சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

5.017   திருநாவுக்கரசர்   தேவாரம்

திருவெண்ணியூர் - திருக்குறுந்தொகை அருள்தரு அழகியநாயகியம்மை உடனுறை அருள்மிகு வெண்ணிநாயகர் திருவடிகள் போற்றி

சிவானந்த முதிர்வு சிவனைத் தவிர வேறு எந்தத் தெய்வத்தையும் போற்றமாட்டேன்
- Hide Meaning   https://www.youtube.com/watch?v=Z2cFsRKbsJw   Add audio link Add Audio

முத்தினை, பவளத்தை, முளைத்த எம்
தொத்தினை, சுடரை, சுடர் போல் ஒளிப்
பித்தனை, கொலும் நஞ்சினை, வானவர்
நித்தனை,-நெருநல் கண்ட வெண்ணியே.

1
முத்தினை , பவளத்தை , முளைத்த எம் பூங்கொத்தினை , சுடரை , சுடர்போல் ஒளி உடைய பித்தனை , கொல்லும் நஞ்சு போல்பவனை , வானவர்க்குள் நித்தனை நேற்றுக்கண்ட வெண்ணித்தலமே இன்று என் உள்ளத்தில் பதிந்திருந்து பேரின்பத்தை மிகுவிப்பது .

வெண்ணித் தொல்-நகர் மேய வெண்திங்கள் ஆர்
கண்ணித் தொத்த சடையர்; கபாலியார்;
எண்ணித் தம்மை நினைந்து இருந்தேனுக்கு(வ்)
அண்ணித்திட்டு அமுது ஊறும், என் நாவுக்கே.

2
வெண்ணியாகிய பழைய நகரத்தை மேவியவரும் , வெண்திங்களைச் சூடியவரும் , கொன்றைக் கண்ணியை உடைய கொத்தாக உள்ள சடையுடையவரும் , கபாலத்தைக் கையில் ஏந்திய வரும் , ஆகிய அப்பெருமானை எண்ணி நினைத்திருந்தேனுக்கு அவர் நினைவு என் நாவினில் அண்ணித்து அமுதாக ஊறும் .

காற்றினை; கனலை; கதிர் மா மணி
நீற்றினை; நினைப்பார் வினை நீக்கிடும்,
கூற்றினை உதைத்திட்ட குணம் உடை,
வீற்றினை;-நெருநல் கண்ட வெண்ணியே.

3
காற்றும் கனலும் ஆவான் ; கதிர்விக்கும் மாமணிமேற் சண்ணித்த திருநீறு போன்ற திருமேனியுடையான் ; அத்திருமேனியை நினைப்பார் வினையை நீக்குபவன் . கூற்றினை உதைத்த குணமுடைய தனிச்சிறப்புடையவன் . இப்பெருமானை நேற்றுக் காண்டற்கு இடமாக இருந்த திருவெண்ணியே எனக்கு இதுபோது பேரின்பத்தைப் பெருக்குவது .

நல்லனை, திகழ் நால்மறைஓதியை,
சொல்லனை, சுடரை, சுடர் போல் ஒளிர்
கல்லனை, கடி மா மதில் மூன்று எய்த
வில்லனை,-நெருநல் கண்ட வெண்ணியே.

4
நல்லவனை , விளங்கும் நால்வேதங்களை ஓதும்பிரானை , சொல்வடிவானவனை , ஒளியை , சுடர்விட்டு ஒளிர்கின்ற திருக்கயிலாயத் திருமலை உடையவனை , திரிபுரம் எரிசெய்த வில்லுடையவனை நேற்றுக்கண்ட வெண்ணியே இன்று எம்மை இது செய்வது .

சுடரைப் போல் ஒளிர் சுண்ணவெண் நீற்றனை,
அடரும் சென்னியில் வைத்த அமுதனை,
படரும் செஞ்சடைப் பால்மதி சூடியை,
இடரை நீக்கியை, யான் கண்ட வெண்ணியே.

5
சுடரைப் போல் ஒளிர்கின்ற வெண்ணீற்றுப் பொடியணிமேனியனை , பூவிதழும் ( பிறவும் ) சென்னியிலே வைத்த அமுதனையானை , படர்ந்த செஞ்சடையிலே பால் போன்ற மதியைச் சூடியவனை , இடர்கள் நீக்கும் இறைவனை யான் கண்டது வெண்ணித் தலத்திலாகும் . சடைநெருங்கிய சென்னியில் அமுது ( நீர் - கங்கை ) வைத்தவனை - எனினும் அமையும் . ( வைத்த அமுதினை என்பதை அருங்கேடன் என்பது போலக் கொள்க )
Go to top

பூதநாதனை, பூம் புகலூரனை,
தாது எனத் தவழும் மதி சூடியை,
நாதனை, நல்ல நால்மறை ஓதியை,
வேதனை,-நெருநல் கண்ட வெண்ணியே.

