சிவய.திருக்கூட்டம்
sivaya.org

Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

4.112   திருநாவுக்கரசர்   தேவாரம்

பொது -தனித் திருவிருத்தம் - திருவிருத்தம் அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி
- Hide Meaning   https://www.youtube.com/watch?v=IGooaC72-8s   Add audio link Add Audio

வெள்ளிக் குழைத்துணி போலும் கபாலத்தன்; வீழ்ந்து இலங்கு
வெள்ளிப் புரி அன்ன வெண் புரிநூலன் விரிசடைமேல்
வெள்ளித் தகடு அன்ன வெண்பிறை சூடி, வெள் என்பு அணிந்து,
வெள்ளிப் பொடிப் பவளப்புறம் பூசிய வேதியனே.

1
வெண்ணிறத்தினை உடைய சங்கின் துண்டு போன்ற வெண்ணிறமான மண்டையோட்டை ஏந்தியவனாய் , வெள்ளியை முறுக்கினாற் போன்ற வெள்ளிய பூணூலை அணிந்தவனாய் , விரிந்த சடையின்மேல் வெள்ளித்தகடு போன்ற வெண் பிறையைச் சூடியவனாய் , வெள்ளிய எலும்புகளை அணிந்து பவளம் போன்ற உடலில் வெண்ணிறநீற்றைப் பூசிய வேதியன் சிவபெருமான் ஆவான் .

உடலைத் துறந்து உலகு ஏழும் கடந்து உலவாத துன்பக்
கடலைக் கடந்து, உய்யப் போயிடல் ஆகும்; கனகவண்ணப்
படலைச் சடை, பரவைத் திரைக் கங்கை, பனிப்பிறை, வெண்
சுடலைப் பொடி, கடவுட்கு அடிமைக்கண்-துணி, நெஞ்சமே!

2
நெஞ்சமே ! பொன் போல ஒளிவீசும் செந்நிற முடைய பரவிய சடையில் கடல் போன்ற அலைகளை உடைய கங்கையையும் குளிர்ந்த பிறையையும் வைத்த , சுடுகாட்டுச் சாம்பலைப் பூசிய தெய்வத்தின் அடிமை செய்தற்கண் துணிவுடையை ஆவாய் . அவ்வாறு செய்தால் பிண்டமாகிய உடலைத் துறந்து , ஏழுலக மான அண்டத்தைக் கடந்து அழியாத பிறவித்துன்பக் கடலைக் கடந்து நாம் பிழைத்துப் பாசநீக்கம் பெற்று அப்பெருமானுடைய வீட்டுலகை அடையலாம் .

முன்னே உரைத்தால் முகமனே ஒக்கும்; இம் மூ உலகுக்கு
அன்னையும் அத்தனும் ஆவாய்-அழல்வணா!-நீ அலையோ?
உன்னை நினைந்தே கழியும், என் ஆவி; கழிந்ததன் பின்
என்னை மறக்கப்பெறாய்; எம்பிரான்! உன்னை வேண்டியதே.

3
தீவண்ணனே ! உன் முன்னிலையில் யான் ஏதாவது கூறினால் அது உபசாரவார்த்தை போலக் காணப்படும் . இம் மூவுலகுக்கும் தாயும் தந்தையும் ஆயவன் நீ அல்லையோ ? உன்னைத் தியானித்துக் கொண்டே என் உயிர் நீங்கும் . என் உயிர் இவ்வுடலை நீங்கியபின் என்னை நீ மறக்கக் கூடாது என்பதனையே யான் உன்னை வேண்டுகிறேன் .

நின்னை எப்போதும் நினையல் ஒட்டாய், நீ; நினையப் புகில்
பின்னை அப்போதே மறப்பித்துப் பேர்த்து ஒன்று நாடுவித்தி;
உன்னை எப்போதும் மறந்திட்டு உனக்கு இனிதா இருக்கும்
என்னை ஒப்பார் உளரோ? சொல்லு, வாழி!-இறையவனே!

