பூரியா வரும், புண்ணியம்; பொய் கெடும்; கூரிது ஆய அறிவு கைகூடிடும்- சீரியார் பயில் சேறையுள் செந்நெறி நாரிபாகன்தன் நாமம் நவிலவே.
|
1
|
சீர்மை உடையவர்கள் பயிலும் திருச்சேறையுட் செந்நெறியில் வீற்றிருக்கும் உமையொருபாகனுடைய நாமம் நவின்றால் புண்ணியம் பூரித்துவரும் ; பொய்கெடும் ; கூர்மை உடையதாகிய அறிவு கைகூடும் . | |
என்ன மா தவம் செய்தனை!- நெஞ்சமே!- மின்னுவார் சடை வேத விழுப்பொருள், செந்நெல் ஆர் வயல் சேறையுள் செந்நெறி மன்னு சோதி, நம்பால் வந்து வைகவே.
|
2
|
நெஞ்சமே ! மின்னுகின்ற நீண்ட சடையையுடையவனும் , வேதவிழுப்பொருளும் , செந்நெல் பொருந்திய வயல் உடைய திருச்சேறையுட் செந்நெறியில் நிலைபெற்ற சோதியுமாகிய பெருமான் நம்மிடம் வந்து தங்க , நீ என்ன மாதவம் செய்தாய் !. | |
பிறப்பு, மூப்பு, பெரும் பசி, வான் பிணி, இறப்பு, நீங்கிடும்; இன்பம் வந்து எய்திடும்- சிறப்பர் சேறையுள் செந்நெறியான் கழல் மறப்பது இன்றி மனத்துள் வைக்கவே.
|
3
|
திருச்சேறையுட் செந்நெறியில் வீற்றிருக்கும் சிறப்பை உடைய பெருமான் கழலார் திருவடிகளை மறப்பு இன்றி மனத்துள் வைத்தால் , பிறப்பு , மூப்பு , மிக்கபசி , மிக்கபிணி , இறப்பு ஆகியவை நீங்கி இம்மையிலேயே இன்பம் வந்து எய்தும் . | |
மாடு தேடி, மயக்கினில் வீழ்ந்து, நீர், ஓடி எய்த்தும், பயன் இலை; ஊமர்காள்! சேடர் வாழ் சேறைச் செந்நெறி மேவிய ஆடலான் தன் அடி அடைந்து உய்ம்மினே!
|
4
|
ஊமைகளே ! செல்வத்தைத்தேடி மயக்கத்தில் விழுந்து நீர் ஓடி இளைத்தும் பயன் இல்லை ; உயர்ந்தவர்கள் வாழ்கின்ற சேறைச்செந்நெறி மேவிய கூத்தப்பிரான் திருவடிகளை அடைந்து உய்வீர்களாக . | |
எண்ணி நாளும், எரி அயில் கூற்றுவன் துண்ணென்று ஒன்றில்- துரக்கும் வழி கண்டேன்; திண் நன் சேறைத் திருச் செந்நெறி உறை அண்ணலார் உளர்: அஞ்சுவது என்னுக்கே?
|
5
|
நாள்தோறும் எண்ணி எரியும் வேலும் உடைய கூற்றுவன் துண்ணெனத் தோன்றினால் , அவனைத் துரத்தும் வழி ஒன்று கண்டேன் ; திண்மை உடையவரும் , சேறையுட் செந்நெறி உறையும் அண்ணலாருமாகிய இறைவர் உள்ளார் ; அஞ்சுவது பின்னை எதற்கு ? | |
| Go to top |
தப்பி வானம், தரணி கம்பிக்கில் என்? ஒப்பு இல் வேந்தர் ஒருங்கு உடன் சீறில் என்? செப்பம் ஆம் சேறைச் செந்நெறி மேவிய அப்பனார் உளர்; அஞ்சுவது என்னுக்கே?
|
6
|
வானம் முறை தவறி ( வறண்டு ) உலகம் நடுங்கினால் என்ன ? ஒப்பற்ற அரசர்கள் ஒருங்கு உடன் சீறிச்சினந்தால் என்ன ? செப்பம் பொருந்திய சேறையுட் செந்நெறி மேவிய அப்பனார் உள்ளார் ; அஞ்சுவது பின்னை எதற்கு ? | |
வைத்த மாடும், மடந்தை நல்லார்களும், ஒத்து ஒவ்வாத உற்றார்களும், என் செய்வார்? சித்தர் சேறைத் திருச் செந்நெறி உறை அத்தர்தாம் உளர்; அஞ்சுவது என்னுக்கே?
|
7
|
தேடிவைத்த செல்வமும் , பெண்களும் , ஒத்தும் ஒவ்வாதும் உள்ள சுற்றத்தார் பிறரும் என்ன செய்வார் ? சித்தரும் , சேறையுட் செந்நெறி மேவிய அத்தருமாகிய இறைவர் உள்ளார் ; அஞ்சுவது பின்னை எதற்கு ? | |
குலன்கள் என் செய்வ? குற்றங்கள் என் செய்வ? துலங்கி நீ நின்று சோர்ந்திடல், நெஞ்சமே! இலங்கு சேறையில் செந்நெறி மேவிய அலங்கனார் உளர்; அஞ்சுவது என்னுக்கே?
|
8
|
நெஞ்சமே ! குலங்கள் என்னசெய்யும் திறத்தன ? குற்றங்கள் என்ன செய்யும் திறத்தன ? மனம் அசைந்து நீ நின்று சோராதே ; விளங்கும் திருச்சேறையில் செந்நெறி மேவிய கொன்றை மாலையணிந்த இறைவர் உள்ளார் ; அஞ்சுவது பின்னை எற்றுக்காக ?. | |
பழகினால் வரும் பண்டு உள சுற்றமும் விழவிடாவிடில், வேண்டிய எய்த ஒணா; திகழ் கொள் சேறையில் செந்நெறி மேவிய அழகனார் உளர்; அஞ்சுவது என்னுக்கே!
|
9
|
பழகினால் வருகின்ற பழமையாய் உள்ள சுற்றத்தாரும் விழவிடாவிட்டால் வேண்டியதை எய்தவொண்ணாது ; விளங்குதலைக்கொண்ட சேறையிற் செந்நெறி மேவிய அழகராகிய இறைவர் உள்ளார் ; அஞ்சுவது பின்னை எற்றுக்கு? | |
பொருந்து நீள் மலையைப் பிடித்து ஏந்தினான் வருந்த ஊன்றி, மலர் அடி வாங்கினான் திருந்து சேறையில் செந்நெறி மேவி அங்கு இருந்த சோதி என்பார்க்கு இடர் இல்லையே.
|
10
|
பொருந்திய உயர்ந்த திருக்கயிலையைத் திருமலையைப் பிடித்து ஏந்தலுற்ற இராவணன் வருந்துமாறு ஊன்றி மலரடியினைச் சற்று வளைத்தவனும் , திருந்திய சேறையிற் செந்நெறி மேவி அங்கு இருந்த சோதியும் ஆகிய இறைவனை உரைப்பார்க்குத் துன்பங்கள் இல்லை . | |
| Go to top |