சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

4.103   திருநாவுக்கரசர்   தேவாரம்

திருநாகைக்காரோணம் (நாகப்பட்டினம்) - திருவிருத்தம் அருள்தரு கரும்பனையாளம்மை உடனுறை அருள்மிகு முல்லைவனேசுவரர் திருவடிகள் போற்றி
- Hide Meaning   https://www.youtube.com/watch?v=MMUx_48xcZA   Add audio link Add Audio

வடிவு உடை மாமலைமங்கை பங்கா! கங்கை வார்சடையாய்!
கடி கமழ் சோலை சுலவு கடல் நாகைக்காரோணனே!
பிடி மதவாரணம் பேணும் துரகம் நிற்க, பெரிய
இடி குரல் வெள் எருது ஏறும் இது என்னைகொல்? எம் இறையே!

1
அழகிய பார்வதி பாகனே ! நீண்ட சடையில் கங்கையைத் தரித்தவனே ! நறுமணம் கமழும் சோலைகள் சூழ்ந்த , கடலையடுத்த நாகைக் காரோணனே ! எம்தலைவனே ! பெண்யானை , மதமுடைய ஆண்யானை , விரும்பும் குதிரை இவைகள் இருப்பவும் பெரிய , இடிபோன்ற குரலையுடைய வெள்ளிய காளையை நீ இவர் வதன் காரணம் என்ன ?

கற்றார் பயில் கடல் நாகைக்காரோணத்து எம் கண்ணுதலே!
வில்-தாங்கிய கரம் வேல் நெடுங்கண்ணி வியன் கரமே;
நல்-தாள் நெடுஞ் சிலை நாண் வலித்த(க்) கரம் நின் கரமே;
செற்றார் புரம் செற்ற சேவகம் என்னை கொல்? செப்புமினே!

2
கற்றவர்கள் பெருகிய , கடலை அடுத்த நாகைக் காரோணத்தில் உறையும் , நெற்றியில் கண்ணையுடைய எம்பெருமானாரே ! வில்லைத் தாங்கிய கை , வேல் போன்ற நீண்ட கண்களை உடைய பார்வதி பாகத்தில் உள்ள கையே . நல்ல கால்களால் வில்லை மிதித்து அதற்கு நாணை ஏற்றிய கை உம் பாகத்தில் உள்ளகையே . இவ்வாறாகப் பகைவருடைய மும்மதில்களை அழித்த வீரம் உம்முடையது என்று கூறுவதன் காரணத்தை அடியேற்குத் தெரிவியுங்கள் .

தூ மென் மலர்க்கணை கோத்துத் தீவேள்வி தொழில் படுத்த
காமன் பொடிபடக் காய்ந்த கடல் நாகைக்காரோண! நின்
நாமம் பரவி, நமச்சிவாய என்னும் அஞ்சு எழுத்தும்
சாம் அன்று உரைக்கத் தருதி கண்டாய், எங்கள் சங்கரனே!

3
தூய மெல்லிய பூக்களாகிய அம்புகளைக் கோத்துக் காமாக்கினியை வளர்க்க முற்பட்ட மன்மதன் சாம்பலாகுமாறு கோபித்த கடல்நாகைக் காரோணனே ! எங்கள் சங்கரனே ! உன் திருப் பெயரை முன்நின்று துதித்து நமசிவாய என்ற திருவைந்தெழுத்தையும் அடியேன் உயிர்போகும் பொழுது சொல்லும் பேற்றினை நல்குவாயாக .

பழிவழி ஓடிய பாவிப் பறி தலைக் குண்டர் தங்கள்
மொழிவழி ஓடிமுடிவேன்; முடியாமைக் காத்துக் கொண்டாய்;
கழிவழி ஓதம் உலவு கடல் நாகைக்காரோண! என்
வழிவழி ஆள் ஆகும் வண்ணம் அருள், எங்கள் வானவனே!