4
இறையவனே ! உன்னை எப்போதும் நினைத்திருக்குமாறு செய்ய நீ இசைகின்றாய் அல்லை . உன்னை உறுதியாகத் தியானிக்கப் புகுந்தால் அப்போதே அதனை மறக்கச் செய்து வேறொரு பொருளில் அடியேனுடைய மனம் ஈடுபடுமாறு செய்கின்றாய் . உன்னை எப்போதும் மறந்தவனாயினும் உனக்கு இனியனாகச் சொல்லிக் கொண்டிருக்கும் அடியேனை ஒத்தவர் வேறு எவரேனும் இவ்வுலகில் உள்ளனரோ என்பதனைச் சொல்லுவாயாக .

முழுத்தழல்மேனித் தவளப்பொடியன், கனகக்குன்றத்து
எழில் பரஞ்சோதியை, எங்கள் பிரானை, இகழ்திர்கண்டீர்;
தொழப்படும் தேவர் தொழப்படுவானைத் தொழுத பின்னை,
தொழப்படும் தேவர்தம்மால்-தொழுவிக்கும் தன் தொண்டரையே.

5
முழுமையான அனல்போன்ற சிவந்த திருமேனியில் வெள்ளிய திருநீற்றை அணிந்தவனாய் , மேருமலை போன்ற அழகிய பெரிய ஒளிவடிவினனாகிய எங்கள் பெருமானை இகழ்கின்ற நீங்கள் இதனைத் தெரிந்து கொள்ளுங்கள் . பொது மக்களால் தொழப்படும் சிறுதேவரால் தொழப்படும் எம்பெருமானைத் தொழுத பின்னர் அப் பெருமான் பிறரால் தொழப்படும் அச்சிறுதேவரைக் கொண்டும் அவர்களால் தன் அடியவர்களைத் தொழச் செய்வான் .
Go to top

விண் அகத்தான்; மிக்க வேதத்து உளான்; விரிநீர் உடுத்த
மண் அகத்தான்; திருமால் அகத்தான்; மருவற்கு இனிய
பண் அகத்தான்; பத்தர் சித்தத்து உளான்; பழ நாய் அடியேன்
கண் அகத்தான்; மனத்தான்; சென்னியான் எம் கறைக்கண்டனே.

6
எம் நீலகண்டப் பெருமான் தேவருலகிலும் , மேம்பட்ட வேதத்திலும் , கடலால் சூழப்பட்ட இம்மண்ணுலகத்திலும் , திருமாலுடைய உள்ளத்திலும் , பழகுதற்கு இனிய பண்களிலும் , அடியவர் உள்ளத்தும் , பழைய நாயைப் போன்ற இழிந்த அடியேனுடைய மனக் கண்களிலும் மனத்தும் , தலைமீதும் எங்கும் கரந்து பரந்துள்ளான் .

பெருங்கடல் மூடிப் பிரளயம் கொண்டு பிரமனும் போய்
இருங்கடல் மூடி இறக்கும்; இறந்தான் களேபரமும்
கருங்கடல் வண்ணன் களேபரமும் கொண்டு, கங்காளராய்,
வரும் கடல் மீள நின்று, எம் இறை நல் வீணை வாசிக்குமே.

7
பெரிய கடல் இவ்வுலகைமூட ஊழிவெள்ளம் ஏற்படப் பிரமனுடைய சத்திய உலகத்தும் பெரிய கடல்நீர் பொங்கி அதனை மூழ்க்கப் பிரமனும் இறப்பான் . அந்நிலையில் பிரமனுடைய இறந்த உடலையும் கரிய கடல்போன்ற நிறத்தினனாகிய திரு மாலுடைய உடலையும் சுமந்து கொண்டு அவர்களுடைய தசைகழிந்த உடம்பின் எலும்புக் கூடுகளை அணிந்தவனாய் , ஒடுங்கிய உலகம் மீளத்தோன்றும் முறைமையின் சங்கற்பம் செய்து கொண்டு இருந்து எம்பெருமான் சிறந்த வீணையை வாசித்துக் கொண்டிருப்பான் .

