சிவய.திருக்கூட்டம்
sivaya.org



This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

5.076   திருநாவுக்கரசர்   தேவாரம்

திருக்கானூர் - திருக்குறுந்தொகை அருள்தரு சிவயோகநாயகியம்மை உடனுறை அருள்மிகு செம்மேனிநாயகர் திருவடிகள் போற்றி
- Hide Meaning   https://www.youtube.com/watch?v=ydwTP_2V-es   Add audio link Add Audio

திருவின் நாதனும், செம்மலர் மேல் உறை
உருவனாய், உலகத்தின் உயிர்க்கு எலாம்
கருவன் ஆகி, முளைத்தவன் கானூரில்
பரமன் ஆய பரஞ்சுடர்; காண்மினே!

1
கானூரில் தெய்வச்சுடராகிய இறைவன் திருமகள் கணவனாகிய திருமாலும், சிவந்த தாமரை மலர்மேல் உறைகின்ற அழகுடையவனாகிய பிரமனும் ஆகி உலகத்தின் எல்லா உயிர்களுக்கும் கருவிலேயே உற்றுக் காப்பவனாகி முளைத்தவன் ஆவன்.

பெண்டிர், மக்கள், பெருந் துணை, நன்நிதி,
உண்டு இறேழு என்று உகவன்மின், ஏழைகாள்!
கண்டு கொண்மின், நீர், கானூர் முளையினை,
புண்டரீகப் பொதும்பில் ஒதுங்கியே!

2
அறிவற்றவர்களே! பெண்டிர், மக்கள் பெருந்துணையாகவுள்ள நல்ல செல்வம் இன்று உண்டு என்று மகிழாதீர்; தாமரையாகிய பொதும்பில் ஒதுங்கியே கானூர் முளையாகிய கடவுளை நீர் கண்டுகொள்வீராக; (அவரே பெருந்துணையாவார்).

தாயத்தார், தமர், நன்நிதி, என்னும் இம்
மாயத்தே கிடந்திட்டு மயங்கிடேல்!
காயத்தே உளன், கானூர் முளையினை
வாய்அ(த்)தால் வணங்கீர், வினை மாயவே!

3
பங்காளியர், தம் சுற்றத்தார், நல்ல செல்வம் என்னும் இம்மாயத்திலே கிடந்து மயங்கவேண்டா; உம் உடலுள்ளேயே உள்ளவனாகிய கானூர் முளையாகிய பெருமானை உங்கள் வினைகள்கெட வாயாற் கூறிப் பரவி வணங்குவீராக.

குறியில் நின்று, உண்டு கூறை இலாச் சமண்
நெறியை விட்டு, நிறைகழல் பற்றினேன்:
அறியல் உற்றிரேல், கானூர் முளை அவன்
செறிவு செய்திட்டு இருப்பது என் சிந்தையே.

4
இரத்தற் குறிப்பொடு நின்று ஏற்று உண்ணும் ஆடையற்ற அமண்நெறியைவிட்டு நீங்கி எம்பிரான் அருள்நிறையும் கழலைப் பற்றினேன்; அதற்குக் காரணம் அறியலுறுவீரேல், கானூர் முளையாகிய கடவுள் என்சிந்தையில் செறிவு செய்திட்டிருப்பதே ஆகும்.

பொத்தல் மண்சுவர்ப் பொல்லாக் குரம்பையை
மெய்த்தன் என்று வியந்திடல், ஏழைகாள்!
சித்தர், பத்தர்கள், சேர் திருக்கானூரில்
அத்தன் பாதம் அடைதல் கருமமே.

5
அறிவற்றவர்களே! பொத்தலை உடையதும், மண்சுவர் உடையதுமாகிய இழிந்த இக்குடிசையைத் தன்மெய் என்று ஒவ்வொருவரும் வியந்திடல் வேண்டா. சித்தர்களும் பத்தர்களும் சேர்கின்ற திருக்கானூரில் இறைவன் பாதம் அடைதலே உமக்குக் கருமம் ஆகும்.
Go to top

கல்வி ஞானக்கலைப் பொருள் ஆயவன்,
செல்வம் மல்கு திருக்கானூர் ஈசனை,
எல்லியும் பகலும்(ம்) இசைவு ஆனவா
சொல்லிடீர், நும் துயரங்கள் தீரவே!

6
கல்வியும், ஞானமும், கலையும் ஆகியவற்றின் பொருளாயிருப்பவனும், செல்வம் மல்கும் திருக்கானூரில் இருப்பவனும் ஆகிய ஈசன் இரவும் பகலும் இசைந்து அருள்புரிய ஆனவாற்றை உம் துயரங்கள் தீரச் சொல்லுவீராக.

நீரும், பாரும், நெருப்பும், அருக்கனும்,
காரும், மாருதம்-கானூர் முளைத்தவன்;
சேர்வும் ஒன்று அறியாது, திசைதிசை
ஓர்வும் ஒன்று இலர், ஓடித் திரிவரே.

7
நீரும், மண்ணும், தீயும், வெயிலும், முகிலும், காற்றும் ஆகிய அனைத்துமாகிக் கானூரில் முளைத்த கடவுளைச் `சேர்தும்` என்ற ஒன்றை அறியாது திசைதோறும் திசைதோறும் உணர்ச்சி சிறிதும் இலராய் ஓடித் திரிவர் உலகத்தவர்.

ஓமத்தோடு அயன்மால் அறியா வணம்
வீமப் பேர் ஒளி ஆய விழுப்பொருள்,
காமற் காய்ந்தவன் கானூர் முளைத்தவன்;
சேமத்தால் இருப்பு ஆவது என் சிந்தையே.

8
வேள்விகளாலும். திருமாலும், பிரமனும் அறியாதவண்ணம் இடுகாட்டகத்தே பேரொளியாகிய உயர்ந்த பொருளும், காமனைக் காய்ந்தவனும் ஆகிய கானூர் முளைத்த கடவுள் என் சிந்தையே பாதுகாவலுக்குரிய இருப்பாகக் கொள்வன்.

வன்னி, கொன்றை, எருக்கு, அணிந்தான் மலை
உன்னியே சென்று எடுத்தவன் ஒண் திறல்-
தன்னை வீழத் தனி விரல் வைத்தவன்
கன்னி மா மதில் கானூர்க் கருத்தனே.

9
இளமையுடைய மாமதில் சூழ்ந்த கானூர்க்கருத்தன், வன்னியும், கொன்றையும், எருக்கும் அணிந்த தனக்குரிய மலையைப் பெயர்த்தெடுக்க உன்னிச்சென்று எடுத்தவனாகிய இராவணனின் ஒண்திறல் தன்னை வீழும்படியாகத் தனி விரல் ஒன்றினால் வைத்து அடர்த்தவனாவன்.

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருக்கானூர்
1.073   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   வான் ஆர் சோதி மன்னு
Tune - தக்கேசி   (திருக்கானூர் செம்மேனிநாயகர் சிவயோகநாயகியம்மை)
5.076   திருநாவுக்கரசர்   தேவாரம்   திருவின் நாதனும், செம்மலர் மேல்
Tune - திருக்குறுந்தொகை   (திருக்கானூர் செம்மேனிநாயகர் சிவயோகநாயகியம்மை)
     
send corrections and suggestions to admin-at-sivaya.org

This page was last modified on Sat, 04 Apr 2026 04:53:34 +0000