4
உப்பங்கழிவழியே கடலின் வெள்ளநீர் பாயும் கடல் நாகைக் காரோணனே ! எங்கள் தேவனே ! பழியான வழிகளிலே வாழ்க்கையை நடத்திய தீவினையாளர்களான , தலைமயிரை வலியப் போக்கும் மூர்க்கர்களான , சமணர்கள் சொற்களைக் கேட்டு அவற்றின் வழியிலே வாழ்ந்து அழிந்து போகக்கூடிய அடியேனை அழியாதபடி பாதுகாத்து உனக்கு அடியவனாகக் கொண்டாய் . வழிவழியாக அடியேன் உனக்கு அடிமையாகும் முறைமை யாது ? அதனை அடியேற்கு அருளுவாயாக .

செந்துவர் வாய்க் கருங்கண் இணை வெண் நகைத் தேமொழியார்
வந்து, வலம் செய்து, மா நடம் ஆட, மலிந்த செல்வக்
கந்தம் மலி பொழில் சூழ் கடல் நாகைக்காரோணம் என்றும்
சிந்தை செய்வாரைப் பிரியாது இருக்கும், திருமங்கையே.

5
சிவந்த பவளம் போன்ற வாயையும் கரிய இருகண்களையும் , வெள்ளிய பற்களையும் , தேன்போன்ற இனிய சொற்களையும் உடைய இளைய மகளிர் வந்து வலம் செய்து சிறந்த கூத்து நிகழ்த்துமாறு , செல்வம் மிகுந்ததும் , நறுமணம் வீசும் பொழில்களால் சூழப்பட்டதுமான கடலை அடுத்து அமைந்த நாகைக் காரோணத்தை என்றும் தியானிப்பவர்களைத் திருமகள் என்றும் நீங்காது இருப்பாள் .
Go to top

பனை புரை கைம் மதயானை உரித்த பரஞ்சுடரே!
கனைகடல் சூழ்தரு நாகைக்காரோணத்து எம் கண்ணுதலே!-
மனை துறந்து அல் உணா வல் அமண்குண்டர் மயக்கை நீக்கி
எனை நினைந்து ஆட்கொண்டாய்க்கு என், இனி யான் செயும் இச்சைகளே?

6
பனை மரத்தை ஒத்த துதிக்கையை உடைய மத யானையின் தோலைஉரித்த மேம்பட்ட சோதிவடிவினனே ! ஒலிக்கும் கடலால் ஒருபக்கம் சூழப்பட்ட நாகைக் காரோணத்தில் உறையும் எம் நெற்றிக் கண்ணனே ! இல்லறவாழ்க்கையை விடுத்து இரவில் உண்ணாத வலிய சமணர்களாகிய மூர்க்கர்திறத்து அடியேன் கொண் டிருந்த மயக்கத்தைப் போக்கி அடியேனை விரும்பி ஆட்கொண்ட உனக்கு அடியேன் விரும்பிக் கைமாறாகச் செய்வது யாது உள்ளது ?

சீர் மலி செல்வம் பெரிது உடைய செம்பொன் மா மலையே!
கார் மலி சோலை சுலவு கடல் நாகைக்காரோணனே!-
வார் மலி மென் முலையார் பலி வந்து இடச் சென்று இரந்து,
ஊர் மலி பிச்சை கொண்டு உண்பது மாதிமையோ? உரையே!

7
சிறப்புமிக்க செல்வத்தை மிகுதியாக உடைய செம்பொன்மலை போன்றவனே ! மழையால் செழித்த சோலைகளால் சூழப்பட்ட கடல் நாகைக் காரோணனே ! கச்சணிந்த மென்மையான முலையை உடைய மகளிர் வந்து பிச்சையிடுமாறு வீடுதோறும் சென்று பிச்சை வாங்கி ஊர்களில் கிட்டும் பிச்சை உணவை உண்பது பொருத்தமான செயல் ஆகுமா ? சொல்வாயாக .

வங்கம் மலி கடல் நாகைக்காரோணத்து எம் வானவனே!
எங்கள் பெருமான்! ஓர் விண்ணப்பம் உண்டு; அது கேட்டு அருளீர்:
கங்கை சடையுள் கரந்தாய்; அக் கள்ளத்தை மெள்ள உமை-
நங்கை அறியின் பொல்லாது கண்டாய், எங்கள் நாயகனே!

