநள்ளாறு தெர்ப்பாரணியர் போகமார்த்தபூண்முலையம்மை)
5.068   திருநாவுக்கரசர்   தேவாரம்   உள் ஆறாதது ஓர் புண்டரிகத்திரள்,
Tune - திருக்குறுந்தொகை   (திருநள்ளாறு தெர்ப்பாரணியர் போகமார்த்தபூண்முலையம்மை)
6.020   திருநாவுக்கரசர்   தேவாரம்   ஆதிக்கண்ணான் முகத்தில் ஒன்று சென்று(வ்)
Tune - திருத்தாண்டகம்   (திருநள்ளாறு தெர்ப்பாரணியர் போகமார்த்தபூண்முலையம்மை)
7.068   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   செம்பொன் மேனி வெண் நீறு
Tune - தக்கேசி   (திருநள்ளாறு தெர்ப்பாரணியயீசுவரர் போகமார்த்தபூண்முலையம்மை)

This page was last modified on Thu, 06 Aug 2026 02:07:49 +0000      
send corrections and suggestions to admin-at-sivaya.org or to this WhatsApp Group