மாசு இல் வீணையும், மாலை மதியமும், வீசு தென்றலும், வீங்கு இளவேனிலும், மூசு வண்டு அறை பொய்கையும், போன்றதே- ஈசன், எந்தை, இணைஅடி நீழலே.
|
1
|
இறைவனாகிய எந்தையின் திருவடி நீழல் குற்றமற்ற வீணையின் நாதமும் , மாலையிலே தோன்றிய நிலவின் தண்மையும் , வீசுகின்ற தென்றலின் சாயலும் , செறிந்த இளவேனிலின் மாட்சியும் , ஒலிக்கும் வண்டுகள் மொய்க்கும் பொய்கையின் குளிர்ச்சியும் போன்று இன்பம் பயப்பதாகும் . | |
நமச்சிவாயவே ஞானமும் கல்வியும்; நமச்சிவாயவே நான் அறி விச்சையும்; நமச்சிவாயவே நா நவின்று ஏத்துமே; நமச்சிவாயவே நன்நெறி காட்டுமே.
|
2
|
ஞானமும் , கல்வியும் , நானறிந்த வித்தையும் பஞ்சாட்சரமே ; நா கூறி வழிபடுவதும் அதனையே ; நன்னெறி காட்டுவதும் அத்திருமந்திரமேயாகும் . | |
ஆள் ஆகார்; ஆள் ஆனாரை அடைந்து உய்யார்; மீளா ஆட்செய்து மெய்ம்மையுள் நிற்கிலார்; தோளாத(ச்) சுரையோ, தொழும்பர் செவி? வாளா மாய்ந்து மண் ஆகிக் கழிவரே!
|
3
|
இறைவனுக்கு ஆளாகமாட்டார் ; அவ்வாறு ஆளாகிய மெய்யடியார்களைச் சார்ந்து உய்யவும் மாட்டார் . மீளா ஆளாய் மெய்ம்மையுள் நிற்கும் ஆற்றல் இல்லார் ; அத்தகைய இழிந்தவர் செவிகள் துளையிட்டுப் பயன்படுத்தவியலாத செவியோ ? அந்தோ ! வீணே இறந்து மண்ணாகி ஒழிவர் ! | |
நடலை வாழ்வுகொண்டு என் செய்திர்? நாண் இலீர்? சுடலை சேர்வது சொல் பிரமாணமே; கடலின் நஞ்சு அமுது உண்டவர் கைவிட்டால், உடலினார் கிடந்து ஊர் முனி பண்டமே!
|
4
|
நாணமற்றவர்களே ! துன்பம் மிக்க வாழ்வினைக் கொண்டு என்ன செய்வீர் ? நீர் இறுதியில் சுடுகாடு அடைவது உறுதி என்பதற்கு ஆன்றோர் சொற்களே சான்று . திருப்பாற்கடலினின்றெழுந்த ஆலகால விடத்தை உண்ட இறைவர் கைவிட்டால் , உடல் கிடந்து ஊரார் வெறுக்கும் பொருளாகிவிடும் . | |
பூக் கைக் கொண்டு அரன் பொன் அடி போற்றிலார்; நாக்கைக் கொண்டு அரன் நாமம் நவில்கிலார்; ஆக்கைக்கே இரை தேடி, அலமந்து, காக்கைக்கே இரை ஆகி, கழிவரே!
|
5
|
பூக்களைக் கையிற்கொண்டு சிவபிரானின் பொன்னார் திருவடிகளைப் போற்றுதலில்லாதவர்களும் , நாவினைக் கொண்டு இறைவன் திருநாமத்தை நவிலாதவர்களும் தத்தம் உடலுக்கே உணவுதேடிச் சுழன்று இறுதியில் காக்கைக்கே தாம் இரையாகி ஒழிவர் . | |
| Go to top |
குறிகளும்(ம்), அடையாளமும், கோயிலும், நெறிகளும்(ம்), அவர் நின்றது ஓர் நேர்மையும், அறிய ஆயிரம் ஆரணம் ஓதிலும், பொறி இலீர்! மனம் என்கொல், புகாததே?
|
6
|
விதியற்றவர்களே ! குறிகளும் , அடையாளமும் , கோயிலும் , நெறிகளும் , அவ்விறைவர் நின்றதோர் நேர்மையும் அறிய ஆயிரம் வேதங்கள் கூறினும் உம் மனம் அவற்றுட் புகாதது என்னையோ ? | |
வாழ்த்த வாயும், நினைக்க மட நெஞ்சும், தாழ்த்தச் சென்னியும், தந்த தலைவனைச் சூழ்த்த மா மலர் தூவித் துதியாதே வீழ்த்தவா, வினையேன் நெடுங் காலமே!
|
7
|
தன்னை வாழ்த்துதற்கு வாயும் , தன்னை நினைக்க அறிவற்ற நெஞ்சும் , தன்னை வணங்கத் தலையும் தந்த தலைவனாகிய பெருமானை வண்டுகள் சூழ்ந்த மலர்களைத் தூவித்துதிக்காமல் , வினையேன் நெடுங்காலம் வீழ்த்தியவாறு என்னே ?. | |
எழுது பாவை நல்லார் திறம் விட்டு, நான், தொழுது போற்றி, நின்றேனையும் சூழ்ந்து கொண்டு, உழுத சால்வழியே உழுவான் பொருட்டு இழுதை நெஞ்சம் இது என் படுகின்றதே!
|
8
|
எழுதிய பாவைச் சித்திரம் போன்ற அழகுடைய பெண்கள் திறத்தின் நீங்கி நான்தொழுது போற்றி நிற்க . என்னையும் ஆராய்ந்து கொண்டு உழுத சால் வழியே பின்னும் உழுவதன் பொருட்டு மிக்க இழிவுடைய நெஞ்சம் செய்கின்றது தானா என்னை ?. | |
நெக்குநெக்கு நினைபவர் நெஞ்சுளே புக்கு நிற்கும் பொன் ஆர் சடைப் புண்ணியன், பொக்கம் மிக்கவர் பூவும் நீரும் கண்டு நக்கு நிற்பவர், அவர்தம்மை நாணியே.
|
9
|
நெகிழ்ந்து நெகிழ்ந்து நினைபவர் நெஞ்சுளே புகுந்து நிற்கும் பொன்னார் சடைப் புண்ணியன் , பொய்ம்மையாளர் பூசையிற் பூவையும் நீரையும் கண்டு அவர் தம்மை நாணிச் சிரித்து நிற்பன் . | |
விறகில்-தீயினன், பாலில் படு நெய் போல் மறைய நின்றுளன்மா மணிச்சோதியான்; உறவுகோல் நட்டு, உணர்வு கயிற்றினால் முறுக வாங்கிக் கடைய, முன் நிற்குமே.
|
10
|
விறகில் தீப்போலவும் . பாலிற்பொருந்திய நெய்போலவும் , மாமணிச் சோதியானாகிய இறைவன் மறைய நின்றுளன் ; உறவு என்னுங்கோலை நட்டு உணர்வு என்ற கயிற்றினால் முறுகவாங்கிக் கடைந்தால் முன்னின்று அருள் வழங்குவான் . | |
| Go to top |