நிறைக்க வாலியள் அல்லள், இந் நேரிழை; மறைக்க வாலியள் அல்லள், இம் மாதராள்- பிறைக்கு அவாவிப் பெரும்புனல் ஆவடு- துறைக் கவாலியோடு ஆடிய சுண்ணமே.
|
1
|
பிறையோடு கூடிய செஞ்சடையில் கங்கையாகிய பெரும்புனலை உடையவரும் , திருவாவடுதுறையில் உள்ள கபாலியுமாகிய சிவபெருமானோடு ஆடிய திருநீற்றினை நிறைக்கத் தூய்மையுடையவள் அல்லள் இந்த நேரிழையணிந்த பெண் ; அன்றியும் இப்பெண் அதனால் வரும் துயரங்களை மறைக்கும் வல்லமை உடையவளுமல்லள் . | |
தவளமாமதிச் சாயல் ஓர் சந்திரன் பிளவு சூடிய பிஞ்ஞகன், எம் இறை, அளவு கண்டிலள்; ஆவடுதண்துறைக் களவு கண்டனள் ஒத்தனள்-கன்னியே.
|
2
|
இக்கன்னி , வெள்ளிய பெருமைமிகுந்து மதிக்கத்தக்க சாயலை உடைய சந்திரனின் பிளவாகிய பிறையினைச் சூடிய எம்மிறைவனாகிய பிஞ்ஞகனின் அன்பின் அளவை முற்றும் கண்டிலளேனும் , திருவாவடுதுறையிலே அவனைக் களவொழுக் கத்தாற் கண்டவளை ஒத்தாள் ஆயினள் . | |
பாதி பெண் ஒருபாகத்தன்; பல்மறை ஓதி; என் உளம் கொண்டவன்; ஒண் பொருள் ஆதி-ஆவடுதண்துறை மேவிய சோதியே! சுடரே! என்று சொல்லுமே.
|
3
|
இப்பெண் , தன் திருமேனியில் ஒரு பாதிப் பெண்ணினை உடையவனே என்றும் , பலவாகிய மறைகளை ஓதியருளி என்னுள்ளத்தைக் கவர்ந்துகொண்டவனே என்றும் , ஒள்ளிய உலகத்துப் பொருள்களுக்கெல்லாம் ஆதியானவனே என்றும் , திருவாவடுதுறையில் விரும்பியெழுந்தருளியிருக்கும் சோதியே என்றும் , சுடரே என்றும் சொல்லும் இயல்பினள் . | |
கார்க் கொள் மா முகில் போல்வது ஓர் கண்டத்தன்; வார்க்கொள் மென்முலை சேர்ந்து இறுமாந்து, இவள் ஆர்க் கொள் கொன்றையன்; ஆவடுதண்துறைத் தார்க்கு நின்று இவள் தாழுமா காண்மினே!
|
4
|
இப்பெண் , கருமையைக்கொண்ட பெரிய முகில் போலும் கண்டத்தை உடையவனும் , கச்சினைக்கொண்ட மெல்லிய முலையாளாகிய உமையம்மையைச் சேர்ந்து இறுமாந்து இவளது நெஞ்சைப் பிணைக்கும் கொன்றையினை உடையவனும் ஆகிய திருவாவடுதுறைப் பெருமானின் திருமார்பில் அணிந்துள்ள கொன்றைமாலைக்கு மனம் தாழ்கின்றனள் ; காண்பீராக . | |
கருகு கண்டத்தன், காய் கதிர்ச் சோதியன், பருகு பால் அமுதே எனும் பண்பினன், அருகு சென்று இவள், ஆவடுதண்துறை ஒருவன் என்னை உடைய கோ என்னுமே.
|
5
|
இப்பெண் , கருத்த கண்டத்தை உடையவனும் , கதிர்காய்கின்ற ஒளிவடிவினனும் , பருகுதற்கினிய பால் அமுது என்று கூறத்தக்க பண்பை உடையவனுமாகிய அப்பெருமான் அருகிற் சென்றனள் . அல்லளாயினும் , அவன்பாற்கொண்ட காதல் மிகுதியால் ` என்னை உடையவன் திருஆவடுதண்டுறையில் உறையும் தலைவனே ` என்று கூறும் இயல்பினள் . | |
| Go to top |
குழலும், கொன்றையும், கூவிளம், மத்தமும், தழலும், தையல் ஓர்பாகமாத் தாங்கினான்; அழகன்; ஆவடுதண்துறையா! எனக் கழலும், கைவளை காரிகையாளுக்கே.