6
பூதங்களுக்குத் தலைவனை , பூக்கள் நிறைந்த புகலூரனை , மகரந்தம் போல் தவழும் மதியைச் சூடியவனை , தலைவனை , நான்மறை ஓதியவனை , வேதப்பொருளானவனை நேற்று வெண்ணியிற் கண்டு ஏத்தினேன் .

ஒருத்தியை ஒருபாகத்து அடக்கியும்
பொருத்திய(ப்) புனிதன், புரிபுன்சடைக்
கருத்தனை, கறைக்கண்டனை, கண் நுதல்
நிருத்தனை,-நெருநல் கண்ட வெண்ணியே.

7
ஒருத்தியை ஒருபாகத்தில் அடக்கியும் , மற்றொருத்தியைப் புன்சடையிற் பொருத்திய புனிதனை , கருத்துள் இருப்பவனை , திருநீலகண்டனை , கண்ணுதலானை , நிருத்தம் ஆடுவானை , நேற்று வெண்ணியிற்கண்டு ஏத்தினேன் .

சடையனை; சரி கோவண ஆடை கொண்டு
உடையனை; உணர்வார் வினை தீர்த்திடும்
படையனை, மழுவாளொடு; பாய்தரும்
விடையனை;-நெருநல் கண்ட வெண்ணியே.

8
சடை உடையவனை , சரியும் கோவண ஆடை கொண்டு உடையவனை , உணர்வார் வினைதீர்த்திடும் மழுவாளொடு பிறவும் படை உடையவனை , பாய்ந்து செல்லும் விடை உடையவனை நேற்று வெண்ணியிற் கண்டு ஏத்தினேன் .

பொருப்பனை, புனலாளொடு புன்சடை
அருப்பனை, இளந்திங்கள் அம் கண்ணியான்
பருப்பதம் பரவித் தொழும் தொண்டர்கள்
விருப்பனை,-நெருநல் கண்ட வெண்ணியே.

9
திருக்கயிலாயப் பொருப்புக்குரியவனை , கங்கை யாளைச் சடையிற் கொண்டவனை , அரும்பு போன்ற இளந்திங்களைக் கண்ணியாகக் கொண்டவனை , திருக்கயிலாயத்தைப் பரவிவாழ்த்தும் தொண்டர்கள் விருப்பத்துக்குரியவனை நேற்றுக் கண்டு வெண்ணியில் ஏத்தினேன் .

சூல, வஞ்சனை, வல்ல எம் சுந்தரன்;
கோலமா அருள்செய்தது ஓர் கொள்கையான்;
காலன் அஞ்ச உதைத்து, இருள் கண்டம் ஆம்
வேலை நஞ்சனை; கண்டது வெண்ணியே.

10
வஞ்சிப்பார் வஞ்சனையைக் களையவல்ல எமது அழகன் ; திருமேனிகாட்டி அருள்செய்த கொள்கையினை உடையான் ; காலன் அஞ்சும்படி உதைத்தவன் ; கண்டம் இருளும்படி செய்த கடல் நஞ்சினை உண்டு அமரர்களை உயிர் வாழச்செய்தவன் . இப் பெருமானை நெருநல்கண்ட இடம் திருவெண்ணியூரே ஆம் .
Go to top

இலையின் ஆர் கொன்றை சூடிய ஈசனார்,
மலையினால் அரக்கன் திறல் வாட்டினார்,
சிலையினால் மதில் எய்தவன், வெண்ணியைத்
தலையினால்-தொழுவார் வினை தாவுமே.

11
இலைகளுடன் கூடிய கொன்றை சூடிய ஈசனார் மலையினால் அரக்கன் ஆற்றலை வாட்டினார் , வில்லினால் முப்புரங்களை எய்தவர்க்குரிய வெண்ணியைத் தலையினால் தொழுவார்களது வினை நீங்கும் .

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருவெண்ணியூர்
2.014   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   சடையானை, சந்திரனோடு செங்கண் அரா உடையானை,
Tune - இந்தளம்   (திருவெண்ணியூர் வெண்ணிநாயகர் அழகியநாயகியம்மை)
5.017   திருநாவுக்கரசர்   தேவாரம்   முத்தினை, பவளத்தை, முளைத்த எம்
Tune - திருக்குறுந்தொகை   (திருவெண்ணியூர் வெண்ணிநாயகர் அழகியநாயகியம்மை)
6.059   திருநாவுக்கரசர்   தேவாரம்   தொண்டு இலங்கும் அடியவர்க்கு ஓர்
Tune - திருத்தாண்டகம்   (திருவெண்ணியூர் வெண்ணிநாயகர் அழகியநாயகியம்மை)
     
send corrections and suggestions to admin-at-sivaya.org

This page was last modified on Sun, 01 Mar 2026 07:27:15 +0000