வானம் துளங்கில் என்? மண் கம்பம் ஆகில் என்? மால்வரையும்
தானம் துளங்கித் தலைதடுமாறில் என்? தண்கடலும்
மீனம் படில் என்? விரிசுடர் வீழில் என்?-வேலை நஞ்சு உண்டு
ஊனம் ஒன்று இல்லா ஒருவனுக்கு ஆட்பட்ட உத்தமர்க்கே.

8
கடலில் எழுந்தவிடத்தை உண்டும் எந்தக் குறைபாடும் இல்லாத ஒப்பற்ற சிவபெருமானுக்கு அடிமைகளாய்த் தொண்டு செய்யும் மேம்பட்டவர்களுக்கு , வானமும் மண்ணும் அசைந்து ஒடுங்கினாலும் , பெரிய மலைகள் இடம் பெயர்ந்து மேல் கீழாகத் தடுமாறினாலும் , கடல்களிலுள்ள நீர்வாழ் உயிரினங்கள் அழிந்தாலும் , சூரிய சந்திரர்கள் இடம் பெயர்ந்து விழுந்தாலும் அவற்றைப் பற்றிய கவலை ஏதும் ஏற்படாது .

சிவன் எனும் நாமம் தனக்கே உடைய செம்மேனி அம்மான்
அவன் எனை ஆட்கொண்டு அளித்திடும் ஆகில், அவன் தனை யான்
பவன் எனும் நாமம் பிடித்துத் திரிந்து பல்-நாள் அழைத்தால்,
இவன் எனைப் பல்-நாள் அழைப்பு ஒழியான் என்று எதிர்ப்படுமே!

9
சிவன் என்ற பெயரைத் தனக்கே உரிய பெயராகக் கொண்ட செம்மேனிப் பெருமான் அடியேனை அடிமையாகக் கொண்டு கருணை செய்திடுவானாகில் அவனை அடியேன் ` பவன் ` என்னும் திருப்பெயர் முதலியவற்றை உள்ளத்திலும் சொல்லிலும் பற்றி அவன் அடியேனை இயக்கும் இடம் தொறும் திரிந்து பலநாளும் அழைத்தால் , இவன் என்னைப் பலநாளாக அழைத்தலைத் தவறாது செய்கிறான் என்று திருவுள்ளம் பற்றி அடியேற்குக் காட்சி வழங்குவான் .

என்னை ஒப்பார் உன்னை எங்ஙனம் காண்பர்? இகலி, உன்னை
நின்னை ஒப்பார் நின்னைக் காணும் படித்து அன்று, நின் பெருமை-
பொன்னை ஒப்பாரித்து, அழலை வளாவி, செம்மானம் செற்று,
மின்னை ஒப்பாரி, மிளிரும் சடைக்கற்றை வேதியனே!

10
பொன்னை ஒத்து ஒளியுடையதாய் , தீயை ஒத்துச் செந்நிறத்ததாய்ச் சிவந்த வானத்தைப் பிளந்து நெடுகப் பரவியதாய மின்னலை ஒத்து விட்டு விட்டு ஒளிவீசும் சடைக்கற்றையை உடைய வேதப்பரம்பொருளே ! அடியேனை ஒத்த சிற்றறிவினர் உன்னை யாங்ஙனம் காண இயலும் ? உன்னோடு மாறுபட்டு உன்னை ஒப்பவராகத் தம்மைக் கருதிக்கொள்ளும் தேவர்கள் உன்னுடைய அடியையோ முடியையோ காண இயலாதவாறு உன்பெருமை ஏனைய எல்லாத் தேவர்களையும் விட மேம்பட்டுள்ளது .
Go to top

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: பொது -தனித் திருவிருத்தம்
4.112   திருநாவுக்கரசர்   தேவாரம்   வெள்ளிக் குழைத்துணி போலும் கபாலத்தன்;
Tune - திருவிருத்தம்   (பொது -தனித் திருவிருத்தம் )
4.113   திருநாவுக்கரசர்   தேவாரம்   பவளத்தடவரை போலும், திண்தோள்கள்; அத்
Tune - திருவிருத்தம்   (பொது -தனித் திருவிருத்தம் )
     
send corrections and suggestions to admin-at-sivaya.org

This page was last modified on Sat, 04 Apr 2026 04:53:34 +0000