|
6
|
இவ்வழகுடைய பெண் , கொன்றை மலர்களும் , கூவிளந்தளிர்களும் , ஊமத்தமலர்களும் சூடிய சடையும் , தையல் ஒரு பாகமும் கொண்ட ஆவடுதண்டுறைக்குரிய அழகனே என்று விரும்பி அழைத்தலால் , கைவளைகள் கழலுகின்ற நிலைமையள் ஆயினள் . | |
பஞ்சின் மெல் அடிப் பாவை ஓர்பங்கனைத் தஞ்சம் என்று இறுமாந்து, இவள் ஆரையும் அஞ்சுவாள் அல்லள்; ஆவடுதண்துறை மஞ்சனோடு இவள் ஆடிய மையலே!
|
7
|
இப்பெண் திருவாவடுதண்துறையில் உள்ள , புலன் ஐந்தும் வென்ற பெருவீரனாகிய சிவபெருமானோடு ஆடிக் கொண்ட மயக்கத்தினால் , பஞ்சனைய மெல்லடியுடைய உமா தேவியாரைப் பங்கிற்கொண்ட அப்பரமனைத் தஞ்சப்பொருளாகக் கொண்டு இறுமாப்பு எய்தி , வேறு யாரையும் அஞ்சாதவள் ஆயினள் . | |
பிறையும் சூடி, நல் பெண்ணொடு ஆண் ஆகி, என் நிறையும் நெஞ்சமும் நீர்மையும் கொண்டவன்; அறையும் பூம்பொழில் ஆவடுதண்துறை இறைவநென்னை உடையவன் என்னுமே.
|
8
|
இப்பெண் , பிறையினைச் சென்னியிற் சூடிய பெண்ணும் ஆணுமாகிய இறைவனும் , மேகங்களும் , வண்டினங்களும் ஒலிக்கின்ற பூம்பொழில்களை உடைய ஆவடுதண்துறையில் என்னை உடையவனும் ஆகிய பெருமானே , என் கற்பினையும் , உள்ளத்தினையும் , பிற தன்மைகளையும் கவர்ந்து கொண்டவன் என்று சொல்லுமியல்பினள் . | |
வையம் தான் அளந்தானும் அயனும் ஆய் மெய்யைக் காணல் உற்றார்க்கு அழல் ஆயினான்; ஐயன்; ஆவடுதண்துறையா! என, கையில் வெள்வளையும் கழல்கின்றதே.
|
9
|
உலகங்களைத் தான் அளந்தவனாகிய திருமாலும் , பிரமனும் ஆகிய இருவரும் மெய்ப்பொருளாகிய பிரமத்தைக் காணலுற்றபோது அவ்விருவர் முன்னே பேரழலாய் நிமிர்ந்த பெருமானே ! ஐயனே ! ஆவடுதண்டுறையில் உள்ள அண்ணலே என்று வாய்விட்டுக்கூவி உடல் மெலிதலால் இவள் கைகளில் உள்ள வெள்வளைகள் கழல்கின்றவாயின . | |
பக்கம் பூதங்கள் பாட, பலி கொள்வான்; மிக்க வாள் அரக்கன் வலி வீட்டினான்; அக்கு அணிந்தவன் ஆவடுதண் துறை நக்கன் என்னும், இந் நாண் இலி; காண்மினே!
|
10
|
பெருமான் தன் நெஞ்சும் கற்பும் கவர்ந்து கொண்டனனேனும் , அதுகுறித்துச் சிறிதும் நாணமில்லாதவளாகிய இப்பெண் , மீண்டும் , பூதங்கள் பக்கத்தில் நின்று பாடப் பலி கொள்வான் என்றும் , ஆற்றல்மிக்க வாளை உடைய அரக்கனை வலி கெடுத்தான் என்றும் , அக்கமாலைகள் அணிந்தான் என்றும் . திருஆவடு தண்டுறையில் உள்ள திகம்பரன் என்றும் கூறிப் புகழ்ந்தவண்ணம் இருப்பாள் . | |
| Go to top |