8
கப்பல்கள் நிறைந்த கடலை அடுத்த நாகைக் காரோணத்தில் உள்ள எம் தேவரே ! எங்கள் பெருமானாரே ! அடியேன் வேண்டிச் சொல்லும் செய்தி ஒன்று உள்ளது . அதனைத் திருச்செவி சார்த்தி அருளுவீராக . எங்கள் தலைவரே ! கங்கையைச் சடையுள் மறைத்து வைத்துக் கொண்டிருக்கிறீர்கள் . அந்தக் கள்ளச் செயலை மெதுவாகப் பார்வதிப் பிராட்டி அறிவாளானால் பொல்லாங்கு விளையும் என்பதைத் திருவுள்ளம் பற்றவேண்டும் .

கருந்தடங் கண்ணியும் தானும் கடல் நாகைக்காரோணத்தான்
இருந்த திருமலை என்று இறைஞ்சாது அன்று எடுக்கல் உற்றான்
பெருந் தலைபத்தும் இருபது தோளும் பிதிர்ந்து அலற
இருந்து அருளிச் செய்ததே; மற்றுச் செய்திலன் எம் இறையே.

9
கரிய நீண்ட கண்களை உடைய பார்வதியும் தானுமாகக் கடல் நாகைக் காரோணத்தான் உகந்தருளியிருக்கும் திருமலை என்று அதனை வழிபடக் கருதாது , அன்று , அதனைப் பெயர்க்க முற்பட்ட இராவணனுடைய தலைகள் பத்தும் தோள்கள் இருபதும் சிதற அதனால் அவன் உரக்கக் கதறக் கயிலை மலையில் இருந்தவாறே அவனுக்கு வாள் முதலியவற்றை நாகைக் காரோணத்தார் அருளிச் செய்தாரே அல்லாமல் அவன் உயிருக்கு இறுதியைச் செய்யவில்லை .

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருநாகைக்காரோணம் (நாகப்பட்டினம்)
1.084   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   புனையும் விரிகொன்றைக் கடவுள், புனல்
Tune - குறிஞ்சி   (திருநாகைக்காரோணம் (நாகப்பட்டினம்) காயாரோகணேசுவரர் நீலாயதாட்சியம்மை)
2.116   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   கூனல் திங்கள் குறுங்கண்ணி கான்ற(ந்)
Tune - செவ்வழி   (திருநாகைக்காரோணம் (நாகப்பட்டினம்) காயாரோகணேசுவரர் நீலாயதாட்சியம்மை)
4.071   திருநாவுக்கரசர்   தேவாரம்   மனைவி தாய் தந்தை மக்கள்
Tune - திருநேரிசை   (திருநாகைக்காரோணம் (நாகப்பட்டினம்) காயாரோகணேசுவரர் நீலாயதாட்சியம்மை)
4.103   திருநாவுக்கரசர்   தேவாரம்   வடிவு உடை மாமலைமங்கை பங்கா!
Tune - திருவிருத்தம்   (திருநாகைக்காரோணம் (நாகப்பட்டினம்) முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
5.083   திருநாவுக்கரசர்   தேவாரம்   பாணத்தால் மதில் மூன்றும் எரித்தவன்;
Tune - திருக்குறுந்தொகை   (திருநாகைக்காரோணம் (நாகப்பட்டினம்) காயாரோகணேசுவரர் நீலாயதாட்சியம்மை)
6.022   திருநாவுக்கரசர்   தேவாரம்   பாரார் பரவும் பழனத்தானை, பருப்பதத்தானை,
Tune - திருத்தாண்டகம்   (திருநாகைக்காரோணம் (நாகப்பட்டினம்) காயாரோகணேசுவரர் நீலாயதாட்சியம்மை)
7.046   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   பத்து ஊர் புக்கு, இரந்து,
Tune - கொல்லிக்கௌவாணம்   (திருநாகைக்காரோணம் (நாகப்பட்டினம்) காயாரோகணேசுவரர் நீலாயதாட்சியம்மை)
7.101   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   பொன் ஆம் இதழி விரை
Tune -   (திருநாகைக்காரோணம் (நாகப்பட்டினம்) )
     
send corrections and suggestions to admin-at-sivaya.org

This page was last modified on Tue, 27 Jan 2026 00:59:47 +0000